வில்லிசை வேந்தர் பிச்சைக் குட்டி - பிச்சைக்குட்டி சொன்ன அப்பளக் கதை / Villisai Venthar pitchai kutty - Appalakkathai

 

வில்லிசை வேந்தர் பிச்சைக்குட்டி சொன்ன அப்பளக் கதை.


     கோவில்பட்டியில் ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது . அப்போது நம்முடைய வில்லிசை வேந்தர் பிச்சைக் குட்டி அவர்கள் விறுவிறு என்று மேடையில் ஏறினார். ஒரு வினாடி நேரம் தான் மைக்கைப் பிடித்தார் . ஆரம்பிக்கிறார். இப்படித்தான் ஒரு வெள்ளைக்காரன் திருநெல்வேலியில் கலெக்டராக இருந்தார். பின் லண்டன் சென்று விட்டான் என்றுஆரம்பித்தார்.


            சங்கீதத்தை ரசித்துக் கொண்டிருந்தவர்கள் ஏதோ கதை என்று காதுகளை கூர்மையாக்கிக் கேட்கத் தொடங்கினர் . அந்த வெள்ளைக்காரன் இங்கு இருக்கும் போது விருந்துகளில் அப்பளம் சாப்பிட்டு இருப்பான் போலிருக்கு. லண்டன் சென்று அவனும் அவனது குடும்பமும் இந்தியாவில் உள்ள அப்பளத்தின்  மென்மை ருசி இவற்றைப் பற்றி அவனது நண்பர்களிடம் சொல்ல , அவர்கள் எல்லோரும் அந்தக் கலெக்டரிடம் அப்பளம் வேண்டும் என்றார்கள் அவரும் தன்னிடம் வேலை பார்த்த தாசில்தார் ஒருவருக்குக் கடிதம் எழுதினார் . 5000 அப்பளங்கள் உடனடியாக ஏர் பார்சலில் அனுப்பி வைக்கும் படியும் அதற்குரிய பணத்தை பேங்க் மூலமாக அனுப்பியும் வைத்தார்.  தாசில்தார் ரமணி ஐயருக்கு சந்தோசம். அவர் மனைவியிடம் சொல்ல அவளும் கடையில் வாங்கினால் சருகாக உணர்ந்திருக்கும் என்று சொல்லி தானும் பிள்ளைகளுமாக உளுந்து வாங்கித் தாராளமாக எண்ணை விட்டு மிகவும் அருமையாக 5000 அப்பளங்கள் ரெடி பண்ணி விட்டார்.


     தாசில்தார் தனது உதவி  ஆட்களுடன் பார்சல் தயார் செய்தார். எப்படி ? அப்பளங்கள் ஒன்றோடொன்று ஒட்டி விடக்கூடாது என்று வாழை இலைகள் வாங்கி அப்பளம் சைசுக்கு ரவுண்டு ரவுண்டாக கத்தரித்து ஒரு அப்பளம் அதன்மேல் ஒரு ரவுண்டு இலை என வைத்து பார்சல் செய்து அனுப்பிவிட்டார். அதுவும் போய் சேர்ந்து வெள்ளைக்காரக் கலெக்டரிடம் இருந்து  இருந்து தபால் வந்தது.


            கலெக்டர் எழுதியது , அப்பளம் வெரி டெஸ்ட் . நானும் எனது நண்பர்களும் ருசித்துச் சாப்பிட்டோம் . சாப்பிட்ட அனைவருமே தனித்தனியாக அப்பளம் வேண்டும் என்று கேட்கிறார்கள் . ஒரு நிமிஷம் வந்துரும் பா உடனடியாக இதேபோல் ஒரு லட்சம் அப்பளங்கள் அனுப்பி வைக்கவும்.  உரிய பணத்திற்கு வங்கி மூலம் பணம் அனுப்பி வைக்கிறேன் என்று எழுதியதோடு பின்குறிப்பு எழுதி இவ்வாறு எழுதி இருந்தார்கள்.


    நீங்கள் அனுப்பிய அப்பளத்தில் மாவு மாதிரி ஒட்டி இருந்தது . அதைப் பக்குவமாகச் சுரண்டி எடுத்துவிட்டு வறுத்துச் சாப்பிட்டோம் . அடடா ! வெரி வெரி டேஸ்டி . அதாவது அப்பள மாவைச் சுரண்டி எடுத்துவிட்டு இலையை வறுத்துச் சாப்பிட்டு இருக்கான் என்று சொல்லவும் இதுவரை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த கூட்டம் சிரித்து மகிழ சோமண்ணா தமாஷாக அண்ணே மேடை என்னோட மேடை மாலையைப் போடுங்கள் என்று சொல்ல மறுபடியும் சிரிப்பலை . அட கதையே உங்களுக்குத்தான் இதோ முடிக்கிறேன் என்று சொல்லி வேந்தர் சொன்னார் எப்படி மாவைச் சுரண்டி எடுத்துவிட்டு இலையை சாப்பிட்டார்களோ அதைப்போல் நம்மவர்கள் கர்நாடக சங்கீதம் என்ற மாவை ஒதுக்கிவிட்டு மெல்லிசை என்ற இலையை ருசிக்க கர்நாடக சங்கீதத்தின் பாரம்பரியம் மிக்க பரம்பரையில் வந்த சோமுவிற்கு ஈடு சோமுவே தவிர வேறு எவரும் இல்லை எனப்பாராட்டி கோவில்பட்டி ரசிகர்கள் சார்பாகவும் விழா கமிட்டியார் சார்பாகவும் மாலைகள் போடும் பாக்கியத்தை அருமை நண்பர் சார்பாகவும் என் சார்பாகவும் இசைப் பேரறிஞர் வாழ்க அவர்தம் இசை வாழ்க என வாழ்த்தி வரவேற்கிறேன் நன்றி வணக்கம் என்றார் வேந்தர் பிச்சைக் குட்டி.


ஆதாரம் 

சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் அவர்கள் எழுதிய வில்லிசை வேந்தர் பிச்சைக்குட்டி என்ற நூலில் இருந்து.

Post a Comment

0 Comments