வகுப்பு - 8 , தமிழ்
இயல் 1- கவிதைப்பேழை
தமிழ்மொழி மரபு - தொல்காப்பியர்
************* **************** ************
வணக்கம் நண்பர்களே ! நாம் நேற்றைய வகுப்பில் மகாகவி பாரதியார் எழுதிய தமிழ் மொழி வாழ்த்துப் பாடலைப் படித்தோம். இன்று தமிழ்மொழி மரபு என்ற தொல்காப்பியர் இயற்றிய பாடலைக் காண்போம்.
பாடலுக்குச் செல்லும்முன் நம்முடைய பெரும்புலவர் .திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் காட்சிப்பதிவு விளக்கத்தைக் காண்போம்.
காட்சிப்பதிவு முழுமையும் பார்த்தீர்களா ? இனி பாடக்கருத்தைக் காண்போம்.
நூல் வெளி
தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர் தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். இந்நூல் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டது. பொருளதிகாரத்தின் மரபியலில் உள்ள மூன்று நூற்பாக்கள் 31, 92, 93) இங்குத் தரப்பட்டுள்ளன.
நுழையும்முன்
வாழ்விலும் மொழியிலும் சில ஒழுங்கு முறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. வாழ்வுக்குரிய ஒழுங்குமுறை ஒழுக்கம் கானப்படும். மொழிக்குரிய ஒழுங்குமுயை மரபு எனப்படும். தமிழ்மொழிக்கெனச் சில மரபுகள் உள்ளன. அவை பழங்காலம் முதலே பின்பற்றப்பட்டு வருகின்றன. செய்யுளுக்கும் மரபுக்கும் உள்ள தொடர்பைப்பற்றித் தொல்காப்பியம் கூறும் செய்திகளைஅறிவோம் வாருங்கள்!
நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத்
திரிவுஇல் சொல்லொடு தழாஅல் வேண்டும்
மரபுநிலை திரிதல் செய்யுட்கு இல்லை
மரபுவழிப் பட்ட சொல்லின் ஆன
மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும்
- தொல்காப்பியர்
சொல்லும் பொருளும்
விசும்பு - வானம்
மரபு - வழக்கம்
மயக்கம் - கலவை
திரிதல் - மாறுபடுதல்
இருதிணை - உயர்திணை, அஃறிணை
செய்யுள் - பாட்டு
வழாஅமை - தவறாமை
தழாஅல் - தழுவுதல் ( பயன்படுத்துதல்)
ஐம்பால் -ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
பாடலின் பொருள்
இவ்வுலகம் நிலம், நீர், தீ, காற்று, வானம் ஆகிய ஐந்தும் கலந்த கலவையாகும். இவ்வுலகில் தோன்றிய பொருள்கள் அனைத்தும் இந்த ஐம்பூதங்களின் சேர்க்கையால் உருவானவையே ஆகும். உலகத்துப் பொருள்களை இரு திணைகளாகவும் ஐம்பால்களாகவும் பாகுபடுத்திக் கூறுதல் தமிழ்மொழியின் மரபு.
திணை, பால் வேறுபாடு அறிந்து, இவ்வுலகப் பொருள்களை நம் முன்னோர் கூறிய சொற்களால் கூறுதல் வேண்டும். இம்மரபான சொற்களைமே செய்யளிலும் பயன்படுத்துதல் வேண்டும்.
தமிழ்மொழிச் சொற்களை வழங்குவதில் இம்மரபு மாறினால் பொருள் மாறிவிடும்.
அளபெடை
புலவர்கள் சில எழுத்துகளை அவற்றுக்கு உரிய மாத்திரை அளவைவிட நீண்டு ஒலிக்குமாறு பயன்படுத்துவது உண்டு. இப்பாடலில் இடம்பெற்றுள்ள வழாஅமை, தழாஅல் ஆகிய சொற்களில் உள்ள மா என்னும் எழுத்தை மூன்று மாத்திரை அளவு நீட்டிஒலிக்க வேண்டும். அதற்கு அடையாளமாகவே 'ழா'வை அடுத்து 'அ' இடம் பெற்றுள்ளது. இவ்வாறு உயிர் எழுத்து நீண்டு ஒளிப்பதை உயிரளபெடை என்பர். இதனைப் பற்றி உயர் வகுப்புகளில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.
*********** ************** *************
வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !
மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** ***********
0 Comments