மாமதுர மாதுர நல்ல மதுர - மு.மகேந்திர பாபு - இசைப்பாடல் / MADURAI SONG - MAHENDRA BABU

 


மாமதுர மாமதுர - பாடல் - மு.மகேந்திர பாபு .


மாமதுர மாதுர நல்ல மதுர - இப்ப

மகிழ்ச்சியில திளைக்குது பார் நம்ம மதுர

சித்திரையில் வருகுது பார் தங்கக் குதிர

தண்ணி பீச்சி அடிச்சிடடா சாமி எதிர - இந்த பூமி அதிர


சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தது  இந்த மண்ணுதான்

நம்ம சாமி அடிபட்டதும் இந்த மண்ணுதான்

மீனாட்சி பார்வையெல்லாம் இந்த மண்ணுதான்

வள்ளுவனார் அரங்கேற்றம் இந்த மண்ணுதான்


நாலுபக்கம் மலையெல்லாம் நிமிர்ந்து நிக்குது

நாலுபக்கம் கல்லூரிகள் வளர்ந்து நிக்குது

வைகையில தண்ணிச் சத்தம் சலசலக்குது

வண்டியூரு கண்மாயில மீனு துள்ளுது


தூணுபோல பலமிருக்குது மதுரைக்காரன் மனசு

மீனாட்சி கோவிலுக்கு ரெண்டாயிரம் வயசு

குன்றம் ஏறிக் காத்திருக்கான் குமரவேலன் 

குறுஞ் சிரிப்பாய்ப் பார்த்திருக்கான் மாமன்காரன்


எங்கம்மா உங்கம்மா எல்லாம் யாரடா

வீரப்பெண் மங்கம்மா வாரிசு தானடா

யானைமலை சமணர்மலை என்ன சொல்லுது

நம்ம மொழியோட வரலாற விளக்கிச் சொல்லுது


குப்பையில்லா மதுரையா நாம மாத்துவோம்

பசுமைய எங்கும் நல்லா நாம போத்துவோம்

எதிர்காலம் புதிர்காலம் இல்ல பாரடா

மதுர என்றும் இனிக்கும் என்று நீயும் கூறடா !

Post a Comment

0 Comments