ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 2021 - 2022 - செயல்பாடு 1 - பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளித்தல் / REFRESHER COURSE MODULE - QUESTION & ANSWER - ACTIVITY - 1

 

           ஒன்பதாம் வகுப்பு - தமிழ் 

      புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 

                     2021 - 2022 

                செயல்பாடு - 1 

     பத்தியைப் படித்து வினாக்களுக்கு

                   விடை அளித்தல்

************     *************    **************

    வணக்கம் நண்பர்களே ! செப்டம்பர் 1 முதல் நாம் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தில் உள்ள செயல்பாடுகளை மாணவர்களுக்கு வழங்க உள்ளோம். 

     இங்கே , முதல் செயல்பாடாக உள்ள பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளித்தல் முழுமையும் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சிக் கட்டகத்தில் உள்ள செயல்பாடும் , மதிப்பீட்டுச் செயல்பாட்டின் வினாக்களுக்கு விடையும் விரிவாக வழங்கப் பட்டுள்ளது. நன்றி.

கற்றல் விளைவு:

படித்தவற்றைப் பற்றிச் சிந்தனை செய்து வினாக்கள் எழுப்பிப் புரிதலை மேம்படுத்திக்கொள்ளல் .

கற்பித்தல் செயல்பாடு:

       படித்தல் என்பது எழுதப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட பகுதியைப் படித்து அவற்றில் உள்ள கருத்துகளைப் புரிந்துகொள்ளுதல் ஆகும்.

எனவே, பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடையளிப்பதற்கு முன்னதாக, கொடுக்கப்பட்ட உரைப்பத்தியை ஓரிருமுறை தெளிவாகப் பொருளுணர்ந்து படிக்கவேண்டும்.

                   படித்த பகுதியில் இருந்து பெயர்ச்சொற்கள், வினைச்சொற்கள், பிறமொழிச் சொற்கள், தொடர்கள், மையக்கருத்து ஆகியவற்றைப் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

பத்தியைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு விடை காண்போம்.

      உழவு, கைத்தொழில், வணிகம் என்னும் மூன்றும் ஒரு நாட்டு மக்களின் நாகரிக நல்வாழ்விற்கு அடிப்படை ஆகும் என்பர். உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கியுள்ளனர். கடல் வணிகத்தில் சேரநாடு சிறப்புற்றிருந்தது. அதற்கு அந்நாட்டின் இயற்கை அமைப்பே காரணமாக அமைந்திருந்தது. 

                   சேரர்கள், வலிமை மிகுந்த கப்பற்படையை வைத்திருந்தனர். செங்குட்டுவனின் கடற்போர் வெற்றியால் அவன் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்று அழைக்கப்பட்டான். கடம்பர் என்னும் கடல் கொள்ளையர்களைச் சேரமன்னர்கள் அடக்கினர். அச்சேரர்களின் சிறந்த துறைமுகங்களில் ஒன்றாக விளங்கியது முசிறி. இங்கிருந்துதான் மற்ற நாடுகளுக்கு மிளகு, முத்து, யானைத் தந்தங்கள், பட்டு. மணி போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன. மேன்மைமிக்க புடவைகள், சித்திர வேலைப்பாடமைந்த ஆடைகள், பொன், பவளம், செம்பு, கோதுமை ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டன.

வினாக்கள்

1. ஒரு நாட்டின் நாகரிக நல்வாழ்விற்கு அடிப்படையாக விளங்குவன யாவை?

           ஒரு நாட்டின் நாகரிக நல்வாழ்விற்கு உழவுத்தொழில், கைத்தொழில், வணிகம் ஆகியவை அடிப்படையாக விளங்குகின்றன.

2. சேரநாட்டுக் கடல்வணிகச் சிறப்பிற்குக் காரணம் -------

         சேர நாட்டுக் கடல்வணிகச் சிறப்பிற்குக் காரணம் அதன் இயற்கை அமைப்பு ஆகும்.

