வகுப்பு - 10 , தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
2021 - 2022
செயல்பாடு - 5
பயன்பாட்டு இலக்கணம் - எச்சம்
( வினாக்களும் விடைகளும்
************ ************* **************
வணக்கம் நண்பர்களே ! செப்டம்பர் 1 முதல் நாம் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தில் உள்ள செயல்பாடுகளை மாணவர்களுக்கு வழங்க உள்ளோம்.
இங்கே ஐந்தாவது செயல்பாடாக உள்ள பயன்பாட்டு இலக்கணம் - எச்சம் முழுமையும் வழங்கப் பட்டுள்ளது. பயிற்சிக் கட்டகத்தில் உள்ள செயல்பாடும் , மதிப்பீட்டுச் செயல்பாட்டின் வினாக்களுக்கு விடையும் விரிவாக வழங்கப் பட்டுள்ளது. நன்றி.
5. பயன்பாட்டு இலக்கணம் - எச்சம்
கற்றல் விளைவு :
மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து அவற்றைத் தம் மொழியில் எழுதும்போது பயன்படுத்துதல்.
கற்பித்தல் செயல்பாடு :
அறிமுகம்:
எச்சம் என்றால் என்ன என்பதைக் காண்பதற்கு முன்பாக, வினைமுற்று என்றால் என்ன என்பதை அறிவோம். பொருள் முடிவு பெற்றுவரும் வினைச்சொல், வினைமுற்று எனப்படும்.
(எ.கா.) எழுதினான்
இவ்வினைமுற்று முழுமையான பொருளைத் தருகிறது.
எச்சம்
முற்றுப்பெறாத வினைச்சொல் எச்சம் ஆகும். பொருள் முடிவு பெறாத வினைச்சொல், பெயரையோ வினையையோ கொண்டு முடியுமானால் அது எச்சவினை எனப்படும்.
(எ.கா.) 'படித்த'
படித்த என்னும் இவ்வினையானது. யார், எப்போது, எதை என்பன போன்ற வினாக்களுக்குவிடையின்றி அமைந்துள்ளது.இவ்வாறுமுற்றுப்பெறாமல் அமைந்துள்ள வினை, எச்சவினை எனப்படும். இது பெயரெச்சம், வினையெச்சம் என இரண்டு வகைப்படும்.
பெயரெச்சம்
பெயரைக் கொண்டு முடியும் எச்சம், பெயரெச்சம் எனப்படும்.
(எ.கா.) படித்த பள்ளி,
படித்த என்னும் எச்சம், பள்ளி என்னும் பெயரைக் கொண்டு முடிவதால் இது
பெயரெச்சம்.
பெயரெச்சம் மூன்று காலத்தையும் காட்டும்.
(எ.கா.)
பாடிய பாடல் - இறந்தகாலப் பெயரெச்சம்
பாடுகின்ற பாடல் - நிகழ்காலப் பெயரெச்சம்
பாடும் பாடல் - எதிர்காலப் பெயரெச்சம்.
1. தெரிநிலைப் பெயரெச்சம்
செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் பெயரெச்சம், தெரிநிலைப்பெயரெச்சம் எனப்படும்.
(எ.கா.) எழுதியகடிதம்
இத்தொடரில் எழுதிய என்னும் சொல் எழுதுதல் என்னும் செயலையும், இறந்த
காலத்தையும் தெளிவாகக் காட்டுகிறது.
2. குறிப்புப்பெயரெச்சம்
செயலையோ காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும்
குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் எனப்படும்.
(எ.கா.) சிறியகடிதம்
இத்தொடரில் உள்ள சிறிய என்னும் சொல் செயலையோ, காலத்தையோ
காட்டவில்லை. சிறிய என்னும் பண்பினை மட்டும் காட்டுகிறது.
வினையெச்சம்
வினையைக் கொண்டு முடியும் எச்சம், வினையெச்சம் எனப்படும்.
