சிறுவர் பாடல் - நிறைவு - முழுமையும்

 

                 பூந்தோட்டம் 

சிறுவர்க்கான பாடல்கள்


            மு.மகேந்திர பாபு 


              யாப்பு 

            வெளியீடு



பூந்தோட்டம் * சிறுவர்க்கான பாடல்கள் * மு.மகேந்திர பாபு© *

முதல் பதிப்பு: நவம்பர், 2024 * பக்கங்கள்:    * யாப்பு வெளியீடு, 5,ஏரிக்கரைச் சாலை, 2ஆவது தெரு, சீனிவாசபுரம், கொரட்டூர், சென்னை-600 076 * பேச: 9080514506 * நூல் வடிவமைப்பு: சென்றாயன் * அச்சு: ஆதவன் ஆர்ட் பிரிண்ட், சென்னை- 600116.


விலை:


POONTHOTTAM * SIRUVARKKANA PAADALKAL * M.Mahendra Babu@ * First Edition - November, 2024 * Pages   * Published by: VAAGAI is an imprint of Yaappu Veliyeedu, Erikkarai Saalai, 2nd Street, Seenivaasapuram, Korattur, Chennai - 600 076 * Cell: 9080514506 * Wrapper Design: Senrayan * Book Design: Senrayan  * Print: Adhavan art print Chennai - 600116


Rs.


ISBN: 978-81-974331-0-8


*மு.மகேந்திர பாபு*


     மகாகவி பாரதியின் கரிசல் காட்டில் மலர்ந்த கவிதைப்பூ ஆவார்.  இவர்  கதை , கவிதை , கட்டுரை , பாடல்கள் என இவரது இலக்கியத் தளம்  விரிந்துள்ளது. இவர் இயற்கை ஆர்வலர், பறவைப் புகைப்படக் கலைஞர். மேலும் இலக்கியத்தையும் , இயற்கையையும் பள்ளி , கல்லூரி மாணவர்களிடம் தன் பேச்சின் மூலம் விதைத்து வருபவர். இயற்கையை நேசிக்கும் கவிஞராகிய இவர் Green Tamil - You Tube & Greentamil.in என்பவற்றின் மூலம்  உலக மக்களின் உள்ளங்களில் தமிழ் பரப்பி வருகிறார்.


மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் தமிழாசிரியர். ஆசிரியப் பணியில் இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளால் சிறப்பிக்கப்பட்டவர். தமிழ் அரசின் நல்லாசிரியர் விருதால் 05.09.2024 அன்று சிறப்பிக்கப்பட்டவர். ஆற்றல்மிக்க ஆசிரியர்களை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் "ஆற்றல் ஆசிரியர் விருது" வழங்கி வருகிறார்.


  'மரமும் மனிதமும்', 'மண்ணே மரமே வணக்கம் ' எனும் இரண்டு பாடல் குறுந்தகடுகள் வெளியிட்டுள்ளார்.

பூந்தோட்டம்  இவரது ஐந்தாவது நூலாகும்.


   இந்நூல்...

அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தாயும் தந்தையுமாய் இருந்து வழிநடத்தும் அன்பு ஆசான், 'ஆற்றல் ஆசிரியர்' வேம்பார்.திரு.ச.கிறிஸ்து ஞான வள்ளுவன் அவர்களுக்கு.



                  நன்றி

பாடல்களை வெளியிட்டுச் சிறப்பித்த  இதழ்கள்

கதிரவன் நாளிதழ்

தினமணி - சிறுவர்மணி

இந்து தமிழ் - மாயாபஜார்

இந்து தமிழ் திசை - வெற்றிக்கொடி

சுட்டியானை மாத  இதழ்

முத்துக்கமலம் மின்னிதழ்

தமிழ்நாடு  இபேப்பர்.காம்


பொருளடக்கம்


என்னுரை 




    பள்ளிப் பருவத்தில் புத்தகத்தில் படித்த பாடல்கள் இன்றும் என் மனதில் பசுமரத்தாணியாய் நிற்கின்றன. 'வானத்திலே திருவிழா வழக்கமான ஒரு விழா' என்ற பாடல் மூன்றாம் வகுப்பில் படித்ததாக நினைவு. படங்களுடன் அப்பாடல் புத்தகத்தில் இருந்தது. பாட்டுப் பாட்டன் பாரதியின் 'ஓடி விளையாடு பாப்பா' என்றும் நம் மனதில் நிலைத்திருக்கின்ற பாடல். குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் அற்புதமான பாடல்கள் பல இன்றும் வகுப்பறைக்கு வளம் சேர்த்து வருகின்றன.


   பள்ளிப் பருவத்தில் கவிதை எழுதும் ஆர்வம் வந்தது. குழந்தைப் பாடல்கள் எழுதுவதற்கான தளம் அமைத்துக் கொடுத்தது 'கதிரவன்' நாளிதழ். சனிக்கிழமைதோறும் 'வானவில்' என்றொரு பக்கத்தில் சிறுவர் பாடல்களும், மாணவர்களின் படைப்புகளும் வெளிவந்தன. அதில் எனது சிறுவர் பாடல்கள் தொடர்ந்து வெளியாகின.


     சிறுவர் பாடல் எழுதும் போது மனம் சிறுபிராயத்திற்குச் சென்று விடுகிறது. அவர்களுக்குத் தகுந்தார்போன்ற வார்த்தைகள் வந்து விழுகின்றன. என்னுடைய எழுத்துகள் சிறுவர்களையும் சென்று சேர வேண்டும் என்ற ஆர்வத்தின் அடிப்படையில் எழுந்ததே இந்த நூல். இதில் உள்ள பாடல்கள் பல்வேறு இதழ்களில் வெளிவந்தவை.


    நூலிற்கு சிறப்பானதொரு வாழ்த்துரை வழங்கிய எங்கள் பேராசிரியர் திரு.ச.மாடசாமி ஐயா அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி. அருமையான அணிந்துரை தந்த அன்பு அண்ணன் பாவலர் அறிவுமதி அவர்களுக்கு பேரன்பும் நன்றியும். நூலினை அழகாக  வெளியீடு செய்திருக்கும் யாப்பு செந்தில் குமார் அவர்களுக்கும், வடிவமைப்பாளர் சென்றாயன் அவர்களுக்கும் நன்றி. 


         பள்ளிப் பருவத்திலிருந்து இன்று வரை ஊக்கம் தரும் எனது தமிழாசான் புதியம்புத்தூர்  கவிஞர்.அ.கணேசன் அவர்களுக்கும், எங்கள் பேராசான் நகைச்சுவைத் தென்றல் கு.ஞானசம்பந்தன் அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. எப்போதும் தூண்டுகோலாய் இருக்கின்ற என் சக படைப்பாளிகள் ஏர் மகாராசன், அய்யனார் ஈடாடி, பேரா.காந்திதுரை அவர்களுக்கும் அன்பும் நன்றியும்.


        அவ்வப்போது எழும் ஐயங்களைவது மட்டுமல்லாது ஆலோசனையும் தந்து வழிநடத்துகின்ற எங்கள் பெரும்புலவர்.மு.சன்னாசி ஐயா அவர்களுக்கும், அவர்களது சிறப்பானதொரு வாழ்த்துரைக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. பள்ளிப் பருவத்தில் இதழ்களில் எழுத வேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் விதைத்தவர், கவிஞர், எழுத்தாளர், விமர்சகர், கொடையாளர் என பன்முகத் தன்மை கொண்ட 'ஆற்றல் ஆசிரியர்' வேம்பார்.ச.கிறிஸ்து ஞான வள்ளுவன் அவர்களுக்குப் பேரன்பும் நன்றியும்.


   வழக்கம்போல் எனது நூல்களை வாங்கி, மாணவர்களிடத்தில் கொண்டு சேர்க்கின்ற எனது ஆசிரிய நண்பர்களுக்கு மனம் நிறைந்த நன்றி. 'பூந்தோட்டம்' மாணவர்களையும், ஆசிரியர்களையும் மகிழ்ச்சித் தேன் குடிக்க வைக்கும் என்று நம்புகிறேன்.



பேரன்புடன், 

மு.மகேந்திர பாபு, 

49, விக்னேஷ் அவென்யு,  

இரண்டாவது தெரு, 

 கருப்பாயூரணி, 

மதுரை - 625 020.

பேச - 97861 41410

மின்னஞ்சல் - tamilkavibabu@gmail.com









வாழ்த்துரை


வாழ்த்துரை - பேரா.ச.மாடசாமி.

அன்பும் இயற்கையும்.. இவரின் இரு கண்கள்.

