முதல்நாள் முதல் வகுப்பு
ஆயிரமாயிரம் கனவுகளோடு நெஞ்சம் பறந்து கொண்டிருந்தது கோவில்பட்டியிலிருந்து சேலம் மாநகர்க்கு அரசு விரைவுப் பேருந்தில். மாணவனாக இருந்த ஒரு பருவம் முடிந்து , ஆசிரியராக அடுத்த நிலைக்கு உயர்த்தும் அந்தக் கணங்கள் கனவுகளாக , காட்சிகளாக விரிந்து கொண்டிருந்தது. நண்பர்களோடு பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.வருங்கால ஆசிரியர்களை சுமந்து செல்கிறோம் என்ற மகிழ்ச்சியில் பேருந்து விரைவாகச் சென்று கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றியது.
காலையில் சேலத்தில் இறங்கி , மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றோம். அங்கே எங்களது பணி ஆணையைக் காண்பிக்க , அருகே இருந்த ஜவான்ஸ் பில்டிங் சென்று பணியேற்பு செய்து கொள்ளச் சொன்னார்கள். அந்தக் கட்டிடத்தில்தான் தனிவட்டாட்சியர் அலுவலகம் இருந்தது.
தனிவட்டாட்சியரைச் சந்தித்து நானும் நண்பன் கருப்பசாமியும் பணி நியமன ஆணையைக் கொடுக்க , அவர் மகிழ்ச்சியோடு பெற்று எங்களை வரவேற்றார். தம்பி கொஞ்ச வயசா இருக்கிங்க . அங்குள்ள பசங்களுக்கு நல்லா கத்துக் கொடுங்க என வாழ்த்தினார். எனக்கும் , நண்பன் கருப்பசாமிக்கும் ஒரே பள்ளியில் பணி நியமித்திருந்தார்கள்.
சேலம் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளும் , மலைகள் உள்ள இடத்தில் உண்டுஉறைவிடப் பள்ளிகளும் இருந்தன. எங்களுக்கு பணி நியமனம் செய்யப்பட்டிருந்தது மலைவாழ் மக்கள் வசிக்கக்கூடிய அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளி - பெரியகுட்டிமடுவு. இந்தப் பள்ளிக்கு எப்படிச் செல்ல வேண்டுமென அலுவலகத்தில் கேட்டோம். சேலத்திலிருந்து அருநூத்து மலை என்ற பெயரில் ஒரு பேருந்து செல்லும் . அதில் ஏறிச் சென்றால் பெரியகுட்டிமடுவுக்குச் செல்லலாம் எனறனர். அந்த ஊரின் பெயரே எனக்கு வித்தியாசமாகத் தெரிந்தது.
மலைவாழ் மக்கள் வசிக்கக் கூடிய ஊர்களில் உள்ள பள்ளிகளில் பணிலசெய்ய விருப்பமில்லாத சூழல் இருந்த காலம் அது. ஆனால் அதை நாங்கள் விரும்பி ஏற்றுக் கொண்டோம். எங்களுடன் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ஒன்றாகப் படித்த சில நண்பர்கள் ஆத்தூர் வட்டத்திலுள்ள மலைப் பள்ளிகளில் பணியில் சேர்ந்தனர்.
வாழ்க்கையில் மறக்க முடியாத , விரல் விட்டு எண்ணிச் சொல்லக் கூடியதில் முதன்மையான இடத்தைப் பெற்றிருந்தது நான் பணியில் சேர்ந்த அந்த 07 - 07 - 2000 என்ற நாள்.
சேலம் பேருந்து நிலையத்தில் அருநூத்துமலை பேருந்தில் ஏறி , ' பெரியகுட்டிமடுவு ' க்கு ரெண்டு டிக்கட் எனச் சொல்ல , அங்கே யாரைப் பார்க்க வேண்டும் என்றார் . நாங்கள் ஆசிரியர் பணிக்குச் செல்கின்றோம் என்றேன். அப்படியா ? சின்ன வாத்தியருங்களா கண்ணு ? என்றார் அவர்.
பேருந்து அயோத்தியா பட்டிணம் , வாழைப்பாடி என ஒவ்வொரு ஊராக கடந்த போது , நடத்துநரிடம் பெரியகுட்டிமடுவு வந்து விட்டதா எனக் கேட்டேன். தம்பி ஊர் வந்ததும் நானே சொல்கிறேன் என்றார். ஒரு எதிர்பார்ப்பும் , மகிழ்ச்சியுமாய் உள்ளம் துடித்துக் கொண்டிருந்தது. வாழப்பாடி கடந்து இடது பக்கச் சாலையில் சென்று , பேளூர் என்ற ஊரை அடைந்தது. அங்கு ஐந்து நிமிடங்கள் நின்ற பின்னர் மீண்டும் புறப்பட்டது பேருந்து.
