பத்தாம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - செயல்பாடு 14 , மயங்கொலிச் சொற்களை முறையாக ஒலித்தல் / 10th TAMIL - REFRESHER COURSE MODULE - 14

 

பத்தாம் வகுப்பு - தமிழ் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

செயல்பாடு - 14

மயங்கொலிச் சொற்களை முறையாக ஒலித்தல்

(எ.கா.)1

பின்வரும் உரைப்பத்தியை மயங்கொலிப் பிழைகள் இன்றிப் படித்துப் பார்ப்போம்

          தமிழில் சொல்லின் முதலில்வரும் எழுத்து, இடையில்வரும் எழுத்து, இறுதியில்வரும் எழுத்து, ஒன்றையொன்று அடுத்துவரும் எழுத்து என எழுத்து எழுதப்படுவதற்கும் தொடரில் அமைவதற்கும் வரம்பு உண்டு. அதன்படி எல்லா எழுத்துகளும் எல்லாநிலைகளிலும் வருவதில்லை. சில எழுத்துகள் அரிச்சுவடியில் இருப்பினும் அவை பயன்பாட்டில் இடம்பெறுவதில்லை. இவற்றைப் போலவே நெட்டெழுத்துகளில் சொல் என்னும் நிலையைப் பெறாதவையும் உண்டு.

(எ.கா.) 2

                   தமிழின் இனிமை

               பாரதிதாசன் கவிதை

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்

கழையிடை ஏறிய சாறும்,

பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப்

பாகிடை ஏறிய சுவையும்;

நனிபசு பொழியும் பாலும் - தென்னை

நல்கிய குளிரிள நீரும்,

இனியன என்பேன் எனினும் - தமிழை

என்னுயிர் என்பேன் கண்டீர்!

                            -  பாவேந்தர் பாரதிதாசன்

மயங்கொலித் தொடர்களை முறையாக வாய்விட்டு ஒலித்துப் படிக்க.

* மலைமேலே மழை பொழிய மரங்களெல்லாம் குளிர்ந்தன.

* ஆடுகிற கிளையிலே ஒரு கிளை, தனிக்கிளை!

*  தனிக்கிளைதனில் வந்த கனிகளும் இனிக்கலை.

*  பலாப்பழம் பழுத்து மலையின்கீழுள்ள பள்ளத்தில் வீழ்ந்தது.

*   அவனும் அவளும் அவலும் தெள்ளுமாவும் அள்ளித்தின்றனர்.

*  பச்சைக்குழந்தை வாழைப்பழத்தைக் கேட்டு விழுந்து புரண்டு அடம்பிடித்து அழுதது.


         மதிப்பீட்டுச் செயல்பாடுகள்

கொடுக்கப்பட்டுள்ள உரைப்பத்தியைச் சரியான ஒலிப்புடன் படிக்க.

           கடந்தகாலத்தை ஆராய்ந்து அறிந்து கொண்டால்தான் நிகழ்காலத்தைச்
செம்மைப்படுத்திக் கொள்ளலாம். வருங்காலம் வளமாக அமைவதற்கு வலிமையான கட்டமைப்பை உருவாக்கலாம். நமது முன்னோர்கள் வாழ்ந்து பெற்ற பட்டறிவை வகைப்படுத்தித் தொகுத்துப் பார்ப்பதற்குத் தொல்லியல் ஆய்வே பெரும் கல்வியாக அமைகின்றது. வேடிக்கை என்னவென்றால், தமிழகத்தில் பண்டைக்காலத்திலேயே நமது முன்னோர்கள் செம்மையான பண்பாட்டுக் கட்டமைப்போடு வாழ்ந்திருக்கிறார்கள்.
வேடிக்கை என்னவென்றால் நாம்தான் அந்தத் தொன்மை வரலாற்றின் உண்மையை
அறியாமல் தொடர்ச்சி அறுபட்டு இடையில் எங்கோ பாதைமாறிப் பயணித்துக்
கொண்டிருக்கிறோம்.

கொடுக்கப்பட்டுள்ள செய்யுள்களைச் சரியான ஒலிப்புடன் படித்துப் பழகுக.

செய்யுள் 1

விறகுநான்; வண்டமிழே! உன்னருள் வாய்த்த
பிறகுநான் வீணையாய்ப் போனேன்;- சிறகுநான்
சின்னதாய்க் கொண்டதொரு சிற்றீசல்; செந்தமிழே!
நின்னால் விமானமானேன் நான்!

தருவாய் நிழல்தான் தருவாய்;நிதம்என்
வருவாய் எனநீ வருவாய்;- ஒருவாய்
உணவாய் உளதமிழே! ஓர்ந்தேன்;நீ பாட்டுக்
கணவாய் வழிவரும் காற்று!

செய்யுள் 2

சொல்அரும் சூல்பசும் பாம்பின் தோற்றம்போல்
மெல்லவேகரு இருந்து ஈன்று மேலலார்
செல்வமே போல் தலை நிறுவித் தேர்ந்தநூல்
கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே,

****************   ***************    **********



Post a Comment

0 Comments