சந்தை - சிறுகதை

 சந்தை - சிறுகதை - மு.மகேந்திர பாபு.


        " முடிவாச் சொல்றேன் மூவாயிரம்னு கொண்டு போறீகளா மூனு உருப்படியும் " 

 

           ஏவாரிகள் மௌனமாக இருந்தனர்.


  " என்னய்யா இது ? மூனு உருப்படியும் மூவாயிரம்தான் சொல்லுறேன். முடிச்சிரலாமா ? "


       சரி மூனும் வேணாம்னா கொராலக் கேக்கிறீகளா ? செனக்கொராலு. எழநூறுனு கொண்டு போங்க. வீட்டுக்குக் கொண்டு போன இருபது நாள்ல குட்டி போட்ரும். 


        இந்த ஆடும் குட்டியும் வேணுமா ? ரெண்டு  முன்னூறுன்னு  முடிச்சிருவமா ? என்னய்யா சொல்றீக ? சும்மா கம்முனு இருந்தா எப்படி ? ஆகும் ஆகாதுனு எதாவது சொன்னாத்தான மேக்கொண்டு நா பேச முடியும் ? 


           ஆள் விலகக் கூட இடமில்லாத அளவிற்குக் கூட்டம் . எங்கு பாத்தாலும் மனுசத்தலைகளும் . அவர்கள் காலுக்கருகில் செம்மறி ஆடுகளும் , வெள்ளாடுகளும் , கிடாய்களும் , குட்டியுமாகப் புழுதி பறந்து கொண்டிருந்தது எட்டயபுரம் ஆட்டுச் சந்தை.


      எட்டயபுரத்தில் வாரா வாரம் சனிக்கிழமைகளில் ஆட்டுச் சந்தை. ஏவாரிகள் சுத்து வட்டாரத்திலுள்ள ஊர்களிலிருந்தும் வருவார்கள். மேற்கே கோவில்பட்டியிலிருந்தும் அது தாண்டியும் , கிழக்கே விளாத்தி குளத்திலிருந்தும் , தெக்கே தூத்துக்குடிப் பக்கமிருந்தும் , வடக்கே அருப்புக்கோட்டை  எனப் பல ஊர்களிலிருந்தும் ஆடு வாங்கவும் , விற்கவுமாய்க் கூட்டம் அலை மோதுது. எங்கும் ஆட்டுக்கொச்ச வாடை. 


        பொன்னையாபுரத்திலிருந்து ஆடு விற்பனைக்குப் போன இராமையாதான் மேற்படி ஏவாரிகளிடம் பேசிக்கொண்டிருந்தான்.


          எட்டயபுரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து வடக்கேயுள்ள லைப்ரரி கட்டிடம் வரையிலும் கூட்டம்தான். சிலர் ஆங்காங்கே மறைவாக வைத்து ஆட்டுக்குட்டிகளுக்கு தண்ணீர்ப்பாட்டிலால் குடிக்க வைத்து வயிற்றை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். அப்படியாவது அதிக விலைக்கு விக்கலாம் என்ற பேராசையில். 


         எதிர்பார்த்ததைவிட குறைந்த விலைக்கு ஆடு வாங்கியவர்களும் , அதிக விலைக்கு விற்றவர்களும் தன்னுடன் வந்த ஆட்களுக்கு கூட்டுறவு டீக்கடையில் டீயும் பன்னும் வாங்கிக் கொடுத்து , தன் சந்தோசத்தை வெளிப்படுத்தினார்கள். சிலர் ஓட்டலுக்குப் போய் புரோட்டா வாங்கிக் கொடுத்தார்கள்.


             சில தடவை ஆடு வந்தசோடுல உடனே வித்துப்போகும். சில தடவை மத்தியானம் வரை இருந்தாலும் வெல போகாது. இன்னிக்கும் அதே நெலமதான் ஆகிப்போச்சு. பெரிய பெரிய ஏவாரிகள் ஆடுகளை வாங்கி வாங்கி லாரிகளிலும் , வேன்களிலும் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். ஒரு பக்கம் ஆடு வெளியேற , மறு பக்கம் ஆடு விற்பவர்கள் ஆட்டை உள்ளே கொண்டு வந்து கொண்டிருந்தனர்.


         சூரியன் வானத்தின் உச்சியில் உக்காந்து கொண்டு சுள்ளென்று தலையில் எரித்துக்கொண்டிருந்தான்.


