12 ஆம் வகுப்பு - தமிழ் - ஆகஸ்ட் மாத ஒப்படைப்பு 3 - இயல் 3 - பண்பாடு - சுற்றத்தார் கண்ணே உள - வினாக்களும் விடைகளும் / 12th - JULY ASSIGNMENT - 3 - EYAL 3

 

          12 ஆம் வகுப்பு - தமிழ் 

     ஆகஸ்ட் மாத  ஒப்படைப்பு 

         வினாக்களும் விடைகளும

                     இயல் -3

(பண்பாடு - சுற்றத்தார் கண்ணே உள)


                        பகுதி-அ


1.ஒருமதிப்பெண்வினாக்கள்


1 ) குடும்பம்' என்ற சொல் முதன்முதலில் பயின்று வந்த நூல் .....

அ) தொல்காப்பியம் ஆ) திருக்குறள் 

இ) நன்னூல் ஈ) புறநானூறு

விடை : ஆ ) திருக்குறள்


2 ) தற்காலிகத் தங்குமிடத்தை -------  என்று புறநானூறு குறிப்பிடுகின்றது.

அ) தம்மனை ஆ) தாய்மனை 

இ)புக்கில்         ஈ) நும்மனை

விடை : இ ) புக்கில்

3 )  சேரநாட்டு மருமக்கள் தாயமுறை பற்றிக் கூறும் நூல்

அ) பதிற்றுப்பத்து ஆ) கலித்தொகை 

இ) நற்றிணை ஈ) புறநானூறு

விடை : அ ) பதிற்றுப்பத்து 

4 ) --------   முறையில் குடும்பத்தின் சொத்தும் வளங்களும் செல்வங்களும் பெண்களுக்குச் சென்று சேர்ந்தன.

அ) தந்தை வழி        ஆ) தனிக்குடும்பம்

இ) விரிந்த குடும்பம்     ஈ) தாய்வழி

விடை : ஈ ) தாய்வழி 

5 ) ' கம்பராமாயணம்' எத்தனைக் காண்டங்களை உள்ளடக்கியது?

அ) மூன்று     ஆ) ஐந்து

இ)ஆறு           ஈ) ஏழு

விடை : இ ) ஆறு

6 ) சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள், சங்ககாலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன. அவை -------    --------

அ) அறவோர், துறவோர்

ஆ) திருமணமும் குடும்பமும்

இ)மன்றங்களும் அவைகளும்

ஈ) நிதியமும் சுங்கமும்

விடை : ஆ ) திருமணமும் குடும்பமும்

7 ) பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.

அ) உரிமைத்தாகம்  -   1.பாரசீக கவிஞர்

ஆ) அஞ்ஞாடி             - 2 பூமணி

இ) ஜலாலுத்தீன் ரூமி -    3. பக்தவச்சல பாரதி

ஈ) தமிழர் குடும்பமுறை   - 4. சாகித்திய                                                               அகாதெமி

அ ) 2,4,3,1   ஆ ) 3,4,1,2 

இ )2 4,1,3  ஈ ) 2,3,4,1

விடை : இ ) 2 , 4 , 1 , 3

8 ) இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக என்று ஜலாலுதீன் ரூமி குறிப்பிடுவது

அ) வக்கிரம் ஆ) அவமானம் 

இ) வஞ்சனை ஈ) இவை அனைத்தும்

விடை : ஈ ) இவை அனைத்தும்

9 ) ' உவா உற வந்து கூடும்
உடுபதி, இரவி ஒத்தார் யார் யார்?

அ) சடாயு, இராமன்   ஆ) இராமன் குகன்

இ) இராமன், சுக்ரீவன்    ஈ) இராமன், சவரி

விடை : இ ) இராமன், சுக்ரீவன்

10 )எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே" - எனும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது


அ)தனிக்குடும்ப முறை

ஆ)விரிந்த குடும்ப முறை

இ) தாய்வழிச் சமூகமுறை

ஈ) தந்தைவழிச் சமூகமுறை

விடை : தந்தை வழிச்சமூகமுறை


               பகுதி - ஆ 

குறுவினா


11. புக்கில், தன்மனை - சிறு குறிப்பு எழுதுக.

