அப்பா எனும் ஆண்டவன் - ஜூன் 20 , தந்தையர் தின சிறப்புப் பதிவு - JUNE 20 - FATHERS DAY

 ஜூன் - 20  - தந்தையர் தினம்

அப்பா எனும் ஆண்டவன்(நெஞ்சில் நிறைந்திருக்கும் அப்பாக்களுக்கு)

 ************************   ******************

                 நினைவு தெரிந்த நாளிலிருந்து நெஞ்சில் நிறைந்திருப்பவர் அப்பா. எனக்குப் பிடித்த கதாநாயகன். அப்பா ஒரு சகலகலா வல்லவன். அவரிடம் உள்ள அசாத்திய திறமைகளை அருகிருந்து பார்த்து ரசித்தவன். வியந்தவன்.


                விவசாயி ,  ஓவியர் , பேச்சாளர் , சித்தமருத்துவர் , சோதிடர் எனப்பல திறமைகள் அவருக்குள் உண்டு. அது எல்லா நேரமும் வெளிப்படாது. தேவையான போது வெளியே வரும். 

   மாமா தேள் கொட்டிருச்சு. நட்டுவாக்காலிய மிதிச்சிட்டேன். இராத்திரில இருட்ல ஒன்னுந் தெரியல ஏதாவது மருந்து இருந்தா போட்டு விடுங்க மாமா என வருபவர்களிடம் , கொஞ்ச நேரம் உக்காரு. வாரேன் எனச்சொல்லி விட்டு , கையில் இலைகளை நன்கு கசக்கி வைத்தியம் செய்வார்.  சரியாப் போச்சு மாமா எனச் சென்றுவிடுவார்கள். 

               அக்காவின் சயின்ஸ் ப்ராக்டிகல் நோட்டில் இருந்த படங்களில் அப்பா வரைந்த படங்களே அதிகம். சித்ப்பா புதுசா வீடுகட்டிப் பால்காய்ச்சு வைக்கும்போது அனுமார் படம் ஒன்னு சுவரில் வரைந்து கொடுத்தார்.

                   எலேய் ... என்னடா ! இங்கிட்டு அலையுற. 

சும்மாதான் மாமா. 

சரி இப்படி வா.

ஓன் இடது கைய நீட்டுல பாப்போம்.

ஆமா மாமா !  எனக்கு எப்போ கல்யாணம் நடக்கும்னு பாத்துச் சொல்லுங்க எனக்கேக்க , 

இந்தா பார்ரா இதான் ஆயுள் ரேகை 

இது புதன் மேடு என சொல்லிக்கொண்டிருப்பார். இவரு உண்மையிலேயே சொல்றாரா ? பொய் சொல்றாரா ? என நினைத்த பருவம் அது.

' பம்பனக்கானு ' எங்கூர்ல ஒரு அண்ணன் இருந்தாரு. அவுக அம்மாவ ஏமாத்தனம்னு காலி ரோக்கர் பாட்டில்ல கொஞ்சம் தண்ணிய ஊத்தி , வீட்டுக்குள்ள தெளிச்சுவிட்டு , தன்னோட உடம்புலயும் ஊத்திக்கிட்டாரு. வேலக்கிப் போன அவுக அம்மா வந்து பாக்குது. வீடெல்லாம் ரோக்கர் வாசம். 

ஏலே ! பம்பனக்கா னு கூப்புட , இவன் கண்ணச் சொருகி படுத்துக் கெடக்கான்.

     இவன் ஏதோ எடக்கு மடக்கா பண்ணிட்டான் போல இருக்கேனு அவுக அம்மா ஓ னு கூப்பாடு போட , ஊர்ச்சனம் கூடிச்சு. கொஞ்ச நாளாவே எனக்கு கல்யாணம் முடிச்சு வை னு சொல்லிக்கிட்டு இருந்திருக்கான். ஒழுங்கா ஏதாச்சும்வேல பாரு. பொண்ணு பாக்கன் னு அவுக அம்மா சொல்லிருக்கு. 

   பொண்ணு பாக்கலனு தான் மருந்தக் குடிச்சிட்டான் போலனு கூட்டத்தில பேசுறாக.

   ஏ ! ஆஸ்பத்திரிக்குப் போகலாம்பா. டக்குனு மாட்ப்பூட்டி வாங்க. விளாத்திகுளத்துக்கு , எட்டயாரத்துக்கோ போவோம். ஆளப் பிழைக்க வச்சிரலாம்னு பெருசுக சொல்றாக.

