மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர் பிறந்த தினம் - 07 - 02 -2022 / PAVANAR BIRTH DAY - TAMIL ARIGNAR PAVANAR

 

மொழிஞாயிறு தேவநேயபாவாணர் 

பிறந்த தினம் 

                                          07 • 02 • 2022

         

                                    

                    பாலும் தெளிதேனும் பாகும் 

                    பருப்புமிவை நாலும் 

                    கலந்துனக்கு நான் தருவேன் 

                    கோலம் செய்

                    துங்கக் கரிமுகத்து தூமணியே 

                    நீ எனக்கு 

                     சங்கத் தமிழ் மூன்றும் தா....

                            

--  மொழி ஞாயிறு -- தேவநேயப் பாவாணர் , தமிழினத்தின் தவப்பயனாக கிடைக்கப்பெற்ற அரிய பொக்கிஷம் , தமிழை வாழ்விக்கவே  வாழ்ந்த பெரிய கலைத் தத்துவம் , செம்மொழிச் செல்வம் , சொல்லாய்வின் சிகரம் , பன்மொழி வித்தகர் , மொழியியல் சிந்தனையாளர், உலக த் தமிழ் கழகம் கண்டவர், மொழி ஞாயிறு என தமிழுக்கு கரம் நீட்டி , அதன் தரம் உயர்த்த பாடுபட்ட மகா வள்ளல் தேவநேயப் பாவாணர். இவர் 1902 - ஆம் ஆண்டு பிப்ரவரி 7 - ம் நாள் ஞானமுத்து - பரிபூரணம் அம்மையாரின் மகனாக திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிறந்தார்.இவரது தந்தை கணக்காயர் மற்றும் ஆசிரியராக பணியாற்றியவர். பாவாணரது இயற்பெயர் 'தேவநேசன் ' என்பதாகும்.இளவயதிலேயே பெர்றோரை இழந்ததால், தம் தமக்கையால் வளர்க்கப்பட்டார். பின்பு கிறிஸ்துவ பாதிரியார் ' யங் துரை ' கண்காணிப்பில் கல்லி பயின்றார்.எனவே ஆங்கிலத்திலும் ஆர்வம் கொண்டு விளங்கினார். இயல்பிலேயே கவி பாடும் திறன்   பெற்றதால் ' கவி வாணன் ' என்ற பட்டமும் பெற்றார்.தமிழ் மொழியின் அளவில்லா நேசம் கொண்டு , தனித் தமிழ் ஈடுபாட்டின் காரணமாகவே தன் பெயரை ' தேவநேயப் பாவாணர் 'என மாற்றி சிறப்பாக்கினார்.அது மட்டுமல்லாமல் தாம் பணியாற்றும் மேடைதோறும்  மொழிப் பற்று மிக்க மாணவர்களை இனங்கண்டு ஒன்றும் திரட்டி , அவர்களது திறமையை வளர்த்து மொழிகாக்கும் சொல் வீரர்களாக " பாவாணர் பரம்பரை "என அடைமொழித் தந்து சிறப்பிக்கும் அளவிற்கு அருந் தமிழ் பணியாற்றியவர் பாவாணர். 

மேலும் தமிழை எளிமைப்படுத்திய சான்றோர் வழி தொடர்ந்து தனித் தமிழ் இயக்கத்தில் தானும் உறுதியாக, உண்மையாக, ஒரு உறுப்பினராக அணி செய்தார்.அவ்யக்கத்தைக் காத்தவர்கள் பரிதிமாற் கலைஞர் ,  மறைமலையடிகள், உ.வே.சா, பி.கி.சீனிவாச ஐயங்கார், இராமச்சந்திர தீட்சதர் , வள்ளலார் ஆகியவர்கள் தனித் தமிழ் இயக்கம் வளர்ப்பதற்காக பாடுபட்ட சான்றோர்களாவர்.கடின சொற்களுடன் , வட சொற்களும் கலந்து விரவிக் கிடந்த மணிப்பிரவாள நடையெனக் காணப்பட்ட கடினப் பாதையை உடைத்து தமிழுக்கு மறுமலர்ச்சி காலம் தந்த, தனித்தமிழ் இயக்கம், மொழிகளில் காணப்பட்ட கடினமான கட்டுகளை அகற்றி எளிமைப்படுத்தியது தனித்தமிழ் இயக்கம். சோழவந்தபுரத்தில் ஒரு கிறிஸ்தவ மெஷினரி பள்ளியில்   தொடங்கிய இவரது கல்விப் பயணம் ஆம்பூரில் நடுநிலைக் கல்வியையும் , சி.எம்.எஸ் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும் பயின்றார்.பின்பு படிப்பு முடித்தவுடன் 1919 - ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சியினை முடித்தார்.தமது 17 - ஆம் அகவையில் ஆசிரியராக அணிசெய்தார்.

                 1924 - ஆம் ஆண்டு மதுரை தமிழ்ச் சங்கம் நடத்தியப் பண்டிதர் தேர்வில் வெற்றி பெற்றார்.இப்பண்டிதர் தேர்வில் வெற்றி பெற்றவர் பாவாணர் ஒருவரே என வரலாறு வாழ்த்துகிறது, இது அவரது மொழி ஆர்வத்தைக் காட்டும் கண்ணாடியாக இன்றும் பிரதிபலிக்கிறது. ஆங்கில ஆக்கிரமிப்பில் நாடு விடுதலை வேண்டி கிளர்ந்தெழுந்த போது , தம் மொழியின் தொன்மையை களங்கப்படுத்து ம் விதமாக, ஆக்கிரமித்து விரவிக் கிடந்த சமஸ்கிருத சொற்களில் இருந்து விடுதலைப் பெறுவதையே தமிழின் உயர்வுக்கு பாதையென கருதி செயல்பட்டார். மேலும் தமிழின் சிறப்பை  உணர்த்தும் விதமாக "அனைத்து மொழிகளின் தாய் மொழி தமிழே " என உணர்த்தும் பல கட்டுரைகளாக, நூல்களாக தொடர்ந்து மக்கள் மனதில் பதியும் வகையில் எழுதினார். வடமொழியிலிருந்து பிறந்த மொழி தமிழ் என்னும்  கருத்தைக்   கடுமையாக எதிர்த்தார் .மொழி ஆராய்ச்சியில் பாவாணரின் பதிவானது இன்றளவும் எவராலும் செய்துவிட முடியாத சாதனையாக சரித்திரம் படைத்தது .

1925 - ஆம் ஆண்டு சிறுவர்களுக்கான பாடல் திரட்டு என்ற தமது முதல் நூலை வெளியிட்டார்.இதனைத் தொடர்ந்து 40 - க்கும் மேற்பட்ட நூல்களையும், 150 - க்கும் அதிகமான ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தமிழ் மட்டுமல்லாது ,ஆங்கிலம் , பிரெஞ்ச், லத்தீன் ,கிரேக்கம் , தெலுங்கு , மலையாளம், கன்னடம் , இந்தி போன்ற உள்நாட்டு , வெளிநாட்டு மொழிகள் உட்பட 17 - மொழிகளின் இலக்கணங்களை அறிந்து தெளிர்தார். 1974 - ஆம் ஆண்டு தமிழக அரசின் " செந்தமிழ் சொற்பிறப்பியல் " அகரமுதலி திட்டத்தின் முதல் இயக்குநராகப் பொறுப்பேற்றார்.

தமிழ் மொழியே திராவிட மொழி களுக்கும், ஆரிய மொழிக்கும் 'தாய் மொழி'என்பது இவரது கோட்பாடாகும் .இவற்றை வெறும் வார்த்தைகளில் பதிவாக்கவில்லை , முதன் முதலில் மனிதர்கள் தோன்றிய இடம் குமரிக் கண்டம் , மனிதன் முதலில் பேசிய மொழி 'தமிழ் ' என்பதற்கான சான்றுகளைத்   தேடி எடுத்து அளித்ததே, பாவாணரின் ஆராய்ச்சியாகிறது. இதுவே மற்ற ஆய்வாளர்களிடம் இருந்தும் வேறுபடுத்திக் காட்டுகிறது. செவ்வியல் தன்மைகளைக் கொண்ட தமிழ்  இன்றுவரை தனித்து நிற்பதற்கு காரணங்களை ஆராய்ச்சி செய்த பாவாணர் , பிற மொழிச் சொற்களைக் கையாளவும் வகைக் கண்டார். தமிழ் மொழிக்கு நீங்கள்  சேவைசெய்ய வேண்டின் தமிழில் பேசுங்கள் என்பதாகும்.

தாம் வறுமையால் துயரடைந்த போதும் தமது மொழி ஆராய்ச்சியைக் கைவிடவில்லை. தமது வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழி வளர்ச்சிக்காக அயராது பாடுபட்ட பாவாணர் அவர்களின் பெருமை என்றும் போற்றத் தக்கதே! தலைசிறந்த இவரது பணியை, தலைவணங்கி பெருமிதம் கொள்வோம்.!!


" தேவையின்றி பிறமொழிச் சொற்களைத் 

தமிழில் கலப்பதை வேண்டுமென்றே ஆதரிப்பதும்,

தமிழுக்குரிய சிறந்த வரி

வடிவத்தைச் சிதைத்து இழி 

வழக்குகளைத் தமிழ் எழுத்து

மொழியில் புகுத்துவதும் 

தமிழ்ப் பகைவர் செயலாகும் '.

                -- செந்தமிழ் வேந்தர் - பாவாணர் --

Post a Comment

0 Comments