அப்பா

 


அப்பா

--------


 விளம்பரத்தில் வரும் பற்பசை எதையும் பயன்படுத்துவதில்லை அப்பா. ஆனாலும் பற்கள் பால் போல் வெண்மையாக இருக்கும். வேப்பங் குச்சிதான் அப்பாவின் டூ இன் ஒன் , பிரஷ் , பேஸ்ட். பற்சொத்தை இன்று வரை இல்லை.அறுபதைத் தாண்டிய அழகான உடற்கட்டு.


தினமும் கொஞ்சம் வேப்பங் கொழுந்தினை வாயில் போட்டு மெல்லுவார்.கலர் பாட்டிலைத் திறக்க சாவி தேவையில்லை.தன் பற்களால் கடித்தே திறந்து விடுவார்.


ஊர்த் திருவிழாவில் சாமி பார்க்க  தன் தோளின் மேல் என்னை உட்கார வைப்பார்.அதிக நேரம் என்றால் கழுத்தில் உட்கார வைத்து , தோளின் இருபுறமும் காலைத் தொங்கவிட்டு , முடியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்வேன்.காலால் எக்கி , சாமி தெரியுதா என அப்பா கேட்கும் போது , சாமியை விட அப்பாவே உயர்ந்தவராய்த் தெரிவார்.


அப்பாவின் நடைக்கு ஈடு கொடுத்து நடக்க முடியாது.அவரைப் பின் தொடர லொக்கோட்டமாகத்தான் ஓடனும்.


அவ்வப் போது வரும் கடுதாசிகளை அப்பாதான் வாசித்துக் காட்டி , பதிலும் எழுதிப் போடுவார்.


வெயில் , மழை இரண்டிற்கும் கொடை பிடிக்கும் இக்காலத்தில் தலைப்பாகையால் மட்டுமே இரண்டையும் சமப்படுத்திச் செல்வார்.


கிணத்துத் தண்ணி , அடிகுழாய்த் தண்ணி , கம்மாய்த் தண்ணி எந்தத் தண்ணி குடித்தாலும் அப்பாவிடம் சளி எனும் சனி கிட்ட வந்ததில்லை.


வீட்டுக்கு வரும் யாருக்கும் டீ , காபி போடச் சொல்ல மாட்டார்.தண்ணி கலக்காத பால் சுடச்சுடத் தரச் சொல்வார் அம்மாவிடம்.என்றேனும் வந்து டம்ளர் , சொம்பு கொண்டு வந்து பிள்ளக்கி முடியல , பால் கொடுங்க எனக் கேட்பவர்களிடம் காசு வாங்கவே மாட்டார்.


வருசத்துக்கொரு முறை இருக்கன் குடி மாரியம்மன் கோவிலுக்கு பிறர் கிடா வெட்ட , இந்நாள் வரை சாமிகளின் பெயர் சொல்லி உயிர்ப் பலி கொடுத்ததில்லை அப்பா.


புதிதாய்த் தொடங்கும் செயல்களுக்கு அப்பாவிடம்தான் யோசனை கேட்டுச் செல்வார்கள்.செடிகளுக்கு என்ன மருந்தடிக்கலாம் என்பது உள்பட.


ஒவ்வொருவருக்கும் மனதளவில் ஒரு வழிகாட்டி இருப்பார்.எனது முதல் மற்றும் வாழ்நாள் கதாநாயகன் வழிகாட்டி என் அப்பாவைத் தவிர வேறு யாராக இருக்க முடியும் என் மனதில்.?


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments