பத்தாம் வகுப்பு தமிழ் - பாடமே படமாக ! - இயல் 1 - கவிதைப்பேழை - இரட்டுற மொழிதல் - இனிய , எளிய காட்சிப்பதிவு விளக்கம்.

 

பத்தாம் வகுப்பு - தமிழ்

இயல் - 1 : மொழி

கவிதைப்பேழை 

இரட்டுற மொழிதல் 

( சந்தக்கவிமணி தமிழழகனார் )




வணக்கம் மாணவ நண்பர்களே ! ஆசிரியத் தோழர்களே ! இன்று நாம் நமது பைந்தமிழ் வலைப்பக்கத்தில் ( GREEN TAMIL .IN ) பத்தாம வகுப்பு தமிழ்ப்பாடத்தில் இயல் ஒன்றில் அமைந்துள்ள இரட்டுற மொழிதல் என்ற தலைப்பில் அமைந்த சந்தக்கவிமணி தமிழழகனாரின் பாடலைக் காண இருக்கின்றோம். 


பாடலுக்கு அற்புதமான விளக்கத்தை.நமது பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா அவர்கள் தந்திருக்கிற காட்சிப்பதிவைக் கண்டாலே மிக இனிமையாக விளங்கிவிடும். அதையும் காண்போம்.


நுழையும் முன் என்ற தலைப்பில் அமைந்த செய்தியை முதலில் காண்போம். 

             விண்ணோடும் முகிலோடும் உடுக்களோடும் கதிரவனோடும் கடலோடும் தமிழ் இணைத்துப் பேசப்படுகிறது. இவற்றுக்குள்ள ஆற்றலும் விரிவும் ஆழமும் பயனும் தமிழுக்கும் உண்டு எனப் போற்றப்படுகிறது. தமிழ் கடலோடு ஒத்திருத்தலை இரட்டுற மொழிவதன் மூலம் அறிகையில் அதன் பெருமை ஆழப்படுகிறது ; விரிவுபடுகிறது.


முதலில் இரட்டுற மொழிதல் என்பதன் பொருள் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இரண்டு + உற = இரட்டுற 

ஒரே சொல் இரண்டு பொருள்படுமாறு அமைந்திருப்பது இரட்டுற மொழிதல் எனப்படும் . மொழிதல் என்றால் சொல்லுவது. இரட்டுற மொழிதல் என்பதைச் சிலேடை என்றும் கூறுவர்.

சிலேடை இருவகைப்படும் . 

1 - செம்மொழிச்சிலேடை ( சொல்லில் மாற்றமில்லாமல் இருபொருள்பட சொல்வது )

2 - பிரிமொழிச்சிலேடை ( ஒன்றாய் இருந்து ஒரு பொருளும் , பிரித்தால் வேறு பொருளும் தருவது பிரிமொழிச்சிலேடை )

      இரட்டுற மொழிதல் - பொருள்

   ஒரு சொல்லோ , சொற்றொடரோ இருபொருள்பட வருவது இரட்டுற மொழிதல் அணி எனப்படும் . இதனைச் சிலேடை அணி என்றும் அழைப்பர். செய்யுளிலும் , உரைநடையிலும் , மேடைப்பேச்சிலும் சிலைடைகள் பயன்படுத்தப்படுகின்றன. 

மேடைப்பேச்சில் சிலேடை.

       ஒரு பேச்சாளர் மேடையில் பேசிக்கொண்டிருந்தார். அவருக்கு பொன்னாடை ( துண்டு ) போர்த்த விழாக்குழுவினர் மறந்துவிட்டனர். அதை அவர்களுக்குத் தெரியப்படுத்த விரும்பி , நான் இங்க பலமுறை வந்ததுண்டு , உங்களோடு அளவளாவியதுண்டு , மகிழ்ந்ததுண்டு என அவர் கூறும்போது துணடு என்ற வார்த்தையில் சற்றே அழுத்தம் கொடுக்க , விழாக்குழுவினர் இடைநிறுத்தி , சிறப்பு விருந்தினர்க்கு துண்டு போடப்படுகிறது என்றுகூறி போர்த்தினாராம்.