காணும் இடமெல்லாம் பச்சைப் பசேலென்று கண்ணுக்கு விருந்தாக அமைந்தது. கருவேல மரங்களை மட்டுமே கண்டு பழகிப் போயிருந்த என் கண்களுக்கு பாக்கு மரங்களும் , பலா மரங்களும் பசுமை விருந்தளித்தன.
" சார் , இன்னும் ஊர் வரலையா ? " என்றேன். கண்ணு , இதோ வந்து விட்டது என்றார். இறங்கிக் கொண்டோம். சுற்றிலும் வாழை மரங்களும் , நெல் வயல்களும் காட்சி தந்தன. எங்களோடு பேருந்தில் இருந்து இறங்கிய ஒரு பெண்ணிடம் , இதுதான் பெரியகுட்டி மடுவா ? என்றேன். இது கண்கட்டிஆலா விலக்கு .கண்ணு அதோ தெரியுது பார் ஒரு பெரிய மலை. அந்தாண்ட இருக்குது பெரியகுட்டி மடுவு. எத்தனை கிலோ மீட்டர்க்கா இருக்கும் ?
சும்மா பக்கந்தான் கண்ணு.ஒரு அஞ்சு கிலோமீட்டர் இருக்கும் என்றார் அந்தப் பெண்மணி.
பக்கம்தான்.அஞ்சு கிலோமீட்டரா ? என அதிர்ச்சியாய் கேட்க ,
ஆமா கண்ணு , இந்த ரோடு வழியாப் போனா முதல்ல சின்னக்குட்டிமடுவு வரும். அதுதாண்டிப்போனா அடுத்து இருக்கற ஊரு பெரியகுட்டிமடுவு.
அதுதாண்டி போனா ?
அதுக்கடுத்து ஊரு கிடையாது கண்ணு. ஆமா , நீங்க என்ன விசயமா வந்திருக்கிங்க ?
நாங்க பள்ளிக்கூடத்திற்கு வாத்தியார் வேலைக்கு வந்திருக்கோம்.
ஓ... அப்படியா ?
ஆமாக்கா ... நீங்க அந்த ஊர்தானா ?
ஆமா கண்ணு.எங்க ஊர் பள்ளிக்கூடத்தில ஒரேயொரு பெரிய டீச்சர் மட்டும்தான் இருக்காங்க. சின்ன வாத்தியார்ங்க யாருமே இல்லை. நல்ல வேள ... நீங்க வந்திட்டீங்க.இனி எங்க புள்ளைங்களுக்கு கவலையில்லை என்றார் அந்தப் பெண்மணி.
ஆமாக்கா இங்கிருந்து உங்க ஊருக்கு ஆட்டோ , வேன் ஏதும் கிடையாதா ?
ஒன்னும் கிடையாது.நடந்துதான் போகணும் என்றார்.
நண்பன் என் முகத்தைப் பார்க்க , சரி ... வாடா நடக்கலாம். நடக்கிற விசயம்தான் இது எனச் சொல்லி அந்தப் பெண்ணுடனும் , அதே பேருந்தில் வந்த ஒரு சிலருடனும் நடக்க ஆரம்பித்தோம்.ஊர்களில் காடு , மேடென அலைந்ததும் , தினமும் பள்ளிக்கு ஏழு கிலோமீட்டர் நடந்து சென்று வந்ததாலும் , தூரம் பற்றி பெருமளவு யோசிக்க வேண்டிய அவசியம் எங்களுக்குள் எழவில்லை.
மலைக்காற்று சிலுசிலுவென வீசியது. இயற்கையை இரசித்தபடியே பத்தடியில் தண்ணீர் நிறைந்து காணப்பட்ட கிணறுகளையும் , வருடம் முப்போகம் அறுவடை செய்யக்கூடிய நெல்வயல்களையும் ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டே வந்தோம்.வழியில் ஒரு சிறு ஆறு வந்தது.ஆறுமன்றி , ஓடையும் அன்றி இருந்த நீர்நிலை அது.அதைப்போல மொத்தம் ஆறு ஆறுகள் குறுக்கே வந்தன.அப்போதுதான் தெரிந்தது அந்த ஊருக்கு ஏன் பேருந்து.வரவில்லை என்று.சின்னக்குட்டிமடுவை கடந்து ஒரு மணி நடைக்குப் பின்னர் பெரியகுட்டிமடுவு ஊரை நெருங்கினோம். அதுவரை சமதளத்திலும் , ஆற்றையும் கடந்து வந்த எங்களுக்கு , சிறுமலைமேட்டில் ஏறுவதைப் போல இருந்தது ஊருக்குள் நுழைந்தபோது. அவ்வளவு மேடான பகுதி அது. மேல்மூச்சு , கீழ்மூச்சு வாங்க நடந்து பள்ளியை அடைந்தோம்.
