பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 3 - திறன் அறிவோம் - நெடுவினா 2 / 10 TAMIL - EYAL 3 - THIRAN ARIVOM - NEDUVINA - 2

 

               பத்தாம் வகுப்பு - தமிழ் 

          இயல் 3 - திறன் அறிவோம் 

நெடுவினா - 2 - கோபல்லபுரத்து மக்கள்


*************      *************   *************


2 ) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.

முன்னுரை :

               கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் இயல்பான வரவேற்பும் எளிமையான உணவும் மதிய வேக்காட்டில் நடந்துவந்த களைப்பை மறக்கடிக்கச் செய்துவிடும். பசித்த வேளையில் வந்தவர்களுக்குத் தம்மிடம் இருப்பதையே பகிரிந்து கொடுக்கிற நேசம் கிராமத்து விருந்தோம்பல். அந்நிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது கி.ராஜநாராயணனின் கோபல்லபுரத்து மக்களின் கதைப்பகுதி.

சுப்பையாவின் ஐயம் :

     சுப்பையாவின் புஞ்சையில் அருகு (களை) எடுத்துக்கொண்டிருந்தார்கள். இடையில் காலைக்கஞ்சியைக் குடிக்க உட்கார்ந்தார்கள். அப்போது தொலைவில் அன்னமய்யாவுடன் ஒருவர் வருவதைச் சுப்பையா பார்த்தான். “யாரோ ஒரு சாமியாரை இழுத்துட்டு வாரான்” என்று சுப்பையா கூற அங்கிருந்த ஒருவர் “வரட்டும் வரட்டும் ஒரு வயித்துக்குக் கஞ்சி ஊத்தி நாமும் குடிப்போம்” என்று கூறினார். அவ்வழியாகச் செல்லும் தேசாந்திரிகள் இவர்களிடம் தண்ணீரோ கஞ்சியோ சாப்பிட்டுவிட்டுப் போவது வழக்கம்.

அன்னமய்யாவுடன் வந்த வாலிபன் :

            அன்னமய்யாவுடன் வந்தவன் தாடியும் அழுக்கு ஆடையும் தள்ளாடிய நடையுடன் இருந்தான். சோர்வாகக் காணப்பட்டான். அந்தப்பக்கம் வந்த அன்னமய்யா அவ்வாலிபனை அருகில் சென்று பார்த்தார். பசியால் வாடிய முகம், கண்களில் தெரிந்த தீட்சண்யம் கவனிக்கக் கூடியதாய் இருந்தது. அவன் முகத்தில் சிறு புன்னகையை மட்டும் காட்டினான். பேசுவதற்கு விரும்பாதவன் போல் இருந்தான்.

லாட சன்யாசிகள் :

            அந்தச் சாலைவழியாக பலவகையான தேசாந்திரிகள் வருவார்கள். அவர்களுள் முக்கியமானவர்கள் லாட சன்யாசிகள் அவர்கள் வேட்டி கட்டிக்கொள்ளும் முறை புதுவிதமாக இருக்கும். இதனைப்பார்த்து
கோபல்லபுரத்துக் குழந்தைகள் அவர்களைப் போலவே வேட்டிகட்டிக் கொண்டு விளையாடுவர்.

அன்னமய்யாவின் விசாரிப்பு :

                     அன்னமய்யாவைப் பார்த்து அவன் மென்மையாகச் சிரித்தான். அவன் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டான். அவன் பேசியதில் மகிழ்ச்சியடைந்த அன்னமய்யா “அருகிலிருந்து நீச்சுத் தண்ணி வாங்கி வரவா என்று கேட்டார். அந்த வாலிபன் நாமே அங்கே போய்விடலாம் என்பது போல் பார்த்தான். அன்னமய்யாவின்
உதவியை எதிர்பார்க்காதவனாய் அவனே எழுந்து நடந்து சென்றான். அன்னமய்யாவின் கேள்விகளுக்கு ஒரே மாதிரியான இதழ் விரியாத சிரிப்பைப் பதிலாக்கினான்.