                             மகேந்திர பாபு அடிப்படையில் ஒரு படைப்பாளி. சமீபத்தில் ஆனந்தவிகடனில் வெளியான அவருடைய சிறுகதையான நேமிக்கம் படித்துக் கண் கலங்கினேன். கிராமத்தின் விசாலங்கள், தடுமாற்றங்கள் இரண்டையும் அவர் படைப்புகளில் பார்க்கிறேன்.

                     மகேந்திர பாபு உளவியல் எழுத்தாளரும் கூட. ‘ பால்யம் என்றொரு பருவம்’ என்ற கவிதை நூலும், ‘ வெற்றிக் கதவின் திறவுகோல் ‘ என்ற கட்டுரை நூலும் அவருடைய படைப்புகள். இயற்கையைப் போற்றியும் மனிதர்கள் மீது எல்லையற்ற அன்பும் கொண்டு மகேந்திர பாபு தொடர்ந்து எழுதுகிறார்.

                   “ இயற்கை அன்னை மடியிலே, எல்லை இல்லா இன்பமே” என்று இயற்கையைக் கொண்டாடுகிறது அவருடைய  சிரிக்கும் பூந்தோட்டம் என்ற சிறுவர் பாடல் தொகுப்பு. மரங்களின் மீது மகேந்திர பாபு கொண்ட அன்பு மகத்தான அன்பு. தாய்- பிள்ளை உறவு அது.

                  மண்ணில் இருக்கும் மரங்கள் நமக்குத் தாயடா!

                    பிள்ளை போலே மரங்களைப் பாருங்கள்!

- என்ற வரிகளை வாசிக்கையில் மெல்லச் சிலிர்க்கிறது. இந்த அன்பு இதுவரை காணாத அன்பு.

              அன்பு மரங்களோடு நிற்கவில்லை. நூல் முழுக்க பரவிக் கிடக்கிறது. அன்புதான் இச் சிறுவர் பாடல் தொகுப்பின் ஆதாரம்.

                 அன்பால் நாங்கள் வென்றிடுவோம்

                   உலகை அன்பால் ஆள்வோமே

- என்ற முழக்கங்களை வாசிக்கையில் வெற்றி நிச்சயம் என மகேந்திர பாபுவின் கூட நின்று ஆர்ப்பரிக்கத் தோன்றுகிறது.

               வேறுபாடுகள் இயற்கையானவை; அழகானவை; அவசியமானவை. வேறுபாடுகளைக் கடந்த நேசமே இவர் மனிதர் என்ற அடையாளத்தைத் தரக் கூடியது. இதயங்களைத் தைப்போம் என்ற வரியை மிகவும் ரசித்து வாசித்தேன். அன்பின் மறுபக்கம் கோபம். அந்தக் கோபம் நூலில் அவ்வப்போது வெடிக்கிறது.

             கொஞ்ச நாள்கள் நிம்மதி பூத்தால்

              நஞ்சை விதைக்கும் மதத்தின் போர்வை என்பது கோபம் வெளிப்படும் ஒரு தருணம்.

          மகேந்திர பாபுவின் குரல் நியாயத்தின் குரல்; அன்பின் குரல். குரல் தொடர்ந்து ஒலிக்கட்டும். வாழ்த்துகள்.

                                                                                                  ச.மாடசாமி                                                                                                                                                 3.11.24


 அணிந்துரை 

பாவலர் அறிவுமதி


**********************  ********************

வாழ்த்துரை


புலவர்.மு.சன்னாசி எம்.ஏ, எம்ஃபில், எம்.எட், 

இராயப்பன்பட்டி, தேனி (மாவட்டம்)


இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக 

வன்சொல் களைகட்டு வாய்மை எருஅட்டி

அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர்

பைங்கூழ் சிறுகாலைச் செய்.


      - என்பது அறநெறிச்சாரப் பாடல். நாற்றங்காலில் நல்ல வித்துக்களை இட்டு வளர்த்தால்தான், அது வளர்ந்து செழித்து அடுத்தடுத்த தலைமுறைகளும் உயர்வடைய வழிவகுக்கும். எனவேதான், "விளையும் பயிர் முளையிலே தெரியும்" என்னும் பழமொழி உருவாயிற்று. 

    இன்றைய நிலையில் சிறுவர் பாடல்கள் என்று ஆராய முற்படின், பழமையானவை எனக்கூறத்தக்க நிலையில் நமக்குக் கிடைக்கப் பெறவில்லை எனலாம்.

   கல்விக் கட்டமைப்பில் தொடக்கநிலை, நடுநிலை, உயர்நிலை, கல்லூரி நிலை என உருவான காலத்தில் தொடக்கநிலை மாணவர்களுக்குத் தாய்த்தமிழை கற்பிக்க முற்பட்டபோது அவர்களுக்கு எளிதில் புரியும் சொற்களால் பாடல்களைப் புனைந்து வெளியிட்டனர்.

    சிறுவர் பாடல்களுக்கு அடிப்படை ஓசை நயம் கெழுமிய சந்தமும், அவர்களுக்குப் புரியக் கூடிய இயல்பு வழக்குச் சொற்களுமே ஆகும். அந்த வகையில் ஔவையாரின் 'ஆத்திசூடி' அமைந்துள்ளமையால் அதனை முதன்மையாகக் கற்பித்தனர். அடுத்த நிலையில் அதிவீரராம பாண்டியரின் 'கொன்றை வேந்தன்' என்னும் நூலைக் கற்பித்தனர்.

   இவற்றை அடுத்து, சிறுவர் பாடல்கள் என்னும் நிலையில் முழுமையான நூலை வெளிப்படுத்தியவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் ஆவார். அவர், தொடக்கக் கல்வி ஆசிரியராகத் தம் பணியைத் தொடங்கியதால் 'மலரும் மாலையும்' என்ற தொகுப்பு நூலில் சிறுவர்களுக்கான சொற்களைக் கொண்டு பாடல்கள் புனைந்துள்ளார். 

    மகாகவி பாரதியார் எழுதிய 'பாப்பா பாட்டு' சிறுவர்கள் பாடல் அமைப்பில் சந்தத்திலும், சொற்களிலும் புத்தொளி பாய்ச்சியது எனலாம். பாவேந்தர் பாரதிதாசன் இயற்றிய 'இசையமுது' என்னும் நூல் சிறுவர்கள் பாடல் வரிசையில் குறிப்பிடத்தக்கது ஆகும்.

      மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை அவர்கள் தமிழ்ப் பாடநூல்களைத் தொகுத்து வெளியிட்ட நிலையில் 'அம்மா இங்கே வா வா' என்னும் அகர வரிசைப் பாடலைத் தொடக்க நிலை மாணவர்களுக்காக எழுதிச் சேர்த்தார். இப்பாடல் இன்றும் புகழ்பெற்ற குழந்தைப் பாடலாக இருப்பது அனைவரும் அறிந்ததே!

      சிறுவர் பாடல்களை 'மழலையர் பாடல்கள்' என்றும் தனியாகவும் பிரித்துப் பார்க்கலாம். மாண்டிசோரி கல்வி முறையில் மூன்று வயதிற்கு மேல் ஐந்து வயதிற்குள் உள்ள குழந்தைகளை 'நாற்றங்கால்' பள்ளி அமைப்பில் (Nursery School) தமிழ் மொழியைக் கற்றுத் தருவதற்கு மழலையர் பாடல்களே உதவுகின்றன. அவை, குழந்தைகள் கேட்ட மாத்திரத்தில் மனத்தில் பதியவைக்கும் சந்தங்களைக் கொண்டும், அக்குழந்தைகள் தம் கண்ணால் பார்க்கக் கூடிய பொருட்களை அடிப்படையாகக் கொண்டும் அமைந்திருக்கும்.

     அடுத்த நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கக் கூடிய சிறுவர்களுக்கான பாடல்கள் பல நூல் வடிவில் வெளிவந்துள்ளன. குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா, பெரியசாமி தூரன் தொடங்கி இன்று வரை பலரும் சிறுவர்க்கான பாடல்களை நூல்களாக வெளியிட்டுள்ளனர். மேலும் அம்புலி மாமா, கண்ணன், கோகுலம் போன்ற சிறுவர் இதழ்களும், சிறுவர் பாடல்கள் மற்றும் கதைகள் போன்றவற்றை வெளியிட்டு குழந்தைகளுக்குத் தமிழ் மொழி கற்கும் ஆர்வத்தைத் தூண்டின.