உரையாடலில் சிலேடை 

   புலவர் ஒருவருக்கு மன்னர் ஒருவர் பொன்னாடை போர்த்தினார். அப்பட்டாடை அழகிய வேலைப்பாடமைந்தது. அது சிறிது கிழிந்திருந்ததை மனனர் கவனிக்கவில்லை. புலவர் அதை மன்னனுக்கு மிக அழகாக இரட்டுற மொழிகின்றார். எப்படி தெரியுமா ?


                     மன்னா , தாங்கள் கொடுத்த பட்டாடையில் மரம் இருக்கிறது. கிளை இருக்கிறது. கனி இருக்கிறது. காய் இருக்கிறது. கூடவே பிஞ்சும் ( கிழிந்தும் ) இருக்கிறது என்றார். உடனே மன்னன் புலவர் சொல்லவந்த செய்தி அறிந்து அவரது புலமையைப் பாராட்டி பிறிதொரு பட்டாடை வழங்கினானாம். 

மாணவர்களே ! நீங்கள் இரட்டுறமொழிதல் என்பதைப் புரிந்து கொள்ளவே மேற்கண்ட விளக்கம்.

           நமக்குப் பாடப்பகுதியாக வந்துள்ள பாடலை இயற்றிய ஆசிரியர் குறித்துக் காண்போம்.

        பாட்டுக்கொரு புலவன் பாரதி பிறந்த எட்டயபுரம் உள்ள மாவட்டம் தூத்துக்குடி. அந்த முத்து நகரில் 21 - 04 - 1929 ல் பிறந்தவர்தான் சந்தக்கவிமணி என்று அழைக்கப்டக்கூடிய வே.சண்முகசுந்தரம். முத்து நகரில் பிறந்ததாலோ என்னவோ இங்கே முத்தையும் முத்தமிழையும் பற்றிய அவரது பாடல் நமக்குப்பாடமாக வைக்கப்பட்டுள்ளது. பள்ளிப் பருவத்திலே பாடல் இயற்றும் ஆற்றல் பெற்றார்.



  இவரது முதல் கவிதை நூல் ( தமிழழகன் கவிதைகள் ) 1960 ஆம் ஆண்டில் வெளிவந்தது . இந்தக் கவிதைத் தொகுதிதான் இவருக்கு ' சந்தக் கவிமணி ' என்ற சிறப்பைப் பெற்றுத்தந்தது.

குழந்தைப்பாடல் இயற்றுவதிலும் சிறந்தவர் இவர்.

வானத்திலே வில்லு 

       வளைத்ததுயார் சொல்லு ?

ஏழுவகை வர்ணம் 

         எவரது கைவண்ணம் ?

சந்தக்கவிமணி என இவர் அழைக்கப்படுவதற்கு ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் இப்பாடலைச் சொல்லலாம்.

நூல்வெளி 

புலவர் பலரின் பாடல்களின் தொகுப்பான தனிப்பாடல் திரட்டு ( ஐந்தாம் பகுதி - கழகப் பதிப்பு )  என்னும் நூலில் இருந்து இந்தப்பாடல் எடுத்தாளப்பட்டுள்ளது.

       சந்தக்கவிமணி எனக்குறிப்பிடப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் சண்முகசுந்தரம். இலக்கணப்புலமையும் இளம் வயதில் செய்யுள் இயற்றும் ஆற்றலும் பெற்ற இவர் பன்னிரண்டு சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.

மாணவ நண்பர்களே ! பாடம் தொடர்பான சில செய்திகளை அறிந்தோம். இனி பாடலுக்குள் செல்வோம். 

முன்பே சொன்னது போல , பெரும்புலவர்.திரு. சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் இப்பாடலைக் காட்சிப்பதிவாக இப்போது காண்போம். எளிமையாகப் புரிந்துவிடும்.




காட்சிப்பதிவைப் பார்த்தீர்களா ? மகிழ்ச்சி. இப்போது நாம் பாடலைக் காண்போம்.

