வகுப்பு - 10 , தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
2021 - 2022
செயல்பாடு - 3
உரைநடைப் பகுதியைக் கொண்டு இலக்கணக் கூறுகளைக் கண்டறிதல்
( வினாக்களும் விடைகளும்
************ ************* **************
வணக்கம் நண்பர்களே ! செப்டம்பர் 1 முதல் நாம் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தில் உள்ள செயல்பாடுகளை மாணவர்களுக்கு வழங்க உள்ளோம்.
இங்கே , மூன்றாவது செயல்பாடாக உள்ள உரைநடைப் பகுதியைக் கொண்டு இலக்கணக் கூறுகளைக் கண்டறிதல் முழுமையும் வழங்கப் பட்டுள்ளது. பயிற்சிக் கட்டகத்தில் உள்ள செயல்பாடும் , மதிப்பீட்டுச் செயல்பாட்டின் வினாக்களுக்கு விடையும் விரிவாக வழங்கப் பட்டுள்ளது. நன்றி.
3 . உரைநடைப் பகுதியைக் கொண்டு இலக்கணக் கூறுகளைக் கண்டறிதல்
கற்றல் விளைவு:
பயன்பாட்டு இலக்கணம் அறிதல்/ புணர்ச்சி இலக்கண அடிப்படைகளை அறிந்து அன்றாட வாழ்வில் பயன்படுத்துதல்
கற்பித்தல் செயல்பாடு :
அறிமுகம்:
புணர்ச்சி என்பது இரண்டு சொற்களுக்கு இடையில் நிகழ்வது.
புணர்ச்சி = இரண்டு சொற்கள் இணைதல்.
விளக்கம்:
நிலை மொழியின் ஈற்றெழுத்தும் வருமொழியின் முதலெழுத்தும் இணைவதைப் புணர்ச்சி என்கிறோம்.
நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அஃது, உயிரீற்றுப் புணர்ச்சி எனப்படும்.
(எ.கா.) சிலை+ அழகு = சிலையழகு.
நிலைமொழியின் இறுதி எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் அது, மெய்யீற்றுப் புணர்ச்சி எனப்படும்.
(எ.கா.) மண் + அழகு = மண்ணழகு.
வருமொழியின் முதல் எழுத்து உயிரெழுத்தாக இருந்தால் அஃது, உயிர்முதல் புணர்ச்சி எனப்படும்.
(எ.கா.) பொன் + உண்டு =பொன்னுண்டு.
வருமொழியின் முதல் எழுத்து, மெய் எழுத்தாக இருந்தால் அது, மெய்முதல் புணர்ச்சி எனப்படும்.
(எ.கா.) பொன் + சிலை=பொற்சிலை.
புணர்ச்சியின் வகைகள்
புணர்ச்சியில் நிலைமொழியும் வருமொழியும் அடிப்படையில் புணர்ச்சியை இருவகைப்படுத்தலாம்.
புணர்ச்சியின்போது மாற்றங்கள் எதுவுமின்றி இயல்பாகப் புணர்வது இயல்பு
புணர்ச்சி எனப்படும்.
(எ.கா.)
வாழை+மரம் = வாழைமரம்
செடி +கொடி = செடிகொடி
மண் + மலை =மண்மலை.
இரண்டு சொற்கள் இணையும் போது நிலைமொழியிலோ வருமொழியிலோ
அல்லது இரண்டிலுமோ மாற்றங்கள் நிகழுமாயின் அது விகாரப்புணர்ச்சி எனப்படும்.
அவ்விகாரப்புணர்ச்சி தோன்றல், திரிதல், கெடுதல் என மூவகைப்படும்.
நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது புதிதாக ஓர் எழுத்துத் தோன்றுவது தோன்றல் விகாரம் ஆகும்.
(எ.கா.) தமிழ் + தாய் = தமிழ்த்தாய்
நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது ஓர் எழுத்து வேறு எழுத்தாக
மாறுவது திரிதல் விகாரம் ஆகும்
(எ.கா.)வில் +கொடி = விற்கொடி
நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது ஓர் எழுத்து மறைவது, கெடுதல் விகாரம் ஆகும்.
(எ.கா.) மனம் +மகிழ்ச்சி =மனமகிழ்ச்சி
விகாரப்புணர்ச்சி
தோன்றல்
திரிதல்
கெடுதல்
இதுவரை புணர்ச்சியின் வகைகளைத் தெரிந்து கொண்டீர்கள். இயல்புப் புணர்ச்சிக்கும் விகாரப் புணர்ச்சிக்கும் சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போமா?
