11 ஆம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - 21 , துறை - வினா & விடை / 11th TAMIL - PUTHTHAKKAP PAYIRCHIK KATTAKAM - 21 - QUESTIIN & ANSWER

 


11 ஆம் வகுப்பு - தமிழ் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம

செயல்பாடு - 21 , துறை

கற்றல் விளைவுகள்

* துறையின் வரையறையைப் பற்றி அறிதல்.

* அகத்திணையில் வரும் துறைகளைப் பற்றி அறிதல்.

 * புறத்திணையில் வரும் துறைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுதல்.

ஆசிரியர் செயல்பாடு

ஆர்வமூட்டல் :

        மாணவர்களே! இன்று துறையைப்பற்றி பார்ப்போம். துறை என்றதும் கல்வித்துறை, நிதித்துறை, சட்டத்துறை போன்ற துறைகள் நினைவுக்கு வரலாம். ஆனால், நாம் இன்றைக்குப் பார்க்க இருப்பது திணையின் உட்பிரிவு ஆகிய துறையைப் பற்றி என்று விளக்கி மாணவர்களுக்கு ஆர்வமூட்டல்.

கற்பித்தல் செயல்பாடுகள்

செயல்பாடு :

        துறை என்பது ஒரு சிறிய பிரிவு அல்லது பகுப்பு ஆகும் இது இடம், கடல் துறை, நீர்த்துறை, நீராடுதுறை, பொருள் கூறு வகை, ஒழுங்கு , உபாயம் என்று பல பொருள் பெறும்.

       திணை என்னும் சொல் வாழ்க்கை ஓடும் ஒழுகலாற்றினைக் குறிக்கும். ஒழுகும் ஆறு ஒழுகலாறு. ஆற்றில் இறங்கிப் பயன்படுத்தும் இடத்தைத் துறை என்கிறோம். அதுபோல வாழ்க்கையில் அமைந்து கிடப்பனவே இலக்கியத் துறைகள். இந்த இலக்கிய துறைகளை வகுத்துக் காட்டுவனவே இலக்கணத் துறைகள். அதாவது இலக்கணம் காட்டும் துறைகள்.

* தொல்காப்பியம் புறத்திணையில் தான் வகுத்துக்கொண்ட ஏழு திணைகளுக்கும் துறை சுட்டுகிறது.

* புறப்பொருள் வெண்பாமாலை தன்போக்கில் வகுத்துக்கொண்ட 12 திணைகளுக்கும் துறைகளைக் காட்டுகிறது.

செயல்பாடு : 2

குறிப்பிட்ட சில துறைகளை எடுத்துக்காட்டு மூலம் விளக்குதல்.

புறத்திணையாகிய பாடாண்திணைக்குத் துறையாக செந்துறைப் பாடாண்பாட்டு வந்தமைந்ததைக் கீழ்க்காணும் எடுத்துக்காட்டு மூலம் தெரிந்து கொள்ளலாம்.

துறை: செந்துறைப் பாடாண்பாட்டு

துறை விளக்கம்:

        உலகில் இயற்கை வகையால் இயன்ற மக்களைப் பாடுவது செந்துறை. இது செந்துறைப் பாடாண்பாட்டு எனவும் வழங்கப்பெறும்.

சான்று:

"மண்ணுடை ஞாலத்து மன்னுயிர்க்கெஞ்சாது

ஈத்துக்கை தண்டாக் கைகடும் துப்பின்"

(பதிற்றுப்பத்து)


துறைப் பொருத்தம்:

             இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆட்சியின்கீழ் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர் என்று பாடியதால் இப்பாடல் செந்துறைக்குச் சான்றாயிற்று.

செயல்பாடு : 3

துறை: முதுமொழிக் காஞ்சித் துறை

முதுமொழி என்பது அறிவு முதிர்ச்சியில் மொழியும் சொல்.

துறை விளக்கம்:

           அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருளினது உறுதி தரும்
தன்மையைக் கூறுதல்.

சான்று:

"நீரின்றி அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்க் கொடுத்தோரே"

                                                             (புறநானூறு)
சான்று விளக்கம்:

உடம்பானது உணவால் அமைந்த பிண்டம். உடம்பில் உயிர் இருக்க வேண்டுமென்றால் உணவு வேண்டும். உண்ணும் உணவு நிலமும் நீரும் இணைந்த கூட்டுப் பொருள். நிலத்தில் நீரைச் சேர்த்து வைத்தால், உணவு பொருளின் விளைச்சலைப் பெருக்கலாம். எனவே நிலத்தில் நீர் தங்கும்படி
சேமித்து வைத்தவர் உடலில் உயிரைப் படைத்தவர் ஆவார்.

