மரங்கள் இருக்குமிடம் மகிழ்ச்சி நிலைக்குமிடம் - மு.மகேந்திர பாபு

 


மரங்கள் இருக்குமிடம் மகிழ்ச்சி நிலைக்குமிடம்.

(ஜூன் - 5 , உலகச் சுற்றுச்சூழல் தினம் - சிறப்புக் கட்டுரை )


' மரங்களால் சுற்றுச்சூழல் வளமாகும்
மனித வாழ்வு நலமாகும் '

' மரம் வளர்க்க மழை பொழியும்
மழை பொழிய வறுமை ஒழியும் '

' ஆளுக்கொரு மரம் நடுவோம் மண்ணில் வாழ ;
நாளை மண்ணை மகிழ்வாய் ஆள '

' மரம் மனிதனின் மூன்றாவது கரம் '

ஆம் ! மரம் மனிதனின் மூன்றாவது கரம். இரு கைகளைக் கடந்து , இயற்கையைக் காக்கும் மூன்றாவது கரமாக உள்ளது மரம் இன்று . சுற்றுச் சூழலைச் சுகமாய் காப்பதில் மரங்கள் முதன்மையான காரணியாக விளங்குகின்றன. மரங்கள் பூக்கும் போதெல்லாம் மனித மனங்களும் பூக்கின்றன. ஆதி மனிதன் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த போது இன்பமாக வாழ்ந்தான். மனிதன் நிர்வாணமாக இருந்த போது , மரம்தான் தன் இலைதழைகளை , மரப்பட்டைகளை ஆடையாகக் கொடுத்து , மானம் காத்தது. நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் இன்று மரங்கள் அழிக்கப்பட்டு இயற்கை நிர்வாணமாகி வருகிறது. மரங்கள் அதிகளவு  இருக்கும் வரை சுற்றுச்சூழல் சுகமாக இருக்கும்.மரங்கள் அழியத் தொடங்கும் போது மனித சமுதாயத்தின் அழிவும் தொடங்கிவிடும்.

மரங்கள் மண்ணின் மைந்தர்கள். மரங்கள் நம் தேசத்தின் தியாகிகள்.தியாகிகள் இல்லையென்றால் நம் வாழ்வில் திருப்பங்கள் ஏது ? மரங்கள் இல்லையென்றால் நம் வாழ்வில் மகிழ்ச்சி ஏது ? நம் உடலும் உள்ளமும் உறுதி பெற நமக்காககத் தவம் செய்யும் முனிவர்கள் இந்த மரங்கள்  நம்மை மகிழ்விக்கும் அந்த மரங்களின் சந்ததி நம்மோடு கடைசி வரை பயணித்தால் நமது வாழ்க்கைப் பயணம் வளமாக , நலமாக இருக்கும். நாம் பெருக்கச் சொன்னதைச் சுருக்கினோம் ; அது மரம். சுருக்கச் சொன்னதைப் பெருக்கினோம் ; அது மக்கள் தொகை.பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப மரங்களும் பெருகினால்தான் மனித குலம் தழைக்கும் , பிழைக்கும் , நிலைக்கும்.

மரங்களும் கடவுள்களும் .

ஆதிகால மனிதன் இயற்கையைக் கடவுளாக வணங்கினான். மரவழிபாடு அன்று  இருந்தது. கடவுள் மரங்களில் உறைந்துள்ளார் என்ற நம்பிக்கை இன்றும் நம் மக்களிடம் உள்ளது. சங்க இலக்கியமும் , பக்தி இலக்கியமும் இதைப் பதிவு செய்துள்ளன. நோயால்  மக்கள் இறந்த போது தங்களையும் , தங்கள் சந்ததியையும் காப்பாற்றிய தாவரங்களை மக்கள் தெய்வமாக வழிபட்டனர். பின்னாளில் தெய்வ உறைவிடமாக இருந்த மரம் அழிக்கப்பட்டு , கட்டடங்கள் எழுப்பப்பட்டு  கோவில்கள் உருவாக்கப்பட்டன. மனிதர்களால் மரங்கள் தெய்வ நிலையை இழந்தன.

இயற்கை சக்திகள் பசுமையான மரங்களில் குடி கொண்டிருப்பதாக மனிதன் நம்பினான். அதுவே மரவழிபாடாக மலர்ந்தது. ஒவ்வொரு கோவிலுக்கும் தலமரங்கள் உண்டு. சிவபெருமானுக்கு ஆலமரமும் , மீனாட்சி அம்மனுக்கு கடம்ப மரமும் , விநாயகருக்கு அரசமரம் & வேப்பமரமும் , மாரியம்மனுக்கு வேப்பமரமும் , கண்ணகிக்கு வேங்கை மரமும் தலவிருட்சங்களாக உள்ளன.நாட்டுப்புறத் தெய்வங்களான சிறு தெய்வங்கள் ஏதேனும் ஒரு மரத்தினடியில் அமைந்திருப்பதையும் , மரத்தோடு இணைந்து அவை வழிபடப்படுவதையும் நாம் காணலாம். கடவுளோடு கைகோர்த்து நிற்கின்ற மரங்கள் மனிதனின் பார்வையிலிலிருந்து தப்பி வாழ்ந்து வருகின்றன.

