எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - கவிதைப்பேழை - தமிழ்மொழி வாழ்த்து - பாரதியார் / 8 TAMIL EYAL 1 - TAMILMOZHI VAZHTHU

             வகுப்பு - 8 , தமிழ் 

        இயல் 1 - கவிதைப்பேழை 

              தமிழ்மொழி வாழ்த்து

                         -   மகாகவி பாரதியார் 




***********    *************    *************

வணக்கம் அன்பு நண்பர்களே ! இன்று எட்டாம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் இயல் 1ல் கவிதைப்பேழையாக அமைந்துள்ள தமிழ்மொழி வாழ்த்து படிக்க உள்ளோம்.

              பாட்டுக்கொரு புலவன் மகாகவி பாரதி பாடிய அற்புதமான பாடல் ஒன்று நமக்குப்பாடப் பகுதியாக  அமைந்துள்ளது.இப்பாடலை இசையோடும் , இனிய காட்சிப் பதிவு விளக்கத்தோடும் காண்போம். அதுமட்டுமன்று. மகாகவி பாரதி வாழ்ந்த வீட்டையும் காட்சிப் பதிவாகக் காண்போம்.


முதலில் பாடலுக்கான காட்சிப்பதிவை நமது பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் காண்போமா ?




             

அடுத்ததாக  நூல்வெளி பகுதியில் அமைந்துள்ள செய்திகளைக் காண்போம்.

நூல்வெளி 

            கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்திருத்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட வீரர் எனப்பன்முக ஆற்றல் கொண்டவர் சி. சுப்பிரமணிய பாரதியார். இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி விடுதலைப் போருக்கு வித்திட்டவர். கவிதைகள் மட்டுமன்றி, சந்திரிகையின் கதை, தராசு உள்ளிட்ட உரைநடை நூல்களையும் வசனகவிதைகளையும் சீட்டுக்கவிகளையும் எழுதியவர். சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞன், மரம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார்.

இப்பாடல் பாரதியார் கவிதைகள் என்னும் தொகுப்பில் தமிழ்மொழி வாழ்த்து என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ளது.

நுழையும்முன்


             மொழி, கருத்தை அறிவிக்கும் கருவி மட்டும் அன்று. அது மக்களின் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது: உணர்வுடன் கலந்தது. தமிழர்கள் தம் தாய்மொழியாகிய தமிழை உயிராகக் கருதிப் போற்றி வந்துள்ளனர். புலவர் பலர்  தமிழைப்
பல வகையாக வாழ்த்திப் பாடியுள்ளனர். அத்தகைய பாடல்  ஒன்றை அறிவோம்.


மனப்பாடப் பகுதியாக அமைந்துள்ள பாடல் இது என்பதால் இசையோடு இதைப் பாடுவோமா ? 





"வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி !
வாழிய வாழியவே!

வான மளந்தது அனைத்தும் அளந்திடு
வண்மொழி வாழியவே!

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழியவே !

எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழியவே !

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே !

தொல்லை வினைதரு தொல்லை அகன்று
சுடர்க தமிழ்நாடே!

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே !

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே !


                                                   - பாரதியார்

சொல்லும் பொருளும்


நிரந்தரம் - காலம் முழுமையும்
வைப்பு -  நிலப்பகுதி
சூழ்கலி - சூழ்ந்துள்ள அறியாமை இருள்
வண்மொழி  - வளமிக்கமொழி
இசை  -  புகழ்
தொல்லை - பழமை , துன்பம்

பாடலின் பொருள்


       தமிழ்மொழி எக்காலத்தும் நிலைபெற்று வாழ்க! ஆகாயத்தால் சூழப்பட்ட
எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் வளமான தமிழ்மொழி வாழ்க! ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து, புகழ்கொண்ட தமிழ்மொழி வாழ்க! எங்கள் தாய்மொழியாகிய தமிழ்மொழி உலகம் உள்ள வரையிலும் வாழ்க! பாங்கும் சூழ்ந்துள்ள அறியாமை இருள் நீங்கட்டும்! அதனால் தமிழ்மொழி மேன்மையுற்று உலகம் முழுதும் சிறப்படைக ! பொருந்தாத பழைய கருத்துகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கித் தமிழ்நாடு ஒளிர்க! தமிழ்மொழி வாழ்க! தமிழ்மொழி
வாழ்க! என்றென்றும் தமிழ்மொழி வாழ்க! வானம்வரை உள்ளடங்கியள்ள எல்லாப்
பொருண்மைகளையும் அறிந்து மேன்மேலும் வளரும் தமிழ்மொழி வாழ்க!


**************     **************     ***********

மகாகவி பாரதியாரின் மணி மண்டபத்தைக் காண்போமா ?





மகாகவி பாரதியின் வீடு இதுதான மாணவர்களே ! பார்த்து மகிழ்வோம் !



**************    **************    ************


வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !

மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410




**************     *************   ************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    **********

Post a Comment

0 Comments