  புக்கில் : தற்காலிகத் தங்குமிடத்தைப் புக்கில் எனக்குறிப்பிடுகிறது புறநானூறு.

தன்மனை : திருமணத்திற்குப் பின் கணவனும் , மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து , தனியாக வாழுமிடம் ' தன்மனை ' எனப்படும்.


12 .நிலையாமை குறித்து, சவரி உரைக்கும் கருத்து யாது?

 நிலையாமை குறித்து சவரி கூற்று

 * முழுமுதற் பொருளாகிய இராமனைக் கண்டதும் நிலையாமைத் தன்மையுடைய உலகப் பற்று அழிந்தது.

* அளவற்ற காலம் மேற்கொண்டிருந்த தவம் பலித்தது.

* பிறவி ஒழிந்தது.


13 .எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுத்தீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?

        எதிர்பாராத நிகழ்வுகளை , அவ்வப்போது வந்து செல்லும் விருந்தாளியாக ஜலாலுதின் ரூமி உருவகப்படுத்துகிறார்.


14 . துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது' என்ற இராமனின் கூற்று பின்வரும் இரு பழமொழிகளில் எதற்குப் பொருந்தும்?


அ. நிழலின் அருமை வெயிலில் தெரியும் 

ஆ. சிறு துரும்பும் பல்குத்த உதவும்

விடை : அ ) நிழலின் அருமை வெயிலில் தெரியும்.

15. சங்ககாலத்தில் தாய்வழிச் சமூக முறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் யாவை?

* சங்க காலத்தில் , கணவன் சமூகத்திற்குத் தாயே தலைமை ஏற்றிருந்தாள்.

* தாய்வழியாகவே குலத்தொடர்ச்சி குறிக்கப் பட்டது.

* சேரநாட்டு ' மருமக்கள் தாயமுறை ' இதற்குச் சிறந்த சான்றாகும்.

* பெண் குழந்தைகளின் பேறு , முதன்மையாகக் கருதப்பட்டது.

                                 பகுதி-3

III.சிறுவினா

16. பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம். விளக்கம் எழுதுக.

     கணவன் , மனைவி , மகன் ஆகிய மூவரும் வாழ்கின்ற தனிக்குடும்பம் வளர்ச்சி அடைந்த போது தந்தையும் சேர்ந்து வாழ்ந்த நேர்வழி  விரிந்த குடும்பமே , மேலும் வளர்ந்து கூட்டுக் குடும்பமாக அமைந்தது.

    கணவனின் சகோதர , சகோதரிகள் , தாய் , தந்தையர் இணைந்த குடும்பம் வளர்ந்து , இன்றைய கூட்டுக் குடும்பமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இவ்வகையில் பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியாக இன்றைய கூட்டுக் குடும்பம் விளங்குகிறது.


17. குகனோடு ஐவராகி, வீடணனோடு எழுவரான நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுக.

 * காட்டிற்குப் போன இராமன் , கங்கையைக் கடக்க வேடுவர் தலைவன் குகன் உதவினான். பேரரசனாக இருப்பினும் , வேடன் குகனிடம் நட்பு முகிழ்த்ததால் , உடன் பிறந்தவனாக ஏற்றான்.

* கிட்கிந்தையில் அனுமன் அழைத்து வந்த சுக்ரீவனை  " உன் கிளை எனது.  என் காதல் சுற்றம் உன் சுற்றம் ; நீ என் இன்னுயிர்த் துணைவன் " எனக்கூறி உடன் பிறந்தவனாக இராமன் ஏற்றான்.

* சீதையைக் கவர்ந்து வந்தது தவறெனக் கூறியதை ஏற்காமல் , அதற்காகக் கடிந்த அண்ணன் இராவணனை விலக்கித் தன்னிடம் அடைக்கலம் வேண்டி வந்த வீடணனை இராமன் , உடன் பிறந்தவனாக ஏற்றான்.  இவையே " குகனோடு ஐவராகி , வீடணனோடு எழுவரான " நிகழ்வாகும்.


18. “வருபவர் எவராயினும்
நன்றி செலுத்து"- இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

 இடம் : இக்கவிதை வரி , என்.சத்தியமூர்த்தி மொழி பெயர்த்த கவிதையில் , ஜலாலுதீன் ரூமியின் ' விருந்தினர் இல்லம் ' என்னும் கவிதையில் இடம்பெற்றுள்ளது.

