ரக்ஷா பந்தன் விழா. 22 - 08 - 2021
சகோதரத்துவம் போற்றும் ரக்ஷ பந்தன் விழா
மனித இனம் கொண்டாட வேண்டிய மகத்தான விழா.
இந்தியாவில் கலாச்சாரம் போற்றும் பல விழாக்கள் கொண்டாடப்பட்ட போதும் , இந்த விழா தனித்துவம் வாய்ந்த ஒரு விழாவாகச் சிறப்பிக்கப் படுகிறது. சகோதர பந்தத்தை உணர்த்தும் உன்னத நாள் இது. சகோதர , சகோதரிகளுக்கான தினமாக ரக்ஷ பந்தன் கொண்டாடப் படுகிறது. இந்திய இறையாண்மை கூறும் தேச உறுதிமொழியிலும் சகோதரத்துவம் பயிற்றுவிக்கப் படுகிறது ,அத்தகைய இனிய சொல் " இந்தியர்கள் அனைவரும் உடன் பிறந்தவர்கள் "( All Indiana's are brothers and sisters, ) என்னும் மனித இனத்தை ஒன்றிணைக்கும் பதம். மேலும் ஒரு மகுடமாக இந்தியரைத் தலைநிமிரச் செய்த தத்துவ வார்த்தை , உலகமே இந்தியாவை உற்று பார்க்கச் செய்தது. வீரத்துறவி விவேகானந்தர் அயல்நாட்டரங்கில் அரங்கம் நிறைந்த கூட்டத்தில் அவர் உதிர்த்த விவேக வார்த்தைகள் " சகோதர சகோதரிகளே" ( Dear brother's and sister's ). இவற்றைக் கூறியதன் மூலம் நமது சகோதரத்துவத்தை உலகம் வணங்கியது. அத்தகைய பண்பாட்டில் சிறந்த நாம், ஒரு பாசம் மிகு வரலாற்றைப் பண்டிகையாகக் கொண்டாடுவது மிகையல்ல.
வட இந்தியாவில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் ரக்ஷ பந்தன் விழா சகோதர , சகோதரிகளுக்கு இடையேயான உறவுக்கு உரம் சேர்ப்பதாகும். குருதி சம்பந்தப்பட்ட உறவுமட்டுமல்லாது, நட்புக்கொண்ட சொந்தமும் சகோதரத்துவம் வாய்ந்தது. ரக்ஷ பந்தன் விழா ஆண்டுதோறும் ஆவணி மாத பெளர்ணமி நாளில் கொண்டாடப் படுகிறது.
ரக்ஷ பந்தன் கொண்டாடும் முறை
ரக்ஷ பந்தன் விழா நாளில் பெண்கள் புத்தாடை அணிந்து இறைவனை வணங்கி, இனிப்புகள் வழங்கி தாங்கள் சகோதரராக கருதுவோருக்கு, அச்சகோதரனின் நலம் காக்க வேண்டி , அவர் மணிக்கட்டில் மஞ்சள் நூலால் ஆன " ராக்கி" யெனும் புனித நூலை அணிவிப்பார். இந்த ராக்கியை கட்டும்வரை உண்ணா நோன்பிருப்பர்.
அப்பெண்ணைச் சகோதரியாக ஏற்றுக் கொண்ட சகோதரன் மகிழ்ந்து பரிசு வழங்கி , இனிவரும் காலங்களில் , சகோதரியின் பாதுகாப்புக்கு உறுதுணையாக வும், பிரச்சினைக்குரிய நேரத்தில் அவற்றில் இருந்து விடுவித்து காப்பேன் என்றும் உறுதிகூறுவதாக இவ்விழா அமைகிறது. ஒரு பெண்ணின் பாதுகாப்பு , தந்தைக்கு அடுத்து தமையன் அல்லவா? அச்சிறப்பு வாய்ந்த சகோதரன் தந்தைக்கு நிகரானவர்.
கிருஷ்ணரின் மணிக்கட்டில் மஞ்சள்சேலை நூலை திரெளபதி கட்டியதே இவ்விழா உண்டாகக்காரணம் ஆயிற்று.
ரக்ஷ பந்தன் விளைவு -- புராண கதைகள்
கிருஷ்ணர் -- திரெளபதி
சகோதர உணர்வின் மேன்மையை உணர்த்தும் ,அற்புத அண்ணன் - தங்கை பாசத்தை பறைசாற்றிய மகாபாரதம் சகாப்தம்.