(எ.கா.) படித்து முடித்தான்.
எழுதி மகிழ்ந்தான்.
1. தெரிநிலை வினையெச்சம்
செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத்தெரியுமாறுகாட்டும் வினையெச்சம், தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.
(எ.கா) எழுதி வந்தான்.
இத்தொடரில் உள்ள எழுதி என்னும் சொல் எழுதுதல் என்னும் செயலையும்
இறந்த காலத்தையும் தெளிவாகக் காட்டுகிறது.
2. குறிப்பு வினையெச்சம்
காலத்தை வெளிப்படையாகக்காட்டாமல் பண்பினைமட்டும் குறிப்பால் உணர்த்தும்
வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் எனப்படும்.
(எ.கா.)மெல்ல வந்தான்.
இத்தொடரில் உள்ள மெல்ல என்னும் சொல், காலத்தை வெளிப்படையாகக்
காட்டவில்லை. மெதுவாக என்னும் பண்பை மட்டும் உணர்த்துகிறது.
முற்றெச்சம்
ஒருவினைமுற்று, எச்சப்பொருளைத் தந்து மற்றொருவினைமுற்றைக்கொண்டு
முடிவது முற்றெச்சம் எனப்படும்.
(எ.கா.) வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள்.
இத்தொடரில் படித்தனள் என்ற சொல் படித்து என்னும் வினையெச்சப் பொருளைத் தந்து மகிழ்ந்தாள் என்னும் மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிந்துள்ளது.
************** ************* **************
மதிப்பீட்டுச் செயல்பாடுகள்
1. ' எழுதிய கவிதை' என்ற சொல், நிகழ்காலம், எதிர்காலத்தில் எவ்வாறு அமையும் என்பதை எழுதுக.
எழுதிய கவிதை - இறந்தகாலப் பெயரெச்சம்
எழுதுகின்ற கவிதை - நிகழ்காலப் பெயரெச்சம்
எழுதும் கவிதை - எதிர்காலப் பெயரெச்சம்
2. பொருத்துக.
வந்து - வினையெச்சம்
எழுதிய - பெயரெச்சம்
எடுத்தனன் கொடுத்தான் - முற்றெச்சம்
வேகமாக - குறிப்பு வினையெச்சம்
3. தேர்ந்தெடுத்து எழுதுக.
(எழுதிய புத்தகம், எழுதுகின்ற, படித்து வந்தான், பேசி, விரைந்து வந்தான், பெரிய
புத்தகம்.)
அ)பெயரெச்சம் - எழுதுகின்ற
ஆ)தெரிநிலைப் பெயரெச்சம் - எழுதிய புத்தகம்
இ) குறிப்புப் பெயரெச்சம் - பெரிய புத்தகம்
ஈ)வினையெச்சம் - பேசி
உ)தெரிநிலை வினையெச்சம் - படித்து வந்தான்
ஊ) குறிப்பு வினையெச்சம் - விரைந்து வந்தான்
4. தொடரில் விடுபட்ட எச்சங்களை எழுதுக.
அ)அகிலன் நல்ல மாணவன்.
ஆ) குதிரை வேகமாக ஓடியது.
இ) கமலா எழுதிய கட்டுரை.
ஈ)அருண் நிறைய பணம் வைத்திருந்தான்.
உ)அகிலா கல்லூரியில் படித்து வந்தாள்.
5. பத்தியில் உள்ள எச்சச் சொற்களையும் முற்றுச்சொற்களையும் வகைப்படுத்தி எழுதுக.
* பத்தி கொடுக்கப்படவில்லை.
**************** ********* ****************
விடைத்தயாரிப்பு
திரு.மணி மீனாட்சி சுந்தரம் ,
தமிழாசிரியர் , அ.மே.நி.பள்ளி ,
சருகுவலையபட்டி ,மேலூர் , மதுரை.து
************* ************* **************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** **********
0 Comments