கிருஷ்ண ஜெயந்தி - கோகுலாஷ்டமி - கண்ணன் பிறந்தான் - கிருஷ்ணரின் வாழ்க்கை நிகழ்வுகள்

 


     கிருஷ்ணர்   பிறந்த  தினம்

           ( கோகுலாஷ்டமி )

                30  -  8 -  2021



புவனமெங்கும்    பூமழை   சொரிய !

களங்கம்  மறைந்து  கதவு  திறக்க  !

வறுமை  நீங்கி  வதனம்  பொழிய  !

பகைமை  ஒழிந்து  குறுநகை  பெருக !

இருளில்  முடங்கிய  எளியவர்  மகிழ !

துன்பக்   கடல்தனில்  தத்தளிக்கும்  உயிர்களை

கரைசேர்க்கும்  ஓடமென   வந்த 

வைகறை  ஒளியே !  வசந்த  நிழலே  !

ஆயர்பாடியின்  அழகிய  மைந்தா  வருக !  வருக !

கோகுலக் கண்ணனே   குழல்  கொண்டு  வருக  !

வரந்தரும்   நிரந்தரமே   கோவர்தணமாக  வருக  !

குருவாயூரப்பனே  குலம்விளங்க  வருக !

சினம்   துறந்து   மனிதரெல்லாம்....

குணம்   பெருகிட  

சின்னச்   சின்ன    அடிவைத்து

சிங்காரத்   தளிரே   சதிராடி   வருக !  


        உலகில் நடக்கும் கொடுமைகளை விலக்கி , உலக மக்களுக்கு இன்பம் தரவே அவதாரங்கள் அவ்வப்போது நிகழ்கின்றன.  கொடுமைகளைக் கண்டு துடிக்கின்ற  மனம்   திரை  விலகி   அவன் திருவுரு  தரிசனம்  கண்டு, அதிசயம்    செய்யும மகிழ்ச்சியும் , நெகிழ்ச்சியும்   கண்ணில்   நிறைந்த  கருணையே  தெய்வமாக  மண்ணில்  தோன்றும் நாளே  தெய்வத்  திருநாள். இந்த நாளும்  அற்புதங்கள்  நிறைந்த தாகட்டும். 

      ஆண்டுதோறும்  ஆவணி  மாதம்  அஷ்டமி  திதி,  ரோகிணி நட்சத்திரம்   கொண்ட  நாளில் கிருஷ்ணர்  பிறந்தார். இந்த  நாளே  கிருஷ்ண ஜெயந்தி யாகக்  கொண்டாடப் படுகிறது.

ஸ்ரீ கிருஷ்ணர்  பிறப்பு 

                    விருஷ்ணி  குலத்தைச் சேர்ந்த சூரசேனர் என்பவரின்  மகன்  வாசுதேவர்.  வாசுதேவர்- தேவகி  ஆகிய  இவர்களின்  எட்டாவது   குழந்தையே  "  கிருஷ்ணர்" 

கிருஷ்ணர்  விஷ்ணுவின்  பத்து   அவதாரங்களில்  8 -ஆவது அவதாரம். இந்த  அவதாரம் சிறப்பு  வாய்ந்ததாக  கருதப் படுகிறது.

கிருஷ்ணன்  என்ற  சொல்லுக்கு  " கரிய "  மற்றும் அழகிய  கண்களை   உடையவன்  என  பொருள்  படுகின்றன. கிருஷ்ணர் கரிய  நிறத்தை  உடையவர்  என்பதாலும்  இப்பெயரில்   வணங்கப் படுகிறார்.  ( அழைக்கப்படுகிறார்)

          கிருஷ்ணரின்   தாய் மாமனான  கம்சன்  மிகக்  கொடிய   எண்ணம்  கொண்ட   அரசன் . கிருஷ்ணரை வதைப்பதிலேயே  கவனம் கொண்டு  இருந்தான்.  கம்சனிடம்  இருந்து  ஸ்ரீகிருஷ்ணரைக்  பாதுகாக்க  ,  அவர்   பிறந்தவுடன்   வாசுதேவர்   யமுனை  ஆற்றுக்கு   அப்பால்   உள்ள  கோகுலத்தில்   வசித்து   வந்த   நந்தகோபர்- யசோதை  ஆகியோரிடம்   அடைக்கலமாகத்   தந்து  வளர்க்கச்  செய்தார்.

கோகுலத்தில்  கண்ணன்

               கோகுலத்தில்  யசோதையின்   சீர்மிகு  வளர்ப்பால்  சிறந்தே  வளர்ந்தார்  கிருஷ்ணர். சிறு  பிள்ளையின்  குறும்பெல்லாம்  ஒருங்கே   கொண்ட   கரும்பாக , அரும்பாக  வளைய  வந்தார் .

