மாணவர்களும் மன்றங்களும்

 


மாணவர்களும் மன்றங்களும் - மு.மகேந்திர பாபு


ஏடு தூக்கிப் பள்ளியில்

     இன்று பயிலும் சிறுவரே

நாடு காக்கும் தலைவராய்

     நாளை விளங்கப் போகிறார்


  - என்ற குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் பாடல் வரிகள் எப்போதும் என் மனதில் வந்து போகும். வகுப்பறையில் மாணவச் செல்வங்களைக் காணும்போதெல்லாம் நாளை நாட்டைக் காக்கும் நம்பிக்கை நட்சத்திரங்கள் இவர்கள் என்று எண்ணுவேன். இவர்களில் பாப்புனையும் பாரதிகள் எத்தனை பேரோ? அணு விஞ்ஞானியாகிய அப்துல் கலாம்கள் எத்தனை பேரோ? சட்டம் தந்த அம்பேத்கர்கள் எத்தனை பேரோ? இவர்களின் ஆர்வத்தையும், ஆற்றலையும் வளர்க்க வேண்டியது வகுப்பறையில் ஆசிரியரின் கடமை.


            பள்ளி என்பது நூறு சதவீதத் தேர்ச்சி என்ற ஒன்றை மட்டும் இலக்காகக் கொண்டு நகராமல் மாணவர்களிடம் பண்பாட்டையும், படைப்பாற்றலையும் வளர்க்கச் செய்வதாக இருக்க வேண்டும். ஓர் ஆசிரியரின் உயிரோட்டமான வகுப்பறை என்பது அவர் படித்து வந்து பாடங்களை ஒப்பிப்பதில் இல்லை, மாணவர்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்பை அவர்களின் படைப்பாற்றலையும் 

ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும். கல்வியும், கல்வி இணைச்செயல்பாடுகளும் இரண்டு கண்களாக இருக்க வேண்டும். 


    இன்றைய சூழலில் நூற்றுக்கு நூறு தேர்ச்சி பெறுவதும், மருத்துவர்கள், பொறியாளர்களை அதிகமாக உருவாக்குவதும்தான் பள்ளிகளின் அளப்பரிய சாதனை என்ற சிந்தனை மக்களிடையே உருவாகிவிட்டது. இது தவறென்று சொல்வதற்கில்லை. மாணவர்களுக்கு ஓய்வே கொடுக்காமல் அவர்களை எப்படியாது தமது எண்ணங்களைப் புகுத்தி கல்வியில் சாதிக்க வைக்க வேண்டும் என்றுதான் பெற்றவர்கள் நினைக்கிறார்கள். கற்றவர்களும் நினைக்கிறார்கள். சிறப்பு வகுப்புகளில் இணைக்கிறார்கள். 


               முப்பது பேர், நாற்பது பேர் இருக்கும் வகுப்பறையில் சில மாணவர்கள் ஆர்வத்துடன் கேள்விகளுக்குப் பதில் சொல்வார்கள். சிலர் கேள்விகளைகக் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். சிலர் இடைவேளை நேரங்களில் பல குரலில் மாணவர்களை மகிழ்வித்துக் கொண்டிருப்பார்கள். சிலர் இருக்கையை இசைக்கருவியாக்கி, மாணவர்களை ஆட வைத்துக் கொண்டிருப்பார்கள். இவர்களுக்குள் ஒரு படைப்பாளி உள்ளிருக்கிறான் என்பதை ஆசிரியர் உணர வேண்டும். 


          உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களிடம் புதிய மாற்றம் ஏற்படும். ஒருமுறை எங்கள் பள்ளியின் கணித ஆசிரியர் ஒரு மாணவனை அழைத்து வந்து என்னிடத்தில், 'ஐயா இவனைக் கொஞ்சம் 'கவனிங்க' என்றார். என்ன செய்தான்? என்றேன். நான் கரும்பலகையிலே கணிதம் எழுதிப்போட்டுக் கொண்டிருக்கிறேன். இவனோ  தாளில் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறான். உங்கள் வகுப்பு மாணவன்தான். நீங்கள்தான் இவனுக்கு வகுப்பாசிரியர்' என்றார் அவர். அதாவது ஒரு குற்றவாளியைக் கண்டுபிடித்து உங்களிடம் ஒப்படைத்துவிட்டேன் என்ற மனநிலையில் இருந்தார் அவர். நானும், 'சரிங்க ஐயா. இவனைக் கவனித்துக் கொள்கிறேன் என்று கூறினேன். அந்த மாணவனை அருகே அழைக்க, அவன் வருவதற்குத் தயங்கினான். அவன் எழுதிய அந்தக் கவிதைத் தாளை வாங்கிப் படித்துப் பார்த்தேன். அது அகம் சார்ந்தது என்பதை அவன்  முகம் காட்டியது. எங்கும் எழுத்துப் பிழைகள். அருகில் அழைத்து அவனது கையை நீட்டச்சொல்ல, "இனிமேல் இப்படிப் பண்ண மாட்டேன். இந்த ஒரு முறை என்னை மன்னித்துவிடுங்கள் ஐயா" என்றான். "இல்லை இல்லை உன்னை மன்னிப்பதாக இல்லை. உன்னிடத்தில் கவிதை எழுதும் ஆற்றல் இருக்கிறது. உன் மனதும், வயதும் சொல்கிற கவிதையை எழுதியிருக்கிறாய். இது தவறென்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் நான்  தரும் சில தலைப்புகளில் நீ கவிதை எழுதி வரவேண்டும். உன்னால் முடியும். உனக்கு ஒரு புத்தகம் பரிசாகத் தருவேன்" என்று நீட்டிய கையைப் பற்றிக் குலுக்கினேன். அவன் எதிர்பார்த்ததற்கு மாறாக நான் அவ்வாறு சொன்னதில் அவனுக்கு வியப்பு. அழைத்து வந்த கணித ஆசிரியர்க்கோ முகத்திலே கடுப்பு. அவரிடத்தில் கூறினேன். "அண்ணே! அவனைத் திட்டுவதிலோ, அடிப்பதிலோ பெரிய மாற்றம் நிகழப் போவதில்லை. மாறாக அவனது விருப்பத்தின் போக்கிலே சென்று அவனை மாற்றுவோம். இது எனது பள்ளிப் பருவத்தில் நானும் அனுபவித்த ஒன்றுதான்" என்று அவரிடத்தில் மென்மையாகச் சொல்ல அவரும் அதை ஏற்றுக் கொண்டார். அப்படிப்பட்ட பதின்பருவத்தில் நான் எழுதிய எழுத்துகளை கவிதை என்று பாராட்டிய எனது தமிழாசான் கவிஞர்.அ.கணேசன் ஐயா எனது மனக்கண்ணில் வந்து போனார். 


     பள்ளிகளில் தற்போது மாபெரும் மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. பாடத்திற்கு ஒன்றாக மன்றங்கள் இப்போது மாணவர்களை குன்றென நிமிர்ந்து நிற்கச்செய்கின்றன. தமிழ் மன்றம் தொடங்கி, தொன்மை மன்றங்கள் நிறைவாக அனைத்து மன்றங்களும் மாணவர்களின் ஆக்கத்தை ஊக்குவிப்பனவாக இருக்கின்றன. அவ்வப்போது நடைபெறும் அம்மன்றங்கள் மாணவர்களின் மனதைச் செம்மைப் படுத்துவதோடு மட்டுமல்லாது, அவர்களது திறமைகளை அடையாளம் கண்டு இன்று வெளிநாட்டுக்கு விமானத்தில் சுற்றுலா சென்றுவரும் அளவிற்கு உயர்த்தியிருக்கிறது. என்னுடைய பள்ளிப் பருவத்தில் தமிழ் மன்றத்தின் மூலமாக நடந்த இரு நிகழ்வுகளை நான் முன்பே குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? அந்த இரண்டு விழாக்கள் எங்களுக்குள் இருந்த ஆர்வத்தை வெளிப்படுத்தின. தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பில் பேச்சாளர்கள் வந்து மாணவர்களிடையே உரையாற்றும்போது, புதியவர் ஒருவர் என்ன சொல்கிறார் என்றாவது கேட்போம் என்ற மனமாற்றத்தில் தொடங்கி, ஒரு மணி நேர நிகழ்வில் அவர்களது மனம் மிகவும் இலகுவாக மாறுகிறது; புதிய சிந்தனை ஏறுகிறது.


