மூட்டம் - சிறுகதை

 

 

மூட்டம் - சிறுகதை - மு.மகேந்திர பாபு

   தீட்டுக் கட்டையின் ஒரு நுனியில் உட்கார்ந்து கொண்டு , இரு கால்களையும் குத்திட்டு , வலது கையில் வெட்டருவாளின் கைப்பிடியில் சீனிக்கற்களைப் பிடங்கியால் அடித்துச் சிறுசிறு தூளாக்கி , இடது கையின் பெருவிரலும் , ஆட்காட்டி விரலும் அரிவாளை அழுத்திப் பிடிக்க , முன்னும் பின்னுமாய்க் ‘ கிரிச் …  கிரிச் ‘ என்று பதம் தீட்டினான் செல்லையா.

     நாலு தீட்டுத் தீட்டியபின் , இடதுகை விரல்களின் நுனியால் அரிவாளின் பதம் எப்படி இருக்கிறதென்று சோதித்தபின் மீண்டும் இரண்டு தீட்டுத் தீட்டினான். கேள்விக்குறிபோல் இருந்த அரிவாள் , வெள்ளையாய்ப் பளபளவென மினுங்கியது. கீழே கிடந்த துண்டை ரெண்டு தட்டுத் தட்ட , அதிலிருந்து தூசிகளும் , ஆட்டு ரோமங்களும் , புழுக்கைகளும் சரசரவென்று விழ , தோளில் போட்டுக் கொண்டான் செல்லையா.

   “ ஏத்தா … ஏ ராக்கு “ 

“ என்னய்யா ? “ 

“ நான் கெளம்புறேன். புளிச்சாணிப் பானையிலிருந்து ஒரு சொம்பு தண்ணி கொடு. உரியில இருக்குற தயிர்ச்சட்டியிலிருந்து ஒரு போனி நிறைய்ய தயிர ஊத்தி , அதில ரெண்டு கரண்டி சீனியப் போட்டு நல்லா கலக்கிக் கொடு. மதியத்துக்குக் கஞ்சி கொண்டாந்திரு. அப்படியே ஆட்ட , மாட்டப் பத்திக்கிட்டு வந்திரு. அங்கினக்குள்ள தரிசுல மாடுக மேயட்டும். வேலி நெத்த ஆடுக திங்கட்டும் . சரியா ? “ 

“ சரியா “ எனச்சொல்லி இராக்கு வீட்டுக்குள் சென்றாள்.

 புளிச்ச தண்ணிப் பானையிலிருந்து ஒரு சொம்பு தண்ணி மோந்தாள். தினமும் சோறு வடிக்கும் போது கொஞ்சம் தண்ணிய புளிச்ச தண்ணிப் பானைக்குள் ஊற்றி விடுவாள் . அப்பத்தான் காலையில் வடிக்கும் சோறு இராத்திரி வரைக்கும் தாக்குப் பிடிக்கும். இல்லைனா சாயந்திரம் மூனு , நாலு மணிக்கே நொச நொசனு வேர்க்க ஆரம்பித்துவிடும்.  மத்தியான வெயிலில் வேலை செய்து ‘ அப்பாடா ‘ என வீட்டுக்கு வரும்போது செல்லையா கேட்பது ஒரு சொம்பு நீச்சுத்தண்ணியும், மோரும்தான். அதை அன்னாக்க ஊத்திக் குடிக்கும் போது தொண்டைக்குள் செல்லும் சத்தம் , கம்மாயிலிருந்து தண்ணிய மடையில திறந்துவிட்டால் செல்லும் போது வருமே ‘ கடலகட ‘ வென்று. அப்படிச் சத்தம் போட்டு உள்ளே போகும்.

    தயிர்ச்சட்டியை உரியிலிருந்து எடுக்க , குண்டிப் பலகையும் , அதன்மேல் ஒரு குட்டிச் சாக்கு மூடையும் போட்டு ஏறி எடுத்தாள்.  பூனைகளின் பெருந்தொல்லைகளுக்குப் பயந்துதான் இராத்திரியில் பாலைச் சுடவைத்து , நல்லா ஆறிய பின் உர ஊத்தித் தூக்கிக் கொடுக்க , செல்லையா உரியில் வைத்துவிடுவான். 

   தயிரின் மேல் , ஆடை படர்ந்திருந்ததது. ஆடையை ஒதுக்கினாள். கரண்டியால் அல்வா போல அள்ளி , போனியில் ஊற்றி , கொஞ்சம் சீனி போட்டுக் கலக்கினாள்.

