கார்த்திகைத்.தீபத் திருவிழா தோன்றிய வரலாறு / KAARTHIKAI DEEPAM - GREEN TAMIL.IN

 


கார்த்திகை தீபத் திருவிழா

                            26.11.2023


அரன் நாமமே சூழ்க : வையகமும் துயர் தீர்க்கவே

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்

                              - திருஞான சம்மந்தர்-


     கார்மேகம் முகில் பரப்பி மழைபொழியும் மாதம், காந்தல் மொட்டவிழ்ந்து தரையெல்லாம் செந்தூரம் வர்ணம் பூசும் காலம் கார்த்திகை மாதம்.

" நினைத்தாலே முக்தி தலமென " சிவபுராணம்" குறிப்பிடும் திருவண்ணாமலையில் தீயாக ஒளிர்ந்து காட்சித்தரும் சிவபெருமானுக்கு எடுக்கப்படும் பெருவிழா கார்த்திகை தீபத்திருவிழா. இத்திருவிழா சங்ககாலம் முதலே கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் சான்றுகள் சங்கநூல்களிலும், கல்வெட்டுகளிலும் காணப்படுகின்றன.

"கார்த்திகை விளக்கிட்டன கடிகமிழ் குவளை பைந்தார் "

 என சீவகசிந்தாமணி தீபத்திருநாளை போற்றுகிறது. 

           கார்த்திகை மாதம் பெளர்ணமி தினத்தில் , கார்த்திகை நட்சத்திரம் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் இந்தக் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு கொண்டாடப்படுகிறது.

இவ்விழா 10- நாட்கள் கொண்டாடப்படுகிறது. சிவபெருமானை அக்னித் தலமாக வணங்குவது திருவண்ணாமலை. தேவாரப் பாடல்களால் சிறப்புப் பெற்று,திருவாசகத் திருத்தலங்களில் சிறந்தது என்ற பெருமையினை உடையது திருவண்ணாமலை.

அண்ணாமலை:

                          அண்ணாமலை- அண்ணா என்ற சொல்லுக்கு நெருங்க முடியாத என்பது பொருள். திருமாலும்,பிரம்மாவும் தங்களுக்குள் யார் பெரியவர் என எழுந்த வாதத்தில் சிவபெருமான் தீப்பிழம்பாகத் தோன்றி நிற்க அவர்கள் இருவரும் அடியையும்,முடியையும் காணும் போட்டியில் காணாது போகவே இது அண்ணாமலை. நெருங்க முடியாத மலையென பொருள் தரும் திருவண்ணாமலை என்று சிறப்புப்பெற்றது.


காலையில் பரணி தீபம்:

               கார்த்திகை தீபத் திருநாள் அன்று அதிகாலையில் ஐந்து அகல் விளக்குகள் ஏற்றி வழிபடுவது பரணி தீபம், இது பரணி நட்சத்திரத்தில் ஏற்றப் படுவதால்,பரணிதீபம் எனப் பெயர் பெறுகின்றது. ஐந்து எண்ணிக்கையிலான அகல் விளக்குகள் இறைவனின் ஐந்து திருமுகங்களைக் குறிக்கும் . அதாவது படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல்,அருளல் என்னும் ஐந்து தொழிலைச் செய்யும் இறைவனின் திருமுகங்களாக ஏற்றப்படுவதாக நம்பிக்கை.


மலைமேல் மகாதீபம்:

                      முழுநிலவு ஒளியில் மலைமேல் மகாதீபம்.சிவபெருமான் தீப்பிழம்பாக, தீப ஒளியாக பெருமலைமீது காட்சித் தந்ததாக வரலாறு.அதன்படி மகாதீபம்  ஏற்றப்படுகிறது. திருவண்ணாமலை 2668- அடிகளைக் கொண்டது. இதன் உச்சியில் பெருங்கொப்பரையில் மகாதீபம் ஏற்றப் படுகிறது .3000- லிட்டர் நெய்யும்,1000- மீட்டர் காடாவும் கொண்டு மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதன் உரிமை செம்படவர்களுக்கே உரியது.சிவன் -படையினர் செம்படவர்கள். திருவண்ணாமலை தீபத்திருவிழா மகாதீபம் இலக்கியங்களில்

"சர்வாலய தீபம்" என்றும் கார்த்திகை விளக்கீடு என்றும் அழைக்கப்படுகிறது. மகாதீபம் மாலை 6- மணிக்கு ஏற்றப்படுகிறது. அப்பொழுது மக்கள் எழுப்பும் "அரகரா"கோசம் விண்ணை எட்டுகிறது.


நாயன்மார்கள் நால்வர்:

                         திருவண்ணாமலையில் அண்ணாமலையாரைக் கண்டு மகிழ்ந்து, வணங்கி பதிகங்களைப் பாடி சிறப்பித்த நாயன்மார்கள். திருஞான சம்மந்தர், திருநாவு க்கரசர், சுந்தரர் ஆவர்,மாணிக்க வாசகரோ திருவண்ணாமலையில் பலகாலம் தங்கியிருந்து ,மார்கழி மாதத்தில் பக்தி நெறிப்பரப்புப் வைணவத் "திருப்பாவை" போலசைவத்திற்கு " திருவெம்பாவை"- 20 பாடல் பதிகங்களை இயற்றியுள்ளார் என்பது சிறப்பு.மேலும் மலைவலப் பாதையில் ( கிரிவலம்) அடியண்ணாமலை என்னும் இடத்தில் மாணிக்கவாசகருக்கு ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது .அவை இன்றும் பராமரிக்கப்பட்டு மக்களை பக்திநெறிப்படுத்துகிறது.

இறைபக்தியில், நம்பிக்கையில் இன்றளவும் சிறந்த இடமா விளங்கும் திருவண்ணாமலையை வணங்குவோமாக!

  சிவ சிவ   நற்றுணையாவது நமசிவாயமே!

Post a Comment

0 Comments