(எ.கா.)
பத்தியில் இடம்பெற்றுள்ள இயல்புப் புணர்ச்சிகளையும் விகாரப் புணர்ச்சிகளையும் எடுத்தெழுதுக.
காஞ்சி கயிலாசநாதர் கோவில் சுற்றுச்சுவர் முழுவதும் சிற்பங்களின் கலைக்கூடமாகத் திகழ்கிறது. அதே போன்று காஞ்சி வைகுந்தபெருமாள் கோவிலிலும்
பல்லவர் காலச் சிற்பங்கள் மிகுதியாக உள்ளன. இங்குத் தெய்வச்சிற்பங்கள் மட்டுமின்றிப், பிற சிற்பங்களும் கோவிலின் உட்புறச் சுவரில் செதுக்கப்பட்டுள்ளன. பல்லவர்காலக் குடைவரைக் கோவில்களின் நுழைவுவாயிலின் இருபுறத்திலும் காவலர்கள் நிற்பது போன்று சிற்பங்கள் படைக்கப்பட்டுள்ளன.
விடைகள்
சுற்று + சுவர் = சுற்றுச்சுவர் (விகாரப்புணர்ச்சி)
கலை + கூடம் = கலைக்கூடம். (விகாரப்புணர்ச்சி)
தெய்வம் + சிலை = தெய்வச்சிலை (விகாரப்புணர்ச்சி)
மட்டும் + அல்லாது = மட்டுமல்லாது (விகாரப்புணர்ச்சி)
உள் + புறம் = உட்புறம் (விகாரப்புணர்ச்சி)
நிற்பது + போன்று = நிற்பதுபோன்று (இயல்பு புணர்ச்சி)
*********** ********** ******** ********
மதிப்பீட்டுச் செயல்பாடுகள்
1. உரைப்பத்தியில் இடம்பெற்றுள்ள இயல்பு புணர்ச்சிகளையும் விகாரப்
புணர்ச்சிகளையும் எடுத்தெழுதுக.
பல்லவர் காலத்தில் சுதையினாலும், கருங்கற்களினாலும் சிற்பங்கள்
அமைக்கப்பட்டன. கோவில் தூண்கள் சிற்பங்களால் அழகு பெறுகின்றன.
தூண்களில் யாளி, சிங்கம், தாமரைமலர், நுட்பமான வேலைப்பாடுகள் நிறைந்த
வட்டங்கள் போன்றவை பொறிக்கப்பட்டுள்ளன. பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்ட கோவில்களின் கட்டடங்கள், கற்றூண்கள், சுற்றுச்சுவர்கள், நுழைவுவாயில்கள் என அனைத்து இடங்களிலும் சிற்பங்கள் மிளிர்வதைக் காணமுடியும். பல்லவர் காலச்
சிற்பக்கலைக்கு மாமல்லபுரச் சிற்பங்கள் மிகச்சிறந்த சான்றுகளாகும். கடற்கரையில்
காணப்பட்ட பெரும்பாறைகளைச் செதுக்கிப் பற்பல உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இயல்புப் புணர்ச்சி
* தாமரை மலர்
* நுழைவு வாயில்கள்
விகாரப்புணர்ச்சி
* கருங்கல்
* கற்றூண்கள்
* சுற்றுச்சுவர்கள்
* சிற்பக்கலை
* கடற்கரை
* பற்பல
2. கொடுக்கப்பட்டுள்ள சொற்களைக் கொண்டு அட்டவணையை நிரப்புக.
(எட்டுத்தொகை, மரவேர், கற்சிலை, மட்குடம், அகநானூறு, பத்துப்பாட்டு, பற்பொடி,
பூங்கொடி, நிலமங்கை).
தோன்றல்
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பூங்கொடி
திரிதல்
கற்சிலை
பற்பொடி
மட்குடம்
கெடுதல்
மரவேர்
அகநானூறு
நிலமங்கை
*************** *********** **************
விடைத்தயாரிப்பு
திரு.மணி மீனாட்சி சுந்தரம் ,
தமிழாசிரியர் , அ.மே.நி.பள்ளி ,
சருகுவலையபட்டி ,மேலூர் , மதுரை.
************* ************* **************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** ************
0 Comments