நன்று

 


நன்று


அய்யா  , உங்க மேல எனக்குக் கோபம் என்றான்  பத்தாம் வகுப்பு மாணவன் கண்ணன்.


ஏன்டா கண்ணா ? 


நீங்க சொன்ன பத்துக் கேள்வில எட்டுக் கேள்விக்கு பதில் எழுதியிருக்கேன்.வெறும் ரைட்டு மட்டுந்தான் போட்ருக்கிங்க ... அதும் ஒரு ரைட்டு . அடுத்த பக்கத்துக்குனு கேட்டாப் பிறகுதான் இன்னொரு ரைட்டு போடுறிங்க ...


சரிடா ...


ஆனா ... அவன் பத்துக் கேள்விக்கு ரெண்டுக்கு விடை எழுதியிருக்கான்.அவனுக்கு மட்டும் நன்றுனு போடுறிங்க. ஏன்யா இப்படி ? எனக்கும் நன்றுனு போடுங்க என்றான்.


சரிடா  ... கொண்டா ... நன்று  போட்டாச்சு போதுமா ? 


 ம் ... இத நீங்க நான் கேட்காமலே இல்ல போட்ருக்கனும்.


நீ எத்தன மார்க்கு ? 


எழுபது.


அவன் ? 


பெயிலுங்கையா . 


நீ நிறைய மார்க் எடுத்துருவடா.உம்மேல நம்பிக்கை இருக்கு. அவனும் பாஸானதான மகிழ்ச்சியா இருக்கும். பத்துக் கேள்விக்கு பதில் எழுதுனு சொன்னா அவன் முழிப்பான்.ரெண்டு ரெண்டா எழுதச் சொன்னா எழுதிக் கொண்டு வாரான் பாத்தியா ?  அவன ஊக்கப் படுத்தத் தான்டா நன்றுனு போடுறேன் . சரியா ? 


சரிங்கையா.


உனக்கும் போடுவேன். சரியா ?


சரிங்கையா. அடுத்த ரெண்டு கேள்வி எழுதிட்டு வந்திட்டாங்கையா.


அருமை. மிக நன்று. 


அவன் முகத்தில் இன்னும் கொஞ்சம் அதிகமான சந்தோசம்.


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments