சின்ன்ன்ன்ன கதை போட்டி

 


சின்ன்ன்ன்ன கதை போட்டி

கதைத்தலைப்பு - உயிருள்ள பொம்மை.

அமுதாவின் மனம் அலைகடலென அடிக்கத் தொடங்கியது.கடிகாரத்தின் முள் நகர்வது ஓட்டப்பந்தயக் குதிரை ஓடுவது போல அவளுக்குத் தெரிந்தது.

" இன்னிக்குச் சீக்கிரமா அம்மா வீட்டுக்கு வந்துருவேன். உன்னை பார்க்குக்குக் கூட்டிப் போறேன் "  என காலையில் தன் மகள் கவிதாவிடம் அவள் சொன்னது மனதை உறுத்திக் கொண்டே இருந்தது.

என்னைக்காவது வீட்டுக்குச் சீக்கிரமா போகலாம்னு நெனச்சா , அன்னிக்குத்தான் ஆபிசில மீட்டிங் அது இதுன்னு ஏதாவது வந்திருது என முனுமுனுத்துக் கொண்டாள்.

அமுதாக்கா.ஏன் படபடப்பா இருக்கிங்க ? என்றாள் அவளோடு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்யும் சுமதி.

ஒன்னுமில்ல சுமதி. கவிதாவோட அப்பா ஆபிஸ் விசயமா வெளியூர் போய்ட்டாங்க. வீட்ல மக கவிதா மட்டுந்தான் ஒத்தையில இருப்பா. வீட்டு வேலைக்காரி அவங்க சொந்தக்காரங்களுக்கு முடியலனு ரெண்டு நாள் லீவு போட்டுப் போயிட்டா. இன்னிக்குச் சீக்கிரமா வந்துருவேன்னு சொல்லியிருந்தேன். மக ஸ்கூல்் விட்டு வந்து என்ன செஞ்சிக்கிட்டு இருப்பாளோனு ஒரே படபடப்பா இருக்கு என்றாள்.

பக்கத்து வீட்ல இருக்கச் சொலலியிருக்கலாம்ல .

' பக்கத்து வீட்ல சாவி கொடுத்திட்டுத்தான் வந்திருக்கேன். முன்னப் பின்ன ஆனா பாத்துக்கோங்கனு சொல்லியிருக்கேன். '

அப்புறம் என்னக்கா ?

இல்ல சுமதி , கவிதாவோட ப்ரண்ட்ஸ் , பேரண்ட்ஸ் பார்க்குக்கு போறதாச் சொன்னாங்களாம். எங்கிட்டச் சொன்னாள். கூட்டிட்டுப் போறேன்னு சொல்லியிருந்தேன்.

அப்படியாக்கா ?

ஆமா. ஆனா திடீர்னு இப்ப நம்ம ஆபிசில புதுசா எம்.டி. வாறார்னு மீட்டிங் இருக்குனு சொல்லிட்டாங்க. எம்டி வர்ற மொதநாளே பெர்மிஷன் கேட்டா நல்லாயிருக்காது. அதான் யோசிக்கிறேன்.

எல்லாரும் மீட்டிங் ஹாலுக்கு வருவீங்களாம் என்றார் அலுவலகப் பணியாளர் ஒருவர்.

" கடவுளே ... சீக்கிரம் மீட்டிங் முடியட்டும் "  என மனதில் வேண்டிக் கொண்டாள். கம்பெனியின் முன்னேற்றத்திற்கு எப்படி உழைக்க வேண்டும் என எம்டி பேசிக் கொண்டிருந்தது எதுவும் அவள் காதில் விழவில்லை.
ஒரு வழியாக மீட்டிங் முடிந்தது. கைப்பையை எடுத்துக் கொண்டு , வேகமாக வந்த.ஆட்டோ ஒன்றை நிறுத்தி , அவசரமாய் ஏறி வேகமாப் போங்க என்றாள்.

அமுதாவைப் பாத்ததும் பக்கத்து வீட்டுப் பெண் ,  ' அக்கா கவிதா ஸ்கூல் விட்டு வந்திட்டா. வீட்டுக்குள்ளதான் இருக்கா.வீட்டத் திறந்து விட்ருக்கேன் ' என்றாள்.

கதவைத் திறந்து கொண்டு கவலையோடு சென்றாள் அமுதா. நான் சீக்கிரமா வரலயேனு ஏங்கியிருப்பாளே என நினைத்தாள். அவள் வருவதைக்கூட கவனிக்கவில்லை கவிதா.

ஹாலின் நடுவில் அவள் உட்கார்ந்திருக்க , அவளைச் சுற்றிலும் வீட்டிலுள்ள அத்தனை பொம்மைகளும் பரவிக் கிடந்தன. தொலைக்காட்சியில் கார்ட்டூன் படம் பார்த்துக் கொண்டே பொம்மைகளோடு , பொம்மையாக , உயிருள்ள பொம்மையாக கண்களில் ஏக்கத்தோடு உட்கார்ந்திருந்தாள் கவிதா.

கதையாக்கம்.

மு.மகேந்திர பாபு ,

Post a Comment

0 Comments