பனங்கிழங்கு
அண்ணே ! இது கன்னிவாடி கிழங்கு , மாவா இருக்கும். கிழங்கு ஒன்னு அஞ்சு ரூவா.நால்ரூவானு தரலாம். இது ராம்நாடு கிழங்கு. இதும் மாவு மாதிரிதான் இருக்கும். கொஞ்சம் நார் இருக்கும் . எடுத்துக்கோங்க ...
மதுரை , சிம்மக்கல்லில் விலை பேசிக் கொண்டிருந்தார் ஒரு கிராமத்து அக்கா. ஒரு கட்டு கிழங்கு வாங்கி வந்தேன். பனங்காட்டுடனன் செலவான என் பால்யம் நினைவுக்கு வந்தது.
அப்போ அஞ்சாப்போ , ஆறாப்போ படிச்சிக்கிட்ருந்த நேரம். பாள சீவி , நொங்கு வெட்டித் தின்னது போக , மீதமுள்ள பனைகளில் பனம்பழம் சரஞ்சரமா தொங்குது.
எஞ்சோட்டுப் பயகளுக்கு பனம் பழம் பெறக்கப் போறது ஒரு சந்தோசமான விசயம். தனியாளாப் போகாம , கூட்டு சேந்து போவோம்.
கோவில்பட்டியிலிருந்து வார தீப்பெட்டி ஆபிசு பஸ் அதிகாலை நாலு மணிக்கு எங்கூரு ுக்கு ு வந்துரும். தொடர்ந்து ஆரன் சத்தம் அடிப்பான். அப்ப நாங்க கிளம்பத் தயாராவோம்.
சில பேர்ட்ட டார்ச் லைட் இருக்கும். நாங்க சிரட்டயில உள்ள மூனு.கண்ணுல ஒன்ன ஓட்ட போட்டு , அதுலெ குச்சிய சொருகி லைட்டா மாத்துவோம். சின்ன மெழுகு வத்திய நடுவுலெ ஒரு சொட்ட விட்டு அதில ஒட்ட வச்சிருவோம்.
அந்த டார்ச் லைட்ட வச்சு பனங்காட்டுக்குப் போவோம். சணல் சாக்கு தோளில் கிடக்க , அந்த கெச இருட்ட மெழுகு வத்தி டார்ச்சால் விலக்கி நடக்க , ஒரு பயமும் , சந்தோசமும் அப்பிக் கெடக்கும் மனசெங்கும்.
தூங்காத ஒன்னுரெண்டு நாய்க, லேசா தலயத் தூக்கி , லொள்னு சொல்றதுக்கு முன்னே , ஏ ... சேடு ... தூரப்போனு சொல்லிருவோம். நம்மள விட மோசமானவனுகளா இருக்கானுகனு நாய்க அமைதியாயிரும்.
மொதல்ல கத்தாளப் பனங்காடு. பனம்பழத்தின் வாசமே , நான் இங்கின கிடக்கேனு சொல்லாமச் சொல்லும். நடு முள்ளுக்குள்ள விழுந்து கெடந்தாலும் விடமாட்டோம். எடுத்துருவோம். அடுத்து கீழக்காடுக்கு நடக்கனும். கொஞ்சம் பயந்தான். பக்கத்தில சுடுகாடு. ஏதாச்சும் சாமி பாட்டு எங்களயறியாம மொனங்குவோம்.
அடுத்து வடகாடு. பனனா அதான் பன.நூறு அடி ஒசரமுள்ள கும்பப் பனைக. ஆளுக்கொரு பன மரத்துத் தூர்லெ பழத்த தேடுறோம். பேய் ஒன்னு முதுகுல ஓங்கி அறைஞ்ச மாதிரி சத்தம். எனக்கு ஈரக்கொல அத்துப் போச்சு. அத்தன பேரும் திருத்திருனு முழிக்கோம்.
விழுந்த வேகத்தில அந்த மூனு கொட்ட பனம்பழம் கிழிஞ்சு போய் தரையில பள்ளம் பறிச்சுக் கெடக்கு. ஒரு நூல்லெ நான் தப்புனேன். நடு முதுகுல விழுந்திருந்தா அன்னக்கி கத கந்தல்தான்.
லேசா செங்க மங்கலா விடியத் தொடங்குச்சு. பழத்த பங்கு பிரிச்சு வீட்டுக்கு கொண்டாந்தோம். இனி என்னத்த என நெனக்கல.
ஏலேய் ... நாளக்கி ரெடியா இதேமாதிரி தீப்பெட்டி ஆபிசு வண்டி ஆரன் அடிக்கும்போது பொது எடம் கோவிலுக்கு வந்திருங்கடா என்றோம்.
இப்ப நெனச்சாலும் நெஞ்சு கெதக்கு கெதக்குதுங்குது. பனம்பழம்னா சும்மாவா ? பணம் போடாம , பயத்த விட்டு , சந்தோசமா பெறக்குனதாச்சே ! கிராமம் கிராமந்தான்.
மு.மகேந்திர பாபு.
0 Comments