     எங்களது இளமனூர்ப் பள்ளியில் தொடர்ந்து இருபத்தைந்து ஆண்டுகளாகப் பல பேச்சாளர்களை அழைத்து வந்து தமிழ் மன்றத்தின் மூலமாக மாணவர்களிடத்திலே உரையாற்ற வைக்கிறேன். எனது தமிழாசான் கவிஞர்.அ.கணேசன் சொல்வார் "ஒரு பள்ளியின் பெருமை விழாமல் இருக்க வேண்டுமென்றால் அவ்வப்போது விழாக்கள் நடத்த வேண்டும்." இது எவ்வளவு பெரிய உண்மை என்பதை விழாக்கள் நடத்தும் பள்ளி ஆசிரியர்கள் உணர்வார்கள் என நம்புகிறேன். 2002ல் முதன் முதலாக இலக்கிய மன்றத்திற்கு சிவகாசி முத்துமணி ஐயாவை அழைத்தேன். அதன் பின் மதுரை வானொலி நிலைய மேனாள் இயக்குநர் இளசை சுந்தரம் ஐயா அவர்கள், கவிஞர்.மூரா அவர்கள், பேரா.கு.ஞானசம்பந்தன் அவர்கள், அவனி மாடசாமி அவர்கள், பெரும்புலவர்.மு.சன்னாசி அவர்கள், புலவர்.சங்கரலிங்கம் அவர்கள்,  நல்லாசிரியர்.சண்முக திருக்குமரன் அவர்கள், விளாங்குடி விநாயகமூர்த்தி அவர்கள், திருநாவுக்கரசு அவர்கள், சோழ.நாகராஜன் அவர்கள், பேரா.காந்திதுரை, பேரா.வீரலட்சுமி என பலரையும் அழைத்து வந்து பேச வைத்துள்ளேன்.


          அவர்கள் பேசுகின்ற அந்த ஒரு மணி நேரத்தில் மாணவர்கள் சிரிப்பார்கள், சிந்திப்பார்கள், நாமும் அவர்களைப் போல நாளை பேசவேண்டும், எழுத வேண்டும் என்ற எண்ணத்தை தனக்குள் விதைப்பார்கள். கடந்த இரண்டாண்டுகளாகத் தமிழகக் கல்வித்துறை 'தமிழ்க்கூடல்' என்ற நிகழ்வை அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் நடத்துவதற்கு வழி செய்துள்ளது. அதற்கு முன்பு 'தமிழ் இலக்கிய மன்றம்' என்ற பெயரில் நடைபெற்று வந்தது. 25ஆண்டுகளுக்கு முன்பே எங்களது இளமனூர் பள்ளியில் அன்றைய தலைமை ஆசிரியை திருமதி.தெய்வகன்னி அவர்கள் இருந்த போதே தொடங்கி, தொடர்ந்து நடத்தி வந்தோம். இன்றைய தலைமை ஆசிரியை திருமதி.வெ.கனகலட்சுமி அவர்கள் மன்றச் செயல்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் தருபவர். ஒவ்வொரு நிகழ்வுகளிலும் மாணவர்களோடு மாணவராய் வருபவர். ஆர்வமுள்ள தமிழாசிரியர்களும், ஊக்கமுள்ள தலைமை ஆசிரியர்களும் இருக்கின்ற பள்ளிகளில் 'தமிழ்க்கூடல்' விழா மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுப் பேசி வந்திருக்கிறேன். தொடர்ந்து பேசியும் வருகிறேன். மாணவர்களின் பேச்சுத்திறனையும், படைப்பாற்றலையும் கண்டு ஊக்கப்படுத்தியும் வருகிறேன்.


            பெரும்பாலான பள்ளிகளில் விழாக்களை மாணவர்கள் தொகுத்து வழங்குகிறார்கள்; வரவேற்புரை கூறுகிறார்கள்; நன்றியுரை நவில்கிறார்கள். இதன் மூலம் மாணவர்களின் மேடைக்கூச்சம், பயம்  அகற்றப்படுகிறது. சில பள்ளிகளில் ஆசிரியர்களின் வழிகாட்டுதலில் மாணவர்களே இரு குழுக்களாக இருந்து பட்டிமன்றங்களும் நடத்துகிறார்கள். சங்கச்செய்திகளை நாடகமாக்கி நடிக்கவும் செய்கிறார்கள். பள்ளியில் கற்றுக்கொண்ட, பெற்றுக்கொண்ட இப்பழக்கம் கல்லூரியில் வழக்கமாகிவிடுகிறது. வானில் ஆயிரமாயிரம் நட்சத்திரங்கள் ஒளி தந்தாலும் விடிவெள்ளிக்கென்று ஒரு சிறப்பு உண்டு. பள்ளியெனும் வானில் மாணவ நட்சத்திரங்கள் சில நூறு இருந்தாலும், படைப்பாற்றல் கொண்ட மாணவர்களே விடிவெள்ளியாய் ஒளிர்கிறார்கள்.


