மார்கழி மாத குளிர்

 


மார்கழி மாத குளிருக்கு கூதக்காய்வது என்பது மிகப்பெரும் சுகம். காப்பரிட்சை லீவுல கள எடுக்கப் போய் , அரப்பரிட்சை லீவுல அறுவடைக்கு வேல செஞ்ச பால்யம் மறக்க முடியாதது.


கம்மங்கருது , சோளக்கருது , கேப்பக்கருது , பாசிப்பயறு , தட்டைப்பயறு , உளுந்து  என விளைந்த எல்லாத்தையும் ரோட்லதான் போட்டுருப்பாங்க . 


மூனு வேளச்சாப்பாடு மாதிரி , மூனுதேரம்தான் பஸ்சும் வரும். அதிலயும் சில டிரைவர்க ஓரங்கட்டி வண்டிய ஓட்றானுகனு டயர்போற தடத்தில கருதுகளைப் போட்டு , ரெண்டு ஓரத்திலும் முண்டுக்கல்ல வச்சிருவாங்க கிராமத்தாளுக. 


தனியா களம்பிடிச்சு , டிராக்டர விட்டு கதிரடிக்கிற அளவுக்கு வக்கில்ல. வர்ற பஸ் டயர்ல பட்டு கருதுக எல்லாம் விழுந்திரும். அடிக்கடி போற டிராக்டர் டயரும், மண் லாரியும் கொஞ்சம் ஒத்தாச பண்ணும். 


அப்ப ராத்திரி நேரங்கள்ல ரோட்லயே படுத்து கருதுகளுக்கு காவல் இருப்போம். மாட்டுவண்டிய ரோட்டோரத்தில நிப்பாட்டி , சணல் சாக்க சுத்தி கட்டிவிட்டு , சக்கரத்துக்கு நடுவுல சாக்க விரிச்சு படுப்போம். 


ஆளுக யாரும் களத்தில கை வைக்கிறதில்ல. ரெண்டு பல்லு வெளிய திரிய சின்ன எரும போல சுத்தித் திரியக்கூடிய சில பன்னிக பண்ற தொல்ல தாங்க முடியாது . களத்தில ஒரு ஓரத்தில கருதுகள முண்டி , வாய வச்சுச்சுனா லபக்லபக்னு வரிச பிடிச்சு களத்தையே காலி பண்ணிரும். சப்சப்னு அது திங்கிற சத்தத்தைக்  கேட்டு இராத்திரில எந்திரிச்சு விரட்றதுதான் எங்க வேல.


டார்ச் லைட்ட தல மாட்ல வச்சிக்கிட்டு மார்கழி குளிர்ல தூங்கி விழுறதே ஒரு சுகம்தான்.

நாலுமணிக்கு எந்திரிச்சு கம்மஞ்சக்கை , சோளச்சக்கைகளைப் போட்டு   தீமூட்டி குளிருக்கு இதமா பக்கத்தில உக்காந்து சக்கைகள்ல ஒட்டியிருக்கிற கம்பு பொரிஞ்சு வரும்போது வர்ற மணமும் , அப்படியே சூட்டோட அத சுவைக்கிறதும் அடடா ! அடடா ! என்ன சுகம் ? என்ன சுகம் ? 


சன்னலை எல்லாம் பூட்டி வச்சிட்டு , ஏழுமணி வர தூங்கிக்கிடந்தா எப்படி அனுபவிக்கிறதாம் மார்கழிக்குளிர ?


மு. மகேந்திர பாபு ,

27 - 12 - 17 .

Post a Comment

0 Comments