காதல் மனைவி
ஊருக்குள்
எனக்கு
எப்போதும்
நல்ல பெயர்தான்.
காதலித்து, கல்யாணம்
முடிப்பதற்கு முன்புவரை.
அடியாத்தி...
அந்தப் பையனா?
நல்ல பையனாச்சே!
சிரிச்ச முகத்தோட இருக்குமே!
எடுத்தெரிஞ்சு
ஒரு நாளும் பேசாதே!
ஒரு உதவின்னா
உடனே செய்யுமே!
நேற்றுவரை
என்னைப்பற்றி
ஊருக்குள் சுற்றிக்கொண்டிருந்த
பேச்சுக்கள் இவை.
எந்தப் புத்துக்குள்
எந்தப் பாம்பு இருக்குமுனு
யார் கண்டா?
அப்பிராணி மாதிரி
திரிஞ்ச பையன்.
ஊம ஊரக்கெடுக்கும்
பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும்னு
சும்மாவா சொல்லிருக்காக?
இன்று
என்னைப் பற்றிய
விமர்சனங்கள் இவை.
படிக்கப்போன இடத்தில
பழக்கமாம்.
பாடங்கள் பரிமாறுனவுக
நாளாக நாளாக
மனசையும் மரிமாறிக்கிட்டாகளாம்.
ரெண்டு மூனு வருசமா
மூச்சுக்காட்டாம
இருந்திருக்கு அந்தப்பையன்.
இப்பத்தான் வேலைக்குப்
போயிருச்சில்ல...
வீட்லெ சொன்னா வில்லங்கம்
ஆகுமுனு
கூட்டிட்டு வந்துருச்சாம்.
ஆமா! ஆமா!
சாதிவிட்டு சாதிபோனா
யார்தான் ஒத்துக்குவா?
படிச்ச பையன் இப்படிச் செஞ்சா
என்னத்தச் சொல்றது?
என் முதுகுக்குப் பின்னால்
காதல் மனைவி
தலை குனிந்து வருகிறாள்.
தலைகுனிவு ஊராரின்
ஏசல்களுக்கு அல்ல...
புதுப்பெண்ணான நாணத்தில்.
படித்த என் சொந்தபந்தங்கள்
ஏதோ அசிங்கத்தைப்
பார்த்துவிட்டதைப் போல்
எங்களைப் பார்த்து
முகம் சுளிக்கிறார்கள்.
படிக்காத என் அப்பா அம்மா
என் காதல் மனைவியைப்
பார்த்து,
அடடே! மகாலட்சுமி மாதிரி
எவ்வளவு அழகான பொண்ணு
எனச்சொல்ல...
நான் சொல்கிறேன்
குணமும் அப்படித்தாம்மா என்று.
நன்றி - கதிரவன்-சூரியகாந்தி - 09 - 06 - 2002
0 Comments