மு.மகேந்திர பாபு , பட்டதாரி தமிழாசிரியர் & பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் , அரசு மேல்நிலைப் பள்ளி ( ஆதிந ) , இளமனூர் , மதுரை.
வாழ்க்கையில் மறக்க முடியாத விரல் விட்டு எண்ணக்கூடிய சில நாட்களில் முதலிடத்தில் இருக்கிறது 07 - 07 - 2000. ஆம் ! முதன் முதலில் ஆசிரியராகப் பணியேற்ற நாள் அது.
ஏழு மலை , ஏழு கடல் தாண்டி ஒரு தீவில் இருக்கும் அண்ரட்டாப்பட்சியின் உடம்பில் இருக்கும் அரக்கனின் உயிர் போல , ஒரு மணி நேரம் பேருந்தில் பயணித்து , ஆறு கிலோமீட்டர் தூரம் நடந்து , ஆறு ஆறுகளைக் கடந்து மேமூச்சு , கீமூச்சு வாங்கி பணியேற்ற பள்ளி சேலம் மாவட்டம் , வாழப்பாடி வட்டம் , பெரியகுட்டிமடுவு என்ற மலைப்பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளி .
சேலத்தில் அடுத்தடுத்து மூன்று பள்ளிகளில் பணிபுரியும் வாய்ப்பு.மூன்றும் 12கி.மீ.தூரம் தினமும் நடந்து சென்று வரக்கூடிய சூழல் என்பதால் , இது 'நடக்கிற ' வேலைதான் என மனமகிழ்ந்து பணியாற்றினேன்.மலைவாழ் மக்களின் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுத்தது என் வாழ்வில் கிடைத்த பெரும் பேறு.
ஒரு வருடம் , ஒரு மாதம் , ஒரு நாள் என்ற அளவில் சேலம் மாவட்டத்தில் பணிபுரிந்து , 2001 ல் மதுரை மாவட்டத்திற்கு மாறுதலாகி வந்தேன்.2002 ல் இப்போது பணிபுரியும் இளமனூர் எனும் ஊரில் தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணிசெய்தேன்.2005 ல் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டேன்.
இடைநிலை ஆசிரியராக இருந்த போதும் பத்தாம் வகுப்பிற்கு தமிழ் பாடம் எடுக்கும் வாய்ப்பினை வழங்கினார்கள். இரண்டு ஆண்டுகள் தமிழ் பாடத்தில் நூறு சதவிகிதத் தேர்ச்சியினைக் கொடுத்தேன். உடற்கல்வி ஆசிரியரின் ஓய்விற்குப் பின்பு உடற்கல்வி ஆசிரியர் பொறுப்பு கூடுதலாகத் தரப்பட , அன்றய நிலையில் எங்கள் பள்ளி மாணவர்களை பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறச் செய்து பரிசுகளை அள்ளி வந்தோம்.
01 - 06 - 2009 அன்று பட்டதாரி தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்று , அப்பள்ளி வளாகத்திலுள்ள மாணவர் விடுதிக்கு காப்பாளராக நியமிக்கப்பட்டேன். விடுதியில் உள்ள 50 மாணவர்களை எட்டுக் குழுக்களாகப் பிரித்து , மாணவர்களுக்குத் தலைமைப் பண்பினை வழங்கினேன்.
நன்கொடையாளர்கள் மூலமாக 1000 புத்தகங்கள் , இருக்கைகள் பெற்று ' அண்ணல் அம்பேத்கர் மாணவர் நூலகம் ' ஒன்றை அமைத்தேன். விடுதியில் பயின்ற முன்னாள் மாணவர்களை அழைத்து , டாக்டர் .அப்துல்கலாம் முன்னாள் மாணவர் சங்கம் என்ற ஒன்றை அமைத்து மாணவர்களோடு நட்பினை ஏற்படுத்தினேன்.
மகாகவி பாரதி பசுமைப் பூங்கா ஒன்றும் , அகத்தியர் மூலிகைத் தோட்டம் ஒன்றும் மாணவர்களோடு இணைந்து அமைத்தேன். மூன்றாண்டில் சுமார் 500 மரங்கள் , செடிகள் என நட்டு வைத்தோம். இன்று அவையனைத்தும் மரங்களாகி , மலர்களைத் தந்து கொண்டிருக்கின்றன.விவசாயம் செய்தோம்.காய்கறிகள் பயிரிட்டோம்.
13 - 06 - 12 ல் மீண்டும் ஆசிரியராகப் பள்ளிக்கு மாறுதல் பெற்றேன்.பசுமைப்படை ஒருங்கிணைப்பாளராக ஆனேன். மாணவர்களிடம் படிப்போடு சேர்ந்து இயற்கையையும் கற்றுக் கொடுக்கத் தொடங்கினேன்.பசுமைக்காக சில திட்டங்களைச் செயல்படுத்தினேன்.