பொருள் விளக்கம்

          விருப்பு வெறுப்பின்றி நம்மை வந்தடையும் வக்கிரம் , அவமானம் , வஞ்சனை முதலானவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்க வேண்டும்.ஏனெனில் , ஒவ்வொருவரும் நெடுந்தூரத்திலிருந்து நமக்கு வழிகாட்டுவதற்காக அனுப்பப்படுகிறார். எனவே , வருபவர் எவராயினும் , வரவேற்று நன்றி செலுத்த வேண்டுமென்கிறார் ஜலாலுதீன் ரூமி.


19. தாயும் தந்தையும் பணிக்குச் செல்லும் இன்றைய சூழலில் குடும்ப உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் குடும்பத்துக்குச் செய்யும் உதவிகள் யாவை?

* கூட்டுக்குடும்பத்தில் வாழ்கின்ற நான் தாத்தா , பாட்டிக்கு உதவி செய்வேன்.

* பெற்றோர் , பணிக்குச் செல்வதால் குடும்ப வேலைகளைப் பகிர்ந்து கொள்வேன்.

* வீட்டின் தேவைக்கு  தண்ணீர் கொண்டு வருதல் , கடைக்குச் செல்லுதல் , காய்கறிகள் வாங்கி வருதல் போன்ற வேலைகளையும் செய்வேன்.

* எனது ஆடைகளே நானே துவைத்துக் கொள்வேன்.

* அப்பாவுடைய இருசக்கர வாகனம் , எனது மிதிவண்டி ஆகியவற்றை விடுமறை நாட்களில் துடைத்துச் சுத்தம் செய்வேன்.

* என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.


20. சடாயுவைத் தந்தையாக ஏற்று, இராமன் ஆற்றிய கடமையை எழுதுக.

இராமன் சடாயுவுக்குச் செய்த இறுதிக்கடன்: 

    சீதையைச் சிறையெடுத்த இராவணனை எதிர்த்துப் போரிட்ட சடாயு இராமனிடம் செய்தியைக் கூறி இறந்துவிடுகிறான். அக்கழுகு வேந்தனையும் தன் தந்தையாகவே கருதிய இராமன் அவனுக்கு இறுதிச் சடங்குகள் செய்கிறான்.

    சிறப்பான அகிற்கட்டைகளையும், சந்தனக் கட்டைகளையும் இராமன் கொண்டு வந்துவைத்தான். தேவையான அளவு தருப்பைப் புற்களையும் ஒழுங்காக அடுக்கினான். மலர்களைக் கொண்டு வந்து தூவினான். மணலினால் மேடை அமைத்தான் ; நன்னீர் கொணர்ந்தான். இறுதிச்சடங்கு செய்யக்கூடிய மேடைக்குத் தன் தந்தையாகிய சடாயுவைத் தூக்கி வந்தான். சொல்லவேண்டிய உறுதிமொழிகளைக் கூறி சிதைக்கு எரியூட்டினான். நெஞ்சைக் கசியவைக்கும் இந்நிகழ்வைப் பின்வரும் பாடல் விளக்குகிறது.

இந்தளம் எனைய என்ன கார்

அகில் ஈட்டத்தோடும்

சந்தனம் குவித்து வேண்டும்

தருப்பையும் திருத்தி, பூவும்

சிந்தினன் மணலின் வேதி

தீது அற இயற்றி தெண்நீர்

தந்தனன் தாதை தன்னைத் தடக்

கையான் எடுத்துச் சார்வான்



                                 பகுதி - ஈ


IV.நெடுவினா


21. குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்றும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது - எவ்வாறு? விளக்குக.

மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு

முன்னுரை

      குடும்பம் எனும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் எனும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது; குடும்பம் தொடங்கிக் குலம், கூட்டம், பெருங்குழு, சமூகம் என்ற அமைப்புவரை விரிவு பெறுகிறது. ஆதலின், குடும்பமே மனித சமூகத்தின் அடிப்படை அலகாக உள்ளது. வாழுங்காலம் முழுவதும் தொடர்ந்து வேறு எந்த நிறுவனமும் இந்த அளவுக்கு மனிதனைச் சமூகவயப்படுத்தும் பணியைச் செய்ததில்லை.

