மிட்டாய் ... ஜவ்வு மிட்டாயே ...! மு.மகேந்திர பாபு

 

மிட்டாய் ... ஜவ்வு மிட்டாயே  ...!

சீனி மிட்டாய்
சிக்கடி மிட்டாய்
அடுப்புப் பானைய உருட்டும் மிட்டாய்
அழுத பிள்ளைய அமத்தும் மிட்டாய்
சந்தோசமாத் திங்கவே
ஜவ்வுமிட்டாய் வாங்கிக்கோ ...

என இராகமாய்ப் பாட்டுப்பாடி , பழைய சைக்கிளை உருட்டிக்கொண்டே வருவார் ஜவ்வுமிட்டாய்த் தாத்தா. பள்ளிக்கூட நாட்கள்ல சாய்ந்திரமும் , லீவு நாட்கள்ல காலயிலும் வந்து செல்லும் தாத்தாவுக்காக சின்னப் பசங்க கூட்டம் எப்போதும் உண்டு. தன் வீட்டாரை அண்டியிருக்காது , வேலை செய்து வருமானம் பார்க்கும் அறுபது வயசு எளவட்டம் அவர்.

தாத்தாவின் சைக்கிளில் சோத்தாங்கைப் பக்கத்து ஹேண்டில் பாரில் காசுபோட ஒரு சுருக்குப் பையும் , நொட்டாங்கைப் பக்கம் ஒரு மணியும் தொங்கவிட்ருப்பாரு. பெரும்பாலும் மணியடிக்க வேண்டிய வேல இருக்காது. தாத்தாவைப் போலவே சைக்கிளும் உழைத்து உழைத்து  'கிரீச் கிரீச் '  என மேமூச்சு கீமூச்சு வாங்கும். எட்டயபுரத்திலிருந்து பொன்னையாபுரத்துக்கு வருவார். 

தாத்தாவின் சத்தம் கேட்டாலே எங்களுக்குச் சந்தோசம்தான். சைக்கிளு சென்டர்ஸ்டாண்டக் கூடப் போட விடாம , அவர மொச்சிருவோம். எலேய் ... இருங்க .எல்லாத்துக்கும் தாரேன். ஏன் அவசரப்படுதீக ?  என்பார். இன்னிக்கு பயன்பாட்டில் இல்லாத பத்துப் பைசா , இருபது பைசா , காரூவா  என ஒவ்வொருத்தரும் டவுசர் பையிலிருந்து எடுத்து நீட்ட , சைக்கிள் கேரியரில் இருக்கும் சின்ன மரப்பெட்டியிலிருந்து சருவத்தாள் சுத்தப்பட்ட ஜவ்வு மிட்டாய் பொட்டலத்த வெளில எடுப்பாரு.

எலேய் ... பசங்களா ...காசத் திணிக்காதிங்க . அப்புறம் நான் மறந்திருவேன். ஒவ்வொருத்தராக் கொடுங்க எனச்சொல்லி , சுருக்குப் பையில காசப் போட்டுக்கிருவாரு. தாத்தா எனக்குப் பத்துப் பைசாவுக்கு ..., எனக்கு கால்ரூவாக்கு எனக் கேக்கம் போது , முகமலர்ச்சியோட ஜவ்வு மிட்டாயப் பிச்சுக் கொடுப்பாரு. அவர்ட்டயிருந்து வாங்கி , வாய்க்குள்ள போகும்முன்ன ஜவ்வுமிட்டாய் பல வடிவம் பெறும்.

" அண்ணன் என்னோட மீசயப் புடுங்கித் தின்னுட்டாம்மா ...
சின்ணண்னன் என் வாட்சப் புடுங்குறாம்மா ...
அக்கா என் வளையல இழுக்குறாம்மா ...
மாமா என்னோட செயின பிடிச்சு இழுக்காருமா ..

என எல்லோரும் புகார் செய்ய , அம்மாவுக்கு மூக்கு மேல கோவம் பொத்துக்கிட்டு வரும். பேசாம ஒங்களுக்கு ஏழு நாளும் பள்ளிக்கூடமாவே இருந்திருக்கலாம். ஏன்தான் சனி , ஞாயிறு லீவு விட்டுத் தொலைக்கிறாங்களோ ... சனியங்க ... ஏன் உசிர வாங்குதுங்க என எரிச்சப்பட்டுக் கத்துவாள் அம்மா.

இப்படித் தினமும் கம்ப்ளெயிண்ட் பண்றது வாடிக்கையாப் போச்சு எங்களுக்கு. காரூவாக்கு வாங்குன ஜவ்வு மிட்டாய கொஞ்சம் கொஞ்சமா இழுத்து நூலிழை போலாக்குவோம். அதை மொத்தமாச் சேத்து உருட்டி , பிறகு கையில கடியாரமா மாத்துவோம். பொம்பளப் பிள்ளைக செயினு , வளையல்னு செஞ்சு மாட்டிருகிருவாக கழுத்திலயும் , கையிலயும்.

