ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 2021 - 2022 - செயல்பாடு 2 - செய்யுள் நயம் பாராட்டல் , சொற்பொருள் அறிதல் / REFRESHER COURSE MODULE - QUESTION & ANSWER - ACTIVITY - 2

 

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் 

      புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 

                     2021 - 2022 

                செயல்பாடு - 2

     செய்யுள் நயம்  பாராட்டல்

          சொற்பொருள் அறிதல்

************     *************    **************

    வணக்கம் நண்பர்களே ! செப்டம்பர் 1 முதல் நாம் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தில் உள்ள செயல்பாடுகளை மாணவர்களுக்கு வழங்க உள்ளோம். 

     இங்கே , இரண்டாவது  செயல்பாடாக உள்ள செய்யுள் நயம் பாராட்டல் , சொற்பொருள் அறிதல் முழுமையும் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சிக் கட்டகத்தில் உள்ள செயல்பாடும் , மதிப்பீட்டுச் செயல்பாட்டின் வினாக்களுக்கு விடையும் விரிவாக வழங்கப் பட்டுள்ளது. நன்றி.

 2 செய்யுள் நயம் பாராட்டல்,

சொற்பொருள் அறிதல்

கற்றல் விளைவு:

செய்யுள்நயம் பாராட்டும் திறனையும் அகராதியைப் பயன்படுத்தும் திறனையும் வளர்த்தல்,

படிக்கும்போது படைப்பாளியின் சொற்சித்திரத்திறனை நயம்படப் பாராட்டித் தமது கல்வி நிலைக்கு ஏற்ப அதை வெளிப்படுத்துதல், தேவைப்படின் பார்வை நூல்களாகிய அகராதிகள், தேசப்படங்கள், கலைக்களஞ்சியம் போன்றவற்றையும் இணையத்தளத்தையும் பொருத்தமான முறையில் பயன்படுத்துதல். பிறர் உதவியை நாடியும் இதனைச் செய்யலாம்.

கற்பித்தல் செயல்பாடு:

அறிமுகம்:

தமிழ்மொழியைப் பெண்ணாக உருவகப்படுத்தி, கவிஞர் கண்ணதாசன் இயற்றிய பாடலைப் படிப்போம் வாருங்கள்!

தமிழ்மொழி

முச்சங்கங் கூட்டி

முதுபுலவர் தமைக் கூட்டி

அச்சங்கத் துள்ளே

        அளப்பரிய பொருள்கூட்டி

சொற்சங்க மாகச்

         சுவை மிகுந்த கவிகூட்டி

அற்புதங்க ளெல்லாம்

         அமைத்த  பெருமாட்டி

                              -  கவிஞர் கண்ணதாசன்

இச்செய்யுளில் அமைந்துள்ள சில நயங்களைப் பற்றி அறிந்துகொள்வோம்.

மோனை நயம்

பாடலில் முதல் எழுத்து ஒன்றி வருவது (ஒன்றுபோல வருவது) மோனை. இங்கு முதல் எழுத்தை மட்டும் அடிக்கோடிட வேண்டும். முழுச்சீரையும் அடிக்கோடிடக் கூடாது.

பாடலில் உள்ள மோனைச் சொற்கள்

முச்சங்கம்- முதுபுலவர்
அச்சங்கம்- அளப்பரிய
அற்புதங்கள் -  அமைத்த

அடுத்து எதுகை நயத்தைப் பற்றிப் பார்க்கலாமா?

எதுகைநயம்

பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது (ஒன்றுபோல வருவது) எதுகை.

இரண்டாம் எழுத்தை மட்டும் அடிக்கோடிட வேண்டும்.

முழுச்சீரையும் அடிக்கோடிடக் கூடாது.

பாடலில் உள்ள எதுகைச் சொற்கள்

முச்சங்கம்-   அச்சங்கம்
சொற்சங்கம் -  அற்புதங்கள்

இனி இயைபு நயத்தைப் பற்றி அறிவோமா?

இயைபு நயம்

பாடலின் ஒவ்வோர் அடியிலும் இறுதி எழுத்தோ, சீரோ ஒன்றிவருவது இயைபு.