வாலிபனின் பசியைப் போக்கினான் :

              ஒரு வேப்பமரத்தின் அடியில் ஏகப்பட்ட மண்கலயங்கள் கஞ்சியால் நிரப்பப்பட்டிருந்தன. சிரட்டையைத்
துடைத்து அதில் நீத்துபாகத்தை அவனிடம் நீட்டினான். அக்கஞ்சியை உறிஞ்சியபோது அவனுக்குக் கண்கள் சொருகின. மிடறு தொண்டை வழியாக இறங்குவதன் சுகத்தை முகம் சொல்லியது. “உட்கார்ந்து
குடிங்க” என்று உபசரித்தான். இரண்டாவது முறையும் வாங்கிக் குடித்தான். அதை உறிஞ்சிக் குடிக்கும்போது "ஹு" என்கிற அனுபவிப்பின் குரல் அவனிடமிருந்து வந்தது. கஞ்சியைக் குடித்துவிட்டு வேப்பமரத்து நிழலே அவனுக்குச் சொர்க்கமாய்த் தூங்கச் செய்தது. வந்தவனின் நிறைவைவிட மேலான நிறைவு
அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது. குழந்தையைப் பார்க்கும் அன்னையைப் போல் பிரியத்துடன் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தார் அன்னமய்யா.

அன்னமய்யா - பெயர் பொருத்தம் :

           வந்தவன் தூங்கி எழுந்ததும் அவனைச் சுப்பையாவின் புஞ்சைக்கு அழைத்துச் சென்றான் அன்னமய்யா. வந்தவனிடம் அன்னமய்யா எங்கிருந்து வரீங்க? எங்க போகணும்? என்று கேட்டான்.
ரொம்ப தொலைவிலிருந்து, தம்பீ உன் பெயரென்ன? என்று கேட்டான். அன்னமய்யா என்று சொன்னதும் வந்தவன் அந்தப் பேரை மனசுக்குள் திருப்பித் திருப்பிச் சொல்லிப் பார்த்துக்கொண்டான். எவ்வளவு
பொருத்தம் என்று நினைத்துக் கொண்டான் போலிருக்கிறது. எனக்கு இன்று நீ இடும் அன்னம் தான் என்று மனவோட்டம் ஓடியது. தன்னுடைய சொந்தப் பெயர் பரமேஸ்வரன் என்றும் புதுப்பெயர் மணி என்றும் கூறி,
இனிமேல் மணி என்றே கூப்பிடு என்றும் கேட்டுக் கொண்டான். சுப்பையாவைப்பற்றி அவனிடம் கூறினான் அன்னமய்யா.

சுப்பையாவுடன் உணவு உண்ணல் :

           அன்னமய்யாவுடன் வந்த புது ஆளையும் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள். அவரையும் தங்களுடன் உண்ணும்படி உபசரித்தார்கள். அனைவரும் வட்டமாக அமர்ந்துகொண்டனர். ஒரு கால் உருண்டை கம்மஞ்சோற்றை இடது கையில் வைத்தனர். அன்னமய்யாவும் சுப்பையாவும் அவ்வாறுதான்
பெற்றுக்கொண்டனர். அச்சோற்றில் சிறு பள்ளம் செய்து துவையல் வைத்தனர். அவர்கள் அதனை உண்ணுகிற வேகம் ஆர்வம் அனுபவிப்பு இதெல்லாம் பார்த்தபோது இந்த உணவு எவ்வளவு ருசியாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டான். ஆனால் அவரால் அரை உருண்டைக்கு மேல் சாப்பிட
முடியவில்லை.

முடிவுரை :

              அன்னமய்யாவும் சுப்பையாவும் ஆளுக்கு ஒரு  உருண்டை சாப்பிட்டார்கள். சாப்பிட்டு முடித்ததும் அங்கிருந்தவர்கள் உட்கார்ந்து ஊர்க்கதைகள் பேசினர். மணி அமைதியாகக் கண்களை மூடிக் கிடந்தார்.
யாரென்றே அறியாத மணியை அழைத்துவந்து அவருக்கு அன்னமிட்டு பெயருக்கேற்றார்போல் நடந்துகொண்டார் அன்னமய்யா.

****************   **************   ***********

வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !

மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410




**************     *************   ************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    ********

Post a Comment

0 Comments