வீடும் மாடும் - விற்ற மாடு வீடு வந்த கதை / VEEDUM MAADUM - MAATTUP PONGAL

 


          வீடும் மாடும் - மாட்டுப் பொங்கல் 

        விற்ற மாடு வீடு வந்த கதை 



                சனி , ஞாயிறு வந்தாலே சந்தோசம்தான். பள்ளிக்குப் போவது போலதான் பயணம். கையில் ஒரு மஞ்சப்பை , தண்ணிக்கேன் , ஏதேனும்  ஒரு கதப்புத்தகம். ஒன்பது மணிக்கெல்லாம் கட்டுத் தரையிலிருந்து மாடுகள அவுத்துருவோம். எங்க ஊர்க்குத் தெக்கே உள்ள சின்னையாரம் வரை மாடு மேய்க்கப் போவோம்.

              ஊரிலிருந்து ரெண்டு , மூனு கிலோ மீட்டர் தூரம் வரை இருக்கும். ஒரே மேய்ச்சல்தான். அதாவது காலையில பத்திட்டுப்போனா  திரும்ப வீடு வந்து சேர மணி நாலர , அஞ்சாகிரும். அங்கனுக்குள்ள இருக்குற கம்மாயில மாட்டுக்குத் தண்ணிகாட்டுவோம். திரும்ப வரும்போது எங்கூர்க்கம்மாயில தண்ணிகாட்டிட்டு , வீட்டுக்கு வந்தா அப்றம்  பம்பரம் , கிட்டிக்குச்சி , தவிடுனு ஒரே கும்மரச்சம்தான்.


                               ஓடையின் இருபக்கமும் பச்சைப் பசேல் என விரிஞ்சிருக்கும் புஞ்சைகள். சோளம் , கம்பு , பாசி , எள்ளு , கேப்ப , குதிரவாலி , சீனியார என அவ்ளோ குளுமையா இருக்கும். ஆடு , மாடுகள உள்ள விடாமல் கரையில கொண்டு போய் தரிசு நிலத்தில் மேயவிட வேண்டும். பெரும்பாலும் பழக்கப்பட்ட பாதை என்பதால் மாடுக அதுக பாட்டுக்குப் போகும். 

                      டேய் . இங்க நிறைய எலந்தப் பழம் இருக்கு டா ! என லாவகமாகப் பழம் புடுங்கித் தின்னும் சிலர். மாப்ள , கம்மங்கருது நல்ல விளஞ்சிருக்குது.  ரெண்டப்புடுங்கித் சுட்டுத்தின்பமா ? அப்படியே கேப்பக் கருதும் பாரு , கைய விரிச்சு வச்சிருப்பதைப்போல வா வானு நம்மளக் கூப்புடுது என அதையும் புடுங்கி , சில்லாடைகளையும் , பூமுள்ளையும் போட்டு வாட்டித் தின்பதில் உள்ள ருசி . அடடா ! என்ன ருசி.

                     பொங்கல்னாலே வீட்டுக்கு வெள்ளையடிச்சு கொஞ்சம் சுத்தமாக இருக்கும். சம்சாரி வீட்ல எப்படியும் ஆடு , மாடு , கோழி , நாய் , பூனைனு ஒரு பட்டாளமே இருக்கும். மாட்டுப்பொங்கலன்னிக்கு குடும்பமே கம்மாயிலதான் கும்மியடிக்கும். நீ கிடேரியக் குளிப்பாட்டு. நீ கன்னுக்குட்டிய குளிப்பாட்டு. நீ  காளையக் குளிப்பாட்டு என

 என அவ்ளோ சந்தோசம். பீர்க்க குடுக்கையை வச்சு நல்லா தேச்சு , பொட்டு வச்சு அடடா ! நம்ம மாடுகதானானு நினைக்க வைக்கும்.

                      பொங்கல் வச்சு , அதை எல்லா மாடுகளுக்கும் இலையில் வச்சு அதுக பக்கத்தில இருந்து அத பார்ப்பதே ஒரு சந்தோசம். சில மாடுக தாயாப் புள்ளயா நம்மகிட்ட ஒட்டிரும்.

                  என்னல வெள்ளையா பாத்துக்கிட்டே இருக்கே என அதன் அருகில் சென்று உட்கார்ந்தால் முட்டி போட்டு படுக்கும். சம்மணம் போட்டு நாம உட்கார்ந்தா தலைய மடியில சாய்க்கும். தாடைய வருட வருட அதுக்கு சொகமா இருக்கும். கண்களில் இருந்து கண்ணீர் வரும். எந்திரிக்க எத்தனித்தார் தலையை வச்சு அமுக்கி எந்திரிக்க விடாமல் செய்யும்.


                 நல்லாருக்குல உன் கத. ஓன் பக்கத்தில உட்காந்து சொரிஞ்சு விடுறதுதான் என் வேலையா ? என எந்திருச்சா அதன் பார்வையில் ஓர் ஏக்கம் இருக்கும்.

                      ஒரு தடவ , அப்பா ஒரு மாட்டை விலை பேசி வித்துட்டார். மாட்டைப் பிரிய மனமில்லை என்றாலும் அவ்வப்போது உள்ள செலவிற்கு வளக்கும் ஆடு , மாடுகள விக்கத்தானே வேண்டும் . 

                   டேய் , ' கண்ணா , வால்ல ரெண்டு முடிய பிடுங்கி கோழி மடத்துல போடுடா ' என்பார் அப்பா. மாட்டக் கொடுத்தாச்சு. நைட் 12 மணி இருக்கும்.வீட்டுக் கதவ முட்டுற மாதிரி சத்தம். என்னடானு திறந்து பாத்தா , காலைல வித்த மாடு வீடு வந்து சேர்ந்து அம்மானு கத்துது. எங்களுக்கு கண்ணீர் வந்துருச்சு.அது கழுத்தக் கட்டிப்பிடிச்சு என்னடா வெள்ளப் பயலே வீட்டுக்கு வந்துட்டயா என கேட்க மாட்டுக் கண்ணுல இருந்து கண்ணீர் வடியுது.

                      விடிஞ்சாப் பிறகு மாட்ட வாங்குனவரு வந்து , அண்ணாச்சி மாட்டக் காங்கல.இங்க ஏதும் வந்துச்சா ன்னாரு. 

      '  மாடு இராத்திரியே வந்திருச்சு. இந்தாரும் நீரு கொடுத்த பணத்தோட நூறு ரூவா சேத்து வச்சிக்கோரும். மாடு வீட்லயே இருக்கட்டும். போயிட்டு வாரும்' என்றார் அப்பா. 

         அண்ணாச்சி , மாடு ...

              ' இப்ப கொடுக்கறாப்ல இல்ல. சடச்சுக்கிராதிரும். அப்றம் பாப்போம் ' என்றார் அப்பா. அவரும் வருத்தத்தோட கிளம்பிப்போனார். 

       யோவ் , மோரு குடிச்சிட்டுப் போரும். நல்ல வெயிலுல வந்திருக்கீரு.

         சரிங்க அண்ணாச்சி.

மருத நிலத்தில் மாடுகள் தொப்புள் கொடி உறவானவை. மாடுகள் இன்றி மக்கள் இல்லை. பாலும் , தயிரும் , மோரும் , நெய்யும் தந்து சம்சாரியை பசுக்கள் சந்தோசப்படுத்துகின்றன. உழவுத்தொழிலுக்கு காளைகள் தோள் கொடுக்கின்றன. கோயில் இல்லாத ஊர் எப்படியோ அப்படித்தான் மாடு இல்லாத வீடும் கிராமத்தில்.


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments