ரோசக்காரனும் , ரோக்கர் பாட்டலும் ...
என்னலே அங்க கூட்டமா இருக்குது ?
பம்பனக்கான் மருந்தக் குடிச்சிட்டானாம் .
அட , நாறப்பய ...புள்ளயா ? குட்டியா ? அவன் எதுக்குலே மருந்தக் குடிச்சான் ?
யே , வழிய வுடுங்கபா.அவன காத்தோட்டமா ஒக்கார வைங்க. என்ன கழுதய குடிச்சான் ?
ரோக்கர் தம்பி.பருத்திக்கு அடிக்கிறதுக்காக வாங்கி வச்சிருந்தேன்.பாவிப்பய குடிச்சிட்டாம்போல. அடுப்படியில கொஞ்சம் சிந்தியிருக்கு.அவன் மேலயும் நாறுது.குடிச்சயாடான்னா ? திருதிருனு முழிக்கான்.கண்ணச் சொருகுறான்.பயமா இருக்கு தம்பி.ஏதாச்சும் வண்டி இருந்தா வெரசா கொண்டாங்க
அது சரி.நீ இவன என்ன சொன்ன ?
ஒழுங்கா வயலுக்கு வேலக்கிப் போடா.அப்பதான் ஒனக்கு கஞ்சின்னென். போக முடியாதுன்னான்.அப்ப கூரையில சொருகி இருக்கிற மருந்தக் குடிச்சி சான்னேன்.பய செஞ்சுட்டானப்பா.நா என்னத்தச் சொல்ல ?
நீ ஒன்னுஞ் சொல்ல வேணாம். டேய் தம்பி இங்க வாடா.ஒரு வாளியில மாட்டுச்சாணிய கரைச்சுக் கொண்டாடா.
சாணி எதுக்கு ?
அவன் வாயில ஊத்துறதுக்கு ! கொண்டாடான்னா ,கொண்டாடா. வெண்ணெய்யாண்டி.கேள்வி மயித்தக் கேட்குறான் பார்ரா .
அதுவரை வெறுமனே உறுமிக் கொண்டிருந்த பம்பனக்கான், மெல்லமா தலயத் தூக்குனான்.
ஏலே சுப்பு , அவன் வாய அகலிச்சுப் பிடிச்சுக்கோடா.
வாயத் தொறக்க மாட்டிக்கானப்பா.
அகப்பைய வச்சு குத்துடா அவன் வாயில.தாயிளி தன்னால திறப்பான்.சாணிய ஊத்துனா , மருந்தெல்லாம் மளமளனு கக்கிருவான்.
யோவ் மாமா , நா மருந்தக் குடிக்கலயா.சும்மா வெறும காலி ரோக்கர் ் பாட்டில்ல தண்ணியக் கலந்து அடுப்பு மேலயும் , ஏன் மேலயும் தெளிச்சுக்கிட்டேன் ஆத்தாவ பயங்காட்றதுக்கு.
இல்லயா மாப்ள.நீ குடிச்சிருக்க . கொஞ்ச நேரத்தில மண்டயப் போட்ருவ.அமுக்குயா அவன .வாயில ஊத்துங்கடா.
அடப் போங்கயா எனத் திமிறிக் கொண்டே கம்மாய்க்கு ஓடினான் குளிக்க.
ஊருக்குப் போயிருந்தேன் நான். என்ன மாப்ள எப்டி இருக்க ? வெள்ளாம எப்டி இருக்கு.இப்பவும் ரோக்கர்தான் அடிக்கிறிங்களா செடிக்கு ?
ஏ ! வாத்யாரே , அந்தா இந்தானு நீரு எங்க வாறீர்னு தெரியுது.அது அப்ப.இருவது வருசத்து முன்னாடி உள்ளத இன்னுமாயா மறக்கல.ஒங்கப்பாதான் சாணிய ஊத்தச் சொன்னவரு.அதே கிசும்பு ஒனக்கும்யா என்று சிரிச்சிக்கிட்டே போனான் பம்பனக்கான் என்ற முத்து.
மு.மகேந்திர பாபு.
1 Comments
ரோக்கர்.....கிறக்கம்
ReplyDelete