நேர்காணல் - கலைமாமணி . பேரா.கு.ஞானசம்பந்தன் அவர்களுடன்

 

நேர்காணல்.

கலைமாமணி . பேரா.கு.ஞானசம்பந்தன் அவர்களுடன் ' தேன் சிட்டு ' சிறுவர் இதழுக்காக நேர்காணல்.

உரையாடியவர் - மு.மகேந்திர பாபு , பட்டதாரி தமிழாசிரியர் , அரசு மேல்நிலைப் பள்ளி ( ஆ.தி.ந ) , இளமனூர் , மதுரை - 625 201.

1 ) வணக்கம் ஐயா . ' தேன் சிட்டு' சிறுவர் இதழுக்காக உங்களிடம் நேர்காணல். நீங்கள் படித்த பள்ளி , உங்களது பள்ளிப் பருவம் பற்றிக் கூறுங்களேன்.

வணக்கம். குருவிகள்ல தேன்சிட்டுக்கு என்ன சிறப்புனா, நீண்ட மூக்குடையதா இருக்கும்.கட்டை விரல் அளவுதான் இருக்கும். தேன் மட்டுமே அருந்தும்னு சின்ன வயசில கேள்விப் பட்டிருக்கேன்.
குழந்தைகளைக் கொஞ்சும் போது கூட தேன் சிட்டு மாதிரி இருக்குனு சொல்வோம். தேனுக்கு என்ன சிறப்புனா , தானும் கெடாது. தனக்குள்ள போட்ட பொருளையும் கெட விடாது. எல்லாருக்கும் மருந்து போல இந்த தேன்சிட்டு இதழ் இருக்கும்னு கருதுகிறேன்.

பள்ளிப் பருவம்தான் நம்ம வாழ்க்கையில மறக்க முடியாத பருவம். வைகை ஆத்துக்கரை ஓரமாக உள்ள சோழவந்தான் தான் நான் பிறந்து வளர்ந்த ஊர். ஆத்தங்கரையோரத்தில , தோப்புக்குள்ள , மலைமேட்ல நடந்து போய் கல்வி கற்ற பருவம் என்னோடது. எங்க அப்பா தமிழாசிரியர். முதல் வகுப்பு சோழவந்தான்ல. இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை திருமங்கலம் ஷெல்டன் பள்ளியில படிச்சேன். அந்தப் பள்ளிக்கூடம்தான் என்னை உருவாக்கியது. எங்க அப்பா என்னை கேள்விக்கு பதில் படிக்கக் கூடாதுனு சொல்வார். அதாவது  புத்தகத்தையே படிச்சிரு என்பார். அட்டை டூ அட்டை மனப்பாடம் பண்ணிரு என்பார். பிறகு சோழவந்தான் பேட்டைத் தெரு பள்ளிக்கூடத்தில படிச்சேன். பல அனுபவங்களைக் கற்றுக் கொடுத்தது இந்தப் பள்ளி. நிலத்தை உழவு செய்ய , களை எடுக்க , உரமிட , அறுவடை செய்ய , களத்து மேட்ல படுத்திருக்க அப்படினு அனுபவங்களைக் கற்றுக் கொண்டேன் . அடுத்து  சோழவந்தான் முள்ளிப் பள்ளம் பள்ளி. ஆத்தக் கடந்து போகணும். இந்த மாதிரி ஒரு சந்தோசம் வேற எதிலும் இல்லை. இதுதான் எனது மகிழ்ச்சியான பள்ளிப் பருவம்.

2 ) சின்ன வயதில தேவாரம் , திருவாசகம் , திருப்பாவை , திருவெம்பாவை - இவற்றின் மீதான ஆர்வம் எப்படி ஐயா வந்தது ?

