பொதுத்தமிழ்
வகுப்பு - 12
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
2021 - 2022
கற்றல் விளைவுகள் ,
கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள்
மதிப்பீடு வினாக்களும் , விடைகளும்.
தலைப்பு : 4
புணர்ச்சி விதிகள்
வணக்கம் அன்பு நண்பர்களே ! நம்முடைய பள்ளிக் கல்வித்துறை சார்பில் வந்துள்ள தமிழ்நாடு அரசின் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 12 ஆம் வகுப்பு பொதுத் தமிழில் மொத்தம் 30 தலைப்புகள் உள்ளன. இதில் கற்றல் விளைவுகள் , ஆசிரியர் செயல்பாடு , கற்பித்தல் செயல்பாடுகள் , மாணவர் செயல்பாடு மற்றும் மதிப்பீடு என்று மிக அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்க உள்ள நிலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இக்கட்டகம் மிகவும் பயனுள்ளதாக அமையும். கட்டகத்திலுள்ள ஒவ்வொரு தலைப்பையும் , அதிலுள்ள செயல்பாடுகளையும் , மதிப்பீடுகளுக்கான விடைகளையும் காண்போம்.
செல்பாடு - 4 ) புணர்ச்சி விதிகள்
கற்றல் விளைவுகள்
* புணர்ச்சி இலக்கண அடிப்படைகளை அறிந்து பயன்படுத்துதல்
* மொழியைப் பிழையின்றிக் கையாளவும் பாடலடிகளைப் பொருள் உணர்வுக்கு ஏற்ற வகையில் பிரித்தறியவும் மொழி ஆளுமையைப் புரிந்து கொள்ளவும் திறன் பெறுதல்.
ஆசிரியர் செயல்பாடு
ஆர்வமூட்டல்
நாம் பயணம் செய்யும் தொடர்வண்டியில் என்ஜினையும், பெட்டியையும் சேர்த்துப் பயணம் செய்வது போல நிலைமொழியும் வருமொழியும் சேர்வது தான் புணர்ச்சி என்று கூறி ஆர்வமூட்டல்.
கீழ் வகுப்பில் நீங்கள் படித்த சேர்த்தெழுதுக, பிரித்தெழுதுக, என்பதுதான் நிலைமொழி, வருமொழி எனக்கூறிச் சேர்த்தும் பிரித்தும் காண்பித்து ஆர்வமூட்டல்.
கற்பித்தல் செயல்பாடுகள்
செயல்பாடு:1
நிலைமொழியும் வருமொழியும் இணைவதைப் புணர்ச்சி என்கிறோம். நிலைமொழியின் இறுதி எழுத்தும் வருமொழியின் முதலெழுத்தும் புணர்ச்சிக்குரியனவாகும்.
சான்று
செயல்பாடு: 2
உயிரீற்றுப் புணர்ச்சி
நிலைமொழி ஈற்று உயிரோடு, வருமொழி முதல் உயிர் (உயிர் + உயிர் ) புணரும்போது அவை பொருந்தா. அவற்றைப் பொருந்தச் செய்ய இடையில் ய், வ் என்னும் மெய்களுள் ஒன்று தோன்றும். அதுவே உடம்படுமெய் ஆகும்.
"இஈ ஐ வழி யவ்வும் ஏனை
உயிர்வழி வவ்வும் ஏமுன் இவ் விருமையும்
உயிர்வரின் உடம்படு மெய்யென் றாகும்."
இ,ஈ, ஐ = ய், யகர உடம்படு மெய்யும்
அ,ஆ,உ,ஊ,எ,ஏ,ஒ,ஓ,ஔ = வ், வகர உடம்படு மெய்யும்
ஏ = ய்,வ் இரண்டு உடம்படு மெய்யும் தோன்றும்.
சான்று
காட்சியழகு = காட்சி +ய் + அழகு (இகர ஈறு)
மாவிலை = மா +வ் + இலை (ஆகார ஈறு)
சேவடி = சே + வ் + அடி
(ஏகார ஈறு)
சேயிழை = சே + ய் + இழை
செயல்பாடு: 3
மெய்யீற்றுப் புணர்ச்சி
நிலைமொழியின் ஈற்றெழுத்து மெய்யெழுத்தாக இருப்பின் வருமொழியின் முதல் எழுத்து உயிரெழுத்தாகவும் மெய்யெழுத்தாகவும் இருப்பதால் அவை சேரும் புணர்ச்சி மெய்யீற்றுப் புணர்ச்சி என்பர்.