     இந்த வரிசையில் மு.மகேந்திர பாபுவும் தமது 'பூந்தோட்டம்' என்ற நூல் வழியாகச் சிறுவர் பாடல்கள் இயற்றித் தொகுத்து இதுபோழ்து வெளியிடுகிறார். இந்தத் தொகுப்பில் 'அன்னைத் தமிழ்' என்னும் பாடல் உயிர் எழுத்து வரிசையில் அமைந்து இன்பம் தருகிறது. 'பூந்தோட்டம்', 'காட்டுக்குள் செல்வோம், மழை, தாலாட்டும் மரங்கள், பள்ளிக்கூடம் திறந்ததே!, பச்சைக்குடை, பள்ளி செல்வோம்! ஆகிய தலைப்புகளில் உள்ள பாடல்கள் சிறுவர்களின் சிந்தை கவரும் என்பது உறுதி.

   பெரும்பாலும் சிறுவர் பாடல்கள், பத்து வரிகளுக்குள் அமைந்து சந்தம் உடலாகவும், சிறுவர்களுக்கான எளிய சொற்கள் உயிராகவும் அமைந்து இருப்பது சிறப்புக்குரியது என்பர் ஆய்வறிஞர். எனவே, இதனையும் கருத்தில் கொள்ளுமாறு கவிஞரைக் கேட்டுக் கொள்கிறேன்.

   பெரியவர்கள் சிறுவர்களுக்குக் கூறும் இத்தகைய சிறுவர் பாடல்கள் எங்கும் பரவட்டும் என்று கவிஞருக்கு வாழ்த்துக் கூறுவதோடு அவர் பல்லாண்டு வாழ்க என இறைவனை வேண்டுகிறேன். 'வாழிய செந்தமிழ். வாழிய கவிஞரின் முயற்சி. வணக்கம்'.

***********************  *******************

             தமிழ்மொழி வாழ்த்து


அன்னைத் தமிழே உயிராகும்!

ஆர்வம் நமது உயர்வாகும்!

இனிமைப் பேச்சே உணர்வாகும்!

ஈடிலா மொழியே தமிழாகும்! 


உன்னை என்னை வளர்த்துவிடும்!

ஊக்கம் தினமும் தந்துவிடும்!

எல்லோர் மனதிலும் தங்கிவிடும்!

ஏற்றம் மிகுந்த தமிழ் மொழியாம்!


ஐம்பெருங் காப்பியம் கொண்டதுவாம்!

ஒப்பிலாப் பெருமை உடையதுவாம்!

ஓதித் தினமும் மகிழ்ந்திடுவோம்!

ஔவை மொழியினைப் புகழ்ந்திடுவோம்!


    தாய்தந்தை வாழ்த்து


அன்பின் உருவம் அம்மாதான்!

அறிவின் பெருமை அப்பாதான்!

இருவரும் இணைந்து நம்மைத்தான்

ஏற்றம் காணச் செய்கின்றார்!


கண்ணை இமையும் காப்பதுபோல்

கருத்தாய் நம்மைக் காக்கின்றார்!

பள்ளிக் கூடம் சென்றுதான்

பாடம் படிக்கச் செய்கின்றார்!


நல்ல எண்ணம் வளர்ந்திடவே

நாளும் கதைகள் சொல்கின்றார்!

செல்லப் பிள்ளை நாமும்தான்

சிறப்புடன் வாழ்ந்து காத்திடுவோம்!


நாட்டுவாழ்த்து


எங்கள் நாடு இந்திய நாடு

எங்கும் வளங்கள் நிறைந்த நாடு

காஷ்மீர் குமரி எல்லை களாம்

கண்ணியம் மிகுந்த பிள்ளைகள் நாம்


 பாரத மாதா  நம் அன்னை

பண்புடன் தொழுவோம் நம் மண்ணை

மூன்று புறமும் நீருண்டு

தீப கற்பம்  எனப்பேருண்டு 


அண்ணல் காந்தித் தாத்தாவும்

அகிம்சை வழியில் சென்றிட்டார்!

அந்நியர் ஆட்சி முறையினையே

வாய்மை கொண்டே வென்றிட்டார் !


தியாகிகள் பிறந்தது நம்நாடு

தேசம் புகழும் நம்நாடு

ஒற்றுமை உணர்வுடன் வாழ்வோமே !

உலகை அன்பால் ஆள்வோமே !

*******************   *******************



சிறுவர்.பாடல் - வள்ளுவர் வாழ்த்து


உள்ளம்  நிறைந்த தமிழை

உலகம் எங்கும் சேர்த்தார்!

வெள்ளம் போலக் கருத்தை

இல்லம் எங்கும் வார்த்தார்!


அகரம் தொடங்கிக் குறளை

னகரம் நிறைவென முடித்தார்!

சிகரம் ஏறிட மனிதர்

சிந்தையில் நன்றாய்ப் பதித்தார்!


அறத்தின் வழியில் பொருளை

சேர்த்தால் இன்பம் பெறலாம்!

அன்பும் அறமும் கொண்டால்

அயலருக்கும் மகிழ்வைத்  தரலாம்!


உனக்குப் பிடித்த குறள்தான்

ஊக்கம் தந்திடும் குறள்தான்!

மனதில் இருத்தி நீயும்

மகிழ்ந்தே ஒலித்திடும் குரல்தான்!



எல்லா மொழியிலும் குறள்தான்

ஏற்றம் பெற்றதைப் பாரீர்!

தினமும் குறளைக் கற்று

திசையெட்டும் புகழ்பெற வாரீர்!


மு.மகேந்திர பாபு - 12-12-2024


********************   *******************

                  பாரதி வாழ்த்து


இளசை என்றொரு ஊருண்டு!

எட்டயபுரம் எனுமொரு பேருண்டு!

எழுச்சிக் கவிஞன் பிறந்தானாம்!

பாரதி பெயரில் சிறந்தானாம்!


அமுதத் தமிழைக் கற்றானாம்!

அறிவை மழைபோல் பெற்றானாம்!

பள்ளிப் பருவ வயதினிலே

பாட்டுகள் பாடிச் சிறந்தானாம்!


அந்நியர் ஆண்ட காலமது!

அடிமையாய் வாழ்ந்த காலமது!

அண்ணல் காந்தியைச் சந்தித்தான்!

அடக்கு முறையைச் சிந்தித்தான்!


எழுத்தின் வழியே வீரத்தை

எல்லாத் திசையிலும் தந்திட்டான்!

பாட்டால் புரட்சி விதைத்திட்டான்!

பாரத நாட்டைக் காத்திட்டான்!


********************   *******************


பூந்தோட்டம்.

வண்ண வண்ணப் பூக்களால்
எண்ண மெல்லாம் துள்ளுதே!
சின்னச் சின்னக் குழந்தைகள்
சிரித்து மகிழ்ந்து பார்க்குதே! 

மொட்டு விடும் ஒருசெடி
தொட்டு உண்ணும் தேனீக்கள்
விட்டுப் போக மனமில்லை
வீடாய் மாறட்டும் பூந்தோட்டம்!

காலை மாலை வேளையில்
தண்ணீர் ஊற்றும் போதிலே
செடி குளிப்பது அற்புதம்
மனங் குளிர்வது நிச்சயம்.

ஊட்டி மலர்க் கண்காட்சி
கூட்டிப் போகும் போதிலே
உள்ள  மெல்லாம் பறக்குதே
நம்முள் புத்துணர்வு பிறக்குதே !


செடி வளர்த்திட விரும்பினோம்
மரம் வளர்த்திட விரும்பினோம்
சுற்றுச் சூழல் சிறந்திட
கற்றுக் கொண்டே திரும்பினோம்!

********************************************


எங்கள் ஆசிரியர்


என்றும் அன்பு உள்ளவராம்

எழுத்தறிவிப்பதில் வல்லவராம்

சமூகம் வளர்ப்பதில் நல்லவராம்

அறியாமை இருளை அகற்றித்தான்

அகவொளி பாய்ச்சும் அறிஞராம்


இறைவன் என்றொரு பெயருண்டு

எங்கள் இதயத்தில் இடமுண்டு

பள்ளி என்னும் கலைக்கூடம்

துயரம் போக்கும் நல்மாடம்


நல்ல பழக்கங்கள் வளர்ந்திடவே

நாளும் கதைகள் சொல்பவராம்!

காலை மாலை வேளைதோறும்

கைதொழும் எங்கள் இறைவனாம்!

கருணை நிறைந்த ஆசிரியராம்


எல்லை இல்லா வானமாய்

எங்கள் ஆசிரியர் விரிந்தவராம்

வானம் பாடியாய் மகிழ்ந்திருப்போம்

வாழ்க்கை முழுதும் நினைத்திருப்போம்

வாழையடி வாழையாய் வாழ்ந்துகாட்டுவோம்.


********************   **********************

காட்டுக்குள் செல்வோம்!


பசுமை நிறைந்த மரங்களைப்

பார்க்கப் பார்க்க ஆசைதான்!

