வீரத்துறவி சுவாமி விவேகானந்தர்
நினைவு நாள் ( 04 - 07 - 2021 )
சிறப்புப் பதிவு.
இரண்டே வார்த்தைகளால் இவ்வுலக மக்களின் இதயங்களில் இடம் பிடித்து , மாபெரும் தடம் பதித்தவர். ஆன்மீகத்தில் தனிப்பெரும் சூரியனாய் உதித்தவர். குருவைத் தெய்வமென மதித்தவர். ஆம் ! யார் இந்த இளைஞர் ?
அவர்தான் வீரத்துறவி சுவாமி.விவேகானந்தர். எந்தப் படத்திலும் அவர் நடிக்கவில்லை. எந்த ஆட்சியில்ம் அவர் இடம் பிடித்ததில்லை. ஆயினும் அவர் பிறந்த நாளான ஜனவரி 12 ஆம் நாளை நமது நாடு தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடி மகிழ்கிறது.
துறவும் அறம்தான். அந்த அறத்தினின்று வழுவாது வாழ்ந்து இன்றும் நம் மனங்களில் வாழ்ந்து வருபவர் சுவாமி விவேகானந்தர் அவர்கள். அவர் சொன்ன கருத்துக்களும் , பொன்மொழிகளும் , கதைகளும் இன்றும் அவர் நினைவைப் பறைசாற்றி வருகின்றன.
சுவாமிகளின் இன்றைய நினைவு தினத்தில் நம் பைந்தமிழ் நண்பர்களுக்குப் பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா அவர்கள் நிகழ்த்திய சுவாமிகளைப் பற்றிய செய்திகள் இதோ கேட்டு மகிழுங்கள்.
நிலையான நினைவுகள்!
ஒரு மனிதன் இறந்த பின்னும் மக்கள் மனங்களில் இறவாது நினைக்கப்படுதல் என்பது ஒரு வரம். வரலாற்றின் ஆரம்பக் காலம் தொட்டே மனித இனத்தில் பல்வேறு அசாதாரண நிகழ்வுகள் நடந்துள்ளன என்பது பதிவு செய்யப்பட்ட உண்மை.
மனித குலத்தின் பின்னணியில் எல்லையற்ற அறிவு மற்றும் ஆற்றலின் கடல் உள்ளது. ஒவ்வொரு மனிதனும் அதிலிருந்து புறப்படுகின்ற ஒரு வாய்க்கால் மட்டுமே என்று விவேகானந்தர் கூறுகின்றார்.
ஆம் ! மனிதர்கள் தெய்வீகமானவர்கள் என்பதை உரக்க இந்த உலகிற்கு முழக்கமிட்ட வர் சுவாமி விவேகானந்தர்.
அன்னிய அடிமைத் தனத்தில் இருந்து விடுதலைபெற சிங்கமாக கர்ஜித்தவர், பாரதத்தின் ஆன்மாவைத் தட்டி எழுப்பியவர் அவரே வீரத் துறவி சுவாமி.விவேகானந்தர். அவர் நினைவாகச் சில நினைவலைகள் நம் நெஞ்சக் கடலிலிருந்து ....
பிறப்பு
1863-ஆண்டு ஜனவரி 12 -ஆம் நாள் விஸ்வநாத தத்தருக்கும், புவனேஸ்வரி தேவிக்கும் மகனாக கல்கத்தாவில் பிறந்தார்.பெற்றோர் இட்ட பெயர்
" நரேந்திரநாத் தத்தா".
இவரது தாத்தா துர்க்காசரன் துறவு மேற்கொண்டதால் ,அவரைத் தொடர்ந்து இவருக்கும் துறவில் ஆர்வம் ஏற்பட்டது. இவரது குடும்பத்தின் ஆன்மீக ச் சூழல் காரணமாக சிறுவயதிலேயே பக்திப் பாடல்கள், சமஸ்கிருத மந்திரங்களைத் தெளிவாகத் தெரிந்துகொண்டார்.
படிப்பில் ஆர்வம்,
இளம் வயதிலேயே இந்திய வரலாறு, இந்து மத சமஸ்கிருத புத்தகங்கள், மேற்கத்திய நாடுகளின் வரலாறுகள் போன்றவற்றை ஆழ்ந்து படித்தார்.
