பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 2 - இயற்கை - கவிதைப்பேழை - முல்லைப்பாட்டு - நப்பூதனார் - எழுத்து & காட்சிப்பதிவுடன் பாடமே படமாக ! / 10 TAMIL - MULLAIPPAATTU

 

             பத்தாம் வகுப்பு - தமிழ்

               இயல் - 2  - இயற்கை 

                   கவிதைப்பேழை 

        முல்லைப்பாட்டு  -  நப்பூதனார்




வணக்கம் மாணவ நண்பர்களே  !  நாம் இரண்டாவது இயலில் இயற்கை என்னும் தலைப்பில் அமைந்த பாடப்பகுதிகளை ஒவ்வொன்றாகப் பார்த்து வருகிறோம். மகாகவி பாரதியின் ' காற்றே வா ' என்ற கவிதையைப் பார்த்தோம் . நேற்று உரைநடை உலகம் பகுதியில் அமைந்த ' கேட்கிறதா என் குரல் ! பகுதி கண்டோம். இன்று நாம் பார்க்க இருக்கின்ற அற்புதமான பகுதி கவிதைப் பேழையாக அமைந்துள்ள முல்லைப்பாட்டு ஆகும்.

நம்முடைய பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் காட்சிப் பதிவு விளக்கத்தை இணைக்கிறேன். உங்களுக்கு எளிமையாகவும் , இனிமையாகவும் புரியும்.

மாணவர்களே ! நம்முடைய சங்க இலக்கியக் கருவூலத்திலே பத்துப்பாட்டு , எட்டுத்தொகை என இரண்டு அற்புதமான பொக்கிஷங்கள் இருக்கின்றன என்பது நாம் அறிநததே ! இதை பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்போம். இதில் பத்துப்பாட்டில் உள்ள முல்லைப்பாட்டு என்ற நூலில் இருந்து நமக்கு பாடப்பகுதியாக முதல் 17 அடிகள் ( வரிகள் ) கொடுக்கப்பட்டுள்ளன. நாம் பாடப்பகுதிக்குச் செல்லும் முன் நூல்வெளி பகுதியைக் காண்போம்.

நூல் வெளி

முல்லைப்பாட்டு, பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று. இது 103 அடிகளைக் கொண்டது. இப்பாடலின் 1- 17அடிகள் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளன. முல்லைப்பாட்டு ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது; முல்லை நிலத்தைப் பற்றிப் பாடப்பட்டது; பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் இது. இதைப் படைத்தவர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார்.

 நுழையும்முன் என்ற பகுதியில் உள்ள செய்திகளை இப்போது பார்ப்போமா ?

நுழையும்முன்

               இயற்கைச் சூழல் நமக்குள் இனிய உணர்வுகளைத் தூண்டுகிறது. தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வைக் கொண்டிருந்தனர். மழைக்காலத்தில் அவர்கள் வாழ்வை எதிர்கொள்கிற இயல்பு இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மழையின் சீற்றம் இயல்பு வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்களைச் சங்க இலக்கியம் படம்பிடித்துக் காட்டுகிறது.

  நண்பரகளே ! நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு வார்த்தை விரிச்சி . இந்த வார்த்தையின் பொருள் என்ன ? என்பதை தெரிந்து தெளிவோம் பகுதியில் காண்போம்.

விரிச்சி.

                ஏதேனும்  ஒரு செயல் நன்றாக முடியுமோ ? முடியாதோ ? என ஐயம் கொண்ட பெண்கள் , மக்கள் நடமாட்டம் குறைவான ஊர்ப்பக்கத்தில் போய் , தெய்வத்தைத் தொழுது நின்று , அயலார் பேசும் சொல்லைக் கூர்ந்து கேட்பர் ;  அவர்கள் நல்ல சொல்லைக் கூறின் தம் செயல் நன்மையில் முடியும் என்றும் தீய மொழியைக்கூறின் தீதாய் முடியும் என்றும் கொள்வர்.

சரி. இப்போது பாடலைக் காண்போமா ?


நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு

வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை

நீர் செல, நிமிர்ந்த மாஅல் போல,

பாடு இமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,

கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி

பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை,

அருங்கடி மூதூர் மருங்கில் போகி,

யாழ்இசை இன வண்டு ஆர்ப்ப, நெல்லொடு,

நாழி கொண்ட, நறுவீ முல்லை

அரும்பு அவிழ் அலரி தூஉய், கைதொழுது,

பெருமுது பெண்டிர், விரிச்சி நிற்ப

*சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்

உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்

நடுங்கு சுவல் அசைத்த கையள், "கைய

கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர

இன்னே வருகுவர், தாயர்" என்போள்

நன்னர் நன்மொழி கேட்டனம்

                                                         அடி :1-17

( ஊதா நிற வரிகள் - மனப்பாடம் செய்ய வேண்டிய வரிகள் )

 பாடலில் உள்ள வார்த்தைகளில் பல நமக்குப் புதியதாகத் தோன்றுகிறதல்லவா ? இப்பாடலுக்கான விளக்கத்தை பெரும்புலவரின் காட்சிப் பதிவில் காண்போம். மிக எளிமையாகப் புரிந்துவிடும்.