முதல் தலைமுறை படிப்பாளி எங்க அப்பா. படிப்பில ரொம்ம ஆர்வம் மிகுதியானவர். ஆசிரியப் பணிக்கு வந்த பிறகு நிறைய மன்றங்கள் நடத்தினார். திருவள்ளுவர் கழகம் நிறுவி , ஞாயிறு தோறும் பிள்ளைங்களுக்குத் திருக்குறள் கற்றுக் கொடுப்பார். திருமறைகள் கழகம் மூலம் பன்னிரு திருமறைகளைச் சொல்லிக் கொடுப்பார். ஒரு நாள் ஓதுவார் வராததால் , நான் திருஞான சம்பந்தரோட பாடல்களைப் பாடினேன். அப்ப அந்த மடாதிபதி , இவருக்கு ஞானசம்பந்தன்னு பேரு வைங்க என்றார். எங்க அப்பா எனக்கு முதல்ல வச்ச பேரு வேற. மடாதிபதி சொன்னதால எங்க அப்பா எனக்கு ஞானசம்பந்தன்னு பேரு வச்சார். சோழவந்தான்ல திரௌபதி அம்மன் கோவில் இருக்கு. எங்க அப்பா , அங்க உள்ள  குழந்தைகளுக்கு  திருப்பாவை , திருவெம்பாவை சொல்லிக் கொடுப்பார். அவருக்கு உடல் நலமில்லாத போது என்னை திருப்பாவை , திருவெம்பாவையைப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கச் சொன்னார். முப்பது நாட்கள் பேசக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சின்ன வயசிலேயே வாரியார் சுவாமிகள் , குன்றக்குடி அடிகளார் , யாழ்ப்பாணம் சுவாமிநாத தம்பிரான் போன்றோர்களுடன் பழகக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

3 ) உலகம் முழுவதும் சென்று பேசி வருகிறீர்கள். பேச்சுக்கு அடித்தளமிட்டவர்கள் யாவர் ?

என்னோட பேச்சுக்கு அடித்தளமிட்ட முதல் நபர் எங்க அப்பா. இரண்டாவதாக பேரா.ந.ஜெயராமன் . இவர் மிக முக்கியமானவர். என்னோட கைடு அவர். என்னை நல்ல நிலைக்குக் கொண்டு வந்தவர். தமிழ் இலக்கிய உலகில் நான் சந்தித்த முதல் ஆசான் அவர்தான். பட்டி மன்றங்கள் , வழக்காடு மன்றங்கள்ல என்னைப் பேச வைத்தவர். மூன்றாவதாக எங்கள் பேரா. தொ.பரமசிவன் அவர்கள். அவர் ஒரு விசயத்தைச் சுட்டிக் காட்டினார். நண்பர்கள்கிட்ட நகைச்சுவையாகவும் , மேடைகள்ல சீரியசாகவும் பேசுறீங்க. இரண்டுக்கும் வேறுபாடு இருக்கு. இரண்டையும் கலந்தீங்கன்னா வெற்றி பெறுவீங்கன்னார். அவர் சொன்னதைப் பின்பற்றி வருகிறேன். இந்த மூவரையும்  என் பேச்சுக்கு அடித்தளமிட்டவர்கள்னு சொல்லலாம்.

4 ) ஒரு நிமிடம் கிடைத்தால்கூட ஒரு புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்து விடுகிறீர்கள்.வாசிப்பை நேசிக்கும் பழக்கம் எந்த வகுப்பில் தொடங்கியது ?