1) ஒரு விழா ஒரு மரம் : ஒவ்வொரு அரசு விழாக்களையும் நினைக்கும் விதமாக ஒரு மரம் நடுதல்
2 ) மாணவர் பிறந்த நாளில் மரம் நடுதல் : சாக்லேட் மிட்டாய்கள் தவிர்த்து
மாணவர்கள் மூலமாக அவர்களே பள்ளி வளாகத்தில் மரம் நட்டுவைத்து பராமரித்தல்.
3 ) டாக்டர் அப்துல் கலாம் மூலிகைத் தோட்டம் : 30 வகையான மூலிகைச் செடிகளுடன் கலாம் ஐயவின் பிறந்த நாளில் உருவாக்கினேன்.
4 ) டாக்டர்.அப்துல் கலாம் மாணவர் பூங்க : பூச்செடிகள் கொண்டு கலாம் ஐயா பெயரில் சிறு பூங்கா ஒன்றை பள்ளி வளாகத்தில் உருவாக்கியுள்ளேன் பசுமைப்படை மாணவர்கள் மூலமாக.
5 ) என்வீடு என்மரம் : மரம் நட இடமுள்ள மாணவர்களுக்கு அவர்கள் வீட்டிற்கு ஒருமரம் கொடுத்து நடச்செய்து வருகிறேன்.
6 ) பசுமைச்சாலைத் திட்டம் : எங்கள் பள்ளியிலிருந்து இரண்டு கி.மீ.தூரத்திற்கு சுமார் 150 மரக்கன்றுகளை ஊ.ம.தலைவரின் உதவியோடு நட்டு வைத்துள்ளோம்.
மாணவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் விதமாக கவிதை , கட்டுரை , பேச்சுப் போட்டிகளில் பங்கேற்கச் செய்து பரிசுகளைப் பெற்றுவரச் செய்கிறேன். ' வளர்பிறை ' என்ற கையெழுத்து மாத இதழை நடத்தி படைப்பாற்றலை வெளிக்கொணர்ந்தேன். எங்கள் பேரா.கு.ஞானசம்பந்தன் ஐயா அவர்கள் இதழை வெளியிட்டுச் சிறப்பித்தார்கள்.
' வகுப்பறையே நூலகமாக ' என்ற திட்டத்தில் எனது வகுப்பறையில் சுமார் 150 சிறுவர் இதழ்களைக் கொண்டு , மாணவர்களுக்கு வாசிப்பில் ஆர்வமூட்டி வருகிறேன்.
மாணவர்களின் படைப்புகளை வாசிக்கச் செய்து , அவர்களுக்கு புத்தகங்களைப் பரிசாகத் தந்து ஊக்கமூட்டி வருகிறேன்.
இலக்கிய ஆர்வம்
ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் (DIET - வானரமுட்டி , தூத்துக்குடி ) முதலாமாண்டு பயிலும் போது ' இந்தியனே எழுந்து நில் ' என்ற நூறு பக்கங்கள் கொண்ட புதுக்கவிதை நூலை எழுதி வெளியிட்டேன் . அகில இந்திய வானொலி நெல்லையில் 15 நிமிடங்கள் நூல் விமர்சனம் செய்யப்பட்டது. தமிழ்முரசு மாலை நாளிதழில் ' வளரும் கவிஞர் ' என்ற தலைப்பில் கால்பக்கம் நேர்காணல் வந்தது. அன்றைய தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன் அவர்களும் ,பேரா.சாலமன் பாப்பையா அவர்களும் கவிதை நூல் குறித்து கடிதம் எழுதி ஊக்கப்படுத்தினார்கள்.
மதுரை வானொலியில் இளைய பாரதம் நிகழ்ச்சியில் கவிதையும் , சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வுக் கருத்துக்களையும் தொடர்ந்து பேசி வருகிறேன்.
இம்மாதம் பத்தாம் தேதி ரேடியோ மிர்ச்சி பண்பலையில் எனது நேர்காணல் ஒலிபரப்பானது .
பொதிகை தொலைக்காட்சி , NEWS 7 தொலைக்காட்சியில் எனது நேர்காணலும் , ஜெயா தொலைக்காட்சியில் எங்கள் பேரா.கு.ஞானசம்பந்தன் அவர்களோடு எங்கள் மாணவர்களும் , நாங்களும் உரையாடிய நிகழ்வு கடந்தாண்டு காந்தி ஜெயந்தி அன்று ஒலி பரப்பானது.
மாணவர்களுக்கு மனிதநேயம் பற்றியும் , மரங்கள் வளர்ப்பது பற்றியும் எண்ணத்தை விதைக்க ஆசிரிய நண்பர்களுடன் இணைந்து ' மரமும் மனிதமும் ' என்ற பாடல் குறுந்தகடை பாடல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். இன்று பல பள்ளிகளின் விழாக்களில் நான் எழுதிய பாடலுக்கு மாணவர்கள் நடனமாடி வருகிறார்கள். ' மனிதர்களை மட்டுமல்ல மரங்களை அழிப்பதும் இனப்படுகொலைதான் ' என்ற வாசகத்தை பதிவு செய்துள்ளேன்.