ஆழிக்கு இணை

முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்

மெத்த வணிகலமும் மேவலால் - நித்தம்

அணைகிடந்தே சங்கத் தவர்காக்க ஆழிக்கு

இணைகிடந்த தேதமிழ்

                                    - தனிப்பாடல் திரட்டு.

( மேற்கண்ட பாடல் வெண்பா வகையைச் சேர்ந்தது. வெண்பாவின் ஓசை - செப்பலோசை - உரையாடல் வடிவில் அமைந்த ஓசை செப்பலோசை )


சொல்லும் பொருளும் 

துய்ப்பது  - கற்பது , தருதல்

மேவலால்  - பொருந்துதல் , பெறுதல்

பாடலின் பொருள்

தமிழ் : தமிழ் . இயல் இசை நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது ; முதல் இடை கடை என முச்சங்களால் வளர்க்கப்பட்டது ; ஐம்பெருங்காப்பியங்களை அணிகலன்களாகப் பெற்றது ; சங்கப் பலகையில் அமர்ந்திருந்த சங்கப்புலவர்களால் காக்கப்பட்டது.


கடல் : கடல் , முத்தினையும் , அமிழ்தினையும் தருகிறது ; வெண்சங்கு , சலஞ்சலம் , பாஞ்சசன்யம் ஆகிய மூன்று வகையான சங்குகளைத் தருகிறது ; மிகுதியான வணிகக் கப்பல்கள் செல்லும்படி இருக்கிறது ; தன் தலையால் சங்கினைத் தடுத்து நிறுத்திக் காக்கிறது.


பாடல் அடிகள் வாரியாக நாம் இப்போது பொருள் காண்போம்.

              தமிழுக்கு

முத்தமிழ் - இயல் , இசை , நாடகம்

முச்சங்கம் - முதல் , இடை , கடை

மெத்த வணிகலன் - ஐம்பெருங்                                                                      காப்பியங்கள்

சங்கத்தவர் காக்க - சங்கப் பலகையிலிருந்து சங்கப் புலவர்கள் பாதுகாத்தமை

          கடலுக்கு 

முத்தமிழ்  - முத்தினை அமிழ்ந்து எடுத்தல்

முச்சங்கம் - மூன்று வகையான சங்குகள்                                  தருதல்

மெத்தவணிகலன் - மிகுதியான வணிகக்                                                கப்பல்கள் 

சங்கத்தவர் காக்க - நீரலையைத் தடுத்தி நிறுத்தி சங்கினைக்காத்தல் 


மாணவ நண்பர்களே !  இரட்டுற மொழிதல் என்ற பாடம் இணையத்தின் வழி உங்கள் எண்ணத்தில் நிறைந்திருக்கும் என நம்புகிறேன். அடுத்த பதிவில் இப்பாடல் தொடர்பாட வினா & விடைகளைக் காண்போம்.

முழுமையும் பாத்திங்களா ? பாடம் புரிந்ததா ? அப்படினா உங்க நண்பர்களுக்கும் பகிர்ந்து விடுங்கள். இரட்டுற மொழிதலின் இன்பத்தை அவர்களும் துய்க்கட்டும்.

மகிழ்ச்சி. வாழ்த்துகள். 

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை. 97861 41410

பத்தாம் வகுப்பு தமிழ் அனைத்துப் பாடத்திற்கும் காட்சி்ப்பதிவுகளை 

GREEN TAMIL என்ற You Tube சேனலில் நீங்கள் பார்த்து மகிழலாம்.

போட்டித்தேர்விற்குத் தயார் செய்பவர்கள் TAMIL INBAM.IN என்ற இணையதளத்தில் பதிவுகளைக் கண்டு பயன்பெறலாம். நல்வாழ்த்துகள்.

அன்னைத் தமிழை அகமகிழ்ந்து கற்போம் !

சாதனை மாணவராய்ச் சரித்திரத்தில் நிற்போம் !

மு.மகேந்திர பாபு.

மாணவர்களே ! இரட்டுற மொழிதலை மேலும் இனிமையாய்த் தெரிந்து கொள்ள கவி காளமேகத்தின் நகைச்சுவைப் பாடல்

 நீரா ? மோரா ? 








Post a Comment

0 Comments