   “ இந்தாயா “ 

“ இன்னிக்குக் காலைச் சாப்பாடு இதுதான். வயிறு கம்முனு கெடக்கும். “ சொல்லிக்கொண்டே தூக்கு வாளியிலிருந்த தண்ணியை எடுத்துக் கொண்டு காட்டுக்குக் கிளம்பினான். 

   தீட்டி வச்ச வெட்டருவா இடுப்பிலிருந்த அன்னாக் கயிறிலும் , டவுசரிலும் கோர்த்து விட்டிருந்தான். அவனது நடைக்கேற்ப ‘ டப் டப் ‘ என்ற சத்தத்தோடு ஆடிக்கொண்டே சென்றது அரிவாள்.

 புது டவுசர் என்றால் செல்லையா கைலி கட்டும் விதமே தனிதான். கைலியைச் சுருட்டி இடுப்பில் ஒரு பட்டை போல் வைத்துக் கொள்வான். நாலஞ்சுநாள் இந்தக் கட்டுமானம்தான். 

   “ என்னவே ! டவுசரு புதுசாத் தெரியுது. துணி எடுத்துத் தச்சதா ? இல்ல விளாத்தி குளத்தில ரெடிமேடா வாங்குனதா ? நல்லாருக்குல … என அவன்  வயதொத்த ஆட்கள் நாலு பேர் சொன்னால்தான் மகிழ்ச்சிப்படும் செல்லையாவின் மனசு. யாரேனும் கேட்டு விடுவார்கள். அப்படிக் கேக்கவில்லை என்றாலும் கூட்டமாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் இடத்திற்கு வந்து , 

   “ ஏன் அளவுக்கு டவுசர் கொடுன்னா , லூசுப்பய கடக்காரன் … டவுசர லூசா பெருசாக் கொடுத்திட்டான். அன்னாக்கயிறப் போட்டுத்தான் டைட் பண்ண வேண்டியிருக்கு . இல்லனா … தன்னால கழண்டு விழுந்திரும்போலருக்கு “ எனச்சொல்லி , தன் மனசைச் தேத்திக்கொள்வான்.

பெரும்பாலும் செல்லையா ஒத்த ஆளாய் இருந்து , விறகு வெட்டி மூட்டம் போட்டு விடுவான். வெறகு வெட்ட ஆட்களை ஒரு சம்பிரதாயத்திற்காகக் கூப்பிடுவான். 

    “ எலே ராமு , வெறகு வெட்ட வாரியாடா ? ஒரு பத்து நா வெட்டு இருக்கு. முடிச்ச உடனே , மாமா உனக்கு வந்து வெட்றன்.” 

   “ அட ! போ மாமா … நீ வேற , நானே வெட்ன வெறக வீடு கொண்டு வந்து சேக்க முடியாம நாக்குத் தள்ளிப் போய்க் கெடக்கேன். மாட்டு வண்டிக்காரன் ஒரு பயலும் வரமாட்டிங்கான். டக்கர்காரனும் வரமாட்டிக்கான். கூப்டா இந்தாங்கறான். அந்தாங்கிறான். தாயோளி ஒரு பயலும் பிடி கொடுக்க மாட்டிக்கான். நானே வண்டிக்கு நாயாப் பேயாய் அலையுறேன் . இதுல நீ வேற !” 

     பெரும்பாலும் இப்படித்தான் பதில் வரும்னு செல்லையாவுக்கும் தெரியும். நாளப்பின்ன கூப்ட்டா … “ என்ன மாமா நாஞ்சும்மாதான இருந்தேன். ஒரு வார்த்தை சொல்லியிருந்தா சட்டுனு வந்திருப்பேன்ல … “ என வேல முடிஞ்சாப் பிறகு ஒரு சிலரின் பேச்சு வரும்னுதான் , ஒரு பேச்சுக்குக் கூப்டுவோம் என்றுதான் , செல்லையா கூப்டுப் பாத்தான். 

    வானம் மழயத் தருதோ இல்லயோ … ரெண்டு வருசத்துக்கு ஒரு முறை வேலி அறுவடைக்கு … அதான் வெட்டுவதற்கு தயாராகி விடுகிறது. கிராமத்து மக்களின் பசிபோக்கும் அட்சய பாத்திரமாக வேலி மரம் வானம் பாத்த பூமியில் இருக்கிறது. ஆத்துப்பாசன இடத்திலும் , பம்புசெட் இடங்களிலும் தென்னை மரங்கள் ஓங்கி உயர்ந்து வளர , வானம் பாத்த பூமியான கரிசக்காட்டில் வேலிதான் சிலசமயங்களில் உயிர் வாழ உத்திரவாதம் தருகிறது.

