பொங்கல் தோசை - கட்டுரை - மு.மகேந்திர பாபு

 


பொங்கல் தோசை -  நம் உரத்த சிந்தனை மாத இதழுக்கு.

( ஜனவரி 2024 - நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளியானது )


          பொங்கல் நாள் நெருங்க நெருங்க சந்தோசம் கூடிக்கொண்டே போனது எங்களுக்கு. பத்துப் பைசாவிற்கு ஒரு அடிக்கரும்பு கிடைக்கும். தினமும் கம்மங்கஞ்சி , கேப்பக் கூழ் என்று சாப்பிட்டுப் பழகிய எங்களுக்கு பொங்கல் நாளில் அரிசித்தோசை கிடைக்கும்.


        மந்தையம்மன் கோவில் ஊர்த்திடலில் ஊர்ப்பொதுவிற்கான ஒரு பெரிய ஆட்டு உரல் இருக்கும். சொந்தமாக ஆட்டு உரல் இல்லாதவர்கள் அங்கு சென்று ஆட்டுவார்கள். அம்மா ஆட்ட , அப்பா அரிசியினைத் தள்ளிவிடுவார். பொங்கலுக்கு முதல் நாள் இரவில் ஆட்டி வைத்து விடுவோம்.


             பொங்கல் அன்று அம்மா நாலுமணிக்கெல்லாம் எழுந்து தோசைச் சுட ஆரம்பிப்பார். காம்பு நீண்ட பெரிய கத்தரிக்காயின் அடிப்பகுதியை நறுக்கிவிட்டு , தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் தேய்த்து  , தோசைச்சட்டியில் மாவினை ஊற்றும்போது சுரீர் என்ற சத்தத்தில் வீடே சந்தோசமாகும். 


       தோசையைச் சுட்டு சுட்டு அம்மா பனைநார்ப்பெட்டியில் அடுக்குவார். விடியும் பொழுதில் பெட்டி நிறைந்து இருப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.


            சுட்ட தோசையில் இரண்டை எடுத்து டவுசர் பைக்குள் வைத்து , விளையாடப் போவோம். எலேய் … எங்க வீட்ல இன்னிக்கு அரிசித்தோசை டோய் . எங்க வூட்லெ சோளத்தோசைடா ! எங்க வூட்லெ கம்மந்தோசைடா என ஆளாளுக்கு ஒன்றைச் சொல்வார்கள். இந்தாங்கடா ! அரிசித் தோசை சாப்டுங்க ! எனச்சொல்லி டவுசர் பைக்குள் இருந்த தோசையைப் பிய்த்துக் கொடுத்து மகிழ்வோம்.


            இன்றைய காலத்தில் தோசை என்பது தினசரி உணவு. ஆனால் அன்று திருவிழா உணவாகத்தான் தோசை கிடைத்தது. அது ஒரு ஆசையான தோசைக்காலம்.


மு.மகேந்திர பாபு , கருப்பாயூரணி , மதுரை. 

செல் - 97861 41410.

Post a Comment

0 Comments