மகாபாரதப் போரில் கிருஷ்ணருக்கு மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்தைக் கண்ணுற்ற திரெளபதி தன் சேலைத் தலைப்பின் சிறுபகுதியைக் கிழித்து கிருஷ்ணரின் மணிக்கட்டில் கட்டி முதலுதவி செய்தார்.
இந்த நிகழ்வின் மூலம் மனம் மகிழ்ந்த கிருஷ்ணர் திரெளபதியை சகோதரியாக ஏற்றார். இதைப் போற்றும் விதமாக ,எந்த சூழ்நிலையிலும் உன்னை கைவிட மாட்டேன்.உனக்கு ஏற்படும் பிரச்சினை எதுவாக இருந்தாலும் அவற்றிலிருந்து காப்பேன் என உறுதிபூண்டார்.
அவ்வுறுதியை காக்கும் விதமாக பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று , திரிதிராஷ்டிரனின் நீதிமன்றத்தில் திரெளபதியின் துகிலுரிய முற்பட்டப் போது காக்கும் கரமாக உதவிய கிருஷ்ணர் நீண்ட சேலையை அருளி திரெளபதியின் மானம் காத்தார்.
கிருஷ்ணரின் மணிக்கட்டில் ,திரெளபதி சேலையைக் கிழித்துக் கட்டிய நிகழ்வின் விளைவே ரக்ஷ பந்தன் விழாவாக கொண்டாடப் படுகிற து.
அலெக்சாண்டர் மனைவியும் -- போரஸ் மன்னரும்
போரஸ் மன்னரின் சகோதர உணர்வு.
சகோதர பாசத்தை வெளிப்படுத்திய உலக சரித்திரத்தின் உயர்ந்த வரலாறு.
மாவீரன் அலெக்சாண்டர் கிமு 326 -- ம் ஆண்டு இந்தியா மீது படையெடுத்து, வட இந்தியா முழுதும் கைப்பற்றிய பின் போரஸ் மன்னரிடம் போரிட்டார்.
வீரத்தில் அலெக்சாண்டரைப் போலவே சிறந்தவன் போரஸ் மன்னன். எனவே போரஸ் மன்னனின் ஆற்றலை அறிந்த அலெக்சாண்டரின் மனைவி ரோக்ஷனா என்பவர் போரில் தன் கணவரின் உயிருக்கு எந்தவிதமான தீங்கும் ஏற்பட்டக் கூடாது என ஒரு புனித நூலை பரிசாக அனுப்பினார்.
இந்தப் பரிசைக் கண்டு நெகிழ்ச்சியடைந்த போரஸ் மன்னன் ரோக்ஷனாவை சகோதரியாக ஏற்றுக் கொண்டதன் விளைவே , போரில் அலெக்சாண்டரைக் கொல்ல நேரடி வாய்ப்பு கிடைத்தும், சகோதரியின் மீது கொண்ட அன்பால் அலெக்சாண்டரை உயிருடன் விட்டு விலகினார் என்பது வரலாறு கூறும் உண்மை.
இது இந்துக்கள் கொண்டாடும் பண்டிகையாக இருந்தாலும் , சமத்துவமும், சகோதரத்துவமும் வளர மதத்தை மறந்து, இனத்தை இனம் காணாமல் செய்து குணத்தையே கூடிக் கொண்டாடுவோம்! மனித ஒற்றுமைக்காக இது போன்ற விழாக்களைப் போற்றியும், பின்பற்றியும் கொண்டாடுவது சிறப்பு. இவை ஒற்றுமையின் உருவாகக்கூட மாறலாம்.வட இந்தியாவில் தொடங்கிய வலிமையுடைய பயணம், தன் கருத்தால் கவரப்பட்டு இப்போது தென்னகத்திலும் வெற்றிக்களம் காண்கிறது. இவ்வழி இணைந்து சகோதரத்துவம் காப்போம்!
சமத்துவம் போற்றுவோம் !
பைந்தமிழில் ( Greentamil.in ) இணைந்துள்ள அனைத்துச் சகோதர , சகோதரிகளுக்கும் வாழ்த்துகள்.
சகோதரத்துவத்துடன் ,
பைந்தமிழ் குழு / Green Tamil Team
0 Comments