மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு பசுமைப் பள்ளி - மு.மகேந்திர பாபு

 


மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு பசுமைப் பள்ளி

பசுமையை எங்கே கண்டாலும் நம் கண்கள் விரிவதும் , மனம் குளிர்வதும் , பசுமை இருக்கும் இடத்தில்  நாம் இருக்க வேண்டும் என்று ஏங்குவதும் மனித மனங்களின் இயல்பு. மரங்களைக் காணும் போதெல்லாம் நம் உடன் பிறந்த அல்லது உற்ற நண்பனைக் கண்டு உள்ளம் மகிழ்வதைப் போல்தான் நம் மனநிலை இருக்கிறது.

அந்த மரங்களை வளரும் மாணவ சமுதாயத்தின் மூலம் நட்டு வைத்து , பசுமையைப் படர விடுவது எதிர்கால சமுதாயத்திற்கு மாபெரும் பெருமையும் , வளமையும் சேர்க்கக் கூடியதாகும். அத்தகைய ஒரு பசுமைத் தொண்டினை சத்தமின்றி செய்துவருகிறது மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திலுள்ள  L.K.B. நகர் ( இலட்சுமி காந்தன் பாரதி ) நடுநிலைப்பள்ளி.

450 மாணவ , மாணவியர்கள் இப்பள்ளியில் பயில்கிறார்கள்.
பள்ளி வளாகம் முழுமையும் மரக்கன்றுகளின் அணிவகுப்பினால் நிறைந்துள்ளது. கால ஓட்டத்தினால் மழை , நிலத்தடி நீரென எல்லாவற்றையும் இழந்து வரும் நமக்கு ஒரு மகிழ்ச்சியைத் தருகிறது இப்பள்ளி வளாகம்.

பள்ளி வளாகத்தில் புங்கை , வேம்பு , இலுப்பை , தூங்குமூஞ்சி மரம் , மதுரை வனத்துறையினடமிருந்து பெற்ற மரங்கள் என சுமார் 200 மரங்களும்  , ஒரு சிறு மூலிகைத் தோட்டமும் உள்ளன. இப்பள்ளியின் பசுமைப்படை   ஒருங்கிணைப்பாளராக உள்ள  ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர்  திரு.இராஜவடிவேல் அவர்களைச் சந்தித்து உரையாடிய போது பல பசுமையான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

2005  ஆம் ஆண்டில் இப்பள்ளிக்கு ஆசிரியராக வந்தேன். அப்போது மரங்கள் எதுவும் இல்லை. மாணவர்கள் , ஆசிரியர்கள் மூலமாக இன்றுவரை சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டுவைத்து பாதுகாத்து பராமரித்து வருகிறோம். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பசுமை பற்றியும் , சுற்றுச் சூழல் பற்றியும் விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகின்றோம். பள்ளியில் நடைபெறும் அனைத்து விழாக்களுக்கும் சிறப்பு விருந்தினர்களை வரவழைத்து மாணவர்களுக்கு பயனுள்ள கருத்துக்களை வழங்கி வருகிறோம்.

எங்கள் பள்ளிக்கு மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தின் தொடக்கக் கல்வி அலுவலர் திரு.கென்னடி அவர்கள் , உதவி தொடக்கக் கல்வி அலுவலர் , மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.ஆஞ்சலோ இருதயசாமி அவர்கள் வருகை தந்து மரக்கன்றுகள் நட்டு வைத்து சிறப்பித்துள்ளனர்
எங்கள் பள்ளி இருக்கும் இந்த இலட்சுமி காந்தன் பாரதி நகர் , இலட்சுமி காந்தன் பாரதி என்பவர் நம் மதுரை மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியர்.அவரது பெயராலே இவ்வூர் அழைக்கப்பட்டு வருகிறது. அவர் எங்கள் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களோடு உரையாடி , பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டுவைத்தது எங்களுக்குக் கிடைத்த மிகப் பெரும் சிறப்பாகும்.

எங்கள் பள்ளியைச் சுற்றிலும் நாடோடி இன மக்களும் , சாட்டையடி ,பூம்பூம் மாடு வைத்து வாழ்க்கை நடத்துபவர்களின் பிள்ளைகளும்தான் அதிகளவில் பயில்கிறார்கள். அவர்கள் இன்று கல்வியில் மாபெரும் விழிப்புணர்வு பெற்று பயின்று வருகிறார்கள்.

பசுமைத் திட்டத்திற்காக  மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைப்பானது 2014 ஆம் ஆண்டில் ' பிரியாவரன் ' ( சுற்றுச்சூழல் நண்பன் ) விருதினை வழங்கியது.மதுரையின் முன்னாள் முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி .அமுதவள்ளி அவர்கள் சுற்றுச்சூழல் விருதினை எங்கள் பள்ளிக்கு வழங்கியுள்ளார்கள். மதுரை மாவட்ட பசுமைப்படை இயக்கமும் சுற்றுச்சூழல் விருதினை எங்கள் பள்ளிக்கு வழங்கியுள்ளது.மதுரை கிரீன் தொண்டு நிறுவனம் கடந்த ஜீன் 5 உலக் சுற்றுச்சூழல் தினத்தன்று ' சுற்றுச்சூழல் ஆர்வலர் ' விருதினை எனக்கு வழங்கி சிறப்பித்தது.

பசுமையில் மட்டுமல்லாது கலை இலக்கியத்திலும் எங்கள் பள்ளி மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனர். மதுரை கம்பன் கழகம் நடத்திய போட்டிகளில் பேரா.சாலமன் பாப்பையா அவர்களிடம் எங்கள் மாணவர்கள் பரிசுகள் பெற்றுள்ளனர். சிறந்த பசுமைக்கான வாசகம் எழுதியதற்கு எங்கள் பள்ளி மாணவனுக்கு விருது கிடைத்தது. இதைப்போன்று எதிர்காலத்தில் பல பசுமைப்பணிகளைச் செய்யத் திட்டமிட்டுள்ளோம். எங்களின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் எங்கள் பள்ளித் தலைமையாசிரியை திருமதி.சாந்தி காளீஸ்வரி அவர்கள் ஆக்கமும் , ஊக்கமும் கொடுத்து வழிகாட்டிஙவருகிறார்கள். ஆசிரியர்களும் , மாணவர்களும் தொண்டுள்ளத்துடன் இணைந்து பணிசெய்கிறோம். என்றார்.

மாணவர்களுக்கு கல்வி , விளையாட்டு என்பதோடு மட்டும் நில்லாது இயற்கை ஆர்வலராகவும் மாற்றி வருகின்ற இப்பள்ளி போன்று எல்லாப் பள்ளிகளும் இணைந்து செயலாற்றினால் பார்க்கும் இடமெங்கும் பசுமையே நிறைந்திருக்கும். பசுமைக்கான பணியில் ஒவ்வொரு இணைவோம். இயற்கையைக் காப்போம்.

கட்டுரை

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர்.

Post a Comment

0 Comments