குளுமை நிறைந்த காற்றிலே

கேட்கும் நல்ல ஓசைதான்!


வெள்ளி போல விழுகுது 

விரைந்து மலையில் அருவிதான்!

துள்ளி வந்து பார்க்குது

வியந்து நிற்கும் குருவிதான்!


வண்ண வண்ணப் பறவைகள்

வணக்கம் வந்து சொல்லுது!

சின்னச் சின்னக் குழந்தைகள்

சிரித்து மகிழ்ந்து செல்லுது!


சத்து நிறைந்த பழங்களும்

கொத்துக் கொத்தாய்த் தொங்குது!

கத்து கின்ற குரங்குகள்

பறித்துப் பறித்துத் திங்குது!


இயற்கை அன்னை மடியிலே

எல்லை இல்லா இன்பமே!

செயற்கை வந்து விட்டாலே

எங்கும் சேரும் துன்பமே!


பூச்சி முதல் யானைவரை

புதுசு புதுசாப் பார்த்தோமே!

பொழுது வந்து சாய்ந்ததாலே

வீடு வந்து சேர்ந்தோமே!

*****************   ***********************

புத்தகத் திருவிழா


புத்தகம் வாங்கலாம் வாருங்கள்!

புத்தியைத் தீட்டிடும் பாருங்கள்!

அறிவே ஆற்றல் கூறுங்கள்!

ஆதரவு நாளும் தாருங்கள்!


ஆண்டிற்கு ஒருமுறை வந்திடுமே!

ஆனந்தம் நமக்குத் தந்திடுமே!

சிறியவர் பெரியவர் அனைவரின்

சிந்தையில் நிறைந்திடும்  புத்தகம்!


எண்ணும் எழுத்தும் சிறந்திடவே 

கண்ணும் கருத்தும் உயர்ந்திடவே 

மண்ணும் விண்ணும் நமதாகும்!

மனதைக் கவர்ந்த நூலாலே!


அன்பை வளர்க்கும் புத்தகமும்

அறிவைத் தீட்டிடும் புத்தகமும்

தேசத் தலைவரின் புத்தகமும்

தேடி நாமும் பெறுவோமே!


சிறுகச் சேமித்த பணத்தாலே 

சிறந்த புத்தகம் வாங்கித்தான்

பிறந்த நாளின் பரிசாக 

நண்பருக்குத் தந்து மகிழ்வேனே!

*******************  *********************


படியில் பயணம் வேண்டாம் தம்பி!

 

படியில் பயணம் வேண்டாம் தம்பி!

நொடியில் எதுவும் நடக்கலாம் தம்பி!

காலை மாலை பேருந்தில் தினமும்

கவனமாகப் பயணித்திட வேண்டும் தம்பி !


கூட்டம் உள்ள பேருந்து வந்தால்

ஒதுங்கி நீயும் நின்றிடு தம்பி!

தொங்கிக் கொண்டு படியில் சென்றால் 

தொலைந்து விடுமே வாழ்க்கை தம்பி!


பள்ளி அருகில் இருந்தால் நீயும்

துள்ளி நண்பருடன் நடந்திடு தம்பி!

நடக்க நடக்க உடலும் உள்ளமும் 

நலத்தை உனக்குத் தந்திடும் தம்பி!


அறிவியல் உலகில் அவசரம் வேண்டாம்!

ஆசிரியர் பேச்சினைக் கேட்டிடு தம்பி!

ஆயிரம் ஆயிரம் கனவுகள் கொண்டு 

அனைவருக்கும் செய்வாய் சமூகத் தொண்டு !

 ********************  **********************


         கடிகாரம்


கடிகாரம் நல்ல கடிகாரம்!

காலம் காட்டும் கடிகாரம்!

அப்பா தந்த கடிகாரம்!

அழகாய் ஓடும் கடிகாரம்!


சிறிய பெரிய முள்களும்

சுறுசுறுப்பாய் ஓடிடும்!

இரவு பகல் ஓய்வின்றி

டிக்டிக் என்றே பாடிடும்!


தினமும் பள்ளி செல்லவும்

நண்பர் கேட்டால் சொல்லவும்

தேர்வு விரைவாய் எழுதவும்

எனக்கு நன்கு உதவிடும்!


அதிக மதிப்பெண் பெற்றதால்

அன்புப் பரிசாய்க் கிடைத்தது!

அன்புத் தம்பி தங்கைகளே!

முயன்றால் நீங்களும் பெறலாமே!


*******************     *********************

                          மழை 


விண்ணில் இருந்து வருகுது!

மண்ணில் ஆறாய்ப் பெருகுது!

காணும் உள்ளம் உருகுது!

தேனும் பாலும் தருகுது!


ஆறு குளங்கள் நிறைக்குது!

ஓடி மண்ணைக் கரைக்குது!

பசுமை எங்கும் படருது!

வளமை மீண்டும் தொடருது!


நெல்லும் புல்லும் வளருது!

உள்ளம் எல்லாம் மகிழுது!

காட்டில் செடிகள் அரும்புது!

வீட்டில் செல்வம் திரும்புது!


உயிர்கள் எங்கும் தங்குது!

உயர்வு நம்மில் பொங்குது!

வானம் தந்த செல்வத்தைக்

காத்து நாமும் மகிழ்வோமே!

*******************   ***********************

                         

தாலாட்டும் மரங்கள் 


பச்சை மரத்தைப் பாருங்கள்!

பாடி ஆடிட வாருங்கள்!

குழந்தைகள் ஒன்றாய்க் கூடுங்கள்!

மரங்களை நன்றாய்ப் பேசுங்கள்!


அணில்கள்  கிளைகளில் தாவிடுமே!

அழகாய்க் குயிலும் கூவிடுமே!

மயில்கள் தோகை விரித்திடுமே!

மனங்கள் மெல்லச் சிரித்திடுமே!


கிளைகளில் பழங்கள் தொங்கிடுமே!

கிளிகள்  எங்கும் பேசிடுமே!

ஆந்தைகள் இரவினில் தங்கிடுமே!

ஆனந்தம் மனதினில் பொங்கிடுமே!


சுற்றிச் சுற்றி வரலாமே!

சுகமாய்க் காற்றைப் பெறலாமே!

குழுவாய் நாமும் படிப்போமே!

குறைகள் களைந்து முடிப்போமே!


மரங்கள் இருக்கும் இடமெல்லாம் 

மகிழ்ச்சி நிலைத்திடும் பாருங்கள்!

கரங்கள் ஒன்றாய்க் கூடியே

காத்திட இன்றே வாருங்கள்!

***********************    *******************


எங்கள் தேசம்


உலகம் போற்றும் தேசமடா

எங்கள் இந்திய தேசமடா

நாட்டின் மேலே பாசமடா

தென்றல் காற்றாய் வீசுமடா


புத்தொளி பறக்கும் கொடிதானே

புரட்சிகள் செய்த கொடிதானே

தாமரை மலர்களைப் போன்றே நாம்

அகமும் முகமும் மலர்ந்திடுவோம்!


தேசம் எங்கள் உயிராகும்

தேசிய கீதம் உணர்வாகும்

அசோகர் ஸ்தூபி சின்னம்தான்

அதிலே இருக்குது எண்ணம்தான்


மொழிகள் பலப்பல இருந்தாலும்

இனங்கள் பலப்பல இருந்தாலும்

இந்திய ரென்றே சொல்லிடுவோம் !

அன்பால் நாங்கள் வென்றிடுவோம் !


வீரமங்கை வேலு நாச்சி

மாவீரன் சுந்தர லிங்கம் என

தேசம் காத்த தலைவர்களை

தினமும் நாங்கள் நினைத்திடுவோம் !


காந்தியும் திலகரும் பகத்சிங்கும்

கப்ப லோட்டிய தமிழனும்

கொடியைக் காத்த குமரனும் 

எங்கள் மனதில் இருக்கின்றார் !


நல்லோர் செய்த தவத்தாலே

நாடு விடுதலை பெற்றதே !

நாங்கள் நாட்டின் கண்கள்தான்

நாட்டை வீட்டை நேசிப்போம் !


********************    ***********************



இயற்கையைப் பாதுகாப்போம் !


சின்னச் சின்னக் குழந்தைகளே கேளுங்க !

இயற்கையோடு சேர்ந்து நீங்க வாழுங்க !

மண்ணின் வளம் காக்க வேணும் நாமதான் !

மகிழ்வோடு இருக்கும் நம்ம பூமிதான் !


பூமிச்சாமி தந்த வரம் மரங்கள்தான் - அதைப் 

பொக்கிஷமாய்க் காக்க வேணும் மனிதர்தான்

மண்ணில் இருக்கும் மரங்கள் நமக்கு தாயடா !