    தனக்குத் தெரிந்த ஏதோ ஒரு பழைய பாடலை வாயில் சன்னையடித்துக்கொண்டே , அவ்வப்போது பீடியையும் ஒரு இழுப்பு இழுத்தபடி , வேலிக்காடு நோக்கி நடந்தான் செல்லையா. கையில் தூக்குவாளி , தோளில் கத்திக்கம்பு , இடுப்பில் கோர்த்துவிட்ட அரிவாள் , தலையில் தலப்பாகட்டு , அதனுள் பீடி , தீப்பெட்டி என ஒரு மிடுக்கு அவன் நடையில் இருந்தது.

   ஆரம்பத்தில் ஆளோடு ஆளாய் விவசாயம் பாத்த காடுதான். காலப்போக்கில் சரியான வெளச்சல் இல்லாததால் தரிசாகப் போட்டுவிட்டான்.

சிலசமயம் மாட்டு ஏர் வைத்து உழுதும், சிலசமயம் டில்லர் , சட்டிக்கலப்பை என டிராக்டர் வைத்து உழுதும் ஏக்கருக்கு இவ்வளவு என பணம் கொடுத்து , வெத வெதச்சு , கள எடுத்து , உரம்போட்டு அதிலும் மாட்டுச்சாணி , ஆட்டுப்புழுக்கை என இயற்கை உரம் போட்டு எல்லாம் நல்லாத்தான் போய்க்கொண்டிருந்தது.

    உளுந்தும் நடுநடுவே தட்டப்பயறு பட்டமும் , காட்டைச்சுற்றி நாலுபுறமும் நாலு எட்டு அளவுக்கு சோளமும் என வெதச்சு வெள்ளாம பாத்து , பூப்பிஞ்சு என வரும்போது மழயும் காணோம். தண்ணியயும் காணோம்.

 எப்படியும் மழ பெய்யும் … பெய்யும் என்று ஏங்கிக் காத்துக்கிடக்கையில் ஏமாற்றம்தான் மிஞ்சியது. பக்கத்திலிருக்கும் கம்மாயில் கிடந்த கொஞ்ச நஞ்சத் தண்ணியையும் டிராக்டர் பிடித்து டிரம்களில் ஏற்றி , மருந்தடிச்சு செலவு செய்த பணம் நெஞ்சைக் குத்திக்கொண்டே இருந்தது.

         அந்த வருசம் ஒட்டு மொத்தமாக எல்லோரையும் காயப்போட்டு விட்டது மழ. முந்தின சிலருக்கு ஒருவாறாகப் பிஞ்சு காயாகி நெத்தானது. பலருக்கும் செடி காஞ்சு கனப்பறிஞ்சு விட்டது. காடு அங்கங்கே விரிசல் விட்டது. போட்ட காச எப்படியும் எடுத்திரலாம்னு நெனச்ச செல்லையாவுக்கு ஏமாற்றம்தான்.  ஆள் நொந்து நூலாகிப் போனான். காடுனு சொல்லிக்கிறதுக்கு ரொம்ப இல்லன்னாலும் ரெண்டு , மூனு ஏக்கர் வச்சிருந்தான். ரெண்டு ஏக்கர் கீகாட்டிலும் , ஒரு ஏக்கர் மேகாட்டிலும் இருந்தன. மேகாட்டில் ஆடு மாடுகளுக்கான சோளம் வெதச்சுப் போட்டதால் ஏதோ கூளமாவது வந்து சேர்ந்தது. 

   அப்போது முடிவெடுத்தான் செல்லையா. இவ்வளவு செலவு செய்தும் இப்படிப்போச்சே ! பேசாம தரிசாப்போட்டுட்ட என்ன ? 

     வேலி விதை போடாமலே அங்கொன்றும் இங்கொன்றுமாய் வேலியும் , மஞ்சணத்திச் செடிகளும் முளைக்கத் தொடங்கின. அவ்வப்போது மேய வருகின்ற ஆடுமாடுகளின் புழுக்கை , சாணியிலிருந்தும் வேலிச்செடி முளைக்க … இதோ , ஒரு வேலித்தோப்பு போல மாறிவிட்டது காடு.

இந்த வருசத்தின் மொத நாள் வேலிவெட்டு இன்னைக்குத்தான் . கொண்டு போன தூக்கு வாளிய வேலிச்செடியின் ஒரு குச்சியில் தொங்க விட்டான். இல்லாவிட்டால் காக்கா கொட்டிவிடும்.