வாசிக்கும் பழக்கம் என்பது எனக்கு சுவாசிக்கும் பழக்கம் . பள்ளிக் கூடத்து நூலகத்தில புத்தகம் எடுக்க ஒரு நாள் ஒதுக்கிக் கொடுப்பாங்க. வரிசையில நின்னு புத்தகம் எடுக்கறப்ப , பசி மிகுந்த ஆள் மாதிரி ஓடிப்போய் எடுப்பேன். எங்க தெருவில யார் வீட்லயாவது புத்தகம் வாங்கியிருந்தாங்கன்னா , அவங்களுக்கு சின்னச் சின்ன வேலைகள் செய்து கொடுத்து , புத்தகத்த படிச்சிட்டு வருவேன். அன்புச் செழியன்கிற நண்பர் ஒருவர் . பல சரக்குக் கடை வச்சிருந்தாங்க. அவரோட போய் வேலை செய்து , அவங்க கடையில இருக்கிற புத்தகங்களைப் படிச்சிட்டு வருவேன். வெகு தூரப் பயணங்கள்ல புத்தகம் படிப்பதை இன்னும் பழக்கமா வச்சிருக்கேன்.

5 ) வீடெங்கும் புத்தகங்கள்.வீடே கோயில் என்பார்கள்.நீங்கள் வீட்டையே நூலகமாக மாற்றி யிருக்கிறீர்கள். நூலகம் என்றவுடன் தங்கள் அப்பாவின் நினைவுதான் எங்களுக்கு வருகிறது. அவரைப் பற்றி ...

எங்க அப்பா நல்ல வாசிப்பாளர். ஒரு நூலகத்தைப் போன்றவர் . 9 , 10 , 11 படிக்கும் போது எனக்கு ஆசிரியர். அவருக்கு நினைவாற்றல் அதிகம். எப்போதும் படித்துக் கொண்டே இருப்பார். வகுப்பறைக்கு புத்தகம் கொண்டு வரமாட்டார். பாடங்கள் அனைத்தும் அவரது நினைவில் இருக்கும். அவரது வாசிக்கும் பழக்கம்தான் எனக்கும் தொற்றிக் கொண்டது.

6 ) ஆயிரக்கணக்கான மாணவர்களைக் கடந்து வந்துள்ளீர்கள். உங்களிடம் படித்த மாணவர்களிடம் மிகவும் பிடித்த மாணவர்கள் பற்றிச் சொல்லுங்களேன் ஐயா ...

எல்லாருமே எனக்குப் பிடித்த மாணவர்கள்தான். தனித்திறமை வாய்ந்தவர்கள். அவர்களது திறமைகளைக் கண்டறியக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பல துறைகளில் எனது மாணவர்கள் சிறந்த நிலையில் இருக்கிறார்கள். கல்லூரி முதல்வர்களாக இருக்கிறார்கள்.  பாட்டனி படித்த மாணவர் நல்லா படம் வரையக்கூடியவராக இருந்தார். என்னோட புத்தகத்துக்குப் படம் வரையச் செய்தேன்,எழுத்தாளர் சுஜாதா அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தேன். அவரது தனித்திறமையால் முன்னுக்கு வந்தார். 2006ல் நான் அமெரிக்காவிற்கு சென்றிருந்த.போது ,மிகப் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கக் கூடிய ஒரு படத்தை அமெரிக்கத் தமிழர்களுக்காக நீங்கள் தொடங்கி வைக்க வேண்டும் என்றார்கள் . என்ன படம்னா , நான் சொன்னேனே நல்லா படம் வரைவார்னு. அவர் இயக்கிய படம். ' இம்சை அரசன்  இருபத்தி மூன்றாம் புலிகேசி.அந்த இயக்குநர் யார்னா , எனது மாணவர் செந்தில் குமார் என்ற சிம்பு தேவன். பிரேம் ஆனந்த் னு ஒரு மாணவர். கார்த்திக் என்ற மாற்றத் திறனாளி மாணவர் . இப்படி நிறைய மாணவர்களைச் சொல்லலாம்.

8 ) மாணவர்கள் ஆசிரியர்களிடம் ஆட்டோகிராப் வாங்குவார்கள். கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி ஒன்றில் உங்களது ஆசிரியர் ஆட்டோகிராப் வாங்கியபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது ?

