பத்தாம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 2021 - 2022 - செயல்பாடு 1 , பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளித்தல் / 10th TAMIL - REFRESHER COURSE - ACTIVITY - 1

 

             பத்தாம் வகுப்பு - தமிழ் 

             தமிழ்நாடு அரசின் 

   புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 2021 - 2022

             செப்டம்பர் 2021 - மாத 

கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள்

                  செயல்பாடு - 1 

                 விடையளித்தல்

கற்றல் விளைவு:

படித்தவற்றைப் பற்றிச் சிந்தனை செய்து வினாக்கள் எழுப்பிப் புரிதலை மேம்படுத்திக்கொள்ளல்,

கற்பித்தல் செயல்பாடு :

அறிமுகம்:

                        உரைப்பத்தியைப் படித்துப் புரிந்துகொள்ளுதல், அதன் மையக்கருத்தை அறிதல், அதிலுள்ள புதிய சொற்களின் பொருளைக் கண்டறிதல், பத்தியின் தொடர் அமைப்பைத் தெரிந்து கொள்ளுதல் ஆகிய திறன்களைப் பின்வரும் எடுத்துக்காட்டின் உதவியோடு பெறுவோம்.

உடலில் உறுதி கொண்டவரே, உலகில் மகிழ்ச்சி உடையவராவார். உடல் உறுதியற்ற நோயாளருக்கு வாழும் இடமும் செல்வமும் இனிய வாழ்வினைத் தருவதில்லை. சுத்தம் நிறைந்துள்ள எல்லா இடங்களிலும் சுகம் உண்டு. நாள்தோறும் நீங்கள் தூய்மையைப் போற்றிபாதுகாத்தால்நீட்டித்தவாழ்நாளைப் பெறலாம். காலையிலும் மாலையிலும் நடைப்பயிற்சி மேற்கொண்டு நல்ல காற்றைச் சுவாசித்து வருவோரை நோய் அணுகாது அவர் உயிரைக் கவர எமனும் அணுக மாட்டான்.

              கொடுக்கப்பட்டுள்ள பத்தியை முதலில் நன்கு பிழையின்றிப் படித்துப் பார்க்க வேண்டும். அடுத்து எப்படிப்பட்ட வினாக்கள் வினவப்பட்டுள்ளன என்று சிந்தித்து வினாக்களுக்கு விடை எழுதவேண்டும்.

விளக்கம் :

வினா 1: உலகில் மகிழ்ச்சி உடையவர் யார்?

மேற்கண்ட வினாவிற்குப் பத்தியிலுள்ள 'உலகில் மகிழ்ச்சி உடையவர்' என்ற தொடர் இடம்பெற்றுள்ள சொற்றொடரைப் படித்துப் பார்க்கவும். அதற்கான விடை அமைந்துள்ள தொடரான, 'உடலின் உறுதி கொண்டவரே உலகில் மகிழ்ச்சி உடையவர்.' என்னும் தொடரை விடையாக எழுதவும்.

வினா 2: சுத்தம் நிறைந்துள்ள எல்லா இடங்களிலும் ------ உண்டு.
இவ்வினாவிற்கு விடையாகப் பத்தியில் 'சுகம்' என்ற சொல் இடம்பெற்றுள்ளது.

வினா 3:

         இப்பத்தியின்மையக்கருத்தை எழுதுக என்றவினா கேட்டால், அதற்கு உடலினை
உறுதி செய்து, நோயற்ற வாழ்வு வாழ, சுத்தமாக இருக்க வேண்டும் என்று விடை
எழுதவேண்டும். மையக்கருத்து என்பது பத்தியில் உள்ள முக்கிய கருத்தை
எழுதுவதுதான்.

வினா 4:

           தொடர் அமைத்து எழுதுக, என்று வினா கேட்கும்பொழுது, நீண்ட சொற்றொடராக
எழுதக் கூடாது. சிறுசிறு தொடர்களாக எழுத வேண்டும். அப்போதுதான், பொருள் புரிந்து
படிக்க முடியும். அதனைப்போன்று சொற்களையும் சிறுசிறு சொற்களாகத்தான் எழுத வேண்டும்.