கொஞ்சம் தடிமனா உருட்டி மூக்குக் கீழ , உதட்டு மேல மீச மாதிரி ஒட்டி வச்சிக்கிருவோம். நேரா நின்னா ஒட்ன மீச கீழ விழுந்திரும். அதனால அன்னாந்து பாத்துக்கிட்டே நடப்போம். சிலபேரு இன்னுங் கொஞ்சம் மீசய நீட்டி , சீனாக்காரங்க தாடிபோல ஒட்டிக்கிருவாங்க.

ஜவ்வு மிட்டாய்த் தாத்தா தெருத்தெருவா சுத்தி அலைய வேண்டிய அவசியமிருக்காது. தாத்தாவின் " சீனி மிட்டாய் சிக்கடி மிட்டாய் " பாட்டு எஞ்சோட்டுப் பசங்க , பிள்ளைகள எறும்பு மாதிரி கூட்டமா இழுத்திட்டுப் போயிரும் தாத்தாட்ட. மந்தையம்மன் கோயில் திடல்ல நின்னுக்கிருவாரு. வாங்குன ஒவ்வொருத்தனும் , காசில்லாம வெளம்பரம் பண்ணுவோம் ஜவ்வு மிட்டாய்த் தாத்தா வந்துட்டாருன்னு.

தாத்தா எனக்கு ஜவ்வு மிட்டாயி வேணும்

வாங்கிக்கோ ராசா '

ஆனா ... ஏங்கிட்ட காசு இல்லியே ...

' பரவால்ல ... நாளக்கிக் கொடு '

' காசுதான் இல்லெ. ஆனாப் பொருள் வச்சிருக்கேனே ! '   என டவுசர் பைக்குள் திணித்து வச்சிருந்த வெண்பட்டுப் போன்ற பருத்திய எடுத்துக்காட்ட ..,

' அடடா !  பருத்தியெல்லாம் வேணாம்பா  '

' அப்ப நெல்ல அள்ளிட்டு வரவா ?'

' அதுவும் வேணாம்  '

' அப்ப கேப்ப , கம்பு , சோளம் ... '

'  அதுவும் வேணாம்  '

' அப்படினா ஓன் ஜவ்வு மிட்டாயி வேணாம் போ '

' அடடா !  கோவுச்சுக்காதடா .நானென்ன மளிககடையா வச்சிருக்கேன் ? '  பருத்திய வாங்கிக்கிட்டு அவிச்ச பெலாக்கொட்ட தர ?  உனக்கு மிட்டாயிதான வேணும் ? நான் தாரேன். உனக்கு எப்பக் காசு கெடைக்குதோ ... அப்பக் கொடு எனச் சொல்லும் போது தாத்தாவின் மனசு தெரியும்.

ஜவ்வு மிட்டாய்ப் பைய இடது கையில் பிடுச்சு , வலது கட்டை விரலாலும் , ஆட்காட்்டி விரலாலும்  அவர் பிடிச்சு இழுக்கும் அழகே தனிதான். கடைசியில மெல்லிய நூலென ஜவ்வு மிட்டாய் இருப்பது , நாசா ஆய்வுமையம் எடுத்த ராமேஸ்வரத்து ராமர் பால செயற்கைக் கோள் படம் போலத் தெரியும்.

இன்னிக்கு உள்ள பிள்ளைக போல மிட்டாய வாங்குனமா ?  வாயில போட்டுத் தின்னமானு அன்னக்கி இருந்ததில்ல. ஒரு மணி நேரமாச்சும் ஜவ்வு மிட்டாயி கூட வெளயாடுவோம். மிட்டாயி வாங்கக் காசில்லைனாலும் , வேடிக்கை பாக்குறதே செம ஜாலியா இருக்கும். அப்படி வேடிக்கை பாக்கும் போது  , யாராவது கொஞ்சங்கானு பிச்சுக் கொடுப்பாங்க.

'  இந்தா ... நீயும் கொஞ்சம் தின்னு '

' வேணாம் ... எங்கம்மா அடிக்கும்  '

' பரவால்ல ... கொஞ்சம் தாரேன் வாங்கிக்கோ ..'

'  இல்ல ... இல்ல ... வேணாம்  '

' உன்னப் பாக்க வச்சுத் தின்னா  எனக்கு நடுச்சாமத்தில வயிறு வலிக்கும். பாவம் பிடிக்கும். நீ திங்காட்டியும் பரவால்ல . உன் கையில வாச்சாக் கட்டிக்கோ ' 

மறுக்க முடியாது வாங்கிக் கொள்வான் கடைசில.  ஜவ்வு மிட்டாய் , வெறும் மிட்டாயாக மட்டுமல்லாது பால்யத்தில் அன்பிற்கும் ,  அரவணைப்பிற்குமான ஒரு பொருளாக இருந்தது. இப்போதெல்லாம்  ஜவ்வு மிட்டாய நினைச்சுப் பாத்தா , பால்யம்  வந்து எட்டிப் பாத்துட்டுப் போகுது சந்தோசமாய்.

மு.மகேந்திர பாபு , ஆசிரியர் ,
அரசு மே.நி.பள்ளி , இளமனூர் , மதுரை  625 201.  பேசி 97861 41410  .

இந்தியனே எழுந்து நில் - கவிதை நூலின் ஆசிரியர்.
' மரமும் மனிதமும் '  -  இசைத்தகடின் பாடலாசியர் .

Post a Comment

0 Comments