பல்லாயிரம் பேர் கூடியிருந்த நிகழ்ச்சி அது. கூட்டத்தை விலக்கி விட்டு என்னோட ஆசிரியர் வந்தார். நீங்கள் என்னைத் தேடி வரலாமா ? சொல்லியிருந்தால் நானே வந்திருப்பேனே என்றேன். எனக்கு இல்லடா ... என் பேரனுக்கு ஆட்டோகிராப் போட்டுக்கொடு என்றார்.ஆட்டோகிராப் போட்டேன். வாங்கிப் பார்த்துவிட்டு , இன்னும் உன் கையெழுத்துத் திருந்தலடா ன்னு சொன்ன உடனே , நான் ஜனாதிபதி விருது பெற்ற மாதிரி சந்தோசப் பட்டேன். ஓய்விற்குப் பின்னும் தொடர்கிற ஆசிரியர் - மாணவர் உறவு மகிழ்ச்சியானது.


8 ) உங்களை உருவாக்கிய புத்தகங்கள் எவை ஐயா ?

எழுத்தாளர் அப்துற்றஹீிம் புத்தகங்கள் , டாக்டர்.உதயமூர்த்தி அவருடைய புத்தகங்கள் , பயணக் கட்டுரைகள் , வாழ்க்கை வரலாற்று நூல்கள் , அறிவியல் நூல்கள் இவை எனக்கு மிகவும் பிடிக்கும். என்னோட பேச்சில் ஏதாவதொரு நாட்டைப் பற்றி , விஞ்ஞானியைப் பற்றிச் சொல்லிக் கொண்டே இருப்பேன்.

9 ) விருதுகள் பெற்ற போதும் , தகுதியானவர்களுக்கு மதுரை நகைச்சுவை மன்றத்தின் மூலமாக விருதுகளை நீங்கள் கொடுக்கும் போதும் எப்படி உணர்கிறீர்கள் ?

யாரோ விருது வாங்கும் போது , நாம் தரையில் இருந்து கைதட்டுவோம் . இது முதல் நிலை. நாம விருது வாங்கும் போது மத்தவங்க கைதட்டுவாங்க. இது இரண்டாவது நிலை. மூனாவதா விருது கொடுக்கக் கூடிய நிலைக்கு வருவோம். இவையெல்லாம் படி நிலைகள். தகுதியானவர்களுக்கு விருது கிடைப்பதில் மகிழ்ச்சி.

10 ) வெள்ளி விழா கண்ட மதுரை நகைச்சுவை மன்றத்தின் தலைவரா இருக்கிங்க. நகைச்சுவை வகுப்பறையையும் , வீட்டையும் கலகலப்பாக வைத்திருக்க எப்படி உதவுகிறது ?

எந்த விசத்தையும் மகிழ்ச்சியாகக் கொண்டு போகணும். வகுப்பறையில் மாணவர்கள் சோர்வாக இருக்கிற போது , நகைச்சுவைகளைச் சொல்லி பாடம் நடத்தும் போது வகுப்பு கலகலப்பா மாறிடும். சில வண்ணங்களைச் சேர்த்தா ஓவியம் மிளிர்கிற மாதிரி , சில நகைச்சுவைகளைச் சேர்த்தா நல்லா இருக்கும். வீட்ல இன்னக்கி சமைக்க வேணாம்னு சொன்னா எவ்வளவு சந்தோசப்படறாங்க.என்னுடைய பயணத்தின் போது துணைவியாரையும் அழைத்துச் செல்வேன். 'இகத்தில் இருக்கும் சுகம் எத்தனையானாலும் இருவர்க்கும் பொதுவாக்கலாம் ' என்று பட்டுக்கோட்டையார் சொல்வார். என்னுடைய பெருமைகளில் துணைவியாருக்கு மிகுந்த பங்குண்டு.எனது அப்பா , அம்மாவிற்கு பிறகு எனது பெருமைகள் எனது துணைவியாரைச் சேரும்.

