பேரம் - கவிதை

 

பேரம் - கவிதை ( இனிய நந்தவனம் மாத இதழுக்கு )

குனிந்து
கும்பிடு போட்டு அனுப்புகிறாள்
அலங்கரிக்கப்பட்ட
அழகான பெண்
நகைக்கடையினுள்.

மோதிரமா ? செயினா ?
என முகமலர்ந்து
கேட்கிறான்
வாட்டசாட்டமான ஆள்.

பதில் சொல்லி முடிப்பதற்குள்
ஆவி பறக்கும்
தேநீர் குவளையை
நீட்டுகிறான் பணியாள்
குளிருக்கு இதமாக.

அதோ ... அதை எடுங்க ...
இதோ ... இதை எடுங்க ... என
ஒவ்வொன்றாக
விரல் சுட்டச்சுட்ட
எடுத்து வந்து காட்டுகிறான்.

நீண்டநேரத் தேடுதலுக்குப்பின்
ஒன்றைக்காட்டி
இதற்கான தொகை சொல்லுங்கள் எனச்சொல்ல
அன்றைய விலை நிலவரத்துடன் சரிசெய்து
பட்டியல் ஒன்றைத் தருகிறான்.

சேதாரம் அதிகமாக இருக்கிறதே !
இன்னும் குறைக்கலாம்
என்றபோது ,
நீங்கள் எங்கு வேண்டுமானாலும் விசாரிக்கலாம் .
நமது கடையில்தான் குறைவு
என அடித்துச் சொல்கிறான்.

சார் ஒரு நிமிசம்.
நமது கடையில் மாதாந்திர
தவணை செலுத்துமுறை இருக்கிறது.
செய்கூலி இல்லை ,
சேதாரம் இல்லை என
விளக்கத்தை
மனதில் விதைக்கிறான்.

பணம் செலுத்தி
நகை பெற்றபின்
அடிக்கடி வாங்க என
வணங்கி அனுப்புகிறான்.

வீட்டு வாசலில் வந்து
கீரை விற்கும் பெண்ணிடம்
குரல் உயர்த்தி
விலை குறைத்து வாங்குவதில்
ஆனந்தப்படுகிறது மனம்.

மு.மகேந்திர பாபு ,
49 , விக்னேஷ் அவென்யு ,
இரண்டாவது தெரு ,
கருப்பாயூரணி , மதுரை - 20.
பேசி - 97861 41410
 

Post a Comment

0 Comments