வெத்து மோட்டார்.

வெத்து மோட்டார்

சீனிப்பெரியாவுக்கு வந்த கோவம் இன்ன விதந்தான் என்றில்லை. மணல் மேட்டில் குப்புறப்படுத்திருந்த.தன் மகன் இராமசாமியை தன் பலங்கொண்ட மட்டும் ஓங்கி ஒரு மிதி மிதித்தார் பின்பகுதியில். ஆயிரம் இடி தன் மண்டைக்குள் இறங்கியதைப் போல , என்னமோ ஏதோவென்று படாரென எழுந்த இராமசாமிக்கு ஒன்னும் புடிபடவில்லை.கண்ணைக் கசக்கிக்கினான். மீண்டும் ஒரு அப்பு செவியைச் சேத்து.

சிறுக்கிவிள்ள ... மோட்ர பாத்து ஆப் பண்ணுடான்னு  அனுப்புனா ... குப்புறப் படுத்து சொகுசா தூங்கிக்கிட்ருக்க ... தாயிளி மவன உன்ன ... பொறு  எனச் சொல்லிக்கொண்டே விறுவிறு என மோட்டார் இருக்கும் பள்ளத்திற்குள் சென்று சின்ன சின்ன கற்களில் காலூன்றி ஆப் பண்ணிட்டு மேலே வந்தார்.

வாடா இங்ன... எத்தன மணிக்குடா மோட்ர போட்ட ?

ஆறு மணிக்கு .

மணி இப்ப என்னடா ? 

தன் அருகில் மணலில் வைக்கப் பட்டிருந்த கடியாரத்தப் பாத்தான்.மணி பதினொன்னு ... அடடா ! நாலு மணி நேரந்தான தண்ணி ஓடும். மோட்ரு வெத்து மோட்ரா ஓடிச்சு போலருக்கே ! செத்தம்டா என நெனச்சிக்கிட்டே ...

இப்பத்தான்யா கண்ணசந்திட்டேன் ... 

எப்படா கண்ணசந்தே ... ஆட்ட வித்து , மாட்ட வித்து , உங்காத்தா நகயவித்து இப்பத்தான் ஒக்கிட்டு கெடந்த மோட்ர ரிப்பேர் பாத்திருக்கேன். உனக்கு தூக்கம் வருது என்ன ? வார்த்தைகளில் கடுமையும் , கோவமும் இன்னும் குறையல.

ஆமா , எங்கடா தண்ணி பாச்சிறவன ? அவனாவது சொல்ல வேணாமாடா வெத்து மோட்ரா ஓடுதுனு ? தண்ணி வராமலாடா பாச்சுறான் கத்தரிக்கு ? 

இப்பத்தான் சுள்ளென ஒறச்சது இராமசாமிக்கு. மாப்ள மாமா ஓரு விசேசத்துக்கு நம்பியாரம் வரக்கும் போறோன். கடைசிப் பாத்தி பெரிய பாத்தி. எப்டியும் இருவது நிமிசமாகும் தண்ணி பாய. அதனால ஒரு பத்து மணிக்கு டாண்ணு ஆப்பண்ணிருங்க என கனகு சொன்னபோது மணி ஒம்பதரை.  பாத்தியிலிருந்து அடுத்த பாத்திக்கு தண்ணி   பாய சின்ன இடம் வெட்டி வைத்துவிட்டுப் போய்விட்டான் கனகு.

என்னடா கண்ணு செவந்திருக்கு ?

தூங்கனன்லெ ... அதான் .

பக்கத்தில வாடா ...  ஊதுடா ?

அது வந்து ...

குடிச்சியா ?

ஆமா ... கொஞ்சந்தான் .ஒரு சொம்பு மட்டும் .

நீ ஒரு சொம்பு குடிச்சியா , மூனு சொம்பு குடிச்சியானு இப்ப எனக்குத் தெரிஞ்சிரும்.

மூனு சொம்புனு கரிட்டா சொல்லுது அய்யா .
மூனு சொம்பு கள்ளு ஊத்திக் கொடுத்தத இராமர் சொல்லிருப்பானோ ?

இந்தா வாரேன் ...  எனச் சொல்லி விட்டு , பக்கத்திலிருந்த ஓலக்குடிசயில சொருகு வச்சிருந்த தாருக்குச்சிய எடுக்க ,

பின்னங்கால் பிடதில அடிக்க ஓட்டம் பிடித்தான் வீட்டுக்கு. அந்த ஓட்டத்தில் போதையிலிருந்து தெளிவும் ,  இனி குடிக்கக் கூடாதென்ற தெளிவும் பிறந்திருந்தது இராமசாமிக்கு.

மு.மகேந்திர பாபு .

Post a Comment

0 Comments