ஜூன் 5 , உலகச் சுற்றுச்சூழல் தின மாபெரும் கவிதைப் போட்டி - முதலிடம் பெற்ற வெற்றியாளர்களின் கவிதைகள் / எழுத்து & காட்சிப் பதிவில்.


    
GREEN TAMIL - You Tube & TAMILINBAM.IN

இணையதளம் இணைந்து நடத்திய .


 ஜூன் 5 - உலகச் சுற்றுச்சூழல் தின 

மாபெரும் கவிதைத் திருவிழா !

        முதலிடம் பெற்ற கவிதைகள்.





***********************   *******************

புலனத்தில் வரப்பெற்ற ஆயிரத்திற்கும் மேலான கவிதைகளில் TAMIL INBAM.IN இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட கவிதைகள் விபரம் .

பள்ளி மாணவர் கவிதைகள் -  66

கல்லூரி மாணவர் கவிதைகள் - 60

ஆசிரியர் & ஆர்வலர் கவிதைகள் - 165 

மொத்தம்   = 291 கவிதைகள்.

வாழ்த்துகள் நண்பர்களே !


************************    *******************


பள்ளி மாணவர் பிரிவில் முதலிடம் 

                        பெற்ற   கவிதை 

மரம் நடு..... மனம் தொடு !



மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் !

மண்ணுயிர்க்குத் தேவையான பொன் 

மொழி !

இன்று இவை வெறும் வரி !

இவ்வரிசுவரொட்டிக்கு மட்டுமே 

சாத்தியம் .

இன்றைய வாழ்க்கைக்கு அசாத்தியம்.


பசுமையான உலகம் எதுவரை ?

பச்சை மரங்கள் இருக்கும் வரை !

கண்ட இடங்களில் கட்டிடம் முளைத்து 

கண்போன்ற மரங்கள் 

காணாமல் போனால்

கோடை வெப்பம் நம்மைக் 

கொளுத்தாமல்

 கொஞ்சவா செய்யும்? 

பூமியின் 

பச்சையை அழித்து 

பலவண்ணம் ஏந்துகிறோம்!

மழை நீருக்கு மரங்கள் தானே 

கருவானது 

அதை மெல்ல அழித்ததால் 

தெருவெங்கும் 

குடிநீர் பஞ்சம்தானே இங்கு உருவானது !

 

கோடைக்கு இயற்கை மரங்கள் அன்றி ,

குளிர்சாதன செயற்கையை நீ நாடினால் 

பக்கவிளைவில் பாதிக்கப்பட்டு

பாழாய்ப்போய் விடும் உன் உடல்!


உன் நலன் காக்கவும் 

உரிமையோடு 

மரம் வளர்க்கச் சொல்லி நான் 

வரைகிறேன் இந்த கவிதை மடல்!

மரம் வளர்ப்போம் ......!

மரமே நமக்கு கடவுளின் கொடை...!

வெயிலுக்கு இனி கைகளில் வேண்டாம்

 குடை!

மரமே பூமியின் பசுமை ஆடை.... !

மரம் இருந்தால் வதைக்குமா இந்த 

கோடை ?

வியர்வையில் குளிக்காமல் 

நம் சந்ததி தண்ணீரில் குளிக்க 

மரங்களை வளர்த்து வைப்போம்  !


கட்டிடங்களை விட பூமியில் 

மர விதைகளை அதிகம் விதைப்போம் !

இனியும் மரம் வளர்க்காமல் 

சுயநல மனிதனாய்ப் 

பூமியில் நீ 

சுற்றி வந்தால் காணாமல் 

அழிந்து போவது 

மரங்கள் மட்டும் அல்ல ...

வாட்டும் வெயில் தண்ணீர் பஞ்சத்தோடு 

வறட்சியில் சிக்கப் போகும் உன்

வருங்கால சந்ததியும்தான்.... 


மரம் ஓர் தியாகி !

தன்னை வெட்ட வந்த கோடரிக்கு 

கைபிடியாய் தன்னைக் கொடுக்கிறது. 

மதத்தை வளர்க்காமல் 

மரத்தை வளர்,


 மதி உள்ள மனிதா !

மதத்தை வளர்த்தால் மதம் பிடிக்கும்

மரம் வளர்த்தால்

கனி தரும், மழை தரும், நிழல் தரும் 

அடுத்த தலைமுறைக்கு 

உயிர் தரும்........... 


"அப்துல் கலாம் மரம் நடுங்கள் 

என்று உரைத்தார் "

"அவரை முன்உதாரணமாகக் 

கொண்ட அனைவரும் 

இதை நடைமுறைப் படுத்துவார்கள் 


"அனைவரும் உறுதி மொழி எடுங்கள் மரம் நடுவோம் என்று ".


கவிஞர்.க.காவியா , வகுப்பு : 12 , 

அரசு மேல்நிலைப்பள்ளி ,

ஆர். காவனூர் , இராமநாதபுரம் மாவட்டம்

05/06/2021-- உலக சுற்றுசூழல் தினம் அன்று என் பிறந்த நாள் நான் ஒரு மரகன்று நடுவேன் .

அருமை பாப்பா. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். நீ வளர மரம் வளரும். மரம் வளர நீ வளர்வாய். மகிழ்ச்சி நிறையும் )










***************** ****************  *********


முதலிடம் பெறும் கல்லூரி மாணவர்

                          கவிதை

மரம் பேசுகிறேன்...


உன் உடல் உரசும் காற்றோடு

நான் பேசும் வார்த்தைகள் கேளாயோ?

