ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - செயல்பாடு 10 , கட்டுரை எழுதுதல் / 9th TAMIL - REFRESHER COURSE MODULE - ACTIVITY 10

 

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

செயல்பாடு -  10

கட்டுரை எழுதுதல்

கற்றல் விளைவு:

              படிப்பவர், எழுத்தின் நோக்கம் ஆகியவற்றை மனத்தில் கொண்டு பயன் விளைவிக்கும் வகையில் எழுதுதல்,

         தமது சொந்த அனுவங்களைத் தமக்கே உரிய மொழிநடையைப் பயன்படுத்தி வெவ்வேறு இலக்கிய வடிவங்களில் எழுதுதல்.

கற்பித்தல் செயல்பாடு:

அறிமுகம்:

       ஒருவரின் பேச்சும் எழுத்தும் அவரின் உள்ளக் கருத்தை வெளியிடும் வாயில்கள் ஆகும். இவற்றில் எழுதுதல் என்பது தனித்திறன்மிக்கது. பேசுவதுகாற்றோடு போய்விடும். ஆனால்,எழுதுதல் மட்டுமே கண்களால் பார்க்கப்பட்டு மனத்தால் உணரப்பட்டு நினைவால் சேமிக்கப்படும்.

      கட்டுரை = கட்டு + உரை. அழகிய எழுத்தாலும் அறிவார்ந்த கருத்தாலும் எளியநடையாலும் இனிய மேற்கோளாலும் கட்டப்படும் உரைத்தொகுப்பே கட்டுரை ஆகும்.

விளக்கம்

          கட்டுரை அமைப்பு எவ்வாறு அமைய வேண்டும்? அவற்றிற்கென உள்ள பொது விதிமுறைகள் யாவை? என்பனவற்றை நன்கு அறிய வேண்டும்.

கட்டுரை அமைப்பு முறை

முன்னுரை

இது கட்டுரையின் முதல்பகுதி.

கட்டுரையில் எழுதப்போகும்கருத்தினைப் பற்றிய சிறு அறிமுகமாக முதலில் எழுதவேண்டும்.

பொருளுரை

      இது கட்டுரையின் நடுப்பகுதி. பல்வேறு உட் தலைப்புகளின்கீழ், கருத்தின் விளக்கத்தை எழுத வேண்டும்.

(குறைந்தது நான்கு அல்லது ஐந்து பக்கத் தலைப்புகளில் கருத்தை விளக்கலாம்)

முடிவுரை

இது கட்டுரையின் இறுதிப்பகுதி.கட்டுரையில் விளக்கப்பட்ட கருத்துகளின் தொகுப்பாக இடம்பெற வேண்டும்.


கட்டுரைக்கான பொது வழிமுறைகள்

* தலைப்புக்குரிய செய்திகளைச் சேகரித்தல்.

* அவற்றை வரிசைப்படுத்துதல்.

* தலைப்பு அமைத்தல்.

* பத்தி பிரித்தல்.

*  பொருத்தமான மேற்கோள், பழமொழி, உவமை, உருவகம் எழுதுதல்.

* தெளிவான கையெழுத்தோடும் நடை அழகுடனும் எழுதுதல்.

* நிறுத்தக்குறிகளைச் சரியாகப் பயன்படுத்தல்.

* நல்ல கருத்துகளை நயமுற எடுத்துரைத்தல்.

*  நிறைவில் முழக்கத்தொடர் / நீதிக்கருத்து பொன்மொழியுடன் முடித்தல்.

      ஆகிய பொது வழிமுறைகளை மனதிற்கொண்டு எழுதப்பெறும் கட்டுரைகள்
உயிரோட்டம் உடையதாக இருக்கும்.

மாதிரிக் கட்டுரை

என்னைக் கவர்ந்த நூல் - திருக்குறள்

முன்னுரை

     "ஒரு நூலைக் கற்றவன் மனிதன். சில நூல்களைக் கற்றவன் அறிஞன். பல
நூல்களைக் கற்றவன் பேரறிஞன்" என்னும் பொன்மொழியைப் படித்தேன். அன்றுமுதல்
சில நூல்களைப் படிக்க தொடங்கினேன். அவ்வாறாக நான் படித்ததில் என்னை மிகவும்
கவர்ந்த நூல் திருக்குறள் ஆகும். அந்நூல் பற்றி நான் உணர்ந்ததையும் அது என்னை
எப்படிக் கவர்ந்தது என்பதையும் இக்கட்டுரையில் விளக்கமாக எடுத்துரைக்கிறேன்.

அமைப்புமுறை

     திருவள்ளுவரால் இயற்றப்பட்டது திருக்குறள். இத்திருக்குறளைப் படிக்கும் போது இந்நூலில் 1330 குறட்பாக்கள் 133 அதிகாரங்கள், அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பெரும் பிரிவுகள் உள்ளதையும் நான் அறிந்தேன். இரண்டடி, ஏழு சீர்களில் அழகான, அறிவார்ந்த கருத்தினைத் திருக்குறள் காட்சிப்படுத்துகிறது.

வாழ்வியல் பொதுமுறை

                 திருக்குறளைப் படித்ததின் மூலம் அமிழ்தம் போன்ற அதன் சிறப்புகள் பலவற்றை உணர்ந்தேன். அவற்றுள் ஒரு சில.



நாடு, மொழி, இனம், மதம், சாதி ஆகியவை கடந்து உலகப்பொது மறையாக உள்ளது.

'அ' என்ற எழுத்தில் முதல் குறளில் தொடங்கி
இறுதிக் குறளில் 'ன்' இல் முடிகின்றது.

உலகமொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைக்குத் தேவையானதைச் சொல்லும் வாழ்வியல் நூல்.