     " என்ன ராமையா … இன்னிக்கு எந்தப் பய முகத்தில முழிச்சோம். நேரந்தான் போகுதே தவிர உருப்படி ஒன்னும் வித்த மாதிரி இல்லயே. போன வாரம் சந்தைக்குள்ள நுழஞ்சதுமே வெலப்போச்சு. இன்னிக்கு என்னடான்னா இவ்வளவு நேரமாகியும் ஒரு பயலும் கேக்கலயே ! " 

        துணைக்கு வந்த பரமு கேட்டான். 


" அதானப்பா ! இன்னிக்கு என்னனு ஒன்னும் புரியலயே ! பாப்போம் . கொண்டு வந்த உருப்படிகளை எப்படியும் வித்திட்டுதான் போகனும். திரும்பவும் வீட்டுக்கு கொண்டு போனா நல்லாவா இருக்கும் ? " 


  ஆமாமா ! என்ன வெல தேறுதோ தள்ளி விட்ர வேண்டியதான் என்றான் பரமு.


   " என்னய்யா !  விக்கிற உருப்படியா ? இல்ல வாங்கி வச்சிருக்கீகளா ? " என்றார் ஐம்பதைக் கடந்த பெரியவர் ஒருவர். 


    " கொடுக்கத்தான். வெல் சொல்லும். கட்டுபடியானாத் தாரேன் "


     பெரியவர் ஆட்டைப் பிடித்து வலது கையால் ஆட்டின் மேவாயைத் தூக்கிப் பாத்தார். 


     " பெரிசு … அதுக்குப் பல்லு இல்ல. ஆனா புல்லு நல்லா மேயும். என்ன சொல்றீக ? "


  " பல்லு இல்லயா ? "


" ஆமா பெரிசு. சும்மா காசு தருவன்னு பொய் சொல்லி விக்கக் கூடாதுல்ல. நாளப்பின்ன நாம சந்தைக்கு வந்து போகனுமா இல்லியா ? " 


  " பல்லு இல்லயினா வேணாமப்பா ! "


" சரி இந்தச் செனக்கொராலக் கொண்டு போறியா ? தல ஈத்து கொராலுயா "


  " கொராலு வேணாம்பா. குட்டி கொடுக்கற மாதிரி இருக்கா ? " 


 " கொடுக்கறதுதான் கேளும். ஐநூறுனு பத்திட்டுப் போரும் " 


" சின்னக் குட்டியா இருக்கு. ஐநூறுனு சொல்றியப்பா ! கொஞ்சம் சொல்லிக் கொடுப்பா " 


" நாஞ்சொல்லிட்டேன். நீரு கேட்குறதக் கேளும் !" 


   " ஒரு முன்னூறு முன்னூத்தி ஐம்பதுனு முடிக்கலாமா ? " சம்சாரிக்குப் பாத்து முடிப்பா. நானென்ன அம்பது நூறா வாங்க வந்திருக்கேன். ஏதோ வயசான காலத்துல ஆளுக தொணக்கி இருப்பது போல இந்த ஆட்டுக்குட்டியும் தொணக்கித் தொணயா இருக்கும் அதான் "


     " சம்சாரிக்கு சம்சாரி ஒத்தாச பண்ணிக்க வேண்டியதாம். ஒனக்கு வேணாம் எனக்கு வேணாம் . நானூறு கொண்டு போரும். பேரம் பேசி நேரம் போக வேண்டாம் " கட்அண்ட் ரைட்டாகச் சொன்னான் இராமையா.


     பெரியவர் மறு பேச்சுப்பேசவில்லை. தன் இடுப்பில் இருந்த மஞ்சள் இடைவாரின் சிப்பைத் திறந்தார். அதிலிருந்து நாலு நூறு ரூபா நோட்டுகளை எடுத்து இராமையாவிடம் கொடுதுதார்.


       பணத்தை வாங்கிய இராமையா தன் கண்களில் ஒத்திக்கொண்டு டவுசர் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டான். சின்னக் கம்பரக் கத்தியால் குட்டியின் பின் தொடைப் பக்கத்தில் மூனுதடவை ரோமத்தை வெட்டிப்போட்டான். 


    " என்ன பரமு குட்டியக் கொடுத்தாச்சு. இனி ஆடும் கொராலும்தான். சட்டுனு முடிஞ்சதுனா இடத்தக் காலி பண்ணிரலாம். இல்லனா பழையபடி இதுகள ஊருக்குப் பத்திட்டுப் போகணும் "


    " ஆமா இராமையா,கொஞ்சம் பொறுத்துப் பாப்போம் . 'எந்தப் புண்ணியவானாவது வாங்காமலா போயிருவான் ? " இராமையாவின் மன ஓட்டம் அறிந்து சொன்னான் பரமு.