மரங்களோடு வாழ்ந்திடவே ஓடிடும் நோயடா !


உறவு போல பறவைக் கூட்டம் வருகுது !- பழம்

உண்ட பின்னே பாடல்களைத் தருகுது !

எச்சத்தாலே மரங்களைத் தினம் பெருக்குது !

மனித இனம் மரங்களைத்தான் சுருக்குது !


வீடிருக்கும் நண்பர்களே வாருங்கள் !

வீதியெங்கும் மரம் நடவே வாருங்கள் !

பிறந்த நாளில் நட்டிடலாம் வாருங்கள் !

பிள்ளை போல மரங்களைப் பாருங்கள் !


**********************  ******************1


கோடை விடுமுறை


கோடை விடுமுறை வந்ததே!

குதூகலம் நமக்குத் தந்ததே!

பள்ளி நினைவு மறந்ததே!

விளையாட ஆசை பிறந்ததே!


தினுசு தினுசா விளையாடி 

புதுசு புதுசா மகிழ்ந்தாடி

திசைகள் நான்கும் பறந்தோடி

திரிவோம் நாங்கள் வானம்பாடி!


காலை மாலை வேளைகளில்

கவலை இன்றிச் சுற்றிடுவோம்!

நேரம் போவதே தெரியாமல்

பசியைக்கூட மறந்திடுவோம்!


இளநீர் பதநீர் நுங்குமே

கோடையை இதமாய் மாற்றிடுமே!

கோலி கிட்டிப்புள் பம்பரமே

மகிழ்ச்சியில் நம்மை ஏற்றிடுமே!


பல்லாங்குழியும் பாண்டியும்

குதூகலம் தரும் விளையாட்டே!

தாயம் போட்டு விளையாட

காயம் ஏதும் இல்லையே!


உறவைத் தேடிச் சென்றிடுவோம்!

உள்ளம் மகிழப் பேசிடுவோம்!

தாத்தா பாட்டி சொல்லும் கதைகளை

கேட்டே வாழ்வில் வென்றிடுவோம்!


                                         

**********************   -******************

பள்ளிக் கூடம் திறந்ததே!


பள்ளிக் கூடம் திறந்ததே!
கோடை விடுமுறை மறந்ததே!
துள்ளிக் கொண்டு வந்தோமே!
நண்பர்களுக்கு இனிப்பு தந்தோமே!

புத்தம் புதிய ஆடைகளும்
புத்தம் புதிய புத்தகங்களும்
சத்தம் நிறைந்த வகுப்பறையும்
சந்தோசத்தைத் தினமும் தந்திடுமே!

வரிசை முறையில் சென்றிடுவோம்
வழிபாட்டுக் கூடம் நோக்கித்தான்!
ஆசிரியர் கூறும் கருத்துக்களை
ஆர்வமாய் மனதில் தூக்கித்தான்!

சின்னச் சின்னக் குழுக்களாக
சிரித்தே தினமும் விளையாடுவோம்!
வண்ண வண்ணப் பூக்கள்மலர
விரும்பிச் செடிகள் நட்டுவைப்போம்!

ஆடல் பாடல் செயல்களாலே
ஆனந்தம் வகுப்பறையில் பொங்கிடுமே!
ஆண்டு முழுவதும் ஆசிரியரால்
கல்வி மனதில் தங்கிடுமே!

நன்மை பலவும் செய்திடவே
கல்வி கற்று உயர்ந்திடுவோம்!
மாணவர் நாங்கள் முயற்சித்தே
வீட்டையும் நாட்டையும் உயர்த்திடுவோம்!


*******************  ******************************


புத்தாண்டே வருக ! 

புத்தாடை அணிந்து நாமே
புத்தாண்டை  வரவேற்போமே!
பூமிப் பந்து நாளும் வளம்பெறவே
மரம் நட நாமே கரம்கோர்ப்போமே!

மனித நேயம் மலரச் செய்த
மாமழையைப்  போற்றுவோம் !
மனமெங்கும் மகிழ்ச்சி நிறைந்திட
நேயக் கரங்கள் நீட்டுவோம் !

இயற்கை தந்த கொடைகளையே
இன்பமாய் என்றும் காத்திடுவோம்!
இயற்கையை அழிக்கும் பகைவரிடம்
இன்றே மீட்க எழுந்திடுவோம்!

++++++++++++++++++   ++++++++++++++++++

அகிம்சை வீரரைப் போற்றுவோம்! 

அகிம்சைக் கொள்கை கொண்டவராம்!
அகிலம் போற்ற வாழ்ந்தவராம்!
பொய்யே பேசா வாழ்க்கையினை
அரிச்சந்திர நாடகத்தால் கற்றவராம்!

அடிமையில் இருந்த தேசத்தை
அன்பு நெறியில் மீட்டவராம்!
துப்பாக்கி பீரங்கி ஆயுதங்களை
வாய்மைத் தடியால் வென்றவராம்!

உழைக்கும் வர்க்கத்தின் அரையாடை
உடுத்த வைத்தது கதராடை!
மதுரை மண்தான் மகாத்மாவின்
மனதை மாற்றிய மாநகராம்!

ஓங்கி மிதித்த வெள்ளையனும்
உள்ளம் நெகிழ்ந்து திருந்தவே
காலணி ஒன்றைத் தன்கையாலே
சிறைக் காவலனுக்குத் தந்தாராம்!

குழந்தைகள்  மகிழ்ந்து அன்பாலே
தாத்தா என்று அழைத்தனரே!
உலகம் என்றும் தழைக்கவே
அகிம்சை வழியில் செல்வோமே!


****************   *******************************


மரம் வளர்ப்போம் தம்பி!

பள்ளி செல்லும் தம்பியே!
பசுமை எங்கும் நிறைந்திட
வீட்டில் வீதியில் பள்ளியில்
விரும்பி மரம் நடுவாய்!

சுற்றுச் சூழல் சிறந்திடுமே!
சோம்பல் எல்லாம் பறந்திடுமே!
மண்ணின் மைந்தன் மரங்களினால்
விண்ணின் மழைத்துளி கிடைத்திடுமே!

புவியின் வெப்பம் குறைந்திடுமே!
குளங்கள் எல்லாம் நிறைந்திடுமே!
தூய காற்று கிடைத்திடுமே!
இயற்கை இன்பம் பெற்றிடுமே!

பிறந்த நாளில் நட்டிடலாம்!
அரசு விழாக்களில் வைத்திடலாம்!
நினைவுப் பரிசாய் தந்திடலாம்!
நீங்கா இன்பம் பெற்றிடலாம் !

***********************   *************************


மரம் நடுவோம் தம்பிகளே!
------- ------------ ----------------

மனம் போல வாழ்ந்திடவே
மரம் நடுவோம் தம்பிகளே!
வனம் போன்ற காட்சிக்கு
கரம் கொடுப்போம் தம்பிகளே!

பசுமை எங்கும் நிறைந்திடவே
இனிமை தானே எங்கும்!
பறவைக் கூட்டம் பாடிடவே
மகிழ்ச்சி என்றும் தங்கும்!

தளிர்த்து வரும் செடியினாலே
தன்னம் பிக்கை வளரும்!
மொட்ட விழ்ந்து விரிகையிலே
முகத்தில் மகிழ்ச்சி மலரும்!

மரமும் மனித நேயமும்
இப்போது நமதிரு கண்கள்!
வளரும் குழந்தை கற்றிட
பாடணும் இசைப் பண்கள்!

வீடு பள்ளி வீதியென
பசுமை கொண்டு வாழ்வோம்!
விருப்பங் கொண்டு உலகினை
மரங் களாலே ஆள்வோம்!


************************   **********************

புத்தகம்

புத்தகம் நல்ல புத்தகம்!
புத்தியை வளர்த்திடும் புத்தகம்!
புதுமைகள் அடங்கிய புத்தகம்!
வளமைகள் காட்டிடும் புத்தகம்!

படங்கள் அடங்கிய புத்தகம்!
பண்பை வளர்த்திடும்  புத்தகம்!
கதைகள் சொல்லிடும் புத்தகம்!
கருத்தால் கவர்ந்திடும் புத்தகம்!

சிறியவர் பெரியவர் அனைவரது
சிந்தையைத் தூண்டிடும் புத்தகம்!
வறியவர் பலரைத் தன்னாலே
வாழ வைத்திடும் புத்தகம்!

தடங்கல் இன்றிப் பேசிடவே
தயார் செய்திடும் புத்தகம்!
பாதைகள் வகுத்துச் சென்றிடும்!
படிப்பதால் பலரையும் வென்றிடும்!

விதையாம் நீதியை உள்ளத்தில்
வேரூன்றி வளர்த்திடும் புத்தகம்!
மேதைகள் பலரை ஆக்கியதும்
மேன்மை தாங்கிய புத்தகமே!

