மதுரை - நகைச்சுவை மன்றம் - ஆண்டு விழா - வாழ்த்துக் கவிதை - மு.மகேந்திர பாபு.
மதுரை மாநகரின்
தூய்மைத் தூதரே !
நகைச்சுவை மன்றத்தின்
நடமாடும் ஃபாதரே !
கால் நூற்றாண்டைக் கடந்து ,
கம்பீரமாய் நடைபோடுகிறது
தங்களால் மன்றம் !
பல புதியவர்களை
படைக்கிறது என்றும் !
மதுரை என்றாலே மீனாட்சிதான்.
மருத்துவமனை என்றாலே
மீனாட்சி மிஷன்தான் .
இது மதுரையின் அடையாளம் !
தினம் மக்களின் மனங்களை ஆளும் !
மக்களின் மருத்துவராய்
ஐயா சேதுராமன்.
உடையோடு இவரது
உள்ளமும் வெள்ளை.
நகைச் சுவை மன்றத்தைக்
காக்கும் எழுபதைக் கடந்த பிள்ளை.
நிறுவனரும் , தலைவரும்
மன்றத்தின் இருகண்கள்.
கண்களை நம் கண்கள் பார்க்க
கவலைகள் தீரும்.
சிறுவர் முதல் பெரியவர்
வரலாம் யாரும் !
மார்கழி மாதத்துத்
குளிரைத் தருகின்ற அரங்கம்.
மனதிலுள்ள கவலைகள்
இங்கே மறந்தே உறங்கும்.
நகைச்சுவைச் சரவெடிகளால்
கரவொலி எழுப்பி
விரல்களும் கிறங்கும்.
ஞாயிறு என்றாலே
பெரும் சிரிப்புதான்.
சிரிக்க வைப்பதோடு
சிந்திக்க வைப்பதும்
மன்றத்தின் பொறுப்புதான்.
மன்றம்
இருபத்தியேழு வயதுடைய
இளைஞன்.
எட்டுத் திக்கும் புகழ்பரப்பி
நிலைத்து நிற்கும்
நகைச்சுவைக் கலைஞன்.
பரபரப்பாய் ஓடும் உலகினில்
சுறுசுறுப்பாய் இருக்கவும் ,
விறுவிறுப்பாய் இயங்கவும்
உள்ளத்திற்கு உற்சாகம் தரும்
உன்னத மேடை இது.
பலரை உருவாக்கி ,
வாழ்க்கையில் வாகை சூடச்செய்த உயர்ந்த மேடை இது.
இந்த அரங்கின்
மேடைக்கு வந்து ,
முன்னால் நின்றவர்கள் இன்று
வாழ்வின் முன்னுக்கு வந்துள்ளார்கள்.
சின்னத்திரையிலும் ,
வெள்ளித் திரையிலும்
சிரிப்பைத் தந்துள்ளார்கள்.
நமது மன்றம் -
நாட்டிற்கே முன்னுதாரணமான
கலைக்கூடம் !
இங்கு நகைச்சுவை மட்டுமே
நடத்தப்படும் பாடம் !
டிசம்பர் என்றாலே
இயற்கைச் சீற்றம்தான்.
மதுரையில்தான் கடல் இல்லையே என்று நினைத்தால்
நமது மன்றக்கடலில்
சிரிப்பலைகள் வாரிச்சுருட்டி ,
மகிழ்ச்சி நிவாரணங்களைத் தருகின்றன .
இடை நில்லாப் பேருந்தென
தடையின்றி ஓடுகின்றது
நமது மன்றப் பேருந்து.
உரிமையாளராக மருத்துவரும் ,
ஓட்டுநராக நகைச்சுவை ஞானியும்
மன்றத்துப் பயணிகளை
மகிழ்வாய் அழைத்துச் செல்ல ,
டிசம்பரில்
திரை நட்சத்திரங்கள்
சுற்றுலா வழிகாட்டிகளாக
நம்மைச் சொக்க வைக்கிறார்கள்.
இன்று மன்றத்திற்குள்
வந்தவர்களை
சொர்க்க புரிக்குள்
அழைத்துச் செல்கிறார்
நமது பிக்பாஸ் வையாபுரி.
வையம் பூரிக்கிறது...
ஐயா வையாபுரியால் !
தேனி நகரம் தந்த
நகைச்சுவைத் தேனி.
பகவான் இராமகிருஷ்ணர்
அன்று ஆன்மீகத்திற்கு !
ஆனந்தியின் இந்த
இராமகிருஷ்ணரோ நகைச்சுவைக்கு !
அரசுப் பள்ளியில்
படிப்பைத் தொடங்கி ,
சின்ன மருது பெரிய மருது என
சின்னத்திரையில் நுழைந்து ,
மால்குடி டேஸில் மயங்கி ,
இளைய ராகத்தில் இதயம் கொடுத்து ,
துள்ளாத மனமும் துள்ளுமென
வெள்ளித் திரையில் தோன்றி
நம்மனங்களைத் துள்ள வைத்தவர்.
திரைத்துறையில்
கால் நூற்றாண்டை நெருங்குபவர்.
கால் நூற்றாண்டைக் கண்ட
நமது மன்றத்தில் இன்று கால்வைத்துள்ளார்.
சிறப்பு விருந்தினரால்
சிறப்பு பெறுகிறது
நமது மன்றம்.
அரங்கம் அதிர
கரவொலி எழுப்பி
மன்றம் வரவேற்கிறது .
நண்பர்களே !
ஆண்டு தோறும்
அகம் மகிழ வாங்க மன்றத்திற்கு !
குன்றிருக்கும்
இடமெல்லாம் குமரன் இருப்பான்.
நம் மன்றம் இருக்கும்
இடமெல்லாம் குதூகலம் இருக்கும் !
மன்றம் சதமடித்து ,
இதம் கொடுத்து
சரித்திரத்தில் சிரித்திட
சந்தா செலுத்திட
வேண்டுகிறோம் !
வரவேற்று மகிழும் ,
மு.மகேந்திர பாபு , ஆசிரியர்.
மன்ற உறுப்பினர்.
0 Comments