காட்சிப்பதிவில் இனிமையாகப் புரிந்திருக்குமே !  இனி பாடலின் பொருளை வரிவடிவில் பார்ப்போம்.


சொல்லும் பொருளும்

நனந்தலை உலகம் - அகன்ற உலகம்

நேமி - வலம்புரிச்சங்கு

கோடு - மலை

கொடுஞ்செலவு -  விரைவாகச் செல்லுதல்

நறுவீ  - நறுமணமுடைய மலர்கள்

தூஉய் - தூவி

விரிச்சி - நற்சொல்

சுவல்  -  தோள்


பாடலின் பொருள்

               அகன்ற உலகத்தை வளைத்துப் பெருமழை பொழிகிறது. வலம்புரிச்சங்கு  பொறித்த கைகளையுடைய திருமால், குறுகிய வடிவம் கொண்டு மாவலி மன்னன் நீர் வார்த்துத் தரும்பொழுது, மண்ணுக்கும் விண்ணுக்குமாகப் பேருருவம் எடுத்து உயர்ந்து நிற்பது போன்றுள்ளது மழைமேகம். அம்மேகம், ஒலிக்கும் கடலின் குளிர்நீரைப் பருகிப் பெருந்தோற்றம் கொண்டு, வலமாய் எழுந்து, மலையைச் சூழ்ந்து, விரைந்த வேகத்துடன் பெருமழையைப் பொழிகிறது.

          துன்பத்தைச் செய்கின்ற அம்மாலைப் பொழுதில், முதிய பெண்கள் மிகுந்த காவலையுடைய ஊர்ப்பக்கம் சென்றனர். யாழிசை போன்று ஒலிக்கும் வண்டுகள் சூழ்ந்து ஆரவாரிக்கும் நறுமணம் கொண்ட அரும்புகள்; அந்த மலர்ந்த முல்லைப் பூக்களோடு நாழியில் கொண்டு வந்த நெல்லையும் சேர்த்துத்தெய்வத்தின் முன் தூவினர். தெய்வத்தைத் தொழுது, தலைவிக்காக நற்சொல் கேட்டு நின்றனர்.

     அங்கு, சிறு தாம்புக் கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்று பசியால் வாடிக்கொண்டிருந்தது. அதன் வருத்தத்தை ஓர் இடைமகள்
கண்டாள். குளிர்தாங்காமல் கைகளைக்
கட்டியபடி நின்ற அவள், "புல்லை மேய்ந்து
உன் தாய்மார் வளைந்த கத்தியை உடைய
கம்பைக் கொண்ட எம் இடையர் ஓட்டிவர
இப்போது வந்துவிடுவர், வருந்தா
என்றாள். இது நல்ல சொல் எனக்கொண்டு முதுபெண்கள் தலைவியிடம் நற்சொல் நாங்கள் கேட்டோம் என்று கூறினர். இவ்வாறு
தலைவன் வருகை குறித்து முதுபெண்டிர்
விரிச்சி கேட்டு நின்றனர். நின் தலைவன் பகைவரை வென்று திரைப் பொருளோடு வருவது உறுதி. தலைவியே! மனத்தடுமாற்றம் கொள்ளாதே!
என ஆற்றுப்படுத்தினர் முதுபெண்டிர்.

இலக்கணக்குறிப்பு

மூதூர் -  பண்புத்தொகை
உறுதுயர் - வினைத்தொகை
கைதொழுது -  மூன்றாம் வேற்றுமைத்                                                  தொகை
தடக்கை  - உரிச்சொல் தொடர்

பகுபத உறுப்பிலக்கணம்

பொறித்த - பொறி + த் + த் +அ
பொறி - பகுதி
த் - சந்தி
த் - இறந்தகால இடைநிலை
அ - பெயரெச்ச விகுதி

*********************    ********************
வாழ்த்துகள் நண்பர்களே ! 
பார்த்ததற்கும் , பகிர்ந்ததற்கும் நன்றி !

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.

உங்கள் வாட்சாப் குழுவில் 97861 41410 என்ற எண்ணை இணைத்து அனைவரும் பயன்பெறச்செய்யலாம் ஆசிரிய நண்பர்களே !

**********************    *********************


GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .


TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்

PG - TRB  - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்

UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள் 

என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்

GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*********  *************     ******

Post a Comment

1 Comments