மரங்களும் மன்னர்களும் .

சங்ககால மன்னர்கள் மரங்களை தங்கள் வாழ்க்கையோடு இணைத்துப் பார்த்தனர். வேப்பமரமும் அதன் பூக்களும் பாண்டிய மன்னர்களின் சின்னம். ' ஆர் ' என்கிற அத்திப்பூ சோழ மன்னர்களின் சின்னம். ' போந்தை ' என்கிற பனைமரம் சேரமன்னர்களின் சின்னம். அரசமரம் தொண்டை மண்டல மன்னர்களின் சின்னமாகத்  திகழ்ந்தது. தமிழக பேரரசர்கள் மற்றும் சிற்றரசர்களின் கோட்டைகளில் காவல் மரங்கள் என்ற பெயரில் பல  மரங்கள் வைக்கப்பட்டிருந்தன. காவல் மரம் ' கடிமரம் ' என அழைக்கப்பட்டது. கடிமரத்தை மாற்றான் வீழ்த்தினால் மன்னன் வீழ்ந்தான் என்பது பொருள்.

மௌரிய வம்சத்தைச் சேர்ந்த இந்திய அரசர் அசோகர்தான் மரங்களை நேசித்த மாமன்னர்எனச்சொல்லலாம்.சாலையோரம் மரங்களை நட்டு வைத்து பயணத்தை குளுமையாக்கியவர் இவரே ! இன்றும் நமது கிராம , நகரச் சாலைகளில் இருபுறமும் மரங்கள் இருப்பதற்குக் காரணம் அசோகர் . இன்றும் நூறுநாள் வேலைத்திட்டத்தின் மூலமாக சாலையோரம் மரம் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

மரங்களும் மனிதர்களும்.

ஒரு காகம் தன் வாழ்நாளில் எச்சங்கள் மூலமாக பல்லாயிரம் மரங்களை நடுவதாக ஆய்வு சொல்கிறது. மனிதர்களாகிய நாம் எத்தனை மரங்களை நட்டு வைத்துப் பராமரிக்கிறோம் ? எனக் கேள்வி கேட்டால் அதற்கான பதில் என்னவாக இருக்கும் என் நாம் சிந்தித்துப் பார்த்தல் வேண்டும். வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்ற முழக்கம் முன்பு.  ' ஆளுக்கொரு மரம் வளர்ப்போம் ' என்ற முழக்கம் இன்று  வழக்கமாகி வருகிறது.


நம் வீட்டைச் சுற்றி பத்து வகையான மரங்கள் இருக்க வேண்டும் என இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறினார். வீட்டிற்கு முன் ஒரு வேப்ப மரம் .பக்கத்தில் ஒரு முருங்கை மரம் , பப்பாளி மரம். குளிக்கும் தண்ணீர் போகுமிடத்தில் வாழை மரம். பாத்திரங்கள் கழுவும் இடத்தில் தென்னை மரம், ஒரு எலுமிச்சை மரம். அதன் நிழலில் ஒரு கறிவேப்பிலைச் செடியும், நெல்லிச் செடியும். வேலியில் நான்கு இடத்தில் சீதா மரம். இடம் இருத்தால் பலா மரம், ஒரு மாமரம். இப்படி இருந்தால் பசியுடன் ஒருவர்கூடத் தூங்க மாட்டார்கள் என நம்மாழ்வார் கூறுகிறார்.

பத்து மரங்கள் நட இயலாவிட்டாலும் ,இடமில்லாவிட்டாலும் ஒத்த மரமாவது நடலாம்.போதி மரம்தான் நடவேண்டும் என்றில்லை  . நமக்குப் போதிய மரங்கள் நட்டு வைத்தால் கூட போதும். மரங்களின் மகத்துவத்தை வளரும் சமுதாயமாக உள்ள மாணவர்களின் மனதில் விதைக்க வேண்டும்.  பிறந்தநாளின் போது மரம் நட ஊக்குவிக்க வேண்டும். இனிப்புகள் வழங்கி கொண்டாடும் மாணவர்களிடம் , ஒரு மரமோ , பூச்செடியோ நட்டு வைத்து அந்த மாணவனையே பள்ளியில் பராமரிக்கச் செய்து வரலாம் . மரம் வளர , மாணவன் வளர்வான். மாணவன் வளர , மரம் வளரும். பத்தாண்டுகள் கழித்து தான் பயின்ற பள்ளிக்கு வரும்போது மரமும் வளர்ந்திருக்கும். அந்த மாணவனும் கல்வியால் வாழ்வில் வளர்ந்திருப்பான்.