        கத்திக்கம்பை கையில் எடுத்து , மனசுக்குள் தன் குலசாமியை வேண்டிக்கொண்டு , வேலிச்செடியின் தூரிலிருந்த தேவையற்ற முள்ளையும் , சின்னச்சின்ன வேலிக்கிளைகளையும் வெட்டி , வேலி மரத்தை வரிச்சி வரிச்சியாய் எளிதில் வெட்டும் அளவுக்கு வழி அமைத்தான். மரம் குடைபோல் ஆனது.ரெண்டு , மூனு நாள்கள் மதியம் வரை சுத்தம் செய்து கொள்வது என நினைத்தான். 

   தேவையற்றதை ஒதுக்கினால் வேல சூட்டிக்கா நடக்கும்.மதியம் வரை கத்திக்கம்பால் தேவையற்றதை வெட்டி ஒதுக்குவது என்றும் , மதியச் சாப்பாட்டிற்குப் பின் வெறகு வெட்டுவது என்றும் தீர்மானித்துக் கொண்டான். பத்து வேலித்தூர்கள் சுத்தமாயின.

    அரிவாளை எடுத்தான். நிமிர்ந்து நின்ற வேலியின் நடுப்பகுதியில் ஒரு வெட்டு வெட்ட துண்டாகிக் கிழே விழுந்தது. விழுந்த வேலியை இலாவகமாக அரிவாளால் தூக்கி , இடது கைக்கு மாற்றி , அதிலிருந்த முட்களை அரிவாளால் ரெண்டு உரசு உரசியபின் , ரெண்டு மூனு துண்டுகளாக வெட்டினான். 

     பச்சை இருக்கும் போது எத்தனை துண்டுகளாகவும் வெட்டலாம். ஒரே வெட்டில் விழுந்துவிடும்.  ஒரு வாரம் , பத்து நாள்கள் கழித்து நறுக்கினால் காஞ்ச வெறகு வெட்டுவதற்கு சிரமம். சில சமயம் வைரம் பாஞ்ச கட்டையை வெட்டும்போது அரிவாள் தெறித்துவிடும். வெட்டும்போதே மூட்டத்திற்கு அடுக்குவதற்கேற்ப சிறுசிறு துண்டுகளாக வெட்டிவிடுவான் செல்லையா.

     பெரிய வேலிச்செடிகளை வெட்டும்போது , அதிலிருக்கும் வேலிக்காய்களையும் , நெத்துகளையும் தனியே எடுத்து , ஒரு இடத்தில் குவித்து வைத்துக்கொண்டான். அதை ஆடும் மாடும் அப்படி அவாக்கொண்டு தின்னும். “ ஆடு மேச்ச மாதிரியும் அண்ணனுக்குப் பொண்ணு பாத்த மாதிரியும் என்பார்களே ! “ அதைப்போல , விறகு வெட்ன மாதிரியும் ஆச்சு , ஆட்டுக்கு இரை பாத்த மாதிரியும் ஆச்சு. 

     அவ்வப்போது மேய்ச்சல்காரர்களும் , வேலைக்காரர்களும் போகும்போது ஒரு சில வார்த்தைகள் பேசிச்சென்றார்கள்  சிலர் பீடிகேட்டும் , சிலர் தீப்பெட்டி கேட்டும் . பேச்சு பேச்சா இருந்தாலும் செல்லையாவின் கண்ணும் கையும் அரிவாளை இலாவகமாகப் பிடித்து வெட்டுவதில்தான் அதிக கவனம் செலுத்தியது.

வேலி வெட்டும்போது , அவ்வப்போது பரிசுமழையாய் தேன்தட்டுகள் கிடைப்பதும் உண்டு. பெரும்பாலும் அடர்த்தியாய் காஞ்ச முள் இருக்கும் இடத்தில் தேன்கூடு இருக்கும். வேலி மரத்தில் தெரியும்படி இருக்கும் தேன்கூடுகள் ஆட்டுக்காரர்கள் , மாட்டுக்காரர்கள் கண்ணில் படுவதால் அவை உடனே இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

       வேலித்தூரில் அடர்ந்த முள்ளுக்குள் இருக்கும் தேன்கூடுகள் கத்திக்கம்பை வைத்து வெட்டும்போதுதான் தெரியும். அதை சில்லாடை , சோளத்தட்டை என தேன்கூட்டின் பக்கத்தில் போட்டு தீமூட்டி , தேனீக்களை விரட்டி , தேன்தட்டை வேலிக்குச்சியோடு சேர்த்து எடுத்து விடுவான் செல்லையா.