    அந்த நேரம் பாத்து எங்கப்பா வராரு. 

யே ! கொஞ்சம் தள்ளுங்கப்பா ! இந்தா முருகாச் சின்னையா வந்துட்டாரு.

     ஏன்டா இந்தக் கூட்டம். கொஞ்சம்  காத்தோட்டமா இருக்கட்டும். பம்பனக்கான முதல்ல வெளியில தூக்கிட்டு வாங்கல.

   என்னம்மா குடிச்சான் ?

தம்பி , பருத்திச் செடிக்கு அடிக்க வச்சிருந்த ரோக்கரு ஒரு பாட்டல குடிச்சிட்டான் தம்பி. இந்தா பாரு , வெறும் பாட்டில்தான் இருக்கு.

  அப்படியா ? ஒன்னும் பிரச்சன இல்லமா ! மாப்ள இன்னும் அஞ்சே நிமிசத்தில எந்திருச்சு ஓடுவாரு. 

             பம்பனக்கான் திரு திருனு முழிக்கான்.

அவுக அம்மா சொல்லுதாக. இந்தா பாருங்க தம்பி. பிள்ளக்கு முழி உள்ள போகுது.

போகட்டும் ! போகட்டும் ! 

எலே  ! அஞ்சாறு எளவட்டப் பசங்க மட்டும் இங்க வாங்கடா !

      என்ன மாமா ! இவனுக்கு மருந்து , வீட்டுக்குப் பின்னாடி இருக்குற வேலிக்குள்ள இருக்கு. அதப் பிரக்கிட்டு வாங்கலேய்.

      என்ன மாமா சொல்றீக ! 

ஆமால. மருந்து ரொம்ப குடிச்சிருக்கான். பன்னிச்சாணிய ஒரு வாளில கரைச்சுக் கொண்டு வாங்க. வாயில ஊத்துனா விசத்த உடனே கக்கிருவான் அப்படின்னார் அப்பா.

       ஒரு நிமிசத்தில கொண்டு வாரோம்னு இளவட்டங்க கிளம்ப , அதுவரை கண்ணச் சொருகிக்கிட்டு இருந்த பம்பனக்கான் தெறிச்சு ஓடுறான் கம்மாயப் பாத்து.

       என்ன மாமா ! எந்திருச்சு ஓடுறான். இன்னும் மருந்தே கொடுக்கலயே !

ஏலேய் ... அவன் அம்மாவ ஏமாத்தப் போட்ட நாடகம்ல இது. சரி.சரி எல்லாரும் அவரவர் வீட்டுக்குப் போங்கப்பா. 

       மறுநாளு பம்பனக்கான் , 

என்ன மாமா , கொஞ்சம் தாமதிச்சு இருந்தா வாயில கரைச்சு ஊத்திருப்பீக போலயே.!எனச் சொல்லிச் சிரிக்கான்.

எங்க ஊர்லயே அதிகம் படிச்சவர் எங்க அப்பாதான். அந்தக்காலத்து பத்து. போஸ்ட் ஆபிசு வேலக்கி வந்திருக்கு போகல. வாத்தியார் வேலக்கி வந்திருக்கு அதுக்கும் போகல. போயிருந்தா எப்படி இருந்திருப்போம்னு சொல்லுவாரு.

    படிக்கும் போது அப்பாவ எதிர் பார்த்த நாட்கள் அதிகம்.

அப்ப தோட்டத்தில கத்தரிச்செடி போட்ருக்கோம். காலைல வெரசாப்போய் காயப்புடுங்கி , எட்டு மணிப்பஸ்ல விளாத்திகுளம் மார்க்கெட்டுக்குக் கொண்டு போகனும். கத்தரிக்காய் கிலோ. அஞ்சு ரூவாய்க்கு போனா அது நல்ல காசு. கமிசன் கடைல போட்டுட்டு , மத்தியானப் பஸ்ல ஆளுக்கொரு முட்டைக்கோஸ் வாங்கிட்டு வருவாரு. அது வெடிச்ச பருத்திச்சுள போல இருக்கும். அதுக்காகவே பஸ் ஸ்டாப்ல போய் காத்துக்கிடந்த காலம் பொற்காலம்.