வரிவரியாகப் படிக்காமலேயே புத்தகத்தின் முழுக் கருத்தையும் புரிந்துக்கொள்ளும் திறனை இயற்கையிலேயே பெற்றார். இவற்றை நண்பர்கள் , உள்நாட்டில் உள்ளவர்கள் மட்டுமன்றி , அயல்நாட்டினரும் சோதித்து, இவர் சாதனையில் அதிர்ந்து போனார்கள்.
அறிவுக்கூர்மை, தைரியம், தன்னம்பிக்கை, வாதத்திறமை போன்றவற்றைக் கொண்டவராக விளங்கினார். அத்தோடு உடலையும், மனதையும் திடமாக வைத்திருக்கும் பயிற்சியில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். சிலம்பம், வாள்பயிற்சி, மல்யுத்தம் போன்றவற்றில் சிறந்து விளங்கினார். ஆழ்ந்த தியானப் பயிற்சியும், அதில் நம்பிக்கையும் கொண்டிருந்தார்.
கடவுகளைத் தேடி...
கடவுள் என்னும் மெய்ப் பொருளைக் காணவிழைந்தார். மகரிஷி என்று அழைக்கப்பட்ட "தேவிந்திர நாத் தாகூரிடம்" கடவுளைப் பார்த்தீர்களா? என்று துணிச்சலுடன் கேட்டார். பின் தியானம் செய்தால் மட்டுமே அவற்றின் பயனை அடைய முடியும் என்பதை அறிந்து இராமகிருஷ்ணரை அடைந்தார்.
சுவாமி.இராமகிருஷ்ணரின் கொள்கையால் கவரப்பட்டு, சீடராகி உடன் தங்கிப் பணிவிடைகள் செய்து மகிழ்ந்தார். இராமகிருஷ்ணருடன் தான் தொடங்கிய ஆன்மீகப்பயணம் காவியணிந்து ,தன்னைத் தொடர்பவர்களையும் அணிச்செய்தார். இதுதான் துறவிகள் சங்கம் உருவாக முன்னோடியாக அமைந்தது.
அமெரிக்கா பயணமும், சிக்காக்கோ மாநாடும்.
1893- ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் சிக்காக்கோ என்னுமிடத்தில் நடந்த "மகாஜன சர்வ சமய மாநாட்டில் விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவு உலக நாடுகளைப் பெரு மகிழ்ச்சி கொள்ளச் செய்தது.
பேச்சின் தொடக்கத்தில் " சகோதர சகோதரிகளே" என்று சகோதரத்துவத்துடன் பேசியதைக் கேட்டவர்கள் அதுவரை அப்படி யாரும் பேசி அறியாதது கண்டு அவர்தம் பேச்சை உற்றுக் கவனித்தனர். இது அமெரிக்காவில் மட்டுமல்லாது உலக அளவிலும் புகழ் பெறச்செய்தது.
இவரது கருத்துக்களில் கவரப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் சீடர்களாக உருவாயினர். அமெரிக்காவைத் தொடர்ந்து இங்கிலாந்து, இலங்கை போன்ற நாடுகளுக்கும் சென்று சொற்பொழிவாற்றினார்.பின் மைசூர்,கேரளா, கன்னியாகுமரி போன்ற இடங்களுக்குச் சென்று சொற்பொழிவு ஆற்றினார். கன்னியாகுமரியைக் கண்டுகளித்த விவேகானந்தர், அமைதியான பாறை ஒன்றைக்கண்டு மனம் ஒன்றி அங்குத் தொடர்ந்து மூன்று நாட்கள் தியானத்தில் ஈடுபட்டார். அது இன்றும் விவேகானந்தர் பாறை என அழைக்கப்படுகிறது . அங்கு விவேகானந்தர் மணிமண்டப ம் அமைத்துள்ளது.
இங்கு சீடர்கள் சூழ வெற்றிவாகை சூடினார். ஆம் ! ஆண்டியாக வடக்கேயிருந்து தெற்கே வந்த விவேகானந்தர் வீரராக தெற்கில் இருந்து வடக்கே தனது வெற்றியைத் தொடங்கினார்.