  அரசு விழாக்களின் மேன்மையை மாணவர்கள் உணர , அவ்விழாக்களை நினைவுபடுத்தும் விதமாக அந்த நாட்களில்  மரங்களை நட்டு வைத்துப் பராமரிக்கலாம். குடியரசு தினம் , சுதந்திர தினம் , சுற்றுச்சூழல் தினம் , காடுகள் தினம் , கர்மவீரர் காமராசர் பிறந்த தினம் ,அண்ணல்  அம்பேத்கர் பிறந்த தினம் ,  மகாத்மா காந்தியடிகள் பிறந்த தினம் என தலைவர்களின் பிறந்த நாட்களிலும் மரங்களை நட்டு வைத்து , மரங்களுக்கு தலைவர்களின் பெயர்களைச்சூட்டி , பசுமைப்படை , சுற்றுச்சூழல் மன்ற மாணவர்களிடம் மரங்களைப் பாராமரிக்கும் பொறுப்புகளை ஒப்படைக்கலாம்.  நெகிழிப்பைகளை நீக்கி , துணிப்பைகளைத் தூக்கி கடைகளுக்குச் செல்லலாம். பனைப்பொருட்களான ஓலைக்கொட்டான் , முறம் போன்றவற்றைப் பயன்படுத்தி , பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்கலாம்.

மரங்களும் பயன்களும் .

கடும் கோடை வெயிலில்தான் மரங்களின் மகத்துவத்தை நம் மனங்கள் அறியத் தொடங்குகின்றன. காடுகள் அழிக்கப்பட்டு , காங்க்ரீட் காடுகளாக மாறிவிட்ட மாநகரங்களில் தன் வாகனத்தை நிறுத்த எங்கேனும் ஒரு மரம் கிடைக்காதா என தேடுகிறோம். மரம் கிடைத்த மகிழ்ச்சியில் அங்கு சென்றால் , ஏற்கனவே அங்கே நூற்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் இளைப்பாறிக் கொண்டிருக்கின்றன குறுக்கும் நெடுக்குமாக. பல பள்ளிகளில் இன்றும் மரங்கள்தான் தன் கிளைக்கரங்களால் மாணவர்களுக்கு வகுப்பறையாக வாழ்ந்து வருகின்றன. வாடகையின்றி வசிக்கும் பறவையினங்கள் மரங்களின் பழங்களை உண்டு , நன்றிக்கடனாகத் தன் எச்சங்களின் மூலமாக மரங்களைப் பெருக்குகின்றன.

சாதாரண அளவுள்ள ஒரு மரம் தனது ஆயுட்காலத்தில் 32 லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள சேவையைச் செய்கின்றது. சுவிட்சர்லாந்து நாட்டில் ஆல்ப்ஸ் மலைப்பகுதிகளில் சேகரிக்கப்பட்ட தூய்மையான காற்றை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்கிறது ஒரு நிறுவனம். ஒரு லிட்டர் கொள்ளளவு உள்ள பாட்டிலில் அடைக்கப்பட்ட காற்றை 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் இலவசமாகக் கிடைத்தது. இன்று காசு கொடுத்து வாங்குகிறோம். இன்று காற்றையும் காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலை வந்து விட்டது. வரும் காலத்தில் நம்மிடம் பணம் நிறைய இருக்கும். ஆனால் தேவையான அளவிற்கு குடிநீர் , தூய்மையான   காற்று கிடைக்காது. நம் பிள்ளைகளுக்கு சொத்துக்களை விட்டுச் செல்வதை விட மரங்களை விட்டுச் செல்வோம். ஒரு மரம் வெட்டப்பட்டுக் கீழே விழும் போது , மனித இனத்தின் மகிழ்ச்சிச் சங்கிலி அறுபடத் தொடங்குகிறது.

நமது உறவுகளை அறிமுகம் செய்வதைப்போல நமது பிள்ளைகளுக்கு மரங்களை அறிமுகம் செய்து வைப்போம். வனங்களுக்கு அழைத்துச் சென்று மாணவரது மனங்களைப்  பசுமையாக்குவோம்.  மரம் நடுவோம் மனம் தொடுவோம். மண் கொடுத்த சீதனமான மரங்களை சேதாரமின்றிக் காப்போம். மரம் போல் வாழ்வோம் !

கட்டுரை.

மு.மகேந்திர பாபு ,
பட்டதாரி தமிழாசிரியர் & பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ,
அரசு மேல்நிலைப் பள்ளி ( ஆ.தி.ந.) இளமனூர் , மதுரை.
பேசி - 97861 41410.

Post a Comment

0 Comments