     ஒருமுறை தேன்குளவி கண்ணாம்பட்டையில் கொட்ட , கண் திறந்து பாக்கவே இரண்டு நாளானது. அதிலிருந்து தலைய நல்லா துண்டால் சுத்தி எச்சரிக்கையுடன்தான் எடுப்பான். எடுத்த தேன்தட்டில் உள்ள புழுத்தட்டை தின்றுவிட்டு , தேன் பகுதியைத் தன் பிள்ளைகளுக்கு வைத்துக்கொள்வான்.

      மதிய நேரம் ராக்கு ஆடு , மாட்டைப் பத்திக்கொண்டு தூக்குச் சட்டியில் சாப்பாடு கொண்டு வந்தாள். ஒரு அடி உயர தூக்குச்சட்டி. சோத்தோடு தயிரையும் கலந்து , கொஞ்சம் உப்புக்கல்லை நுணுக்கி , ஒரு பேப்பரில் மடித்து முந்தானையில் கட்டிவைத்திருந்தாள்.

     தலையில் ஒரு சருவச்சட்டியில் தண்ணி இருந்தது. சேலைத்தலைப்பைக் கொஞ்சம் சுருட்டி , சும்மாடாக வைத்து , தண்ணி சுமந்து வரும் அழகே தனிதான். எவ்வளவு வேகமாக நடந்தாலும் , காத்தடிச்சாலும் சருவச்சட்டி சத்தமில்லாமல் வரும். அங்கிட்டு , இங்கிட்டு என எங்கிட்டும் ஆடாது , அலம்பாது.

   “ ஏய் ! வாயா … சாப்ட்டு அப்றம் வெட்டு வெறக “ 

   “ இந்தா வந்திருதேன் “ தலையிலிருந்த துண்டை எடுத்து , தன் மேலிருந்த வேலி இலைகளை ஒரு தட்டுத் தட்டிவிட்டு , ஒரு வெடலிப்பனையின் எனலில் உக்காந்தான். 

    “ நீ சாப்பிட்டியா ? “ 

   “ சாப்ட்டுத்தான் கொண்டாரேன் “ 

  “ புள்ளைக சாப்ட்டுருச்சுகளா ? “ 

“ சாப்ட்ருச்சுக “ 

“ என்ன செய்யுதுக ? “ 

“ தீப்பெட்டி ஒட்டுதுக “ 

படிக்கச் சொல்ல வேண்டியதான ? “ 

“ சொன்னா எங்க கேக்குதுக ? ஒரு கட்டு மட்டும் ஒட்டிட்டு படிக்கிறோம்ங்கிறாங்க.  ஏதோ அதுக பள்ளிக்கூடத்தில வாங்கித் தின்ன காசு வேணுமாம். ஒட்ற காச அதுககிட்ட கொடுத்திரனுமாம் “ 

   “ சரி … சரி கொடுத்திரு “ 

சனி , ஞாயிறு ரெண்டு நாள் லீவுல சாணி அள்ளி , முத்தம் தொழிச்சு , வீட்டக்கூட்டி , வீட்டுப்பாடம் எழுதி , துணி துவைச்சு , ரெண்டு கட்டி தீப்பெட்டியும் ஒட்டிவிடுவார்கள் செல்லையாவின் மகளும் , மகனும்.

     கையைக் கழுவிவிட்டு , தூக்குச் சட்டிய திறந்தான் செல்லையா. 

“ தயிர் ஊத்திக் கொண்டாந்தியாக்கும் ? “ 

   “ ஆமா “ 

“ குழம்பு , வெஞ்சனம் வைக்கலயா ? “ 

“ குழம்பு , வெஞ்சனம் வைக்கிறதுக்கு என்ன இருக்கு வீட்லெ ? “ பருப்பு இல்லெ. காயும் இல்ல. பிறகு எங்கிட்டு வைக்க ? “ 

   “ தொட்டுக்கிர ? “

“ வெடி மிளகா இருக்கு. நாலு சின்ன வெங்காயம் இருக்கு “ 

 “ அது போதும். சட்டிச்சோறு திங்கலாம் “

   சோத்தையும் தயிரையும் நல்லா பிசைந்தான். தயிருக்கு ஊறுகாயக் காட்டிலும் , வெடிமிளகாதான் கொண்டா … கொண்டா என்று சோத்தத் தொண்டைக்குள் அள்ளி விடும். தாளிக்கும் கரண்டியில் அஞ்சாறு பச்ச மிளகாய நடுவுல ரெண்டா கீறி … வால் பகுதி தொடுக்கிக் கொண்டு இருக்குமாறு செய்து , அதில் எண்ணெயும் , நுணுக்கிய உப்புத்தூளையும் போட்டு நாலு கிளறு கிளறினால் முடிஞ்சது வேல. டப் … டப்பென்று வெடிக்கும். கவனமாகக் கரண்டியைப் பிடித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் மூஞ்சியில் தெறித்து விழும். 