        சுத்து வட்டாரத்தில் அப்பாவத் தெரியாத ஆளே இல்ல . அப்பா படிச்ச பள்ளிக்கூடத்திலதான் நானும் படிச்சேன்.12 ஆம் வகுப்பு முடிச்சுட்டு அதே பள்ளிக்கூடத்துக்கு 20 வருசம் கழிச்சு இலக்கிய மன்றத்துக்கு சிறப்பு விருந்தினரா எங்க தமிழையா கவிஞர்.அ.கணேசன் கூப்பிட்டாரு. தலைமையாசிரியரா திரு.விஜய வீரன் சார் இருந்தாரு. அப்ப முன்னாள் மாணவர்ஙகிற முறையில அப்பாவையும் கூப்டாங்க . 

          அப்பா அருமையா பேசுனார் மேடையில்.இங்க சிறப்பு விருந்தினரா பேசுறதுக்கு என் மகனக் கூப்பிட்டிருக்கிங்க. அவன்தான் பேசனும். நான் ரொம்ப நேரம் எடுத்துக்கிட்டா நல்லாருக்காதுனு அஞ்சு நிமிசத்தில பேசிட்டு வச்சிட்டார். அப்றம் நான் ஒரு மணி நேரம் அந்த விழாவில் பேசுனேன்.

         மதுரயிலுருந்து ஊருக்குப் போகும்போது அப்பாதான் பாலம் ஸ்டாப்பிலிருந்து வீட்டுக்கு ஸ்கூட்டர்ல கூட்டுப் போவார். அவர் கூட பத்து நிமிசம் வண்டில போற சந்தோசம் இருக்கே ! அடேயப்பா ! 

ஆனாலும் ஒரு பயம் இருக்கும்.சும்மா வரமாட்டார். கம்ப ராமாயணம் முழுசும் தெரியுமா? ஐம்பெருங்காப்பியத்தில என்னென்ன படிச்சிருக்க ? என்னலே தமிழ் வாத்தியாருங்குற. இது தெரியலங்கற என்பார். அவருக்குப் பயந்துக்கிட்டே சிலத படிசசேன் ங்கறதான் உண்மை.

        அப்பாஅளவு யாராலும் எட்டு வச்சு நடக்க முடியாது. தோட்டத்தில தலைகீழா அப்படியே நிப்பார். இப்பவும் சோடா பாட்டில பல்லால கடிச்சு திறப்பார். 

     எம்பா ! இங்க இருந்துக்கிட்டு. பேசாம எங்கூட மதுரக்கி வந்திர வேண்டியதானே !

 யார்ரா இவன் ? உடம்புல தெம்பு இருக்கற வரைக்கு உழைச்சு சாப்பிடனும்டா. அந்த ஊரெல்லாம் எனக்கு செட்டாகுது என்பார்.

        கம்பராமாயணமா ? திருக்குறளா ? ஔவை பாடலா ? நினைச்ச நேரத்தில் மளமளனு சொல்வார் அப்பா.

     பள்ளிப் பருவத்தில் எனது கவிதை ஆர்வத்தைக்கண்டு 17 வயதில் என்னைக் கவிதைப் புத்தகம் வெளியிடத் தூண்டியவர்

     அவ்வப்போது நாளிதழ்களில் எனது கட்டுரை வரும்போத் , யாராவது சொல்லி , அதைக்கேட்டுப் போன் செய்வார். அப்பாவின் பெரிய பலம் அம்மாதான். அம்மாவின் இழப்பு அப்பாவை நிலைகுலைய வைத்தது. அதிலிருந்து அவர் மீண்டு வந்தாலும் இன்னும் பழைய அப்பாவாக அவர் இன்னும் மாறவில்லை. 

தினமும் ஒரு முறையாவது அப்பாவின் குரல் கேட்டால்தான் இந்த நாள் இனியதாகும். அப்பாவின் தோளில் அமர்ந்து , சுருட்ட முடியக் கொத்தாகப் பிடித்து  சாமி பார்த்த நாட்கள் மறக்க முடியாத நாட்கள். இதைப்பற்றி நான் எழுதிய கவிதை கல்கி வார இதழில் வந்தது.

            இப்போதுதான் உணர்கிறேன் சாமி பார்த்ததே அந்தச் சாமி மீது அமர்ந்துதான் என்பதை.!

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.

***********************    ******************Post a Comment

0 Comments