*********************   ***************************

எங்கள் பள்ளி

பள்ளி எங்கள் பள்ளி!
பள்ளி செல்வோம் துள்ளி!
காலையில் தினமும் எழுந்து
கடவுளைத் தொழுவோம் விழுந்து!

மகிழ்வாய்ச் செல்வோம் வாராய்!
சீருடை அணிந்து ஜோராய்!
பாடல் படித்துக் கூறாய்!
பண்பால் நடப்பாய் நேராய்!

ஒன்றாய்ப் படித்திடும் தோழரிடம்
ஒற்றுமை உணர்வுடன் பழகிடுவாய்!
நன்றாய்ப் பாடம் படித்து
நானிலம் போற்ற நடந்திடுவாய்!

*******************    *****************************


விடுமுறைக் கொண்டாட்டம் 


பாட்டி வீட்டிற்குப் போகலாம்!

பாட்டுப் பாடி ஆடலாம்!

மாமா வீட்டிற்குப் போகலாம்!

மழையில் நனைந்து ஓடலாம்!


வரப்பில் நடந்து செல்லலாம்!

வயலில் நெல்லைப் பார்க்கலாம்!

அலை அடிக்கும் கண்மாயில்

ஆசையாய் நீந்தி மகிழலாம்!


பறவை காட்டில் பறப்பதைப்

பார்த்து நாமும் பறக்கலாம்!

அம்மா என்றே அழைத்திடும்

பசுவிடம் பாலும் கறக்கலாம்!


கம்மங் கூழும் குடிக்கலாம்!

காலையில் கதையும் படிக்கலாம்!

விருப்பம் போல மகிழவே

திருப்பம் தந்திடும் விடுமுறையே!


*********************    ********************

குயிலண்ணா! மயிலண்ணா!


குயிலண்ணா! குயிலண்ணா!

எங்கே இருந்து பாடுகிறாய்?

குரலை மட்டும் தந்துவிட்டு

கிளைக்குள் என்ன தேடுகிறாய்?


மயிலண்ணா! மயிலண்ணா!

எங்கே இருந்து பறக்கிறாய்?

அழகுத் தோகை விரித்தேதான்

தேசியப் பறவையாய்ச் சிறக்கிறாய்!


முயலண்ணா! முயலண்ணா!

எங்கே இருந்து ஓடுகிறாய்?

வேட்டை நாய்கள் விரட்டிட

வேதனையில் நீயும் வாடுகிறாய்!


அணிலண்ணா!அணிலண்ணா!

அழகாய் மரத்தில் ஏறுகிறாய்!

கொய்யாப் பழத்தின் சுவையினைக்

குதித்துக் குதித்துக் கூறுகிறாய்!

******************  ***********************

அதிகாலையில் எழுவோம் !

அதிகாலையில் தினமும் எழுவோமே!
ஆண்டவனை நாமும் தொழுவோமே!
பாடங்களை விரும்பிப் படிப்போமே!
படித்ததை எழுதியும் முடிப்போமே!

அமைதி எங்கும் நிலவிடுமே!
ஆற்றல் மனதில் உலவிடுமே!
இயற்கைக் காற்று வந்திடுமே!
இன்பம் நமக்குத் தந்திடுமே!

சேவலும் விடியலை அழைத்திடுமே!
சேர்ந்தே நம்முடன் உழைத்திடுமே!
கிழக்கில் சூரியன் உதித்திடுமே!
கீழ்வானம் விடியலைப் பதித்திடுமே!

பறவைகள் வானில் பறந்திடுமே!
பார்க்கக் கவலை மறந்திடுமே!
நாளிதழ் வந்து சேர்ந்திடுமே!
நாட்டு நடப்பும் தெரிந்திடுமே!

நண்பர் கூட்டம் சேர்ந்திடுமே!
நடந்தே பள்ளிக்குச் சென்றிடுமே!
அறிவு புகட்டும் ஆசானின்
வார்த்தை கேட்டு வென்றிடுமே!



********************   *******************

   பச்சைக் குடை

பச்சைக் குடையைப் பாருங்கள்!
பரந்து விரிந்து நிற்பதை!
பறவைக் கூட்டம் வந்துதான்
பாடம் தினமும் கற்பதை!

இலைகள் காற்றில் அசைந்திடும்!
இனிய இசையைத் தந்திடும்!
பூக்களின் வாசம் அழைத்திடும்!
மனமும் மணதில் திளைத்திடும்!

அறிவில் ஒன்று என்றாலும்
அழகாய் நம்மைக் காத்திடும்!
அருகில் இருந்து பார்த்திட
நீண்ட ஆயுள் சேர்த்திடும்!

பாதை எங்கும் வளர்த்திட
பயணம் என்றும் நலமாகும்!
பார்க்கும் இடத்தில் மரமென்றால்
நாடே செல்வ வளமாகும்!

******************** *********************


பள்ளி செல்வோம்!

பள்ளிக் கூடம் செல்வோமே!
பாடம் படித்துச் சொல்வோமே!
பண்பால் நாமும் வெல்வோமே!
அன்பால் மனதில் இணைவோமே!

புதிய புத்தக வாசமே!
புதுமை செய்யத் தூண்டுமே!
புதிய நண்பரின் பாசமே!
என்றும் நமக்கு வேண்டுமே!

பாடம் நன்கு படிப்போமே!
பாங்காய் எழுதி முடிப்போமே!
ஆசான் சொல்தான் அமிர்தமே!
மனதைச் செம்மை செய்யுமே!

ஆடிப்பாடி மகிழ்ந் திடலாமே!
ஆர்வமாய் விளை யாடிடலாமே!
ஆண்டின் இறுதியில் வென்றிடலாமே !
ஆசிரியர் சொல்படி நின்றிடலாமே!

*******************    **********************

சுறுசுறுப்பாய் இருப்பாய்!

சோம்பல் இருக்கும் நெஞ்சிலே
சோகம் மட்டுமே தங்கும்!
சுறுசுறுப்பு இருக்கும் நெஞ்சிலே
சுகமே என்றும் பொங்கும்!

நாளை நாளை என்றுநீயும்
நாளைத் தள்ளிப் போடாதே!
நம்பிக்கை இழந்து நீயும்
நாணம் கொண்டு வாடாதே!

எடுக்கும் செயலை இனிதாக
இன்றே செய்தால் நலமாகும்!
எல்லை இல்லா மகிழ்வாலே
இல்லம் என்றும் வளமாகும்!

தூங்கித் தூங்கிக் காலத்தை
துயரில் நீயும் வீழ்த்தாதே!
ஏங்கித் திரியும் நாளானால்
எல்லோர் மனமும் வாழ்த்தாதே!

விரும்பி எதனைச் செய்தாலும்
வெற்றி உனது வசமாகும்!
அரும்பும் பள்ளிக் காலத்தில்
கனவு எல்லாம் நிசமாகும்!

*******************   ********************


பச்சை மரமே! 

பச்சை மரமே! பச்சை மரமே!
பரந்து விரிந்த பச்சை மரமே!
காயும் கனியும் தந்திடும் மரமே!
நோயும் நொடியும் நீக்கிடும் மரமே!

பறவையின் கூட்டைத் தாங்கிடும் மரமே!
உறவாய் விலங்குகள் தங்கிட வருமே!
பூமியின் வெப்பம் குறைத்திடும் மரமே!
சாமிகள் இருந்திடும் சாதனை மரமே!

விழுதுகள் வேரினைத் தொட்டிட வருமே!
விரும்பிச் சிறுவர் ஆடிடும் மரமே!
மனித குலத்தின் மூன்றாம் கரமே!
மண்ணின் மகனும் நீயே மரமே!

வாசனைப் பூக்களை உதிர்த்திடும் மரமே !
வாழ்ந்தபின் இருக்கையாய் மாறிடும் மரமே !
ஏணியாய் மாறி உயர்த்திடும் மரமே !
ஞானியாய்ப் புத்தனை மாற்றிய மரமே !

மழையைத் தந்திடும் வள்ளல் மரமே !
மானம் காத்திட வருவதும் மரமே !
தானம் சிறந்திட இருப்பதும் மரமே !
தலையைத் தாழ்த்தி வணங்குது கரமே !

*******************   ********************


சுட்டிக் குழந்தை 

சுட்டித் தனங்கள் செய்கின்ற
குட்டிக் குட்டிக் குழந்தையே!
கட்டித் தங்கம் போலவே 
நித்தம் நீயும் ஜொலிக்கிறாய்!

தவழும் போதும் அழகுதான் 
மகிழும் போதும் அழகுதான்!
மழலைப் பேச்சுக் கேட்கையில்
மகிழ்ந்து போகும் உலகுதான்!