     ஒரு வாய்ச்சோத்த வாயில் போட , வெடி மிளகாய எடுத்து லேசா ஒரு கடி கடித்துக் கொண்டான். லேசா ஒரப்பும் , இதமான உப்புச் சுவையும் எளிதில் வாய்க்குள் சென்று கொண்டிருந்தது. சாப்பிட்டுவிட்டு கையைக் கழுவினான்.

டவுசர் பையிலுருந்து ஒரு பீடிய எடுத்து பற்றவைத்தான். 

    “ இந்தா பாருயா… பீடி குடிக்குறது சரி. வேணாம்னு சொல்லல. வீட்லெ வச்சுக் குடிக்காத. புக மண்டுது. நான் சகிச்சுக்கிட்டும் , சமாளிச்சுக்கிட்டும் இத்தன நாள ஓட்டிட்டேன். பிள்ளைக பெரிய பிள்ளைக. மூஞ்சியத் தூக்குதுக. நாத்தம் சகிக்க முடியல. மூட்டத்துப் புகையக்கூட உறிஞ்சிரலாம். ஆனா , இந்தப் பீடிப்புக … ச்சே ! கருமம். அப்புறம் பையன அனுப்பி “ இந்தாடா கடைக்குப் போயி பீடிக்கட்டு வாங்கி வானு சொல்ற வேலய விட்ரனும். உனக்கு வேணும்னா நீ வாங்கிக்கோ. எங்காச்சும் போய்க் குடிச்சுக்கோ. வீட்லெ ஊதாத… “ 

    “ சரி… சரி விடு. நான்தான் இப்ப கொஞ்சம் கொஞ்சமா கொறச்சிக்கிட்டு வர்றம்ல. இனி போகப்போகப் பாரு. ரெண்டு வருசத்தில கண்டிசனா விட்ருவேன். சொல்லிக்கொண்டே தீக்குச்சிய ஒரு உரசு உரசி வாயில் இருந்த பீடிக்குக் கொண்டு செல்ல , காத்தடிக்க அமந்து போனது தீ. 

   சிரித்தாள் ராக்கு. 

  “ இப்பப் பாரு. தீப்பெட்டிய உரசி தன் இரண்டு கைகளையும் குவித்துக் கொண்டு , காற்றில் தீ அணையாதபடி பொத்திக்கொண்டு பீடியில் வைத்து ‘ கப்கப் ‘ என்று ரெண்டு இழு இழுத்து புகைய விட்டான் செல்லையா. ஏதோ வீர விளையாட்டில் வெற்றி பெற்றதைப்போல. 

  “ அதென்ன … கோழிக்குஞ்சக் கவ்விக்கிட்டுப்போற பிராந்து மாதிரி தீக்குச்சி வாய்க்குப் போகுது ? “

    “ அது அப்படித்தான். சரி … சரி . ஆடு, மாடுக அங்கிட்டுப் போகுது. இருக்கனும்னா இரு. இல்லாட்டி இடத்தக் காலி பண்ணு. “ 

  “ ஒன்னைய ஒன்னு சொன்னா உடனே இடத்தக் காலி பண்ணச் சொல்லிருவிய “ 

  “ அட … கோட்டிக்காரி , சும்மாதான்டி சொன்னேன். “ 

   “ சரி சரி . போய் வெறக வெட்டு.” 

    வெட்டிப்போட்ட ஒரு தடிக்கட்டைய எடுத்து , மேத்தோல் சீவி , சற்றே ஆழப்படுத்தி , மண்ணைக் கொஞ்சம் தெள்ளிப்போட்டு , சீனிக்கல்லைத்தட்டி , அரிவாளை மீண்டும் தீட்டத் தொடங்கினான் செல்லையா. வேலைக்காரனுக்கு ஆயுதம்தான் முக்கியம். அதுவும் கூராக இருக்க வேண்டும் என்பது செல்லையாவின் எண்ணம். 

நாலஞ்சு தூர்களை வெட்டினான். வெட்டிய பின் , துண்டு துண்டாக நறுக்கினான். நேரம் சென்று கொண்டிருந்தது. மணி அஞ்சு அஞ்சரை இருக்கும் போல் தோன்றியது மேல்த்திசைச் சூரியனைப் பாக்கும்போது. இன்னிக்கு இவ்வளவு போதும். நாளை பாப்போம் என நினைத்து வேலையை முடித்தான் செல்லையா. ராக்கு ஆடு மாடுகளைப் பத்திக்கொண்டு வீட்டிற்குச் செல்ல , அரிவாள் , கத்திக்கம்பு , தூக்காளி சகிதமாய்க் கண்மாயிற்கு வந்தான் செல்லையா. 