கங்கைக் கரையில் பேலூர் என்னும் இடத்தில் 1899 - ஆம் ஆண்டு மடம் ஒன்று அமைத்து அதற்கு தமது குருநாதரான இராமகிருஷ்ணரின் பெயரை வைத்து மகிழ்ந்தார்.
மறைவு
மகத்தான மக்கள் பணியும் மாண்பு கொண்ட தெய்வப் பணியும் ஆற்றிய விவேகானந்தர் 1902 - ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள் தனது 39 - ஆம் அகவையில் பேலூரில் இவ்வுலக வாழ்வை நீத்தார். செயற்கரிய செயல்களால் தமக்கும் , நாட்டிற்கும் பெரும் புகழ் ஈட்டித்தந்த, இளைஞர்களை எழுச்சி கொள்ள வைத்த, இவரின் நினைவுகள் என்றும் போற்றப்பட வேண்டிய பொக்கிஷம் ஆகும்.
" மனிதர்கள் அனைவரும் தெய்வமானவர்கள் " என்ற அவர் தம் வாக்கின்படி தெய்வமானார்.
அவர் கொள்கையை பின் தொடர்தல் மூலம் அவர் தம் நினைவை நிலையாக்குவோம்!
விவேகானந்தரின் கருத்துகள் சில.
கல்வி
கல்வி , கல்வி , கல்வி - இது ஒன்றே இப்போது நமக்குத் தேவை. ஐரோப்பாவின் பல நகரங்களுக்கு நான் பயணம் செய்திருக்கிறேன். அங்கே சாதாரண ஏழை எளிய மக்களுக்குக் கிடைத்திருக்கும் வாழ்க்கை வசதிகளையும் , கல்வியையும் நான் கவனித்திருக்கிறேன். அப்போதெல்லாம் நமது நாட்டு ஏழை எளிய மக்களின் பரிதாப நிலையை நினைத்து நான் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன். இந்த வேறுபாட்டிற்கு என்ன காரணம் ? கல்வி என்பதுதான் எனக்குக் கிடைத்த விடை.
வீரனாக எழுந்து நில் !
உங்களில் ஒவ்வொருவரும் பேராற்றல் படைத்தவராக வேண்டும். இது நிச்சயம் முடியும் என்றே நான் கூறுகிறேன். மிகப்பெரிய உண்மை இது. வலிமைதான் வாழ்வு. பலவீனமே மரணம். வலிமையே மகிழ்ச்சிகரமான வாழ்க்கை , நிரந்தரமான வளவாழ்வு , அமரத்துவம் ஆகும்.
நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே நீ ஆகிவிடுகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே நீ ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமை படைத்தவன் என நினைத்தால் வலிமையானவனாக மாறிவிடுவாய்.
உங்களுடைய நரம்புகளுக்கு முறுக்கேற்றுங்கள். காலமெல்லாம் அழுது கொண்டிருந்தது போதும். இனி அழுகை என்ற பேச்சே இருக்கக் கூடாது. சுயவலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து நில்லுங்கள்.
வலிமையே தேவை
வலிமையோடு இருங்கள். மூடக்கொள்கைகளை உதறித் தள்ளுங்கள். எனக்கு வயது ஏற ஏற , எல்லாமே ஆண்மை என்ற ஒன்றில் அடங்கியிருப்பதாகக் காண்கிறேன். இதுவே நான் தரும் புதுவேதம்.
சுயநலமே ஒழுக்கக்கேடு. சுயநலமின்மையே நல்லொழுக்கம். இதுதான் ஒழுக்கத்திற்கு நாம் கொடுக்க் கூடிய ஒரே இலக்கணமாகும்.
உண்மைக்காக எதையும் துறக்கலாம். ஆனால் , எதன் பொருட்டும் உண்மையைத் துறக்கக்கூடாது.
************** ************* ************
ஆம் நண்பர்களே ! இந்தப் பூமிப்பந்தில் நாம் வாழும்வரை உண்மையான மனித நேயத்தோடு மகிழ்வித்து மகிழ்வோம் !
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.
*************** ************ ************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .
TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்
PG - TRB - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்
GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.
0 Comments