மேல்நிலை இரண்டாம் ஆண்டு - ( 12 )
பொதுத்தமிழ்
இயல் - 1 - உயிரினும் ஓம்பப்படும் - மொழி
கற்றல் நோக்கங்கள்
* கவிஞரின் மொழிப்பற்றைத் தாமும் உணர்ந்து பிறருக்கும் உணர்த்துதல்
** மரபுக் கவிதையினைப் பொருளுணர்ந்தும் சீர்பிரித்தும் படிக்கும் ஆற்றல் பெறுதல்.
********************** *********************
கவிதைப்பேழை
தன்னேர் இலாத தமிழ்
தண்டியலங்கார உரை மேற்கோள் பாடல்
வணக்கம் மாணவ நண்பர்களே ! இன்று நாம் 12 ஆம் வகுப்பு பொதுத்தமிழ் பாடத்தில் முதலாவது இயலாக உள்ள உயிரினும் ஓம்பப் படும் பகுதியில் இருந்து கவிதேப்பேழையாக அமைந்துள்ள தன்னேர் இலாத தமிழ் என்ற தண்டியலங்கார உரை மேற்கோள் பாடலை நாம் காண உள்ளோம். இப்பாடலிற்கான விரிவான , இனிமையான விளக்கத்தை நமது பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா அவர்கள் காட்சிப் பதிவாகத் தருகிறார். மாணவர்கள் கண்டு மகிழலாம்.
நுழையும்முன் என்ற பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள செய்தியினைக் காண்போம்.
வானம் அளந்தது அனைத்தையும் அளக்கும் வலிமை மிக்கது தமிழ். நிலத்தினும்பெரிது, வானினும் உயர்ந்தன்று, கடலினும் ஆழமானது என்றெல்லாம் தமிழின் பரப்பையும் விரிவையும் ஆழத்தையும் புலவர் போற்றுவர். நிகரற்ற ஆற்றல் கொண்ட கதிரவனுக்கு ஒப்பவும் அதற்கு மேலாகவும் தமிழைப்போற்றும் புலவரின் பாடல் ஒன்று பாடமாக... நமக்குத் தரப்பட்டுள்ளது.
பாடலைக் காண்பதற்கு முன்பு நூல் வெளி என்ற பகுதியில் உள்ள செய்தியைத் தெரிந்து கொள்வோம்.
நூல்வெளி
தண்டியலங்காரம், அணி இலக்கணத்தைக் கூறும் சிறப்பான நூல்களில் ஒன்று. பாடப்பகுதி பொருளணியியல் பகுதியில் இடம் பெற்றுள்ளது. காவியதர்சம் என்னும் வடமொழி இலக்கண நூலைத்தழுவி எழுதப்பட்ட இந்நூலின் ஆசிரியர் தண்டி ஆவார். இவர் கி.பி. (பொ.ஆ.) 12ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர். இந்நூல் பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று பெரும் பிரிவுகளை உடையது; இலக்கண நூலார், உரையாசிரியர்கள் ஆகியோர் பலரால் எடுத்தாளப்பட்ட பெருமை பெற்றது.
மாணவ நண்பர்களே ! இப்போது நாம் பாடலைக் காண்போமா ?
ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது
தன்னேர் இலாத தமிழ்!
பா வகை : நேரிசை வெண்பா
பாடலின் பொருள்:
மக்களால் போற்றப்பட்டு, உயர்ந்த மலைகளுக்கு இடையே தோன்றி, கடலால் சூழப்பட்ட உலகத்தின் புற இருளைஅகற்றுவது ஒன்று. பொதிகை மலையில்தோன்றி, சான்றோரால் தொழப்பட்டு,மக்களின் அறியாமை என்னும் அக இருளைப்போக்குவதோடு ஒப்புவமை இல்லாததுமாக இருப்பது இன்னொன்று. இருளைப் போக்கும் இவ்விரண்டில் ஒன்று ஒளிர்கின்ற கதிரவன்; இன்னொன்று தனக்கு நிகரில்லாத தமிழ்.
********************** *******************
மேலே கண்ட பாடலையும் . அதற்கான விளக்கத்தையும் நம்முடைய பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் காண்போமா ?
மிக எளிமையாகப் புரிந்ததல்லவா ? இப்பாடலில் பயின்று வந்துள்ள அணி பற்றிக் காண்போம்.
விளக்கம் : இருவேறு பொருள்களுக்கிடையேஒற்றுமையை முதலில் கூறிப் பின் வேறுபடுத்திக் காட்டுவது பொருள் வேற்றுமை அணி எனப்படும்.
தமிழுக்கும் கதிரவனுக்கும் இடையே உள்ளபயன் சார்ந்த ஒற்றுமையை முதலில் கூறி அவற்றுள் தமிழ் தன்னேரிலாதது என்ற தன்மையைப் பின்னர் வேறுபடுத்திக்காட்டுவதால் இது பொருள் வேற்றுமை அணிஆயிற்று. இது வேற்றுமை அணியின் ஒரு பிரிவாகும்.
இலக்கணக் குறிப்பு
வெங்கதிர் - பண்புத்தொகை
உயர்ந்தோர் - வினையாலணையும் பெயர்
இலாத - இடைக்குறை
உறுப்பிலக்கணம்
உயர்ந்தோர் = உயர் + த் (ந்) + த் + ஓர்
உயர் - பகுதி, த் - சந்தி; த் ந் ஆனது விகாரம்
த் - இறந்தகால இடைநிலை
ஓர் – பலர்பால் வினைமுற்று விகுதி.
ஆர் என்பதன் ஈற்றயலெழுத்தான "ஆ
ஆகத் திரியும் (நன் 353)
விளங்கி = விளங்கு + இ,
விளங்கு - பகுதி, இ - வினையெச்ச விகுதி
வந்து = வா(வ) + த் (ந்) + த் + உ
வா - பகுதி ; வ எனக் குறுகியது விகாரம்
த் - சந்தி; த் ந் ஆனது விகாரம்
த் - இறந்தகால இடைநிலை
உ - வினையெச்ச விகுதி.
புணர்ச்சி விதி
ஆங்கவற்றுள் = ஆங்கு + அவற்றுள்
விதி : உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும்
ஆங்க் + அவற்றுள்
விதி : உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
ஆங்கவற்றுள்
தனியாழி = தனி + ஆழி
விதி : இ ஈ ஐ வழி யவ்வும் - தனி + ய் + ஆழி
விதி : உடல்மேல் உயிர் வந்து ஒன்று வது
இயல்பே - தனியாழி
வெங்கதிர் = வெம்மை + கதிர்
விதி : ஈறு போதல் - வெம் + கதிர்
விதி : முன்னின்ற மெய் திரிதல் - வெங்கதிர்
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .
TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்
PG - TRB - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்
GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.
0 Comments