இந்து தமிழ்திசை - வெற்றிக்கொடி நாளிதழ் - கட்டுரைகள் - மு.மகேந்திர பாபு.

 

இந்து தமிழ் - வெற்றிக்கொடி கட்டுரைகள் - மு.மகேந்திர பாபு 



இந்து தமிழ் திசை -  வெற்றிக்கொடி நாளிதழுக்கு .


மாணவர்களும் மரங்களும் ( அல்லது ) பள்ளியில் செய்வோம் பசுமைப் புரட்சி.


         வகுப்பறையில் மாணவர்களிடம் உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு படம் வரைந்து வாருங்கள் என்றேன்.


    " என்ன படம் வேண்டுமானாலும் வரையலாமா ஐயா ? " என்றான் ஒரு மாணவன். 


" ஆம் ! உன் மனதில் தோன்றியதை ஓவியமாக்கு " என்றேன்.


         சற்று நேரம் கழித்து மாணவர்கள் ஒவ்வொருவராகத் தாங்கள் வரைந்த படங்களைக் கொண்டு வந்தனர். வகுப்பறையில் உள்ள மொத்த மாணவர்கள் நாற்பது பேரில் முப்பதுக்கும் மேற்பட்டோர் இயற்கைக்  காட்சிகளையே வரைந்து வந்தனர். ஒரு சிலர் சோட்டா பீம் , மோட்டு பட்லு என கார்ட்டூன் படங்களை வரைந்திருந்தனர்.


படம்  வரைந்த அனைவருக்கும் பாராட்டுகள் என்று சொல்லி கரவொலி எழுப்ப , மாணவர்கள் மகிழ்ந்தனர்.


    உங்கள் எண்ணத்தில் உள்ளது கைவண்ணமாக , கவின் வண்ணமாக , கலை வண்ணமாக மிகச்சிறப்பாக உள்ளது. உங்கள் அனைவரின் படங்களிலும் ஓர் ஒற்றுமையைக் கண்டேன். 


         உயர்ந்த மலைகள், மலைகள் நடுவே சூரியனின் உதயம். ஆற்றில் வெள்ளம். ஆற்றின் முன்பு அழகிய வீடு. வீட்டின் இரண்டு பக்கமும் தென்னை மரங்கள். வானில் பறந்து செல்லும் பறவைகள் என அவர்களின் ஓவியத்தைப் பார்க்கப் பார்க்க இன்பம்.


        வீட்டின் அருகே மரங்கள். மரங்கள் மண் தந்த சீதனங்கள் . இன்று மரங்களைப் பற்றிப் பேசுவோமா ? என்றேன்.


         இந்த மாதத்தில் பிறந்த நாள் கொண்டாடியவர்கள் , கொண்டாட உள்ளவர்கள் யார் ? யார் ? என்றேன். ஒரு சிலர் கை தூக்கினார்கள். 


   கை தூக்கிய ஒரு மாணவனிடம் , உன் பிறந்த நாளை எப்படிக்  கொண்டாடுவாய்  என்றேன். புதுச்சட்டை போடுவேன். அம்மா கேசரி செய்து கொடுப்பார்கள்.  நண்பர்களுக்கு கடலை மிட்டாய் கொடுப்பேன். அப்புறம் நம்ம பள்ளிக்கு ஒரு பரிசு கொடுக்கப் போகிறேன் என்றான். 


" அப்படியா ? அது என்ன பரிசு ? "


" என் பிறந்த நாளன்று நம் பள்ளி வளாகத்தில் மரக்கன்று ஒன்று நட உள்ளேன் ஐயா " என்றான்.


மொத்த வகுப்பும் கைதட்டி வரவேற்றது . 


பிறந்த நாளில் யாரெல்லாம் மரக்கன்றுகள் உங்கள் வீட்டிலோ , வீதியிலோ நட்டு வைத்து வளர்க்கிறீர்கள் என்றேன். 


ஒரு சில மாணவர்கள் கை தூக்கினார்கள்.பிறந்த நாளின் போது மரக்கன்றுகள் , பூச்செடிகள் , மூலிகைச் செடிகள் வைத்த மாணவர்களுக்கு காலை வழிபாட்டுக் கூட்டத்தில் புத்தகம் வழங்கப்படும் என்றேன். கைதட்டல் மீண்டும் ஒலித்தது.


ஐயா , இனி வரும் எங்கள் பிறந்த நாளில் நாங்களும் மரக்கன்று , மூலிகைச் செடிகள் , பூச்செடிகள் நட்டுவைத்து வளர்ப்போம் என்றனர்.


      நம் பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களைப் பாரக்கலாம் வாருங்கள் என்றேன்.