பொதுமை நோக்கு

          இறைவன் மனிதனுக்காகப் படைத்தது பகவத்கீதை. மனிதன் இறைவனுக்காகச்
சொன்னது திருவாசகம். மனிதன் மனிதனுக்காகவே படைத்த முதல் நூல் திருக்குறள்என்பதாலேயே திருக்குறள் என்னைக் கவர முதற்காரணமாயிற்று. நாடு, மொழி, இனம், மதம், சாதி ஆகியவற்றைத் திருவள்ளுவர் தம் நூலில் எங்கும் பயன்படுத்தவில்லை. உள்ளங்கை நெல்லிக்கனி போல கருத்துகள் வெளிப்படையாக எளிமையாகச்
சொல்லப்பட்டுள்ளன. இதனால் திருக்குறள் என்னை ஈர்த்தது.

விழுமியப் பதிவுகள் (நற்பண்புகள்)

           திருக்குறள் முழுமையும் படித்து குறட்பாக்களின் கருத்தை என் வாழ்வில்
பயன்படுத்தினேன். அதனால் அன்பு, இன்சொல், பொறாமை கொள்ளாமை, மறதி
இல்லாமை, சினம் கொள்ளாமை, புறங்கூறாமை, ஊக்கமுடன் இருத்தல், இடமறிந்து செயல்படுதல், நன்றி மறவாமை, உண்மை பேசுதல், தீ நட்பு விலக்கல், நன்கு கல்வி கற்றல் ஆகிய விழுமியங்கள் என்னை மேம்படுத்தின.

முடிவுரை

           அப்துல்கலாம் ஐயா, "புத்தகங்கள் கனவுகளை வளர்க்கும்" என்றார். ஆம்! என்னுள் திருக்குறள் நூல், அதிகமான கனவுகளை வளரச்செய்து என்னைக் கவர்ந்தது. நீங்களும் திருக்குறளை முழுமையாகப் படியுங்கள் திருக்குறளைப் படிப்போம்! நல்ல மனிதராவோம்!

மாணவர் செயல்பாடு

         கட்டுரையின் தலைப்புகள் அடங்கிய அட்டையினை மாணவர்களிடம் கொடுத்து
அத்தலைப்புக்கு ஏற்ற கட்டுரை அமைப்பினை குறிப்பிடச் செய்தல், கட்டுரையின் தலைப்புக்கு ஏற்ற உட்தலைப்புகளை மாணவர்களைப் பிரிக்கச் செய்தல்.
கட்டுரையின் தலைப்புக்கு ஏற்ற பழமொழி, முழக்கத்தொடர்களைக் எழுதுதல்.

************    ***************   ***********

         மதிப்பீட்டுச் செயல்பாடு

1. பின்வரும் படங்கள் உணர்த்தும் கருத்தை ஒரு பத்தி அளவில் எழுதுக.



* தாய்மடியில் தவழ்ந்து , பசியைப் போக்கிய பிஞ்சுக் குழந்தை ஒன்று , அம்மா என்றழைக்கும் பசுவினை அம்மாவாய் நினைத்து , மடிக்காம்பில் பால்சுவைக்கிறான். மகிழ்ந்தும் , நெகிழ்ந்தும் தாய்மையாய் நிற்கிறது பசு.

* புசித்துப் பசி என்கிறார்கள் . பசித்தாலும் புசிக்க உணவு வேண்டுமே என்று தேடி அலைந்த நன்றி உணர்விற்கிற்கு அடையாளமான நாயை அன்பால் அரவணைத்து இந்தா உனக்கும் ஒரு கைப்பிடி உணவு என உள்ளன்போடு வழங்குகிறாள் மனிதநேயம் தெரிந்த இந்தப் பெண்பிள்ளை.

*  விரிசல் விழுந்த கரிசல் நிலத்தில் சூரியனின் சுட்டெரிக்கும் வெப்பத்தை தன் உடலில் தாங்கிக்கொண்டு , பெண் மானிற்கு நிழலைத் தருகிறது பெருமை மிகு ஆண்மான். 

*  ஒரு பிடி உணவு கிடைத்தாலும் பகர்ந்து உண்போம் என்று உரக்கக் கூவி அழைக்கிறது காகம். சுற்றத்தை அழைத்து சுகமாய் வாழும் காகத்திடம் கற்க வேண்டும் பகிர்ந்துண்ணும் பண்பை மனித இனம்.


2. நான் விரும்பும் தலைவர் காந்தியடிகள் என்னும் கட்டுரைத் தலைப்புக்கேற்ற
உட்தலைப்புகள், பழமொழிகள், முழக்கத்தொடர்கள் ஆகியவற்றை எழுதுதல்.

* முன்னுரை 

* காந்தியின் பள்ளிப் பருவம் 

* தென்னாப்பிரிக்காவில் காந்தி 

* சுதந்திரப் போராட்டத்தில் காந்தி

* அகிம்சை எனும் ஆயுதம்

* அடிபணிந்தது ஆங்கில அரசு

* சுதந்திர இந்தியா

* முடிவுரை

3. குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை எழுதுக.

முன்னுரை - ஊர் அமைவிடம் - ஊரின் எல்லை - ஊரின் சிறப்பு - உற்பத்தியாகும்
பொருள்கள் - வரலாற்றுச் சிறப்புகள் -முடிவுரை


மாணவர்கள் தாங்கள் வாழும் ஊர் அல்லது தங்களின் மாவட்டத்தின் சிறப்புகளை உங்கள் சிந்தனைக்கேற்ப சுயமாக எழுதவும்.

****************     *************   ***********

Post a Comment

0 Comments