மதுரை மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற நடனப் போட்டியில் எனது இரு பாடல்களைத் தேர்ந்தெடுத்து நடனமாடிய மதுரை ஒத்தககடை பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மாவட்ட அளவில் முதல் பரிசும் , நாமக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் மூன்றாம் பரிசும் பெற்று வந்தனர்.
மதுரை ' சியாமளவாணி ' பண்பலையில் எனது ' மரமும் மனிதமும் ' பாடல் ஒலிபரப்பானது.
எங்கள் பள்ளி மாணவர்கள் மூலமாக மதுரை வானொலியில் இரண்டு முறை 30 நிமிட பல்சுவை நிகழ்ச்சி வழங்கியுள்ளேன். பள்ளி மற்றும் கல்லூரிகளில் இலக்கிய மன்றம் , கருத்தரங்குகளில் பசுமையைப் பறெறித் தொடர்ந்து பேசி வருகிறேன்.
பணிக்கான ஊக்குவிப்பு.
1 ) 15 - 08 - 11 சுதந்திர தினத்தன்று அன்றைய மதுரை ஆட்சியர் திரு.உ.சகாயம் இ.ஆ.ப. அவர்கள் சிறந்த அரசுப்பணியாளர் என்ற விருதினை வழங்கினார்கள்.
2 ) 11 - 12 - 11 அன்று மதுரை நகைச்சுவை மன்றத்தின் மூலமாக ' சாதனையாளர் விருது - சிறந்த விடுதிக் காப்பாளர் ' என்ற விருதினை கலைமாமணி .பேரா.கு.ஞானசம்பந்தன் அவர்கள் வழங்கினார்கள்.
3 ) 19 - 10 - 15 அன்று தினமலர் நாளிதழ் ' லட்சிய ஆசிரியர் ' என்ற விருதினை எனக்கு வழங்கியது .
4 ) இந்து தமிழ் நாளிதழ் ' அன்பாசிரியர் ' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது.
5 ) விதைக்கலாம் 2020 என்ற தொண்டு நிறுவனம் ' கலாம் விருதினை ' வழங்கி ஊக்கப் படுத்தியது.
இதழ்களில் எனது படைப்புகள்:
எனது ' மரமும் மனிதமும் ' இசைத்தகடு குறித்து கல்கி , குங்குமம் , இராணி வார இதழ்களிலும் ஸ்மார்ட் மதுரை , மாணவர் உலகம் , மாதவம் போன்ற மாத இதழ்களிலும் , தினமலர் , தினத்தந்தி , தினமணி , இந்து.தமிழ் , இந்து ஆங்கிலம் , மாலைமுரசு போன்ற நாளிதழ்களிலும் செய்தி வெளியானது.
மதுரைனா மல்லி என்ற எனது பாடல் வெளியிட்ட ஒரு மாதத்தில் இணையதளத்தில் சுமார் ஐம்பதாயிரம் நபர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டது.
எனது கவிதைகளும் , கட்டுரைகளும் கல்கி , பாக்யா , செம்மலர் , மாதவம் , புதிய ஆசிரியன் , வகுப்பறை , தினமணி சிறுவர் மணி , இந்து தமிழ் மாயாபஜார் , சூரியகாந்தி , தீக்கதிர் வண்ணக்கதிர் , சினிமா எக்ஸ்பிரஸ் , தினமலர் என்பார்வை , ஸ்மார்ட் மதுரை போன்ற இதழ்களில் வெளியாகி வருகிறது.
அரசுப் பள்ளிகளின் சிறப்புகளை ' ஸ்மார்ட் மதுரை ' மாத இதழில் தொடர்ந்து எழுதி வருகிறேன்.
எழுத்தாளர் ஜெயகாந்தன் , உவமைக் கவிஞர் .சுரதா , தி.க.சி ,வல்லிக்கண்ணன் , தொ.மு.சி.இரகுநாதன் , கி.ரா. , பூமணி , சோ.தர்மன் , மேலாண்மை பொன்னுச்சாமி , பா.செயப்பிரகாசம் , வைரமுத்து ,அறிவுமதி , இளசை சுந்தரம் போன்ற இலக்கிய ஆளுமைகளைச் சந்தித்து உரையாடியதை பெரும்பேறாகக் கருதுகிறேன்.
என்னிடம் பயிலும் மாணவர்கள் டாக்டராக , பொறியாளராக வரவேண்டும் என்பதைவிட மனிதநேயம் உள்ளவர்களாக வரவேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன்.
எனது 15 ஆண்டு கால ஆசிரியப் பணிக்காலத்தைச் சற்றே திரும்பிப் பார்க்கிறேன். எதுவும் சாதித்தாகத் தோன்றவில்லை. ஏதேனும் சாதிக்க வேண்டும் , சாதிக்க வேண்டும் , சாதிக்க வேண்டும் என் மாணவ நண்பர்களின் துணையோடு.
அன்பன் ,
மு.மகேந்திர பாபு.
ReplyForward |
0 Comments