        இந்த வேப்பமரம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இலக்கிய மன்றத் தொடக்க விழாவில் நட்டு வைத்தது. இந்தப் புங்கன் மரம் உலகச் சுற்றுச்சூழல் தினத்தன்று நடப்பட்டது. இந்த வேப்பமரம் நம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வருகை தந்த போது நடப்பட்டது. இந்த வாகை மரம் நமது மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களால் நடப்பட்டது. இந்தக் குமிழ் தேக்கு மாணவி ஒருவரின் பிறந்த நாளன்று வைத்தது என்று ஒவ்வொரு மரமும் அது எப்போது நடப்பட்டது ? எதற்காக நடப்பட்டது என்பது பற்றியும் சொன்னேன். இது போல் அம்பேத்கர் பிறந்தநாள் , பாரதியார் பிறந்த நாள் , சுதந்திர தினவிழா , குடியரசு தினவிழா என இந்த விழாக்களை எல்லாம் நினைவு கூறும் விதமாக மரங்கள் வைத்துப் பராமரிக்கப் படுகின்றன என்றேன்.


நம் வகுப்பில் உள்ள உங்கள் அனைவருக்கும் ஒரு பொறுப்பு வழங்கப்படுகிறது. இரண்டு மாணவர்கள் சேர்ந்து ஒரு மரத்தைப் பராமரிக்க வேண்டும். அந்த மரத்திற்கு 

நீங்களே ஒரு பெயரையும் வைத்துக் கொள்ளலாம். அது தேசத்தலைவர்களின் பெயர்களாகவோ , தமிழ்ச் சான்றோர்களின் பெயர்களாகவோ இருக்கலாம் என்றேன்.


மாணவர்கள் தங்கள் மரத்திற்கான பெயர்களை வைக்கத் தொடங்கினார்கள். இன்னும் நான்காண்டுகளில் பன்னிரெண்டாம் வகுப்பு முடிப்பார்கள். அவர்களும் வளர்ந்திருப்பார்கள். மரங்களும் பெரியதாக வளர்ந்திருக்கும். தம் கரங்களால் மரங்களை அணைத்து மகிழ்வார்கள் . பள்ளி வளாகமும் , அவர்களது வாழ்வும் பசுமையாகவும் , பசுமை நிறைந்த நினைவுகளாகவும் இருக்கும். ஆம் ! மரங்கள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ அங்கு மனப்பறவை மகிழ்ச்சிச் சிறகு விரிக்கும்.


மு.மகேந்திர பாபு , கட்டுரையாளர் & தமிழாசிரியர் , 

அரசு ஆதிந.மேல்நிலைப் பள்ளி , இளமனூர் , மதுரை.

பேச - 97861 41410.

மின்னஞ்சல் 

tamilkavibabu@gmail.com


********************    ***********************



பறவைகளிடம் பாடம் - மு.மகேந்திர பாபு


           எங்கள் பள்ளிக்குச் செல்லும் வழியில் கண்மாய் ஒன்று உள்ளது.கண்மாய்க் கரையில் ஆலமரம் ஒன்று கிளைகளாலும் , விழுதுகளாலும் விரிந்து பரந்து , பலவகையான

 பறவைகளுக்கு வாடகை பெறாத வீடாக இருக்கிறது. கண்மாய் முழுமையும் நீர் நிரம்பியுள்ளது. புதிதாகப் பறவைகள் ஏதும் வந்துள்ளனவா எனப் பார்ப்போம் என கையில் கேமராவுடன் கரைக்கு நடந்தேன்.அப்போது ஆலமரக் கிளையில் நான் கண்ட காட்சி எனக்கு மகிழ்வையும் , பேரின்பத்தையும் தந்தது.


          ஆலமரக் கிளையில் பறக்க முடியாத குஞ்சுக் குயில் ஒன்று இரைக்காகத் தன் வாயைத் திறக்க , அதன் அருகில் மைனா ஒன்று தன் வாயினுள் இருந்த பூச்சி ஒன்றை அதன் தொண்டைப் பகுதிவரை கொண்டுசென்று ஊட்டியது.


    " ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் " என்ற பழமொழி என் நினைவிற்கு வந்தது. கருப்பு வெள்ளைப் புள்ளிகளோடு பறக்க முடியாமல் மைனாவிடம் இரை வாங்கிய அந்தப் பெண் குஞ்சுக்குயில் எனக்குள் பல சிந்தனைகளை ஏற்படுத்தியது. கிளை மறைவில் அதற்கு இரை ஊட்டினாலும் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன் மாணவர்களிடம் காட்ட வேண்டும் என்பதற்காக.


        தெளிந்த நீருடன் சிறு கடல்போல் காட்சி தந்தது இளமனூர் கண்மாய். புதிய நீர்ப்பறவைகள் சில வந்திருந்தன.அவைகளைப் படம் பிடித்துவிட்டுப் பள்ளிக்கு வந்தேன்.