      மார்பளவு தண்ணிக்குள் சென்றவுடன் ரெண்டு முங்கி முங்கி , நின்றபடியே தலை , கை , கால் தேய்த்து மீண்டும் ரெண்டு முங்கி முங்கி , துண்டை இடுப்பிலிருந்து உருவி , தண்ணியிலே நாலு அடி அடித்து , பிழிந்த பின் மீண்டும் கட்டிக் கொண்டு , டவுசர் போட்டு கைலி கட்டி கரையேறி வீடு வந்தான். 

     “ என்னப்பா செல்லையா ! ஒரு கை போடலாமா ? “ என்றான் ராசு. கனகு ஆட்டுத் தொழுவத்தில் சாயந்திர நேரம் சீட்டு விளையாடுவதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கும். 

    “ இல்லப்பா. இப்பத்தான் வேல முடிஞ்சி வாரேன். நீங்க ஆடுங்க “ எனச்சொல்லிவிட்டு வீட்டிற்குச் சென்றான். இராத்திரி சாப்ட்டு விட்டு , முற்றத்தில் படுத்து நிம்மதியாகத் தூங்கினான்.

     தொடர்ந்து பத்து நாள்கள் விறகு வெட்டு இருந்தது. ஞாயிற்றுக் கிழமை லீவு நாள் என்றோ , நல்ல நாள் என்றோ வீட்டில் இருக்கவில்லை.  ஊரில் ஏதேனும் கெழடு கட்டைக இறந்துவிட்டால் , அன்று மட்டும் யாரும் வேலைக்குச் செல்லக்கூடாது என்பது ஊர்க்கட்டுப்பாடு. மற்றபடி எல்லா நாளும் வேலை நாள்தான் செல்லையாவிற்கு.

    ஒரு வழியாய் வெட்டி முடித்தான். சரவணன் மாட்டு வண்டியில் விறகை ஏற்றி , வீட்டின் பின்புறமுள்ள காலி இடத்தில் கொண்டு வந்து தட்டினான். நாலஞ்சு நடையில் விறகு வீடு வந்து சேர்ந்தது. இனி , அடுத்த வேல , விறகை அடுக்கி மூட்டம் போடுறதுதான்.

   “ ஏ புள்ள ராக்கு ! “ 

   “ என்னய்யா ! “ 

  “ ஒரு கட்டுப் பூமுள் பிறக்கி வா. அப்படியே ரெண்டு சில்லாடையும் எடுத்துவா “ 

    “ சரி சரி “ 

மூட்டம் அடுக்கும் போது நடுவில் வேலிமுள்ள ஒரு கட்டு கட்டி வைத்து , அதில் பனை மட்டையின் அடியில் இருக்கும் சில்லாடையைச் சொருகி , மூட்டம் அடுக்கி முடித்த பின் , தீ வைக்க வேண்டும். தீ வைப்பதற்கென்றே சிறு இடைவெளி விடப்பட்டிருக்கும். தீப்பந்தம் சில்லாடையில் பட , அதைச்சுற்றி இருக்கும் வேலி முள் எரிய , மூட்டம் எரியத் தொடங்கும்.

     முள்ளை வைத்தாகி விட்டது. இருக்கும் விறகைச் சரிசமமாகக் கொண்டு , ஒரு சிறு மலை போல விறகுகளை அடுக்க வேண்டும்.

   மூட்டத்திற்கு விறகு அடுக்குவது என்பது தனிக்கலை. எல்லோராலும் அடுக்க முடியாது. தூர்க்கட்டை இருந்தால் அதைத்தான் முதலில் அடுக்க வேண்டும். அதன் பிறகு பெரிய தடி விறகு , சின்ன விறகு அப்போதுதான் தீப்பிடித்து எரியும் போது , சரியான முறையில் எரிந்து விறகு கரியாக மாறும். இல்லையென்றால் சாம்பலாகி வீணாகிவிடும்.

   அடுக்கடுக்காக விறகை வைத்து , பத்தடி உயரமுள்ள மலை போல் அடுக்கினான் செல்லையா.பிறகு மண்ணை வெட்டி , அதில் நாலு குடம் தண்ணீர் ஊற்றி , புட்டுக் கலவைபோல் போட்டான். அடுக்கிய விறகின் மேல் சோளத்தட்டைகளை விரித்து , மூடி வைத்தான். அதன் மேல் ஈரமண்ணைப் போட்டு மூடி , ஆங்காங்கே சின்னச் சின்ன ஓட்டை புகை போக விட்டான். இரண்டு நாள் வேலையில் மூட்டம் தயாராகி விட்டது. சாயந்திரம் மூட்டத்திற்குத் தீ வைத்தான்.