இவ்வாறாக ஒவ்வொரு வினாவையும் நன்கு படித்துப் புரிந்து கொண்டு
விடையளிக்க வேண்டும்.

*************   ************   *************

மதிப்பீட்டுச் செயல்பாடு:1

உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

                  ஏறுதழுவுதல் என்பது தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு
பெயர்களில் அழைக்கப்படுகின்றது. அது மாடு பிடித்தல், மாடு அணைதல், மாடு விடுதல், மஞ்சுவிரட்டு, வேலி மஞ்சுவிரட்டு, எருதுகட்டி, காளைவிரட்டு, ஏறுவிடுதல், சல்லிக்கட்டு எனப்பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது. சல்லிக்கட்டு பேச்சுவழக்கில் திரிபுற்று, ஜல்லிக்கட்டு என்றாகியது.சல்லி என்பது மாட்டின்கழுத்தில் கட்டப்படுகிறவளையத்தைக் குறிக்கும். புளியங் கொம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணிவிக்கும்
வழக்கம் தற்போதும் உள்ளது. 

           அக்காலத்தில் புழங்கிக்கொண்டிருந்த சல்லி நாணயங்களைத் துணியில் முடிந்து மாட்டின் கொம்புகளில் கட்டும் பழக்கமும் இருந்தது. மாட்டைத் தழுவும் வீரருக்கு அந்தப் பணமுடிப்புச் சொந்தமாகும்.

வினாக்கள்

1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களைக் கொண்டு தொடர் அமைத்து எழுதுக.
1.வளையம்
2. சல்லி நாணயம்
3.மஞ்சுவிரட்டு
4. பணமுடிப்பு
5.புழங்கிக்கொண்டிருந்த

விடை :

  ஏறுதழுவுதல் மஞ்சுவிரட்டு , சல்லிக்கட்டு முதலிய பெயர்களில் அழைக்கப் படுகிறது.சல்லிக்கட்டில் சல்லி என்பது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தைக் குறிக்கிறது. அக்காலத்தில் புழங்கிக் கொண்டிருந்த சல்லி  நாணயங்களே மாடு பிடிக்கும் வீரருக்கான பணப்பரிசாகும்.

2. சரியா? தவறா? என எழுதுக.

1. புளியங்கொம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணிவிக்கும்
பழக்கம் தற்போதும் உள்ளது.

விடை :  சரி 

2. மாட்டைத் தழுவும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமில்லை.

விடை : தவறு 

3. ஏறுதழுவுதல் குறித்து உங்களுக்குத் தெரிந்த செய்திகளை ஐந்து வரிகள்
எழுதுக.

* ஏறுதழுவுதல் தமிழர்களின் பண்பாட்டோடு தொடர்புடைய நிகழ்வாகும்.

* ஏறுதழுவுதல் மாட்டுக்கும் , மனிதருக்கும்  இடையேயான ஓர் உணர்வு பூர்வமான தொடர் நிகழ்வாகும்.

* ஏறுதழுவுதலில் அவிழ்த்து விடப்பட்ட காளைகள் நிலம் அதிர ஓடுவதால் பூமித்தாய் மகிழ்வதாக மக்கள் நம்புகின்றனர்.

4. கோடிட்ட இடத்தை நிரப்புக.

கொடுக்கப்பட்டுள்ள பத்திக்கு ஏற்ற தலைப்பு.

விடை : ஏறுதழுவுதல்

5.ஏறுதழுவுதலுக்கு வழங்கும் வெவ்வேறு பெயர்களை எழுதுக.

 * மாடுபிடித்தல்

* மாடு அணைதல் 

* மாடு விடுதல்

* மஞ்சு விரட்டு 

* வேலி மஞ்சுவிரட்டு 

* எருதுகட்டி 

*  காளைவிரட்டு 

* ஏறுவிடுதல்

* சல்லிக்கட்டு 

**************   *************   ************

விடைத் தயாரிப்பு

திரு.மணி மீனாட்சி சுந்தரம்

தமிழாசிரியர் ,  அ.மே.நி.பள்ளி ,

சருகுவலையபட்டி , மேலூர் , மதுரை.

***************     **************   **********

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    ************






Post a Comment

1 Comments