இப்பாடலில் 'கூட்டி' என்ற சொல் மூன்று அடிகளின் இறுதியிலும் வந்ததால் இது
இயைபு.

முச்சங்கங் கூட்டி
        முதுபுலவர் தமைக் கூட்டி
அச்சங்கத் துள்ளே
        அளப்பரிய பொருள்கூட்டி
சொற்சங்க மாகச்
          சுவை மிகுந்த கவிகூட்டி

கூற்று

கூற்று என்பதற்குக் கூறுதல் என்பது பொருள். யாரிடம் கூறுவது? யாரைப் பற்றிக்
கூறுவது? என்ற முறையில் கூற்று அமையும்.

"அற்புதங்களெல்லாம் அமைந்த பெருமாட்டி" என்பதில் 'பெருமாட்டி' என்று
கண்ணதாசன் யாரைக் குறிப்பிடுகிறார்?

கவிஞர் கண்ணதாசன், பெருமாட்டி என்று தமிழ்மொழியைக் குறிப்பிடுகிறார்.

"முச்சங்கங் கூட்டி முதுபுலவர் தமைக்கூட்டி" என்பது யார் கூற்று?

இது கவிஞர் கண்ணதாசன் அவர்களின் கூற்று ஆகும்.

சொற்பொருள்

பாடலில் குறிப்பிடப்படும் சொல்லுக்குப் பொருள் கூறுதல்.

எடுத்துக்காட்டு

'அற்புதம்' என்ற சொல்லுக்கு அருமை, புதுமை, அதிசயம், அழகு, வியப்பு என்னும்
பல பொருள்கள் உண்டு. இப்பாடலில் இச்சொல், புதுமை என்னும் பொருளை
உணர்த்துகிறது.

மாணவர் செயல்பாடு

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு

என்ற திருக்குறளில் பயின்றுவரும் எதுகை, மோனை நயங்களையும் அருஞ்சொற்
பொருளையும் எழுதுங்கள்.

***************     *************    ***********

மதிப்பீட்டுச் செயல்பாடுகள்

வருமுன் காப்போம்!

மட்டுக் குணவை உண்ணாமல்
      வாரி வாரித் தின்பாயேல்
திட்டு முட்டுப் பட்டிடுவாய்!
      தினமும் பாயில் விழுந்திடுவாய்!

தூய காற்றும் நன்னீரும்
           சுண்டப் பசித்த பின்உணவும்
நோயை ஓட்டி விடும் அப்பா!
           நூறு வயதும் தரும் அப்பா!

அருமை உடலின் நலமெல்லாம்
          அடையும் வழிகள் அறிவாயே!
வருமுன் நோயைக் காப்பாயே!
            வையம் புகழ வாழ்வாயே!

                  - கவிமணி தேசிக விநாயகனார்.

வினாக்கள்

1 ) பாடலில் இடம்பெற்றுள்ள எதுகை, மோனை, இயைபுச் சொற்களைக் கண்டறிந்து அட்டவணையை நிரப்புக.

மோனை

* திட்டு
* தினமும் 
* அருமை 
* அடையும் 

எதுகை

* திட்டு
* முட்டுப்
*அருமை
* வருமுன்

இயைபு

* பட்டிடுவாய்
* விழுந்திடுவாய்
* அறிவாயை 
* காப்பாயே 
* வாழ்வாயே 

2 ) " வருமுன் நோயைக் காப்பாயே"-இக்கூற்று யாருடையது?

  பாடலின் ஆசிரியரான கவிமணி தேசிக விநாயகனாரின் கூற்று.

3. கீழ்க்காணும் சொற்களுக்கு அகராதியைப் பயன்படுத்திப் பொருள் காண்க.
  
அ) மட்டு  -   அளவு 
ஆ) வையம்  - உலகம்

4. விடுபட்ட சொல்லை நிரப்புக.

தூயகாற்றும்  நன்னீரும் 
சுண்டப் பசித்த பின்உணவும்

************     *************   *************



Post a Comment

0 Comments