    காலை நேரச் சமையலில் , ஓலைக் குடிசையிலிருந்து கிளம்பும் புகைபோல அங்கும் இங்கும் மூட்டத்தின் மேல் புகை வெளியேறியது.

கொஞ்ச நேரத்தில் மூட்டத்தில் உள்ள எல்லா ஓட்டைகளிலிருந்தும் புகை சீராக வெளியேறியது.

   இரண்டு நாள் வேக்காடு வேகவேண்டும். சரியான நேரத்தில் மூட்டத்தைப் பிரிக்க வேண்டும். அவசரப்பட்டுவிட்டால் , வேகாக்கரி அதிகம்  இருக்கும். ஆறப்போட்டு விட்டால் சின்ன விறகு சாம்பலாகி விடும். கவனமாகப் பதம் பார்த்து மூட்டத்தைப் பிரிக்க வேண்டும். செல்லையா அதிலே படு கில்லாடி.

 சில நேரங்களில் மூட்டத்தின் மேல் சில இடங்கள் அமுங்கிப் போகும். உடனே மண்ணைப் போட்டு அதைக் கையால் தட்டிச் சரிசெய்ய வேண்டும். எந்த விதத்திலும் வெளிக்காத்து மூட்டத்திற்குள் சென்று விடக்கூடாது. மூட்டம் அமுங்கி நொறுங்கும் போது ஏற்படும் ஓட்டையை அடைக்காவிட்டால் அது தீப்பந்தம் போல எரிய ஆரம்பித்துவிடும். பிறகு சிக்கல்தான்.

     இராத்திரியில் ஒரு டார்ச்லைட் வைத்துக் கொண்டு , கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டான். புதிதாக மூட்டத்தின் பக்கத்தில் செல்வோர்க்கு புகை வாடை ஒத்துக் கொள்ளாது. செல்லையாவிற்கு எல்லாம் பழகிவிட்டது.

   இரண்டு நாள்கள் கழித்து தண்ணீர் ஊற்றி , இதமாக மூட்டத்தைப் பிரித்தான். வேக்காடு நன்றாக இருந்தது. ஒரு சில விறகுகள் முக்கால் வேக்காட்டில் இருந்தன. அதை மட்டும் தனியாகப் பிரித்துப் போட்டான். மீண்டும் அதை எரித்து கரியாக்க வேண்டும்.

      விளாத்தி குளத்தில் இருந்து மொத்த வியாபாரி சாக்கோடு வந்தான். மொத்தம் ஐம்பது சாக்குகள் இருக்குமென்று கணித்தான் செல்லையா. ஐம்பது சாக்குகளோடும் , வேலை ஆட்களோடும் , லாரியோடும் வந்தான் வியாபாரி.

    அவர்கள் வருவதற்கு முன்பே கரியில் நல்லா தண்ணி ஊற்றிப் போட்டான். அப்போதுதான் கரி எடை இருக்கும். சீக்கிரத்தில் நொறுங்காமலும் இருக்கும்.

       மொத்தம் ஐம்பத்தஞ்சு மூட்டைக்கரி இருந்தது.வந்தவர்கள் லாரியில் மூட்டைகளைத் தூக்கிப் போட்டார்கள். மூடைக்கரி நூறு ரூவா என விலை பேசி காசக்கொடுத்தான் ஏவாரி. சந்தோசமாக வாங்கினான் செல்லையா. இரண்டு மூன்று வாரமாகப் பட்ட பாடு இன்று பணமாக அவன் கைகளில் சிரிக்கிறது.

    மத்தியானப் பஸ்ஸில் விளாத்திகுளம் செல்ல பொன்னையாபுரம் பஸ்ஸ்டாண்டிற்கு வந்தான்.

   " என்ன மாமா ... பணம் வந்திருச்சா ? டவுனுக்குக் கிளம்பியாச்சு போல " ராமு கேட்டான்.

  " ஆமா மாப்ள. பிள்ளைகளுக்கு ஒரு செட் ஸ்கூல் டிரஸ். ஒங்க அத்தைக்குச் சேல. அப்புறம் உங்க மாமாவுக்கு அதான்யா எனக்கு ஒரு புது டவுசர் " எனச் சொல்லும்போதே செல்லையாவின் முகத்தில் மகிழ்ச்சி நிறைந்து மின்னலடித்தது.Post a Comment

0 Comments