திறந்தவெளிச் சிறையில் நிரபராதி நான்..

தேடி வந்து வெட்டிச்சென்றாய்...

குற்றவாளி நீ...

உன் இனப்படுகொலைக்கு நான் 

ஈழமானேன்!

 வேர்களுக்குப் பதில் கால்கள் 

இருந்திருந்தால் தப்பித்தாவது 

ஓடியிருப்பேன்...

இன்று ஓடாமலையே மூச்சு 

வாங்குகிறாய் என்று கேள்விப்பட்டேன்!

வளர்க்க வேண்டாம் வாழவாவது விடு...

மூச்சுப்பிச்சை இடுகிறேன.


 கவிஞர்.ரூ. வெப்ஸ்டர் , ஐந்தாம் ஆண்டு

 (கட்டிட எழில்கலை  )

RVS கல்லூரி , திண்டுக்கல்







************************   ********************

முதலிடம் பெற்ற மூன்று கவிதைகளையும் காட்சிப்பதிவாக கண்டு மகிழ கீழே உள்ள வீடியோவைப் பார்க்கவும்.





************************    ********************


ஆசிரியர் & ஆர்வலர் நிலையில் 


         முதலிடம் பெறும் கவிதை

                

சூழல் காப்பது சுகம்

--------------------------------------

காசு தேடியே களைத்த மனிதா 

காடு செய்வோம் வா!

மாசு ஏறிய உலகினைக் கொஞ்சம் 

மாற்றியமைப்போம் வா!


தூசு நிறைந்த காற்றினைச் சலித்துத்

தூய்மை செய்வோம் வா! - நாம் 

தூக்கி எறிந்திடும் விதைகளையெல்லாம் 

துளிர்த்திடச் செய்வோம் வா!


வறண்டு கிடக்கும் வனங்களையெல்லாம் 

வளமாய் மாற்றிட வா! 

இரண்டு மரங்களை இழந்தோமென்றால் 

இருபதை நடுவோம் வா!


தூறல்கள் சிந்தும் மேகத்தை இழுக்கத் 

தூண்டில்கள் செய்வோம் வா!

மீறல்கள் இல்லா விதிமுறை வகுத்து 

மீட்போம் இயற்கையை வா!


வன உயிர்களின் வாழ்விடம் காக்க 

வகை செய்வோம் வா! 

வணிக நோக்கில் வனம் அழிக்கும் 

வஞ்சகம் எதிர்ப்போம் வா!


சூழல் காப்பதே சுகமென அறியத்

தோழனே நீயும் வா!

சூரியச் சூட்டின் வீரியம் குறைக்கச்

சூத்திரம் செய்வோம் வா!


இருகரம் கூப்பி இயற்கையைத் தொழுவோம்

இளைஞனே நீயும் வா!

இறப்புக்கு முன்பே இயன்றதைச் செய்து 

இலக்கினைத் தொடுவோம் வா!


சுற்றுச் சூழலின் சுத்தம் காத்திட

யுத்தம் செய்வோம் வா!

தொற்று நோய்களைத் தோற்கச் செய்ய

சற்று முயல்வோம் வா!


மரங்களைக் காக்க கரங்களைக் கோர்ப்போம்!

மனிதா நீயும் வா!

உறக்கங்கள் இனியும் உள்ளத்தில் எதற்கு

உழைத்திட நீயும் வா!


வறட்சியைக் கொன்று வளங்களைக் காக்க

வாலிபனே நீ வா!

வருங்காலத்தை வசந்தங்கள் தழுவ

வழிவகை செய்வோம் வா!


பாரதத் தாய்க்குப் பசுமை உடுத்திப்

பரவசம் கொள்வோம் வா!

வேறெது நமக்கு இதைவிடப் பெருமை

வேர்களில் நீர்விட வா!


தனிமரம் தோப்பாய் ஆவது இல்லை 

அணிசேர்ந்திட நீ வா!

இனிவரும் தலைமுறை நமையே பழிக்கும் 

இருப்பதைக் காப்போம் வா!


கவிஞர்.நிலவை பாா்த்திபன் , மேலாளர் , 

பெங்களூர் ( நிலக்கோட்டை )













***********************   ********************


நன்றிக்குரிய நடுவர் பெருமக்கள்

1 ) பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி அவர்கள் .
( முதுகலை தமிழாசிரியர் & தலைமையாசிரியர் , இராயப்பன் பட்டி , 
தேனி.)

2 ) கவிஞர்.மணி மீனாட்சி சுந்தரம் , 
தமிழாசிரியர் , அ.மே.நி.பள்ளி , 
சருகுவலையபட்டி .மதுரை.

3 ) கவிஞர்.அ.கிருஷ்ணவேணி , 
தமிழாசிரியை , அ.உ.நி.பள்ளி , 
கருப்பட்டி , மதுரை.

4 ) கவிஞர்.நாகேந்திரன் , தமிழாசிரியர் , 
அ.உ.நி.பள்ளி , விரகனூர் , மதுரை.

மற்றுமோர் மாபெரும் கவிதைத் திருவிழாவில் சந்திப்போம் கவிஞர்களே ! வாழ்த்துகள் .

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.
97861 41410

************************   ********************




Post a Comment

1 Comments

  1. வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் 🎊🎊🎊 பங்கு பெற்றோருக்கு பாராட்டுக்கள்.வாய்ப்பு வழங்கியமைக்கு நன்றி

    ReplyDelete