சான்று
வாயொலி = வாய் + ஒலி
விதி : உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி,
வாய் + ஒலி = வாயொலி எனப் புணரும். (ய் + ஒ = யொ)
செயல்பாடு: 4
குற்றியலுகரப் புணர்ச்சி
நிலைமொழியின் இறுதியிலுள்ள குற்றியலுகரம் (கு சுடுது புறு) வருமொழியின் முதலில் உள்ள உயிரெழுத்தோடு புணரும்போது, தான் ஏறிய மெய்யை நிறுத்தி உகரம் மறையும். பின் நிலைமொழி இறுதிமெய் வருமொழி உயிரெழுத்தோடு புணரும்.
சான்று:
மாசற்றார் = மாசு + அற்றார் (ச்+ உ = சு)
விதி 1:
"உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்" என்னும் விதிப்படி,
உகரம் கெட்டது.
மாச் + அற்றார்
விதி 2:
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி
மாச் + அற்றார் = மாசற்றார்
மாணவர் செயல்பாடு
தனி மாணவர் செயல்பாடு
ஆசிரியர் கரும்பலகையில் பல்வேறு சொற்களை எழுதி, ஒவ்வொரு மாணவரும் அவற்றைப் பிரித்தெழுதி, நிலைமொழி எது? வருமொழி எது? என்பதை அறிந்து அதற்கான விதிகளையும் எழுதச் செய்தல்.
குழுச்செயல்பாடு
மாணவர்களை ஐந்து பேர் கொண்ட குழுக்களாகப் பிரித்தல். அவர்கள் தங்களுக்குத் தெரிந்த சொற்களைக் கொண்டு பிரித்து, அவற்றிற்கு ஏற்ற விதிகளை எழுத செய்தல். ஆசிரியர் உரிய வழிகாட்டி கருத்தை முழுமை பெறச் செய்தல்
மதிப்பீடு
1. புணர்ச்சி என்றால் என்ன?
நிலைமொழியும் வருமொழியும் இணைவதைப் புணர்ச்சி என்கிறோம். நிலைமொழியின் இறுதி எழுத்தும் வருமொழியின் முதலெழுத்தும் புணர்ச்சிக்குரியனவாகும்.
சான்று : வாழை + இலை = வாழையிலை
2. உயிரீற்று, மெய்யீற்றுப் புணர்ச்சி வரையறு
நிலைமொழி ஈற்று உயிரோடு, வருமொழி முதல் உயிர் (உயிர் + உயிர் ) புணரும்போது அவை பொருந்தா. அவற்றைப் பொருந்தச் செய்ய இடையில் ய், வ் என்னும் மெய்களுள் ஒன்று தோன்றும். அதுவே உடம்படுமெய் ஆகும்.
"இஈ ஐ வழி யவ்வும் ஏனை
உயிர்வழி வவ்வும் ஏமுன் இவ் விருமையும்
உயிர்வரின் உடம்படு மெய்யென் றாகும்."
இ,ஈ, ஐ = ய், யகர உடம்படு மெய்யும்
அ,ஆ,உ,ஊ,எ,ஏ,ஒ,ஓ,ஔ = வ், வகர உடம்படு மெய்யும்
ஏ = ய்,வ் இரண்டு உடம்படு மெய்யும் தோன்றும்.
சான்று
காட்சியழகு = காட்சி +ய் + அழகு (இகர ஈறு)
மாவிலை = மா +வ் + இலை (ஆகார ஈறு)
சேவடி = சே + வ் + அடி
(ஏகார ஈறு)
சேயிழை = சே + ய் + இழை
மெய்யீற்றுப் புணர்ச்சி
நிலைமொழியின் ஈற்றெழுத்து மெய்யெழுத்தாக இருப்பின் வருமொழியின் முதல் எழுத்து உயிரெழுத்தாகவும் மெய்யெழுத்தாகவும் இருப்பதால் அவை சேரும் புணர்ச்சி மெய்யீற்றுப் புணர்ச்சி என்பர்.
சான்று
வாயொலி = வாய் + ஒலி
விதி : உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி,
வாய் + ஒலி = வாயொலி எனப் புணரும். (ய் + ஒ = யொ)
3. குற்றியலுகரப் புணர்ச்சி சான்று தந்து விளக்குக.
நிலைமொழியின் இறுதியிலுள்ள குற்றியலுகரம் (கு சுடுது புறு) வருமொழியின் முதலில் உள்ள உயிரெழுத்தோடு புணரும்போது, தான் ஏறிய மெய்யை நிறுத்தி உகரம் மறையும். பின் நிலைமொழி இறுதிமெய் வருமொழி உயிரெழுத்தோடு புணரும்.
சான்று:
மாசற்றார் = மாசு + அற்றார் (ச்+ உ = சு)
விதி 1:
"உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்" என்னும் விதிப்படி,
உகரம் கெட்டது.
மாச் + அற்றார்
விதி 2:
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி
மாச் + அற்றார் = ( ச் + அ = ச ) மாசற்றார்
************* *************** ***********
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** ************
0 Comments