11 ) ஆசிரியர்களும் , மாணவர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் எவை ஐயா ?

என்னுடைய ' பேசும் கலை ' புத்தத்தின் கடைசி அத்தியாயத்தில இதைப்பற்றி எழுதி இருக்கிறேன். உ.வே.சாமிநாத ஐயரின் என்சரித்திரம். அப்துற்றஹீமின் எண்ணமே வாழ்வு , வழிகாட்டும் ஒளிவிளக்கு , எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களின் எண்ணங்கள் தலைவனாகலாம் , இறையன்பு அவர்களின் ஓடும் நதியின் ஓசை , சுகி.சிவம் எழுதிய வெற்றி நிச்சயம் போன்ற தன்னம்பிக்கை நூல்களை மாணவர்களும் , ஆசிரியர்களும் வாசிக்க வேண்டும்.

12 ) கல்வி மேம்பாட்டிற்கான தங்களது ஆலோசனை  ...

தாய் மொழிக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆஸ்திரேலியா , அமெரிக்கா போன்ற நாடுகள்ல தாய்மொழியில படிச்சவங்களுக்கு தனியா ஸ்டார் கொடுக்கிறாங்க. இந்த ஸ்டார் ஒருத்தர் வேலைக்குப் போகும்போது ரொம்பப் பயன்படும். வாசிக்கிற பழக்கத்தை உருவாக்கனும். தமிழ் மாணவர்களுக்கு நல்ல அங்கீகாரம் கொடுக்கனும். விழாக்கள் , திருமணங்கள் இவற்றிற்கான அழைப்பிதழ்கள் தமிழில் அச்சடிக்கப் பட வேண்டும். இன்றைய மாணவர்கள் அறிவாளிகளாக இருக்கிறார்கள். அவர்களது தகுதிக்கேற்ப கல்விமுறை அமைக்கப் பட வேண்டும்.

13 ) ஆசிரியர்களுக்கும் , மாணவர்களுக்குமான தங்களது ஆலோசனைகள் ...

பள்ளிக்கல்விச் செயலர் திருமிகு. உதயச்சந்திரன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த மதுரையில் நடைபெற்ற கல்வி அதிகாரிகளுக்கான புத்தாக்கப் பயிற்சியில் கலந்து பேசி வந்தேன். நேரம் தவறாமை , நினைவாற்றல் , புதியன கற்றல், அயலகத்திற்குப் பயணம் செய்தல் இவையெல்லாம் வேண்டும். பயணம் பல மாற்றங்களைத் தரும். வகுப்பறையைத் தாண்டிய கல்வி கொடுக்கனும். பேச்சுத் திறனை வளர்க்க வேண்டும். பெரும் நீர்வீழ்ச்சியின் திறனை மின்சாரமாக மாற்றுவதைப் போல ,ஓடி வரும் ஆற்று நீரை அணை கட்டிப் பாசனமாக மாற்றுவதைப் போல , அறிவுள்ள , திறனுள்ள பிள்ளைகளை நல்ல நிலைக்குக் கொண்டு வரவேண்டும். நிச்சயமாக கொண்டு வரமுடியும்.
தேன் சிட்டு இதழுக்கு எனது வாழ்த்துகள்.

மிக்க நன்றி ஐயா. உங்களோடு இருப்பது , ஒரு நூலகத்திற்குள் இருப்பதைப் போல. உங்கள் வீட்டிற்குள் இருப்பது கோவிலுக்குள் இருப்பதைப் போல. உங்களது பொன்னான நேரத்தை ' தேன்சிட்டு ' இதழுக்காக வரவிட்டமைக்கு நன்றி ஐயா.

மு.மகேந்திர பாபு , பட்டதாரி தமிழாசிரியர் , அரசு மேல்நிலைப் பள்ளி ( ஆ.தி.ந ) , இளமனூர் , மதுரை - 625 201. பேச - 97861 41410.


Post a Comment

0 Comments