உலக நண்பர்கள் தினம்.
INTERNATIONAL FRIENDSHIP DAY
1- 8 - 2021
சிறப்புப்பாடல் & கட்டுரை
பாடல் : வா தோழா தோள்கொடு
பாடலாசிரியர் : மு.மகேந்திர பாபு
இசை & பாடகர் : DJ தினேஷ் பாபு . B
செவி கொடுங்கள் .
நட்பால் புவி குளிர !
" புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்"
ஒருவரோடு ஒருவர் நட்புக் கொள்ள அருகருகே இருப்பதோ, நெருங்கிப் பழகுவதோ தேவையில்லை . இருவரது எண்ணமும் ஒத்திருந்தால் அதுவே நட்பு என்னும் தோழமையைக் கொடுக்கும்.
நட்பு என்றாலே நமது பிம்பம் தானே.தோழமை நமது வழிகாட்டிகள் ,படிகற்கள், ஊன்றுகோல் என பல வகையாக சிறப்பிக்கும் நண்பர்களுக்கு ஓர் தினம் " நண்பர்கள் தினம்" மகிழ்ச்சியான தருணத்திலும், மனக்குழப்ப நேரத்திலும் நாம் தேடுவது நண்பர்களின் அருகாமையை அல்லவா ? அவ்வாறு இடர் நீக்கி , துயர் துடைத்து நல்வழி காட்டும் நண்பர்களுக்காக ஒரு தினம். இந்த இனிய நட்பைப் போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை உலக நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
நண்பர்கள் தின வரலாறு.
இந்த நண்பர்கள் தினம் முன்பு வெவ்வேறு நாட்டில், வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்பட்டு வந்தது. முதன் முறையாக 1958 -- ஆம் ஆண்டு ஜுலை 30 - ம் நாளை நண்பர்கள் தினமாகக் கொண்டாட, நண்பர்களுக்கான அமைப்பு கோரிக்கை விடுத்தது.
அதன் அடிப்படையில் 2009 - ஆம் - ஆண்டு ஏப்ரல் 27 - ம் நாளை சர்வதேச நண்பர்கள் தினமாகக் கொண்டாட லாம் என ஐநா அறிவித்தது.ஆனால் அமெரிக்கா,இந்தியா போன்ற நாடுகள் ஆகஸ்ட் மாத ம் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையை சர்வதேச நண்பர்கள் தினமாக கொண்டாடுகின்றன.
நண்பர்கள் தினத்தை உருவாக்கியவர் "ஜாய்ஸ் ஹால் " என்பவர் ஆவார்.இந்த தினம் அமெரிக்காவில் நல்ல வரவேற்பினைப் பெற்ற பின் , அன்றைய ஐநா சபையின் தலைவராக இருந்த கோஃபி அன்னன் அவர்களின் துணைவியார் " நானே அன்னன் " நண்பர்கள் தினம் பற்றிய முறையான அறிவிப்பினை வெளியிட்டார்.
ஜுலை 20 - இல் பராகுவே மற்றும் பிரேசில் நாடுகளில் நண்பர் தினம் கொண்டாட ப்பட்டு வந்தது. இந்தியா,நேப்பாளம் ,தென்னாப்பிரிக்கா போன்றவன்றில் இந்நாள் வாழ்த்து அட்டைகள்,பூங்கொத்து,அன்பளிப்புக் கொடுத்துக் கொண்டாடப் பட்டது.
சிக்கல் நிறைந்த இருண்ட நேரத்தில் பக்குவம் தந்து தீபமாய் ஒளிரும் விடிவெள்ளி நண்பன்.இன்பத்தை இரட்டிப்பாக்கி,துன்பத்தை பாதியாகக் குறைக்கும் மருத்துவன் நண்பன். சறுக்கும் நேரத்தில் ஊக்கம் தந்து மேலே உயர்த்தி மகிழ்ச்சிக் கொள்பவனும் அவனே.அழகு, பணம்,ஆண், பெண் ,சாதி,மதம் போன்றவற்றிற்கு கட்டுப்படாத ஒருமித்த கருத்துடையோர் மேற்கொள்ளும் அழகிய உணர்வு தோழமை. இங்கு மகிழ்ச்சியும்,விட்டுக் கொடுத்தலும், தியாகமும் நிறைந்திருக்கும் .
ஒருவனின் தனித் துவத்தைக் கண்டறியும் அளவுகோல் நண்பன் அல்லவா! முன்னேற்றத்தின் படியாக,எந்த விதமான பலனையும் எதிர் பாராமல் , சுக துக்கங்களில் பங்குக் கொண்டு உடன் பயணிக்கும் இனிய வரவு .ஏதோ ஒரு விருப்பத்தின் பேரில் நமக்காக நாமே தேடிக் கொண்ட பந்தம் இந்த தோழமை.இவற்றை காலம் கடந்து வரலாறு பேசும்.
வாழ்க்கையில் அடிபட்டு, அல்லல்பட்டு,துக்கமும்,துயரமும் முட்டி மோதி நிற்கும் தருணத்தில் நானிருக்கேன் என கண்ணீர் துடைக்கும் மூன்றாம் கரம் அல்லவா நண்பன். நண்பர்கள் அருககேதான் இருக்க வேண்டுமா என்ன? தொலை தூரத்தில் இருந்தாலும், அருகருகே உள்ளது போல உணர்ந்த உள்ளம் நண்பரைத் தேடி ,பழைய நினைவுகளில் பசுமையாக விரிந்து, நனைந்து மனமுழுவதும் வசந்தமாகி கரையும் இனிய நெகிழ்ச்சியல்லவோ தோழமை.
விட்டுக் கொடுத்தலன்றி ஒருவரின் உயர்வுக் கண்டு மற்றொருவர் மகிழ்ச்சிக் கொள்வதுதானே உண்மை நட்பு. நண்பர்கள் போல ,சில நலன் கெடுக்கும் மாதிரிகளும் உண்டு ,அவற்றை இனம் கண்டு ,மாதிரிகள் அல்லாத,நல்ல நண்பரைத் தேர்ந்தெடுப்பது நன்மை பயக்கும்.
அருகே இருந்தாலும்,தொலைதூரத்தில் இருந்தாலும் நண்பருடன் தொடர்பு கொண்டு அகம் மகிழ்வோம். நினைவுகள் இனிக்க ,நண்பர்கள் மகிழ சில பரிசுப் பொருட்களையோ, புகைப்படத்தையோ சாட்சியாக்குவோம்.இவைநம் மனதில் நின்று ஆனந்தத்தை அள்ளித்தரும் என்பதில் மிகையில்லை.நம்மை எந்தச் சூழல்நிலையிலும்விட்டுக் கொடுக்காத நண்பனைப் பெற்றவர்கள்,இறைவனால் ஆசிர்வதிக்கப் பட்டவர்கள்.
ஆழ்ந்த உறக்கம் ஆரோக்கியம் தருவது போல,
அன்பான பேச்சு ஆறுதல் தருவது போல நல்ல நண்பரைத் தேடுவோம்.நெறிகாட்டும் நண்பர்களின் வகையறிந்து போற்றுவோம்.
" நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு".
படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல பழகப், பழக இன்பம் தரக்கூடியது பண்புடையவர்களின் நட்பு.
என்னும் வள்ளுவர் வாக்கிற்கிணங்க நல்ல நண்பர்களை நாளும் போற்றுவோம்!
நண்பர்களை மகிழ்விக்கும் நல்நண்பர்களாவோம்!
இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்!
0 Comments