மாடுகளை  மேய்க்க  குழல்  ஊதி,  நண்பர்களுடன்   விளையாடி   வெண்ணெய்   திருடி... செய்த  குறும்புகள்  அம்மம்மா....  சிரிக்கவும், சிந்திக்கவும்  செய்கின்றன. இவரது  தொல்லைகள்   இன்பத்தின்   எல்லைகளாகவே  இருந்து  வந்தது. குறும்பு  செய்த   போதிலும்   அனைவரும்  விரும்பும் செல்லப் பிள்ளையாக  வலம்  வந்தார்.

வழிபாடு முறை

         கோகுலாஷ்டமி   தினத்தில்  இல்லமும்,  உள்ளமும்   தூய்மையாக்கி  இனிப்புகள்  பல  செய்து,  பழவகைகளும், பல வண்ண  மலர்களைக் கொண்டு   மணிவண்ணனை  அழகுபடுத்தி , வீட்டின்  நிலைப்படியில்   இருந்து  தொடங்கி வீடு முழுவதும்  அரிசி மாவில்  பாதம்  வரைந்து பின்  தெய்வ  வழிபாடு  செய்யப்  படுகின்றன. 

இத்தகைய வழிபாட்டில்  மகிழ்ந்த   இறைவன்  தம்  இல்லம்  நுழைந்து   அருள்  மழை  பொழிவான்  என்பது  நம்  நம்பிக்கை ஆகும்.  கிருஷ்ணருக்கு   தொல்லைகளைத்  தரும்    கம்சனால்   பல   இன்னல்  அம்பு மழைப்போல  ஏவப்பட்டன. அதன்  பொருட்    தன்னைத்  தாக்க  வந்த   அசுரர்களை   வதம்  செய்தார்.

          கோகுலத்தை  அழிக்க   இந்திரன்   பெரு மழையை  உருவாக்கி  சிதைக்க  முயன்ற நேரம் கண்ணன்  கணநேரத்தில்  கோவர்த்தண மலையை  தூக்கி  குடையாக்கி   மக்களையும்,  பசுக்களையும்  , பிற  ஏனைய  உயிர்களை யும்  காத்தார்.

யமுனை ஆற்றங்கரையில்   இருந்த  "காளிங்கன் "  என்ற  கொடிய  நஞ்சுடைய  பாம்பை   அடக்கினார்.

கம்சன்  வதம்

        தகுந்த   வயதை   அடைந்தவுடன்  தமையன்  பலராமன்  துணைக் கொண்டு , கம்சனை    வென்று   உரிமையான வர்களாகிய   தாத்தா  உக்கிரச்சேனரிடம்    ஒப்படைத்தார்.  

                      ஙதனது   அத்தை மகன்களான  பாண்டவர்களை  பக்குவமாகி, அவர்கள்   பங்கைப்  பெற  உதவிசெய்தார்.  அர்ஜுனனிடம்  தனிப்  பற்றுக்கொண்டு  உதவிசெய்தார். பின்னர்    துவாரகை  என்னும்  எழில் நிறைந்த  நகர் ஒன்றை  உருவாக்கி மதுராவில்  இருந்த  மக்களுடன்  குடிபெயர்ந்தார்.

பகவத் கீதை

                  மகாபாரத  போரில்   பாண்டவர்கள்,  கெளரவர்கள்  ஆகியோருக்கு  இடையே  நடந்த   குருசேத்திரப்  போரில்  , தனது  போர்ப்  படையை   கெளரவர்களிடம்  கொடுத்து விட்டு , தான்  ஆயுதம்   ஏந்தாமல்  அர்ஜுனனின்   தேரோட்டியாகப்   பணிபுரிந்தார்.   

          இந்தப்   போர்   தொடங்கும்   முன்  இவர்   அர்ஜுனனிடம்  மேற்கொண்ட   உரையாடலே   பகவத் கீதை  ஆனது.

ஸ்ரீகிருஷ்ணர்  பல  அவதாரங்களை  எடுத்து  மக்களைக்  காக்கும்  தெய்வமாக,   தெய்வீகக்  குழந்தையாக,  குறும்பு மன்னனாக,   முன் மாதிரி  காதலனாக,  சிறந்த  நண்பராக,சகோதரனாக.. எனப்  நிலைகளை  அழகுபடுத்திய வர். 

மானிட வாழ்விற்கு  நல்  வழிக்காட்டி  காக்கும் தெய்வமாக  போற்றப்படுகிறார்.இத்தகைய  சிறப்புமிக்க  இறைவன் பிறந்த நாளைக்  கொண்டாடி  இறை  அருளை  இல்லம் தோறும் நிறையும்படி   வணங்கி  மகிழ்வோம் !

Post a Comment

0 Comments