         முதல் பாடவேளை வழக்கம் போல கலகலப்பாகத் தொடங்கியது. மாணவர்களிடம் புகைப்படத்தைக் காட்டி இதில் உள்ள பறவையின் பெயர் என்ன என்றேன் . ' மைனா ' என பார்த்த உடன் சொல்லிவிட்டனர் அனைவரும். இன்னொரு பறவையின் பெயர் சொல்லுங்கள் என்றேன். கொஞ்சம் யோசித்தனர். கொக்கு , கரிச்சான் என ஒவ்வொரு பறவையாகச் சொல்லச் சொல்ல சில மணவர்கள் அது இல்லை அது இல்லை என உடனுக்குடன் பதிலும் சொன்னார்கள். 


    ஒரு மாணவன் ஐயா இது குயிலா ? என்றான். உடனே சிலர் இது குயில் இல்லை. குயில் கருப்பாக இருக்கும் , இது கருப்பு , வெள்ளையாக இருக்கிறதே என்றனர். நான் சொன்னேன் இது குயில்தான். நீங்கள் சொல்லும் கருப்பு நிறத்தில் இருப்பது ஆண்குயில். கருப்பு வெள்ளைப் புள்ளிகளுடன் இருப்பது பெட்டைக்குயில். குயில்களில் பலவகைகள் இருக்கின்றன . மாங்குயில் , பூங்குயில் என்றேன்.


     ஐயா அது சினிமாப் பாட்டுதானே என்றனர். சினிமாப்பாட்டுதான். இந்தப் பெயர்களில் குயில் இருக்கின்றன எனச்சொன்னேன். கொண்டைக்குயில் , அக்காகுயில் என்ற பெயரிலும் குயில்கள் இருக்கின்றன என்று சொல்லி , அவற்றின் படங்களைக் காட்ட இவற்றை நாங்கள் பார்த்துள்ளோம் ஐயா என்றனர்.


     மைனா மற்றும் பெண்குயில் உள்ள படத்தைக் காட்டி , மைனா என்ன செய்கிறது எனக்கேட்க , குயிலிற்கு உணவு கொடுக்குது ஐயா என்றனர். குயிலின் அம்மா , அப்பா இல்லையா ? ஏன் மைனா உணவு கொடுக்குது ? என்றான் ஒரு மாணவன்.


     குயிலுக்குக் கூடு கட்டத் தெரியாது. அது தன் முட்டையை காக்காவின் கூட்டில் இடும். குஞ்சு வளர்ந்ததும் காக்கா , இது தன் பிள்ளை இல்லை என்று தெரிந்ததும் விரட்டிவிடும். ஆதரவின்றி விடப்பட்ட அந்த குயிலிற்கு இந்த மைனா இரை ஊட்டுகிறது . இதுதான் நேயம். பறவை நேயம். 


    "ஐயா , நான் ஒன்று சொல்லட்டுமா ? "


சொல்லு தம்பி.


ஒரு வீடியோல தாய்நாயிடம் பூனைக்குட்டிகள் பால் குடிப்பதைப் பார்த்தேன் ஐயா . ஒவ்வொரு மாணவரும் இதுபோல சொல்லத் தொடங்கினார்கள். 


     நாம் ஒவ்வொருவரும் நம்முடன் உள்ளவர்களுக்கு ஏதேனும் ஒரு விதத்தில் உதவி செய்கிறோம் . படிக்கும் பருவத்தில் பள்ளிக்கூடம் உங்களுக்கு கல்வியை மட்டுமல்ல மனிதத்தையும் கற்றுக் கொடுக்கிறது. நீங்கள் பிறருக்குச் செய்த உதவிகள் என்ன ? மதியம் சாப்பிடும்போது ஒரு திருக்குறள் சொல்வோம். தெரிந்தவர்கள் சொல்லுங்கள் என்றேன். நான் சொல்கிறேன் என்று ஒரு மாணவி சொன்னாள்.


பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.


மாணவர்கள் அனைவரும் கரவொலி எழுப்பி வாழ்த்தினார்கள். நாங்கள் மதியம் வகுப்பில் அமர்ந்து சாப்பிடும்போது உணவைப் பகிர்ந்து கொள்வோம் ஐயா. சாப்பாடு கொண்டுவராத , தட்டுக் கொண்டுவராமல் யாராவது வந்தால் எங்கள் உணவைப் பகிர்ந்து உண்போம் என்றார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 


பாடம் கற்பது என்பது பள்ளியின்  வகுப்பறையில் மட்டுமல்ல , பறவைகளிடமும்  இருக்கிறது.


மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் & கட்டுரையாளர் ,

அரசு ஆதிந.மேல்நிலைப் பள்ளி , இளமனூர், மதுரை.

செல் - 97861 41410.

மின்னஞ்சல்.

tamilkavibabu@gmail.com


****************************   ******************

Post a Comment

0 Comments