கள்ளம் இல்லா முகத்திலே 
கடவுள் தானே தெரிகிறார்!
இல்லம் எங்கும் உன்னாலே
இனிய நடனம் புரிகிறார்!

பிஞ்சுக் கால்கள் நெஞ்சிலே 
பஞ்சு போல நடக்குதே!
கொஞ்சிப் பேசும் போதிலே
சோகம் எல்லாம் கடக்குதே!

பிள்ளை மனம் இருந்தாலே 
தொல்லை என்றும் இல்லையே!
நல்ல வாழ்வு வாழ்ந்திட
பிள்ளை மனம்தான் எல்லையே!


******************   ********************



 பள்ளிக் காலம்

துள்ளித் திரியும் பள்ளிக் காலம்
சொல்லி மகிழ்வோம் எல்லா நாளும்!
நட்பை இணைக்கும் அன்புப் பாலம்!
முதுமை வரையில் மனதை ஆளும்!

வண்ணம் நிறைந்த வகுப்பில் தான்
எண்ணம் எங்கும் கல்வித் தேன்!
கதையும் பாட்டும் சிரிக்க வைக்கும்!
கவலை நீங்கிப் பறக்க வைக்கும்!

எண்ணும் எழுத்தும் எழுதிடப் புரியும்!
கண்ணும் கருத்துமாய் மனதினில் விரியும்!
பென்சிலும் பேனாவும் ஏட்டினை நிறைக்கும் !
பெற்றோர் கவலையைக் காலம் குறைக்கும்!

சின்னச் சின்ன விளையாட்டில் மனம்
சேர்ந்தே  நட்புடன் மகிழ்ந்திடும் தினம்!
கூடி வாழும் அன்பைப் பெற்றோம்!
குழந்தைப் பருவத்தில் நல்லதைக் கற்றோம்! 

நாள்கள் பலப்பல விரைந் தோடும்
பள்ளிக் காலத்தை மனமும் தேடும்!
மீண்டும் மீண்டும் அசை போட
பள்ளிக் கால நினைவுகள் வேண்டும்!


********************   *********************




இயற்கையைப் பாதுகோப்போம்!

சின்னச் சின்னக் குழந்தைகளே கேளுங்க!
இயற்கையோடு சேர்ந்து நீங்க வாழுங்க!
மண்ணின் வளம் காக்க வேணும் நாமதான்!
மகிழ்வோடு இருக்கும் நம்ம பூமிதான்!

பூமிச்சாமி தந்த வரம் மரங்கள்தான்!
பொக்கிசமாய்க் காக்க வேணும் மனிதர்தான்!
மண்ணில் இருக்கும் மரங்கள் நமக்குத் தாயடா!
மரங்களோடு வாழ்ந்திடவே ஓடிடும் நோயடா!

உறவுபோலப் பறவைக் கூட்டம் வருகுது!
பழம்உண்ட பின்னே பாடல்களைத் தருகுது!
எச்சத்தாலே மரங்களைத் தினம் பெருக்குது!
மனித இனம் மரங்களைத்தான் சுருக்குது!

வீடிருக்கும் மனிதர்களே விரைந்து வாருங்கள்!
வீதியெங்கும் மரம் நடவே வாருங்கள்!
பிறந்த நாளில் நட்டிடலாம் வாருங்கள்!
பிள்ளைபோல மரங்களைத்தான் பாருங்கள்!

******************  **********************


மரியாதை 

துள்ளித் திரியும் தம்பியே!
துடுக்குடன் எங்கே செல்கின்றாய்?
அன்னை உன்னை அழைக்கின்றார்
அவரிடம் சென்று வினவிவிட்டு
அதன்பின் நீயும் மகிழ்ந்தாடு!
அம்மா அப்பா பேச்சிற்கு 
அன்பாய் நீயும் பணிந்துவிடு
சொல்லும் வேலை கேட்டே நீ
சுறுசுறுப்பாய் உடன் செய்துவிடு!
அண்ணா அக்கா அனைவரிடம்
அன்பாய் நீயும் நடந்துவிடு!
வயதில் மூத்தோர் அனைவரையும் 
வணக்கம் சொல்லி மதித்துவிடு!
மரியாதை கொடுக்கக் கற்றுக்கொள்
மதிப்பை நீயும் பெற்றுக்கொள்!

***********************   ******************


பள்ளிக்குக் குழந்தைகளை அனுப்புவோம்!

பள்ளி செல்லும் வயதிலே
பிள்ளைகளை மகிழ்வாய் அனுப்புவோம்!
துள்ளி மகிழ்ந்து செல்வதை
கண்டு நாமும் களிப்போம்!

சின்னஞ் சிறிய வயதிலே
சிறை வேண்டாமே வீட்டிலே!
வண்ணப் பென்சில் பிடித்துதான்
எழுதட்டும் தினமும் ஏட்டிலே!

களை எடுக்க அனுப்பவும்
கைக்குழந்தை சுமக்கவும் விடலாமோ?
கல்வி கல்லா அவர்களை
அறியாமை இருள் தொடலாமோ?

குழந்தை நன்கு பயின்றால்
எதிர்காலம் இன்பமாய் விளங்குமே!
இன்னும் இன்னும் முயன்றால்
வாழ்க்கை நெறிகள் விளங்குமே!

பள்ளி தினமும் செல்லட்டுமே!
படித்ததை வீட்டில் சொல்லட்டுமே!
பண்பாய் வளர்ந்து வெல்லட்டுமே!
பயனாய் உலகில் நில்லட்டுமே!

******************    **********************

 
பள்ளிக்கூடம் திறந்தாச்சு!

கொளுத்தும் கோடை விடுமுறை போயாச்சு!
கொஞ்சும் பள்ளிக் கூடம் திறந்தாச்சு!
விடுமுறை நாள்களில் விளையாடி மகிழ்ந்தாச்சு!
மேல்வகுப்பு சென்றிட விளையாட்டையும் மறந்தாச்சு!

படித்த வகுப்பினில் தேர்ச்சி பெற்றாச்சு!
பலருக்கும் இனிப்புகள் மகிழ்வாய் கொடுத்தாச்சு!
அடுத்த வகுப்பிற்கு ஆயத்தம் எடுத்தாச்சு!
அன்பாய் அனைவரிடமும் பழகிட நினைச்சாச்சு!

புத்தம்புதிய ஆடை உடுத்திச் சென்றிடுவேன்!
புதுப்புது நண்பர்களைக் கண்டிடுவேன்!
நித்தம் ஆசிரியர் சொல் கேட்டு
நினைவில் நிறுத்திச் செயல் படுவேன்!

திட்டம் போட்டுத் தினமும் படித்திடுவேன்!
நல்ல மாணவனாய் நானும் நடந்திடுவேன்!
பட்டம் பலவும் படிப்பினில் பெற்று
பாரினில் உயர்ந்து பாரினை உயர்த்திடுவேன்!

**********************     ********************


நாய்க்குட்டி

எங்கள் வீட்டு நாய்க்குட்டி
விழிப்புடன் இருப்பதில் படுசுட்டி
வாலை வாலை ஆட்டிடும்!
விசுவாசத்தைக் காட்டிடும்!

வேற்று ஆள்கள் வந்தாலே
விரட்டி விரட்டிக் குரைத்திடும்!
மாற்றுக் குறையா அன்பாலே
மனதில் இன்பம் நிறைத்திடும்!

காலை மாலை வேளையென
நடக்கக் கூடவே வந்துவிடும்!
வாழும் காலம் முழுமையும்
நன்றி உணர்வைத் தந்துவிடும்!


******************  **********************

            திறன் பேசி

அறிவியல் உலகில் விந்தையாம்!
அனைத்திற்கும் இதுவே தந்தையாம்!
அதுஇன்றி அணுவும் அசையாதாம்!
அனைவரின் கையிலும் உள்ளதாம்!

கூட்டல் கழித்தல் போட்டுவிடும்!
கூட்டமாய்ப் படமும் எடுத்துவிடும்!
வானொலிப் பெட்டியாய் மாறிவிடும்!
வாழ்க்கையை ஏற்றமாய் மாற்றிவிடும்!

இரவினில் விளக்கைத் தந்துவிடும்!
இணையத்தில் இதயத்தை இணைத்துவிடும்!
நேரலை நிகழ்வைக் காட்டிவிடும்!
நினைத்ததை உடனே பகிர்ந்துவிடும்!

நன்மை தீமை இரண்டுமுண்டு 
நல்லதைப் பாக்கணும் விருப்பம் கொண்டு!
நாட்டு நடப்பினைத் தெரிந்து கொண்டு
நடப்பதில் நிச்சயம் பயனுமுண்டு!