     சில பள்ளிகளில் பாடப்பகுதியில் உள்ள பாடல்களை இசையுடன் இனிமையாகப் பாடுகிறார்கள்.  வரவேற்பு நடனம் அழகாக ஆடுகிறார்கள். நம்மைச் சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கிறார்கள். அப்பள்ளி மாணவர்களின் பேச்சு நமது பேச்சை விட சில பள்ளிகளில் அருமையாக அமைவதும் உண்டு. நாடகங்களில் மாணவர்களே பெண் வேடமிட்டு நடிக்கும்போது அங்குச் சிரிப்பிற்குப் பஞ்சமிருக்காது. வசனத்தை மறந்து விட்ட மாணவருக்கு உடன் நடிக்கும் மாணவரே சொல்லிச்சொல்லி நடிக்கும் போது மாணவர்களின் கேலிப்பேச்சால் அரங்கமே அதிரும். பெண்கள் மேனிலைப்பள்ளியில் நடைபெற்ற பட்டிமன்றத்திற்கு நடுவராகச் சென்றிருந்தேன். எந்த விதமான முன் ஆயத்தமும் இல்லை. ஒன்றரை மணி நேரம் பட்டிமன்றம் நடந்தது. ஒவ்வொரு மாணவியும் கைதேர்ந்த பேச்சாளர் போல் பேசியது இன்றும் என் மனதில் இருக்கிறது. அதுபோல் ஒரு பள்ளியில் ஆசிரியர்கள் பேசும் பட்டிமன்றத்திற்கும் நடுவராக அழைக்கப்பட்டிருந்தேன். அதில் ஒரு ஆசிரியர் 99 மலர்களின் பெயர்களைக் கூறி ஆச்சர்யப்படுத்தினார். ஒன்பதாம் வகுப்புப் புதிய பாடத்திட்டம் 2019ல் வந்தபோது எங்கள் பள்ளி மாணவர்களை வைத்து ஒரு பட்டிமன்றம் நடத்தினோம். மிகச்சிறப்பாக மாணவர்கள் பேசினார்கள்.


   மாணவர்களிடம் என்ன விதைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பள்ளிகளில் பேசுகிறோமோ அது நிறைவேறுகின்றபோது கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கும். ஒரு பள்ளியில், மாணவர்கள் தங்கள் பிறந்த நாளின்போது ஒரு மரக்கன்றாவது நடவேண்டும் என்று சொன்னேன். ஒரு வாரத்தில் ஒரு மாணவி தன் பிறந்த நாளுக்கு பள்ளி வளாகத்தில் ஒரு மரக்கன்றினை நட்டு வைத்து, தமிழாசிரியர் மூலம் எனக்கு ஒளிப்படத்தையும் அனுப்பியிருந்தார். உண்மையிலேயே பெரும்மகிழ்வாக இருந்தது.


      தமிழ்க்கூடலில் நடைபெறும் போட்டிகளில் மாணவர்களுக்குப் புத்தகங்கள் பரிசாக வழங்கப்படுகின்றன. சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இவை மாணவர்களுக்குப் பல்லாண்டுகள் கழித்தும் பள்ளிப்பருவ நினைவுகளில் பதிந்திருக்கும். பள்ளிகளில் நடைபெறும் தமிழ்க்கூடலுக்கோ அல்லது கல்லூரிகளின் தமிழ்த்துறை விழாக்களுக்கோ சிறப்பு விருந்தினராகச் செல்கின்ற போது ஊற்றுகோலும், புத்தகமும் கொண்டு செல்வதுண்டு. பேச்சின் இடையிடையே மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் விதமாகச் சில கேள்விகள் கேட்டு பதில் சொல்லும் மாணவர்களுக்குப் புத்தகம், பேனா கொடுப்பதுண்டு. 