குடும்பம்

               குடும்ப அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை, திருமணமே. குடும்பம், திருமணம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தே செயல்படுகின்றன நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல. இன்று நாம் வழங்கும் 'திருமணம்', 'குடும்பம்' ஆகிய இரண்டு சொற்களுமே.

மணந்தகம்

             உயிரிகளைப்போன்றே குடும்பமும் தோன்றுகிறது; வளர்கிறது ; பல கட்டங்களைக் கடக்கிறது. அதன் வாழ்க்கைச் சுழற்சியில் பல வடிவங்களில் நிலைமாற்றம் பெறுகிறது. இத்தகைய நீண்ட பாதையில் குடும்பத்தின் தொடக்கம் திருமணமே. மணம்புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக்கட்டமே ' மணந்தகம்' (Family of procreation) எனப்படுகிறது.

தாய்வழிக் குடும்பம்

                 சங்ககாலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன் இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் தாய முறை (Matrilocal) இருந்துள்ளது. திருமணத்திற்குப்பின் மனைவியின் இல்லத்துக்குச் சென்று கணவன் வாழ்வதே நடைமுறையாக இருந்துள்ளது.

தனிக்குடும்பம்

                     தனிக்குடும்பம் (nuclear Family) தோன்றுவதற்கான தொடக்கநிலைக் குடும்பங்கள். பற்றிச் சங்க இலக்கியங்கள் மிகுதியாகப் பேசியிருக்கின்றன. இளமகவுநிலைக்குடும்பங்களின்காட்சிகளை ஐங்குறுநூறு தெளிவுபடுத்துகிறது. “மறியிடைப் படுத்த மான்பிணை

போல்” மகனை நடுவணாகக்கொண்டு தலைவனும் தலைவியும் வாழ்ந்திருக்கின்றனர்

                                             (ஐங்குறுநூறு 401.)
விரிந்த குடும்பம்

             இல்லற வாழ்வின் இறுதிக் காலத்தில் பெருமைகள் நிறைந்த மக்களுடன் நிறைந்து,
அறத்தினை விரும்பிய சுற்றத்தோடு சேர்ந்து, தலைவனும் தலைவியும் மனையறம் காத்தலே இல்வாழ்வின் பயனாகும் எனச் சங்ககால மக்கள் எண்ணினார்கள். விரிந்த குடும்பம் பற்றி இக்கருத்தினைத் தொல்காப்பியமும் பதிவு செய்கிறது.

முடிவுரை:

     சங்கச் சமூகம் குடும்பம் என்ற அமைப்பை அடிப்படை அலகாகக் கொண்டிருந்த
நிலையைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. அதன் தொடர்ச்சியாகவே இன்றைய சமூக அமைப்பும் கூட்டுக்குடும்பம், தனிக்குடும்பம் என்ற அலகுகளைக் கொண்டதாகவும் தந்தைவழிக் குடும்ப அமைப்பைக் கொண்டதாகவும் இருக்கிறது. தொன்மைமிக்க இக்குடும்ப அமைப்பு முறை தமிழ்ச் சமூகத்தின் அடையாளப் பெருமிதமாகும்.

****************    **********   **************


22 பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன், பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவுநிலையைப் பாடப்பகுதி வழி நிறுவுக.

பண்பின் படிமம் இராமன்

முன்னுரை

            இராமன் அன்பின் நாயகன்; பண்பின் படிமம்; நட்பின் அடையாளம், பாசத்தின் பிழியல், நட்பின் சின்னம். இக்கருத்துக்களை அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம் ஆகியவற்றைக் கொண்டு காண்போம். குகனிடம் கூறிய அன்புமொழிகள்: இராமன் கானகத்தில் துன்புறுவானே எனக் குகன் வருந்தினான். அவன் மனநிலையை உணர்ந்தான் இரர்மன். குகனைப் பார்த்துக் கவலற்க என்ற தொனியில் குகனே, துன்பம் ஒன்று இருந்தால் தான் இன்பம் வரும். துன்பத்திற்குப் பின் இன்பம் உறுதியாக உண்டு. நமக்கிடையே ஏற்படும் இப்பிரிவிற்குப்பின் சின்னாளில் நட்பும் அன்பும் தொடரும் என்றான்.