    பரமு கொஞ்சம் குனி்ஞ்சு நிமிந்து வேலை செய்வதை விரும்பமாட்டான். அவன் ஒரு ரேக்ளா ரேசு பைத்தியம். சுத்து வட்டாரத்தில் எங்கு ரேக்ளா ரேசு நடந்தாலும் இவன் போயிருவான். ரேக்ளா வண்டி எந்தெந்த ஊரில் யார் யாரிடம் இருக்கு என கடகடனு சொல்லும் அளவிற்கு அதில் கில்லாடி.


    ஒரு காலத்தில் வண்டி மாடு வச்சு நாயாய் வேலை செய்தவன். நாள்பட நாள்பட ரேக்ளா ரேசில் ஆர்வம் வர , ஒருத்தருக்கு ரேக்ளா வண்டி மாடு வாங்கிக் கொடுத்தான். அதில் நூறு இருநூறு ரெண்டு பக்கத்திலும் இருந்து கமிசன் வர , பின் அதையே தொழிலாகக் கொண்டான். எப்போதாவதுதான் இந்த மாட்டு வியாபாரம் நடக்கும். அதனால் இராமையாவுடன் கூட்டு வைத்துக் கொண்டான்.   சனிக்கிழமைச் சந்தைக்கு இராமையா கூட வந்தால் மதியச்சோறும் போட்டு கையில் நூறு இருநூறு கொடுப்பான். பொண்டாட்டியிடம் பத்து இருபதைக் கொடுத்து விட்டு மீதியை தன் செலவுக்கு வைத்துக் கொள்வான். 


     ஆட்டு வியாபாரத்தில் சில ஏவாரிகள் சில நாள் லாபம் பாப்பார்கள். சில நாள் கையைக் கடிக்காமல் வாங்கிய தொகைக்கும் வண்டி வாடகைக்கும் வந்து சேரும். சில சமயம் நட்டத்திலும் கொண்டுவிடும். 


      பொன்னையாபுரத்திலிருந்து எட்டயபுரத்திற்குப் போகணும்னா எட்டுக் கிலோமீட்டர். பஸ்ல ஏத்திக் கொண்டு போறதும் கஷ்டம். குட்டிகள வேணும்னா மடியில வச்சுக் கொண்டு வரலாம். அதுக்கும் டபுள் டிக்கட்டுப் போடுவாங்க. அதனால் இராமையாவும் பரமுவும் அஞ்சு அஞ்சரைக்கெல்லாம் ஆட்டப் பத்திக்கொண்டு நடந்தே எட்டயபுரம் வந்து விடுவார்கள். 


      இராமையா பெரிய ஏவாரி அல்ல. இராமையாவிடம் வயலும் , புஞ்சையும் இருக்கு. நல்ல உழைப்பாளி. இரண்டு மூன்று பசுமாடுகள் இருக்கின்றன.  பாலுக்கு குறைவில்லை. எப்போதும் பால் வாடை அவன் வீட்டில் இருந்து கொண்டே இருக்கும். பாலைப் பீய்ச்சி கடைக்கோ அல்லது பிறருக்கோ விற்பதும் இல்லை. 


      வீட்டுத் தேவைக்கு வைத்துக் கொள்வான். ஊரில் யார் ஆடாவது ரெண்டு மூன்று குட்டி போட்டு பால் இல்லை. அல்லது வளர்க்க முடியலன்னா இராமையாவிடம் கொடுத்து விடுவார்கள். 


  " ஏப்பா இராமையா , தல ஈத்து ஆடு. மூனு குட்டி போட்ருக்கு. ஒன்ன நீ எடுத்துக்கிட்டு அம்பதோ நூறோ கொடுப்பா " என்பார்கள். 


   இராமையாவும் அது கிடாக்குட்டியா , பொட்டைக்குட்டியா எனப்பாக்காமல் வாங்கிக்கொண்டு அம்பது நூறு கொடுப்பான். அது மட்டுமல்லாது அவ்வப்போது குட்டிகளுக்குப் பாலும் ஓசியாகக் கொடுத்து விடுவான். இப்படியாக அவனிடம் பத்து இருபது குட்டிகள் சேர்ந்து விட்டன. 


          சத்தில்லாத நோஞ்சான் ஆடுகள் , வயதான ஆடுகள் என எதைக்கொடுத்தாலும் தன்னால் முடிந்த காசைக்கொடுத்து அந்த ஆடுகளத் தேத்திக் கொண்டு வந்துவிடுவான். தன் வயல் வரப்பில் கிடைக்கும் பாலாட்டங்குழை , மின்னிச்குழை , அகத்திக்கீரை , மஞ்சண்த்திக்குழை , வேலி நெத்து என போட்டு ஆடுகளைத் தேத்திக் கொண்டு வந்துவிடுவான். கிடைக்கும் விலைக்கு வித்தும் விடுவான். அதனால் பெரிய அளவி்ல் கைநட்டம் என்றில்லை. கிடைப்பதை மகிழ்வோடு வாங்கிக் கொள்வான். மூத்த மகளுக்கு வளகாப்பு என்பதால் அந்தச் செலவிற்காக ஆடுகள இன்று சந்தைக்குக் கொண்டு வந்துள்ளான்.