3 .சேர நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட உணவுப்பொருள் யாது?

     இறக்குமதி செய்யப்பட்ட உணவுப்பொருள் கோதுமை. 

4 . கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் பெயர்க்காரணத்தை விளக்குக.

           சேரன் செங்குட்டுவன் கடற்போர் வெற்றியால் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்று     அழைக்கப்பட்டான்,

5. பத்தியின் மையக்கருத்தை எழுதுக.

(மையக் கருத்து என்பது பத்தியின் முதன்மையான கருத்து)

சேரர்களின் கடல் வணிகச்சிறப்பு .

***********      **********    *************

மதிப்பீட்டுச் செயல்பாடு

கீழ்க்காணும் பத்தியைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு விடை எழுதுக.

               உலகின் மிகவும் பழமையான
கைவினைக் கலைகளுள் ஒன்று
மண்பாண்டக்கலை. சிந்துசமவெளி அகழாய்வில் பானை ஓடுகள் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. நாகை மாவட்டம்
செம்பியன் கண்டியூரில் கலையழகு மிகுந்த மட்கலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் ஏராளமான சுடுமண் பொருள்கள் கிடைத்துள்ளன.

              இவையனைத்தும் தமிழருக்கும் மண்பாண்டக் கலைக்கும் உள்ள தொடர்பைக் காட்டும் சான்றுகள் ஆகும். குடம், தோண்டி. கலயம், கடம், மூடி, உழக்கு, அகல், உண்டியல், அடுப்பு, தொட்டி ஆகிய அனைத்தும் களிமண்ணால் செய்யப்படும் சில
பொருள்களாகும். குளங்கள், ஆற்றங்கரைகள், வயல்வெளிகள் ஆகிய இடங்களில் இத்தகைய களிமண் கிடைக்கும்.

      பானை செய்தலைப் பானை வனைதல் என்று சொல்வது மரபு. மண்பாண்டங்களில் சமைத்த உணவு நல்ல சுவையுடன் இருக்கும். மேலும், உடல்நலத்திற்கும்நல்லது. மண் பானையில் வைத்த தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கும். இப்போது மண்பாண்டங்களின் பயன்பாடு குறைந்து வருகிறது.ஆனால், இன்றும்திருவிழாக்களிலும் சமயச்சடங்குகளிலும் மண்பானைகள் பயன்படுத்துவதைக் காணமுடிகிறது.

வினாக்கள்

1.உரைப்பகுதியில் பழமையான கலையாகக் குறிப்பிடப்படுவது எது?
     
            மண்பாண்டக்கலை

2 ) களிமண்ணால் செய்யப்படும் இசைக் கருவி எது என்பதைத் தெரிவு செய்க.

அ. மத்தளம்
ஆ. கடம்
இ. நாதஸ்வரம்
ஈ. வீணை

விடை : ஆ ) கடம் 

3. வீடுகளில் பயன்படுத்தும் மண்பாண்டங்கள் சிலவற்றின் பெயர்களைக் கூறுக.
 
* குடம் 
* தோண்டி 
* கலயம்
* கடம்
* மூடி
* உழக்கு
* அகல்
* உண்டியல்
* அடுப்பு 
* தொட்டி

4. உடல் நலத்திற்கு மண்பாண்டங்கள் எவ்வகையில் உதவுகின்றன?

   *  மண்பாண்டங்களில் சமைத்த உணவு நல்ல சுவையுடன் இருக்கும்.

  * உடல் நலத்திற்கும் நல்லது.
 
  * மண்பானையில் வைத்த தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கும்.

5. பாண்டம் செய்யப் பயன்படும் மண் எங்கிருந்து கிடைக்கிறது?

* குளங்கள்
* ஆற்றங்கரைகள் 
* வயல்வெளிகள்

6. பத்திக்கு ஏற்ற தலைப்பை எழுதுக.
 
           மண்பாண்டக்கலை

***************    ***********   *************



Post a Comment

0 Comments