பத்தாம் வகுப்பு - தமிழ்
முன்னுரிமைப் பாடம்
இயல் - 6 , கவிதைப்பேழை
கம்பராமாயணம்
பாலகாண்டம் - ஆற்றுப்படலம் , நாட்டுப்படலம் .
*************** ************** ***********
வணக்கம் அன்பு நண்பர்களே ! இன்று நாம் பார்க்க உள்ள பாடம் கலை , அழகியல் , புதுமைகள் என்னும் பெருந்தலைப்பின் கீழ் அமைந்துள்ள ' கம்பராமாயணம் ' ஆகும்.
முதலில் பாடலிற்கான பொருளை நமது பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் காட்சிப் பதிவு விளக்கத்தில் காண்போம்.
பாடப்பகுதியை எழுத்து வடிவத்தில் காண்போமா ?
நுழையும்முன்
உள்ளதை உணர்ந்தபடி கூறுவது கவிதை. கவிஞனின் உலகம் இட
எல்லை அற்றது; கால எல்லை அற்றது; கவிஞனின் சிந்தைக்குள் உருவாகும் காட்சியைச் சொல்லைக்கொண்டு எழுப்புகிறான். அவன் கண்ட காட்சிகள் அதற்குத் துணைபுரிகின்றன; கேட்ட ஓசைகள் துணைபுரிகின்றன; விழுமியங்கள் துணைபுரிகின்றன; ஒப்புமைகள் துணைபுரிகின்றன; கலையின் உச்சம் பெறுவதுதான் அவன்
எல்லையாகிறது; கம்பன் அப்படிப்பட்ட கவிஞன். அதனால்தான் 'கம்பன்
இசைத்த கவியெல்லாம் நான்' என்று பாரதி பெருமைப்படுகிறார்.
பாலகாண்டம் - ஆற்றுப்படலம்
(ஆறு இயற்கையின் தோற்றமாக இல்லாமல் ஓர் ஓவியமாக விரிகிறது. அதை உயிரெனக் காணும் அந்த அழகுணர்ச்சி கவிதையாகி ஓடி நெஞ்சில் நிறைகிறது.)
தாதுகு சோலைதோறுஞ் சண்பகக் காடுதோறும்
போதவிழ் பொய்கைதோறும் புது மணற்றடங்கடோறும்
மாதவி வேலிப்பூக வனம்தொறும் வயல்கடோறு
மோதிய வுடம்புதோறு முயிரென வுலாயதன்றே. (31)
பாடலின் பொருள்
மகரந்தம் சிந்துகின்ற சோலைகள், மரம் செறிந்த செண்பகக் காடுகள், அரும்புகள் அவிழ்ந்து மலரும் பொய்கைகள், புதுமணல் தடாகங்கள்,
குருக்கத்தி, கொடி வேலியுடைய கமுகந்தோட்டங்கள், நெல் வயல்கள் இவை அனைத்திலும் பரவிப் பாய்கிறது சரயு ஆறு. அது, ஓர் உயிர் பல உடல்களில்
ஊடுருவி உலாவுவது போல் பல இடங்களில் பாய்கிறது.
பாலகாண்டம் - நாட்டுப்படலம்
(இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன்கவி
காட்டுகிறது.)
தண்டலை மயில்களாட தாமரை விளக்கந் தாங்க,
கொண்டல்கள் முழவினேங்க குவளைகண் விழித்து நோக்க,
தெண்டிரை யெழினி காட்ட தேம்பிழி மகரயாழின்
வண்டுகளினிதுபாட மருதம் வீற்றிருக்கும்மாதோ, * (35)
பாடலின் பொருள்
குளிர்ந்த சோலைகளில் மயில்கள் அழகுற ஆட, விரிதாமரை மலர்கள் விளக்குகள் ஏற்றியது போல் தோன்ற, சூழும் மேகங்கள் மத்தள ஒலியாய் எழ, மலரும் குவளை மலர்கள் கண்கள் விழித்துப் பார்ப்பதுபோல் காண, நீர் நிலைகள் எழுப்பும் அலைகள் திரைச்சீலைகளாய் விரிய, யாழின் தேன் ஒத்த இசைபோல் வண்டுகள் ரீங்காரம் பாட மருதம் வீற்றிருக்கிறது.
***************** ************** **********
வாழ்த்துகளுடன் ,
' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு
,தமிழாசிரியர் , மதுரை - 97861 41410
**************** **************** *********
1 Comments
Veritable
ReplyDelete