துறைப்பொருத்தம்:

                    மற்றவர்கள் பெறும் புகழை விட நீர்நிலைகளைப் பெருக்கியவரின் பெயர் இவ்வுலகில் உயிர்க்கொடுத்தோர் பட்டியலில் என்றென்றும் நிலைத்திருக்கும். எனவே, 'நிலத்தில் நீர்நிலைகளைப் பெருகச் செய்க என்று குடபுலவியனார், நெடுஞ்செழியனுக்கு அறிவுரை கூறுவதால், இப்பாடல்
முதுமொழிகாஞ்சித் துறைக்குச் சான்றாகும்.

செயல்பாடு : 4

துறை:

  அகத்திணை ஆகிய குறிஞ்சித் திணையில் தலைவியிடம் தோழி கூறியது.

துறை விளக்கம்:

தலைவன் சான்றோரைத் தலைவியின் தமர் பால் மணம் பேசிவர விடுப்ப, தன் தமர் மறுப்பாரோ என்று அஞ்சிய தலைவியை நோக்கி, "தலைவன் வரைவை நமர் ஏற்றுக் கொண்டனர். நீ கவலை ஒழிவாயாக" என்று தோழி கூறியது.

சான்று:

"அம்ம வாழி தோழி நம்மூர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர்..."

                                               -  குறுந்தொகை
சான்று விளக்கம்:

         தலைவன் தலைவியை மணம் முடிப்பது பற்றி பேச சான்றோரை அனுப்புகிறான். தலைவி அப்போது எங்கே தன் பெற்றோர் மணம் பேச மறுத்து விடுவார்களோ என்று கலங்குகிறாள். இந்நிலையில் தோழி அவளிடம் தலைவனின் தரப்பைத் தலைவியின் பெற்றோர் ஏற்றுக்
கொண்டனர் என்று தேற்றுகிறாள்.

துறைப்பொருத்தம்:

                 தலைவனின் தரப்பை உன் நமர் ஏற்றுக்கொண்டனர். நீ கவலை ஒழிவாயாக என்று தலைவியிடம் தோழி கூறியது இத்துறைக்குப் பொருந்துவதாக அமைகிறது.

மாணவர் செயல்பாடு

               அகத்திணை புறத்திணை சார்ந்த பாடல்களை மாணவர்களுக்குக் கொடுத்து துறையைச் சான்றுடன் விளக்கி எழுதச் சொல்லுதல்.

**************    **************    ************

                                   மதிப்பீடு

1. துறை என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?

                     துறை என்ற சொல்லுக்கு ஒரு சிறிய பிரிவு அல்லது பகுப்பு என்பது பொருள். 

2. துறை சிறுகுறிப்பு வரைக.

          ' திணை ' என்னும் சொல் , வாழ்க்கை ஓடும் ஒழுகலாற்றினைக் குறிக்கும். ஒழுகும் ஆறு ஒழுகலாறு. 

      ஆற்றில் இறங்கிப் பயன்படுத்தும் இடத்தைத் துறை என்கிறோம். 

சான்று - செந்துறைப் பாடாண்பாட்டு.


3. முதுமொழிக்காஞ்சி துறையைச் சான்றுடன் விளக்குக.

துறை: முதுமொழிக் காஞ்சித் துறை

முதுமொழி என்பது அறிவு முதிர்ச்சியில் மொழியும் சொல்.

துறை விளக்கம்:

           அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருளினது உறுதி தரும்
தன்மையைக் கூறுதல்.

சான்று:

"நீரின்றி அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்க் கொடுத்தோரே"

                                                             (புறநானூறு)
சான்று விளக்கம்:

உடம்பானது உணவால் அமைந்த பிண்டம். உடம்பில் உயிர் இருக்க வேண்டுமென்றால் உணவு வேண்டும். உண்ணும் உணவு நிலமும் நீரும் இணைந்த கூட்டுப் பொருள். நிலத்தில் நீரைச் சேர்த்து வைத்தால், உணவு பொருளின் விளைச்சலைப் பெருக்கலாம். எனவே நிலத்தில் நீர் தங்கும்படி
சேமித்து வைத்தவர் உடலில் உயிரைப் படைத்தவர் ஆவார்.

துறைப்பொருத்தம்:

                    மற்றவர்கள் பெறும் புகழை விட நீர்நிலைகளைப் பெருக்கியவரின் பெயர் இவ்வுலகில் உயிர்க்கொடுத்தோர் பட்டியலில் என்றென்றும் நிலைத்திருக்கும். எனவே, 'நிலத்தில் நீர்நிலைகளைப் பெருகச் செய்க என்று குடபுலவியனார், நெடுஞ்செழியனுக்கு அறிவுரை கூறுவதால், இப்பாடல்
முதுமொழிகாஞ்சித் துறைக்குச் சான்றாகும்.


**************    ****************   ***********

Post a Comment

0 Comments