     எளிமையான வினாக்கள் என்றால் வகுப்பு வாரியாகப் பிரித்துக் கொள்வேன். எடுத்துக்காட்டாக, பாரதியார் பிறந்த ஊர் எது? என்ற கேள்வியை ஆறாம் வகுப்பு மாணவர்களிடம் கேட்கலாம். மாணவர்களின் வயதிற்கும், வகுப்பிற்கும் ஏற்ப கேள்விகளைக் கேட்கும் போது அவர்களும் ஆர்வமாகப் பதில் சொல்வார்கள். சில கேள்விகளுக்கு மாணவர்கள் பதில் சொல்ல யோசிக்கையில், சடாரென ஒரு மாணவனோ மாணவியோ உரத்த குரலில் பதில் சொல்ல, ஒட்டு மொத்த மாணவர்-ஆசிரியர் கூட்டம், பதில் சொன்ன மாணவனை வியப்புடன் பார்க்கும். உடனே அம்மாணவன் / மாணவியை அழைத்து புத்தகம் ஒன்றைப் பரிசாக வழங்க, அனைவரின் கரவொலியும் அரங்கத்தை அதிரச்செய்யும். ஆனால், ஆசிரியப் பெருமக்களின் முகத்தில் ஒரு வினாக்குறி வியப்புக்குறியாய் இருக்கும். இவன் சொன்ன பதில்  தவறாச்சே! என்று. மாணவர் சொன்ன பதில் சரிதானா என்றால் சரி இல்லை. ஆனாலும் அத்தனை பேரும் அமைதியாய் இருக்கையில் தன் மனதில் பட்டதைப் பட்டெனச் சொன்ன அந்த மாணவனின் செயலைப் பாராட்டிப் புத்தகம் ஒன்று வழங்குகிறேன் என்றதும் மாணவர்கள் நாமும் ஏதாவது சொல்லியிருக்கலாமோ எனச்சொல்வார்கள்.


        பேச்சின் ஊடாக மாணவர்களிடம் விடுகதை கேட்பதும் உண்டு. நமது வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா அவர்களிடம் ஒரு பெண்மணி கேட்டாரம். காயாகிப் பூவாவது எது? கனியாகிக் காயாவது எது? ஐயா அவர்களின் இந்த விடுகதையைப் பெரும்பாலான பள்ளிகளில் கேள்வியாகக் கேட்டுள்ளேன். மாணவர்கள் சொல்லக்கூடிய பதில்கள் சிரிப்பாக இருக்கும். ஒருவன் சொன்னதை இன்னொருவன், "நீ சொல்றது தப்புடா" எனச்சொல்ல, ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைச் சொல்வார்கள். நண்பர்களே! உங்களுக்கு விடை தெரிந்தால் எனக்குச் சொல்லுங்கள். உங்களுக்கும் ஒரு பரிசு உண்டு.


     தமிழ்மன்றங்கள் மட்டுமல்லாது ஆங்கில மன்றங்கள், அறிவியல் மன்றங்கள், கணித மன்றங்கள், சமூக அறிவியல் மன்றங்கள் மற்றும் தொன்மை மன்றங்கள் என அனைத்து மன்றங்களும் பள்ளிகளில் சிறப்பாக ஆசிரியர்களின் முன்னெடுப்பால் செயல்பட்டு வருகின்றன. மதுரை மாவட்டத்தில் ஒரு மேனிலைப்பள்ளியில் ஆண்டுதோறும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைத் தொன்மை மன்றத்தின் மூலமாகச் சென்று பார்வையிடுகிறார்கள். இதன் மூலம் நமது தொன்மையை மாணவர்கள் தெரிந்து கொள்கிறார்கள். 


    பள்ளி என்பது படிப்புடன் ஒழுக்கத்தையும், பண்பாட்டையும் வளர்த்துவருகிறது. அதற்கு ஒவ்வொரு மன்றங்களும் ஊக்கமாக இருந்து வருகிறது என்பது பாராட்டிற்குரியது. படிக்கும் மாணவர்களைப் படைப்பாளர்களாக்கும் ஒவ்வொரு பள்ளியும், ஆசிரியர்களும் பாரட்டிற்குரியவர்கள்.


மு.மகேந்திர பாபு,

06-05-2026

 

         

     

Post a Comment

0 Comments