அவன் தன் அன்பின் வெளிப்பாடு,

அன்பு உள, இனி, நாம் ஓர்

ஐவர்கள் உளர் ஆனோம்

என்ற வரிகளில் வெளிப்படுகிறது.

சவரியிடம் காட்டிய அன்பு: 

          இராமன் மீது மிகுதியான அன்பும் பக்தியும் கொண்டவள் சவரி. காப்பியத்தின் போக்கில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியவள். அன்பினளாகிய சவரியிடம் தாயிடம் காட்டிய அன்பை இராமன் காட்டினான். அவன்தன் அன்பின் வெளிப்பாட்டைப் பின்வரும் வரிகள் உணர்த்துகின்றன.

...... அன்னாட்கு

இன்னுரை அருளி, தீது இன்று இருந்தனை போலும் என்றான்

முன் இவற்கு இது என்று எண்ணல் ஆவது
ஓர்மூலம் இல்லான்”.

இவனுக்கு முன்னர் யாரும் இப்படி இருந்ததில்லை என ஒப்புமை காட்ட இயலாத
முதற்பொருளாம் இராமன் சவரியிடம் இனிதாகப் பேசினான். தன்னை நினைத்துத் தவமிருந்த சவரியிடம் இவ்வளவு காலம் நீ. துன்பமின்றி இருந்தாயோ? என நலம் விசாரித்தான்.

உயிர்நண்பன் சுக்கிரீவன் : 

          சுக்கிரீவனை உயிர் நண்பனாகப் பெற்ற இராமன் கூறிய அன்பு மொழிகள், பல.
இராமன் சுக்கிரீவனிடம், இனி நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? விண்ணிலும் மண்ணிலும் உள்ள உன் பகைவர் என் பகைவர். தீயவராயினும் உன் பகைவர் என் பகைவர். உன் நண்பர்கள் என் நண்பர்கள். உன் உறவினர் என் உறவினர். அன்புடைய உன் சுற்றத்தினர்
என் சுற்றத்தினர். நீ என் உயிர் நண்பன் என உணர்ச்சி மேலிடக் கூறினான்.
இவ்வினிய உணர்ச்சிமிகு பாடல் வரிகள் வருமாறு.

மற்று இனி உரைப்பது என்னே?
வானிடை மண்ணில் நின்னைச்
செற்றவர் என்னைச் செற்றார்
தீயரே எனினும் உன்னோடு
உற்றவர் எனக்கும் உற்றார்; உன்
கிளை எனது; என் காதல்
சுற்றம் உன்சுற்றம்; நீ என்
இன் உயிர்த் துணைவன் என்றான்

முடிவுரை

இராமன் மாந்தர்களிடமும், மாக்களிடமும், மன்பதையில் வாழும் பறவைகளிடமும்
அன்பும் பாசமும் கொண்டு விளங்கினான். இதனை மூன்று நிகழ்வுகள் மூலம் கண்டோம்.
ஆரணிய காண்டத்தில் பறவையினமான சடாயுவுக்குக் கண்ணீர் உகுத்து இறுதிச்சடங்கு செய்தான். தன்னையே உயிராக நினைத்துத் தவமிருந்த சவரியிடம் பாசமொழிகள் பகர்ந்தான். கிட்கிந்தா காண்டத்தில் குரங்கினத் தலைவனாகிய சுக்ரீவனிடம்  உணர்ச்சி மொழிகளைக் கொட்டினான். இவை அனைத்தும் அவன் அன்பிற்கு எடுத்துக்காட்டுக்களாம்.

*************   ***************    ************

விடைத்தயாரிப்பு :

திருமதி.இரா. மனோன்மணி , 

முதுகலைத்தமிழாசிரியை , 

அ.மே.நி.பள்ளி , செக்கா பட்டி ,

திண்டுக்கல்.

*************     ************   ************

வாழ்த்துகளுடன் , 

மு.மகேந்திர பாபு  , தமிழாசிரியர் , 

இளமனூர் , மதுரை.

****************   ***************   ***********

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    *******

Post a Comment

0 Comments