************************    **************

தீபாவளி திருவிழா

திருவிழாவாம் திருவிழா!
தீபாவளித் திருவிழா!
திசையெட்டும் வானிலே
தித்திக்கின்ற பெருவிழா!

மத்தாப்பூக்கள் சிரித்திடும்
மனங்கவரும் திருவிழா!
புத்தாடை அணிந்திடவே
புதுமையான திருவிழா!

வெடிவெடித்து மகிழவே
விருப்பமான திருவிழா!
விருந்தினரைப் போற்றிட
வேண்டுமிங்கே ஒருவிழா!

பலகாரம் வந்திடவே
பாசமான திருவிழா!
ஒற்றுமையும் கூடிடவே
உன்னதமான பெருவிழா!


**********************     *******************


 யாரு? யாரு?

உலகப் பொதுமறை தந்திட்ட
உலகோர் போற்றும் மேதையாம்!
இரண்டே வரியில் வாழ்க்கையை
எழுத்தில் தந்தார் அவர் யாரு?

தேசத்தந்தை என்றுதான்
தினமும் இவரை அழைப்போமே!
அகிம்சைக் குணத்தை விதைத்திட்டார்
அவரைத் தெரிந்தால் கூறு?

பாட்டுப் பாட்டன் என்றுதான்
பலரும் சொல்லக் கேட்டோமே!
பாட்டில் புதுமை செய்திட்ட
பாவலர்தான் அவர் யாரு?

தமிழ்த் தாத்தா என்றுதான்
தமிழையா இன்று சொன்னாரே!
ஏட்டுச் சுவடி இலக்கியத்தை
எழுத்தில் தந்தார் அவர் யாரு?

ஆத்தி சூடி தந்திட்ட
அம்மை யாரென அறிவாயா?
கொன்றை வேந்தன் சொன்ன வேந்தர்
அவர்தான் யாரென அறிவாயா?

கேள்விகள் நானும் கேட்டேனே!
பதில்தான் உங்களிடம் இருக்கிறதா?
விடைகளைச் சொல்லி நீங்களும்
விரும்பும் பரிசைப் பெறுவீரே!



***********************  ******************

            பார் பார்

மேகம் பார் மேகம் பார்!
மிதக்கும் கரு மேகம் பார்!
தாகம் தீர்க்கும் தண்ணீரைத்
தன்னுள் வைத்த மேகம் பார்!

கடலைப் பார் கடலைப் பார்!
கப்பலைச் சுமக்கும் கடலைப் பார்!
ஆறு சுவையில் ஒன்றினைத்
அழகாய் அடக்கிய கடலைப் பார்!

மலையைப் பார் மலையைப் பார்!
மலைக்க வைக்கும் மலையைப் பார்!
மரங்கள் நிறைந்து இருப்பதால்
மழையைத் தரும் மலையைப் பார்!

வயலைப் பார் வயலைப் பார்!
வாழ்வை வளர்க்கும் வயலைப் பார்!
பசுமை நிறைந்த வயலாலே
பஞ்சம் போக்கும் வயலைப் பார்!

இயற்கை நன்கு செழித்தாலே
இன்பம் என்றும் கிடைத்திடும் பார்!
செயற்கை நம்முள் நுழைந்தாலே
துன்பம் வந்து தொடர்ந்திடும் பார்!


********************   *********************

சிறுவர் பாடல் - சிறுதானியம்

அளவில் சிறிது என்றாலும்
ஆற்றல் அதிகம் தந்துவிடும்!
நாளும் உணவாய்த் தின்றாலும்
நன்மை செய்திட வந்துவிடும்!

சத்து அதிகம் இருப்பதனால்
சாதனை செய்திடத் தூண்டும்!
முத்துப் போன்ற தானியங்கள்
மூச்சாய் நம்மிடம் வேண்டும்!

பள்ளி செல்லும் பிள்ளைகள்
பையில் கொண்டு செல்லட்டும்!
நெகிழிப் பைகள் சுமக்கின்ற
உணவு தீதெனச் சொல்லட்டும்!

பச்சைப் பயறும் சுண்டலும்
பலத்தை அதிகம் கொடுக்கும்!
முளைத்த கம்பு அரிசியும்
முதுமையில் போட்டி விடுக்கும்!

இயற்கை தந்த தானியங்கள்
இன்பம் என்றும் வழங்கிடும்
செயற்கை கொண்டு செய்கின்ற
உணவால் துன்பம் துலங்கிடும்

மு.மகேந்திர பாபு - 14-11-2024


******************   ***********************


சிறுவர் பாடல் - கீரை

கீரை வாங்கலயோ கீரையென
கிழவி ஒருத்தி வந்தாள்!
அகத்தி பசலை முருங்கையென
அள்ளி அள்ளித் தந்தாள்!

கட்டு பத்து ரூபாயென
காட்டிக் காட்டிச் சொன்னாள்!
உணவில் கீரை சேர்க்க
ஒவ்வொரு நாளும் பொன்னாள்!

தண்டு பொன்னாங் கன்னியென
தானும் தருவேன் என்றாள்!
மருத்துவக் குணங்கள் பலசொல்லி
மகிழ்ச்சி யோடு நின்றாள்! 

பாட்டி சத்தம் கேட்டுத்தான்
பாக்க வந்தது கூட்டம்!
ஆளுக்கொரு கீரை எடுக்க
அகன்றதே பாட்டியின் வாட்டம்!

சத்துக் கீரை சாப்பிடவே
சாதனை படைத்திட முடியும்!
தமிழர் உணவுப் பண்பாடு
தலை நிமிர்ந்தே விடியும்!

மு.மகேந்திர பாபு.
16-12-2024



****************   *********************


விளையாடு - சிறுவர் பாடல்

விளையாடு தினமும் விளையாடு!
விரும்பி நீயும் விளையாடு !
நண்பர் குழுவுடன் விளையாடு!
நன்மை கிடைத்திடும் விளையாடு!

கண்ணா மூச்சி விளையாடு!
கபடி நீயும் விளையாடு!
சொட்டாங் கல்லும் விளையாடு!
சுறுசுறுப் பாகிட விளையாடு!

கோலிக் குண்டும் விளையாடு!
கூடி நீயும் விளையாடு!
பம்பரம் சுற்றி விளையாடு!
பண்பு வளர்ந்திட விளையாடு!

கிட்டிக் குச்சி விளையாடு!
கிளியாந் தட்டும் விளையாடு!
பச்சைக் குதிரை விளையாடு!
பாண்டி ஆட்டம் விளையாடு!

உடலும் மனமும் பலமாகும்!
உயர்ந்த செல்வம் நலமாகும்!
களத்தில் நாளும் விளையாட
கவலை நீங்கி வளமாகும்!

மு.மகேந்திர பாபு, கருப்பாயூரணி, மதுரை-20.
பேச - 97861 41410


***********************   ********************


சிறுவர் பாடல் - பார்க்கலாம் வாங்க!

எங்கள் வீட்டு முற்றத்தில்
இருக்கும் பொருளைப் பாருங்கள்!
உங்கள் வீட்டில் இதுபோல
உள்ளதா என்று கூறுங்கள்!

நெல்லைக் குத்த உரலுடன்
நெட்டை உலக்கையும் உண்டு!
அம்மா சமையல் மணந்திட
அம்மிக் குழவியும் உண்டு!

உளுந்தை இரண்டாய் உடைத்திட
உருப்படியாய்த் திருகும் உண்டு!
பயணக் களைப்பைப் போக்கிட
படுத்தே இருக்கத் திண்டு!

உச்சி வெயிலில் வந்தாலும்
உடலுக்குத் தேவை நீர்மோர்!
உருவத்தில் பெரிதாய் மூலையில்
உயரமாய்ப் பானையைப் பார்!

சத்தாய் உணவைச் சமைத்திட
சாய்ந்தே இருக்குது மண்பானை!
பார்க்கப் பார்க்கத் தோற்றத்தில்
பரவச மூட்டும் குட்டியானை!

அடிக்க அடிக்கத் தண்ணீரை
அடிகுழாய் அள்ளித் தருகுது!
ஆடும் மாடும் அழகாக
ஆசையாய் வயிறாரப் பருகுது!

கயித்துக் கட்டில் மேலேதான்
கன்றுக் குட்டியும் தூங்குது!
மாட்டு வண்டி மேலேதான்
மனசும் மெல்ல ஏங்குது!

பார்த்துப் பார்த்துக் கண்களும்
பாரம் பரியத்தை வியக்குது!
இயற்கை என்றும் கொஞ்சிட
இன்பம் தந்தே மயக்குது!

மு.மகேந்திர பாபு - 16-12-2024


*********************  ********************










 

Post a Comment

0 Comments