          நேரமாகிக் கொண்டிருந்தது. சந்தை முழுவதும் சத்தத்தால் நிரம்பியிருந்தது. விலை பேசி வெளியே கொண்டு போகும் ஆடுகளுக்குப் பத்துரூபா பில் கொடுத்துக்கொண்டிருந்தான் ஒருவன். 


    இராமையாவும் பரமுவும் எதை எதையோ பேசிக்கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் கசாப்புக் கடைக்காரன் கந்தசாமி வந்தான். 


   " என்ன ராமையா … ஓன் உருப்படிக வெல போகலயா ?  வந்த உடனே வித்துருவியப்பா. இன்னிக்கென்ன இம்புட்டு நேரம் ? "


  " அத ஏங்கேக்க கந்தா ! வெளிய சொன்னா வெக்கக்கேடு. கொண்டு வந்ததே மூனு உருப்படிகதான். இதுல கிடாக்குட்டி மட்டும் வெல போச்சு. மத்த ரெண்டு ஆடும் இந்தா நிக்கி பாரு "


   " இராமையாண்ணே ! கெடான்னாக்கூட நான் எடுத்துக்கிருவேன் கறிக்கு. இது ரெண்டும் ஆடால்லபா இருக்கு. அதிலும் செனக்கொரால வேற கொண்டுவந்திருக்க. நான் என்ன பண்ணட்டும் ? " நா ஒரு சோலியா கோவில்பட்டி வரைக்கும் போகணும். வாரம்ணே ! எனச்சொல்லிவிட்டு கந்தன் கடந்து சென்றான்.


    ஆடுகளின் வரவும் , இருப்பும் குறைந்து கொண்டே வந்தது. ஜனக்கூட்டமும் குறைந்தது. நெருக்கடியாய் இருந்த சந்தையில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆட்கள் நடந்து கொண்டிருந்தார்கள். 


        அப்போது விளாத்திகுளம் ஏவாரி ஒருவன் வந்தான். "என்ன இராமையா ! போன தடவ ஓங்கிட்ட வாங்குன உருப்படிக நல்ல வெலக்கிப் போச்சப்பா. இன்னிக்கு என்ன இன்னும் முடியலயா ? " என்றான்.


      " ஆமாண்ணே! . சும்மா மூனு உருப்படிதான் கொண்டாந்தேன். மகளுக்கு அடுத்த வாரம் வளகாப்பு வச்சிருக்கேன். கைச்செலவுக்கு ஆகுமேன்னு வந்தேன். பொழுதும் போகுது. உருப்படி வெல போகல. " 


     " சரி சரி கொண்டு வந்த ஆடுகள திருப்பிக் கொண்டு போனா நல்லாருக்காது. ஒரு ரேட்டுப்போட்டுக் கொடு. புதன் கிழம ஊருக்கு வந்து பணத்தச் செட்டில் பண்றேன். என்னப்பா சொல்ற ? "


     " இதுல சொல்றதுக்கு என்ன இருக்கு. பரம்பரையா நீங்க இந்தத் தொழில் பாக்குறீக. நீங்களே ஒரு வெல வச்சு எடுத்துக்கோங்க " 


         " சரியப்பா ரெண்டும் சேத்து ரெண்டு ஐநூறு வாங்கிக்க. இந்தா இப்ப ஐநூறு . ரெண்டாயிரத்த ஊர்லெ வந்து தாரேன்." 


      ஏவாரி சொல்லிக்கொண்டே கைவிரல்கள் அத்தனையிலும் மோதிரம் மினுங்க , கக்கத்தில் இருந்த கைப்பையில் இருந்து ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து நீட்டினான். 


     சந்தோசமாய் வாங்கிய ராமையா கண்களில் ஒத்திக்கொண்டு கும்பிடு போட்டான். 


     மதிய வெயில் ஏறிக்கொண்டுருந்தது. பரமு வாப்பா ! இன்னிக்கு கறிச்சோறு சாப்டுப்போவோம் எனச் சொல்லி ஓட்டலை நோக்கி கைவீசி  நடந்தான் . அந்த நடையில் சுமை குறைந்து மகிழ்ச்சி நிறைந்திருந்தது.


*************   ****************    ****************

Post a Comment

0 Comments