எங்களைக் கண்ட அந்த ஊர் மக்களுக்கு எல்லையில்லா ஆனந்தம்.மக்களும் , பசங்களும் எங்களை வித்தியாசமாகவும் , வேடிக்கையாகவும் பார்ப்பதைப் போலத் தோன்றியது எங்களுக்கு.சுமார் எழுபது மாணவர்கள் படிக்கும் அந்தப் பள்ளியில் ஒரேயொரு தலைமையாசிரியை மட்டுமே ! ஊரின் முகப்பிலே பள்ளி இருந்தது.ஜயலட்சுமி என்ற அந்தத் தலைமையாசிரியையிடம் எங்கள் பணி நியமன ஆணையைக் கொடுத்து , ஆசிரியர் வருகைப் பதிவேட்டில் எங்கள் பெயரை எழுதி , முதன் முதலில் கையெழுத்திட்டபோது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
தலைமையாசிரியையும் , ஊர்மக்களும் , மாணவர்களும் எங்களை அன்பினால் ஆழ்த்தினார்கள். நாங்கள் இருவரும் எங்களைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டோம். மாணவப் பருவம் முடிந்து ஆசிரியரான அந்தத்.தருணத்தை இப்போது நினைத்தாலும் உள்ளம் நெகிழ்கிறது.
தம்பிகளா , நீங்க எந்தெந்த வகுப்பு எடுக்கப்போறிங்க ? எனக் கேட்டார் தலைமையாசியை.
நீங்கள் சொல்கிற வகுப்பு எடுக்கறோம் எனச்சொல்ல , ஒன்றாம் வகுப்பு , இரண்டாம் வகுப்பு எனக்கும் , மூன்று , நான்கு , ஐந்தாம் வகுப்புகள் நண்பனுக்கும் , 6,7,8 வகுப்புகள் தலைமைஐயாசிரியைக்குமெ எனப் பிரித்துக் கொண்டோம்.
முதன்முதலில் ஆசிரியராக அந்தச் சின்னஞ்சிறு மாணவ மலர்களுடன் பேசுகிறேன். இதுவரை உதவி ஆசிரியர் இன்றி இருந்த அந்தப் பள்ளிக் கூடம் எங்கள் வருகையினால் ஆர்ப்பரிக்கின்றது. நமக்கு சின்ன வாத்தியார்கள் வந்திட்டாங்க என மாணவர்கள் மகிழ்கிறார்கள். பெற்றோர்கள் வந்து எங்களைப் பார்த்துவிட்டுச் செல்கிறார்கள். அந்தத் தருணம் ஆகாயத்தில் பறப்பதைப் போன்ற உணர்வினைத் தந்தது.
மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் அவர்களது பெயர்களைக் கேட்கிறேன்.அருகில் வந்து நின்று உரிமையோடு பெயரினைச் சொல்கிறார்கள்.கள்ளமில்லா அந்த வெள்ளை உள்ளங்களில் கல்வியின் வெளிச்சம் படரத் தொடங்குகிறது. எனது உயிரும் , மெய்யும் இரண்டறக் கலந்த அந்த தருணத்தில் தமிழ் உயிரெழுத்துகளை எழுதிப் போடுகின்றேன்.
மற்ற வகுப்புகளில் பாடம் பயிற்றுவிப்பதை விட , ஒன்று , இரண்டாம் வகுப்பில் மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பது நிலத்தில் விதையை ஊன்றுவதைப் போன்றது. கரும்பலகையில் எழுதிய எழுத்துக்களை வாசிக்கின்றேன். அ என்றால் அம்மா , ஆ என்றால் ஆடு , இ என்றால் இலை என ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு வார்த்தை சொல்லி எழுத்துக்களை மனதில் பதிய வைக்கின்றேன். எழுத்துக்களை எப்படித் தொடங்கி எழுத வேண்டும் என அம்புக்குறியிட்டுக் காட்டுகின்றேன்.
அந்தப் பிஞ்சு விரல்களைப் பிடித்து ப , ட , ய , ள , ர என எழுதிய எழுத்தின் மீது எழுத வைக்கின்றேன். ஆர்வத்தோடு எழுதுகிறார்கள். அவர்களின் கண்களில் ஒளி தெரிகிறது. எழுதிய வேகத்தில் கொண்டுவந்து காட்டுகிறார்கள். சின்னசார் எனக்கு ரைட் போடுங்க எனச் சொல்கிறார்கள் மகிழ்ச்சியோடு. கதையோடும் , ஆடலும் , பாடலுமாய் முதல் நாள் முதல் வகுப்பறை மகிழ்வோடு சென்றது.
15 ஆண்டுகள் ஆசிரியப் பணியில் கடந்திருந்தாலும் , நேற்று நடந்ததைப் போல் இருக்கின்றன அந்த நிகழ்வுகள். இன்று 9 , 10 , 11 வகுப்புகளுக்கு தமிழ் ஆசிரியராக இருந்தாலும் , அன்று முதல் வகுப்பு மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்ததும் , அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டதும் என வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத தருணமாகும். மனம் நினைக்கிறது மீண்டும் ஒரு காலம் வரவேண்டும் முதல் வகுப்பு ஆசிரியராக மாறுவதற்கு !
கட்டுரை
மு.மகேந்திர பாபு ,
0 Comments